பார்த்திபன் காதலி – 18 (1)

பார்கவி கண்களை மீண்டும் மீண்டும் சிமிட்டினாலும் பார்வையில் தெளிவில்லை. அவளின் இதயம் துடிப்பையே நிறுத்தி விடும் அளவுக்கு வேகமாகத் துடித்தது. அவளால் இயல்பாக மூச்சு விட முடியவில்லை. வாயை திறந்து காற்றை உள்ளிழுத்து நுரையீரலை நிறைத்து ஆழ்ந்த மூச்சுக்களை எடுத்தாலும் மூச்சடைக்கும் உணர்வு. கழுத்தை இன்னமும் முரட்டுக் கரங்கள் நெறிப்பது போலிருந்ததில் உடலை வேகமாய் உதறினாள்.

யாரையேனும் உதவிக்கு அழைக்க வேண்டும், வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று மூளை அறிவுறுத்தினாலும் அவளால் உடனடியாகச் செயல்பட முடியாத அளவுக்கு ஸ்தம்பித்திருந்தாள். அவளின் உடல் முழுக்க ஓடிய நடுக்கத்தைக் கட்டுப்படுத்திக் கண்களைச் சுழற்றி அலைபேசி எங்கிருக்கிறது எனத் தேடினாள்.

அது சோஃபாவின் கீழே விழுந்து கிடந்தது. நல்லவேளையாக உடைந்திருக்கவில்லை என்ற ஆசுவாசத்துடன் அதைக் கையில் எடுத்தாள். மறுகணம் பிரியதர்ஷினியை அழைத்திருந்தாள்.

“பி..ரி..யா.. எங்க வீட்டுக்கு வர்றியா பிளீஸ்.. ஐ நீட் யுவர் ஹெல்ப்..” அந்தக் குரலே பிரியதர்ஷினியை கலவரப்படுத்தியிருக்க வேண்டும்.

“என்னாச்சு பாரு?” என்று பதற்றத்துடன் கேட்டவள், “நான் இந்தா இப்பவே வர்றேன்” என்றிருந்தாள்.

பார்கவி நடுங்கும் கரங்களால் அலைபேசியைக் கீழே வைத்தாள். கைகள் பிசிபிசுக்கக் கண்ணைச் சுருக்கி என்னவென்று பார்த்தாள். கைகள் முழுக்க ரத்தம். அதுவே கலவரப்படுத்தி அவளுக்குக் கண்ணைக் கட்டியது.

மெதுவாகக் கைகளை உடையில் அழுந்த துடைத்துக் கொண்டு அப்பாவை அழைத்தாள். அவ்வளவு நேரம் இல்லாமல் அப்போதுதான் அழுகையில் தொண்டை அடைத்தது.

“அப்பா, வீட்டுக்கு வாங்கப்பா” என்றாள்.

அவளுக்கு மயக்கம் வரும் போலிருந்தது. மெல்ல எழுந்து சென்று வீட்டின் கதவை திறந்து வைத்து, மீண்டும் அதே இடத்தில் வந்து அமர்ந்தாள். கால்களைச் சேர்த்து கட்டிக் கொண்டு அதில் முகம் புதைத்தாள்.

“பாரு..” என்று ஓடி வந்த பிரியதர்ஷினி கண்டது, முகம், கழுத்து, மார்பு, கை என உடல் முழுக்க ரத்தத் தீற்றல்களுடன் அமர்ந்திருந்த பார்கவியைதான். பதறி போனாள் அவள்.

கூடத்தில் சோஃபா, மேஜை இரண்டுக்கும் இடையே இருந்த சிறிய இடைவெளியில் உடலை குறுக்கி குழந்தையைப் போல அமர்ந்திருந்தாள்.

வீட்டினுள் அறையின் கதவை ஓங்கி தட்டும் சத்தம் தொடர்ந்து கேட்க, அதில் இருந்து தன்னைக் காக்க, அவள் கைகள் இரண்டும் காதுகளை இறுக மூடியிருந்தன. சட்டெனச் சூழலை கணித்து விட்டாள் பிரியதர்ஷினி.

