சொந்த வீட்டிலேயே பாதுகாப்பில்லாமல் உணர்வதெல்லாம் எத்தனை பெரிய கொடுமை. பார்கவியால் அங்கிருக்க முடியவில்லை. எந்தப் பக்கம் திரும்பினாலும் அவனிடம் இருந்து தப்பிக்க ஓடியதே நினைவு வந்தது.
அவசர அவசரமாக ஆழ்ந்த மூச்சுகள் எடுத்தாள்.
“உனக்கு ஒன்னும் இல்ல பாரு. அம்மா வந்துட்டேன். உனக்கு ஒன்னும் இல்ல” என்று அவளின் முதுகை தட்டிக் கொடுத்து ராதா அவளைத் தேற்ற, அவளுக்கு ஆழ்மனத்தின் நடுக்கம் குறையவேயில்லை.
பார்த்திபன் அவசரமாகக் கோவிந்தனுக்கு அழைத்து, இந்தப் பகுதி காவல் நிலையத்தில் அவருக்கு யாரையேனும் தெரியுமா எனக் கேட்டான்.
“நம்ம ஏரியா ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் எனக்குத் தெரிஞ்ச பையன்தான் பார்த்தி. நான் பேசிட்டேன். அவங்க இப்போ வந்துடுவாங்க” என்று அவனிடம் மாணிக்கவேல் சொல்ல, அதையே கோவிந்தனிடம் சொல்லி, “அவர் என்ன பிரச்சனை?” என்று பதறி கேட்கும் போதே அழைப்பை துண்டித்து விட்டான் அவன்.
“சார், பார்கவிய நான் எதுவுமே பண்ணல. அப்புறம் எதுக்குத் தேவையில்லாம போலீஸ கூப்பிடுறீங்க?” என்று பாரிவேந்தன் கத்தி முறையிட, அவனை முறைத்து அடிக்கக் கை ஓங்கினார் மாணிக்கவேல்.
பார்கவியின் சட்டை கிழிந்து ஒருபுறம் தொங்க, நெற்றி, கழுத்தில் இருந்து வழிந்த ரத்தம் மார்பை நனைத்திருந்தது. கையில் இருந்து வடிந்த ரத்தம் காற்சட்டையில் படிந்திருக்க, மகளைப் பெற்றவராக அவருக்கு மனம் பதறியது.
எத்தனை அசட்டையாக ஒன்றுமே செய்யவில்லை என்கிறான் பாவி! அவனை அடித்து விடாமல் தன்னைக் கட்டுப்படுத்துவதற்கே அவருக்குப் பெரும்பாடாகப் போனது.
“சாரி. நான் கோபத்துல அப்படிப் பண்ணிட்டேன். என்னை விட்டுருங்க” அவன் எத்தனை கெஞ்சியும் அவர் இளகுவதாக இல்லை.
“பார்த்தி, நம்ம வீட்டுக்கு போய் என் காரை எடுத்து வாப்பா. மாப்பிள்ளைய கூட்டிட்டு போய் நாமளே போலீஸ் ஸ்டேஷன் விட்டுட்டு இவருக்கு மரியாதை செஞ்சிட்டு வருவோம்” என்று அவர் சொல்ல, அவனை இழுத்துக் கொண்டே வெளியே செல்ல எத்தனித்தான் பார்த்திபன்.
அப்போது காற்றின் வேகத்தில் வீட்டினுள் நுழைந்த பிரபஞ்சனிடமிருந்தும் அடி வாங்கினான் பாரிவேந்தன்.
நண்பர்கள் இருவருமே விளையாட்டு வீரர்கள் என்பதால் முரட்டு அடியாக இருந்தது.
“நீங்க இங்க பாருங்க. நான் பாருவை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன். அவளுக்கு நெத்தியில நல்ல அடி.. காயம் வேற ஆழமா இருக்கும் போல இருக்கு. ஸ்டிச்சஸ் போடணும்னு நினைக்கறேன்.” என்று பார்கவியைத் தோளில் சாய்த்திருந்த ராதா சொல்ல, “போலீஸ் வந்தா நான் பார்த்துக்கறேன். நீங்க கிளம்புங்க” என்றார் மாணிக்கவேல்.
“பார்த்தி, நீ அவங்களை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போப்பா” என்று பார்த்திபனிடம் சொன்னவர், பிரபஞ்சனிடம் திரும்பி, “நீங்க என் கூட வாங்க மாப்ள” என்றார்.
பாரிவேந்தனை பிரபஞ்சனிடம் ஒப்படைத்தான் பார்த்திபன். மாணிக்கவேல் ஏற்கெனவே ரங்கராஜனுக்கு அழைத்துப் பேசியிருந்தார்.
இப்போது மீண்டும் அவரை அழைத்து விவரம் பகிர்ந்தார் அவர்.
பார்கவி எழுந்து நிற்க, தப்பிக்கும் வேகத்தில், “அவ பேசணும்னு சொல்லவும்தான் நான் வீட்டுக்கு வந்தேன். இல்லனா நான் ஏன் இங்க வர போறேன்” என்று பழியைத் தூக்கி அவள் மேல் அவன் போட, அவனை அதிர்ச்சியுடன் நோக்கினாள் அவள்.
மறுகணம் அவள் கண்களில் கோபம் குடியேற, அவனை அடிக்கப் பாய்ந்தாள். பிரியதர்ஷினி அவளைத் தடுத்துப் பிடித்தாள்.
“உன்னைப் பத்தி எல்லாம் எங்களுக்குத் தெரியும். எங்க பார்கவியைப் பத்தியும் எங்களுக்குத் தெரியும். நீ வாயை மூடு