“பாரு” என்று அவளைப் பாய்ந்து அணைத்து கொண்டாள்.

“பாரு, இங்க பாரு, என்னைப் பாரு. மூச்சு விடு. நீ ஓகே, உனக்கு ஒன்னுமில்ல” என்று தோழியின் முதுகை நீவினாள்.

“பார்கவி” அவள் முன் மண்டியிட்டு அமர்ந்து, “அவன் மேல இருக்கானா?” என்று கோபத்தை அடக்கிய குரலில் கேட்டான் பார்த்திபன்.

பிரபஞ்சனை காண அவசரமாகக் கிளம்பியவனை, மாமனார் வீட்டுக்கு வரச் சொல்லியிருந்தான் அவன். பார்த்திபன் பிரியதர்ஷினியின் வீடு வந்த இரண்டாம் நிமிடத்தில் அவளுக்குப் பார்கவியிடம் இருந்து அழைப்பு வந்தது.

“பாருக்கு ஏதோ பிரச்னை போலண்ணா, நீங்களும் வாங்க” என்று கத்திய பிரியதர்ஷினி, பார்கவி வீட்டை நோக்கி ஓட்டமெடுத்திருந்தாள்.

அவள் வீட்டு வாசலில் பாரிவேந்தனின் காரை பார்க்கவும் பார்த்திபனுக்குப் பதறி விட்டது.

விளையாட்டு வீரன் என்பதால் பிரியதர்ஷினியை முந்திக் கொண்டு பார்கவியின் வீட்டுக்கு ஓடிருந்தான் அவன்.

அவன் கதவைத் திறந்ததும் கண்கள் கண்ட காட்சியில் அவனுக்குச் சர்வமும் நடுங்கியது.

இப்போதும், “பார்கவி” என்று சத்தமாக அழைத்தான்.

அவனை மெல்ல நிமிர்ந்து பார்த்தாள் அவள். ஆனால் அவள் கண்கள்தான் அவனை நோக்கியதே தவிர அவள் மனத்தில் அவன் பதியவே இல்லை என்பது அவளின் வெறித்த பார்வையில் அவனுக்குப் புரிந்தது.

சட்டென அவனுக்கு நெஞ்சை அடைக்கும் உணர்வு. அவளை அப்படி அவனால் பார்க்கவே முடியவில்லை. ஓடிப் போய்ச் சமையல் அறையில் இருந்து அவளுக்குத் தண்ணீர் எடுத்து வந்து நீட்டினான். இப்போதும் அவனைக் கவனிக்கவில்லை அவள்.

பிரியதர்ஷினி மென்மையாக, “பாரு..” என்று அழைக்க, “ஹேய்..” என்று கத்தும் சத்தமும், அதைத் தொடர்ந்து கதவை மடார் மாடாரென்று ஓங்கி தட்டும் சத்தமும் கேட்டது.

“அவன் மேல இருக்கான்..” நடுங்கும் குரலில் பிரியாவிடம் சொன்னாள் அவள்.

மறுநொடி நாணில் இருந்து புறப்பட்ட வில்லைப் போல மாடியை நோக்கி விரைந்திருந்தான் பார்த்திபன்.

“அவன உள்ள வச்சுப் பூட்டிட்டேன்.. சாவி சாவி.. எங்க..? பிரி.. பிரியா..” என்று அவள் திக்க, அவளைத் தண்ணீர் குடிக்க வைத்தாள் பிரியதர்ஷினி.

“அவன…” அவளுக்கு எப்படித்தான் அப்படியொரு வேகம் வந்ததோ, துள்ளி எழுந்து பார்த்திபனின் பின்னே ஓடினாள் பார்கவி. பிரியதர்ஷினி அவளைப் பின் தொடர்ந்தாள்.

“அண்ணா வெயிட்” என்று கத்தினாள் பிரியதர்ஷினி.

பார்த்திபன் பூட்டியிருந்த கதவில் கை வைத்து நிற்க, பார்கவி சாவியைத் தேடினாள். அவளுக்கு இருந்த பதட்டத்தில் அதை எங்கே போட்டாள் என்று அவளுக்குத் தெரியவில்லை.

“சாவி… என் கையிலதான் வச்சிருந்தேன் பிரியா. இப்போ காணோம்..” என்று கையை விரித்துத் தவித்தாள்.

பிரியதர்ஷினி அவளை இழுத்துப் பிடிக்க, பார்த்திபன் தரையெங்கும் சாவியைத் தேடினான்.

பார்கவிக்கு மீண்டும் மீண்டும் சற்று முன் நடந்ததே மனக் கண்ணில் வந்து நின்றது.

பாரிவேந்தன் இப்படி அவள் வீட்டுக்கே வருவான் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. அப்படி வந்த பிறகும், அவளிடம் பேசி சரிகட்டி, சமாதானம் செய்வான் என்று அவள் நினைக்க, அவனின் எண்ணமே வேறாக இருந்தது.

வீட்டின் கதவை மூடி அதன் மேல் சாய்ந்து அவளின் வழியை மறித்து நின்றான்.

“என்ன பண்றீங்க? தள்ளுங்க, கதவை திறங்க” என்றவளை சுண்டி இழுத்து அணைத்தான்.

“என்னடி பிரச்சனை உனக்கு? கல்யாணத்தை நிறுத்த சொன்னியாம்? நீ அழகுல ரதிதான் ஒத்துக்கறேன். ஆனா, என்னை ஏன்டி வேணாம்னு சொல்ற? உனக்கு எதுல குறைஞ்சுட்டேன் நான்?” என்று பல்லைக் கடித்துக் கேட்டவன் முகம் கொடூரமாக இருந்தது.

“பாரி பிளீஸ்..” அவனிடம் முரண்டுவதை விட, சாமர்த்தியாகப் பேசி தப்பிக்க வேண்டும் என நினைத்து அவள் விலகப் பார்க்க, அவனது பிடி இறுகியது. அவளின் முகம் நோக்கி குனிந்தான்.

அவனை வேகமாகத் தள்ளி விட்டாள். அதில் இன்னுமே மூர்க்கமானான்.

அவளின் காற்சட்டை பையில் இருந்து அலைபேசியை அவள் எடுக்க, அதைப் பிடுங்கி விசிறியடித்தான் அவன்.

“விடுங்க பாரி. உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் வீட்லயே வந்து…”

“வந்து… என்னடி பண்ணிட்டாங்க உன்னைய இப்போ? உன்னை ஒன்னும் பண்ணாததுதான் ரொம்பத் தப்பா போயிருச்சு. நான் ஏதாவது சிறப்பா செஞ்சுருந்தா இந்நேரம் வாய மூடிட்டு என்னைக் கல்யாணம் பண்ணிட்டு இருந்திருப்பல்ல? உங்கப்பன் அந்தக் கிழவனும்..” அவளுக்கு வந்த ஆத்திரத்துக்குத் தன் பலம் மொத்தத்தையும் திரட்டி அவனைத் தள்ளி விட்டாள்.

இது அவளது வீடு. அதுவே அவளுக்குப் பலம் தர, மின்னல் வேகத்தில் உள்ளே ஓடப் போனவளை தன் உடல் பலத்தைப் பிரயோகித்து எட்டிப் பிடித்திருந்தான் அவன். சோஃபாவில் அவளைத் தள்ளி மேலே படர்ந்தான். அவனிடம் போராடி விடுபட்டு மாடிக்கு ஓடினாள். கூடத்தில் இருந்த சாவிக் கொத்தை அவள் கைப் பற்ற அதைப் பிடுங்கி எறிந்திருந்தான் அவன்.

மாடியில் ஊஞ்சலில் வைத்து மீண்டுமொரு போராட்டம். அவளின் அலறல்கள் எல்லாம் வீட்டினுள் அமிழ்ந்து போனது.

மர ஊஞ்சலில் நெற்றி மோதி ரத்தம் வழிந்தது. கை முட்டியை வேறு இடித்துக் கொண்டதில் வலி உயிர் போனது.

அவளின் போராட்டத்தை அடக்கக் கழுத்தில் கை வைத்தான். அவள் துள்ளி விலகியதில், அவன் கரம் அவளது கழுத்து சங்கிலியை பற்றி இழுத்து அறுத்ததில் கழுத்தில் காயம் பட்டு ரத்தம் கசிந்தது.

அவள் தன் காலை பின்னால் மடக்கி அவன் கால்களுக்கு இடையில் ஓங்கி எத்தியிருந்தாள். அவன் துடித்துக் கீழே அமர, ஊஞ்சலை ஒட்டியிருந்த சிறிய மேஜையைத் தூக்கி அவன் முதுகில் அடித்திருந்தாள். அவன் வலியில் துடித்து நிமிர, அங்கே சுவரில் ஆணியில் மாட்டியிருந்த அறைச் சாவியை எடுத்துக் காற்சட்டை பையில் போட்டு, மின்னல் வேகத்தில் தப்பித்துப் படுக்கை அறைக்குள் நுழைந்திருந்தாள்‌ அவள்.

அவனும் சும்மா இருப்பானா என்ன?

“ஏய்..” என்று சீறியபடி அவள் பின்னே ஓடி வந்து கதவை தட்டி, காலால் உதைத்து, கைப் பிடியை பிடித்து இழுக்க, கதவு திறந்து கொண்டது.

அவளை மோசமான கெட்ட வார்த்தையில் திட்டி அவன் உள்ளே வர, கதவின் மறுபுற சுவரில் பல்லியை போல ஒட்டியிருந்தவள், அவன் கதவை திறந்து உள்ளே வந்த மறுநொடி புயல் வேகத்தில் வெளியேறி, அவனை அறைக்குள் வைத்து கதவை மூடி சாவி போட்டு பூட்டியிருந்தாள்.

“ஹேய்.. பார்கவி.. கதவை திற..” என்று கத்தினான். சற்று நேரத்தில் அது கெஞ்சலானது. கோபமும் மூர்க்கமும் அழிந்த பின்தான் அவனுக்கு மூளை வேலை செய்யத் தொடங்கியிருந்தது போலும்.

அவனுக்குக் கதவை திறந்து விட்டு மீண்டும் அவனிடம் சிக்க அவள் தயாரில்லை.

அந்த மாடி பகுதியே அவளை மிரட்டியது. அங்கு நிற்கவே முடியவில்லை. அவளுக்கு இருந்த பதட்டத்தில் கீழே ஓடி வந்து விட்டாள். அந்நேரம் கதவை பூட்டிய நிம்மதியில் சாவியை எங்கே போட்டாள் எனத் தெரியவில்லை.

பார்த்திபன் அதைத் தேட, அவளை ஊஞ்சலில் அமர்த்தினாள் பிரியதர்ஷினி.

அந்த ஊஞ்சலை கண்டாலே அவளுக்குத் தானாக உடல் உதறியது.

அவளை அணைத்து பிடித்து அப்பாவுக்கு அழைத்திருந்தாள் பிரியதர்ஷினி.

அந்த மாடியின் மற்றொரு பக்கமிருந்த பார்கவியின் அறை வாசலில் கிடந்தது சாவி.

அதை எடுத்த பார்த்திபன், பிரியதர்ஷினிக்குக் கண் காட்டி விட்டு அறையைத் திறந்தான்.

பாரிவேந்தன் பாய்ந்து வெளியேற முனைய, அவனை இழுத்துப் பிடித்து அடி வெளுத்து விட்டான் பார்த்திபன். கையை முறுக்கி உடைத்திருப்பான்.

ஆனால் அதற்குள் பிரியதர்ஷினியின் பெற்றோர் வந்து விட, “அவனை விடுப்பா. போலீஸ் பார்த்துக்கட்டும். நீ அவன் மேல கை வச்சா தேவையில்லாம உனக்குப் பிரச்சனையாகும்” என்று அவனைத் தடுத்து பிடித்தார் மாணிக்கவேல். அதனால் மட்டுமே அவனை விட்டான் பார்த்திபன்.

error: Content is protected !!
Scroll to Top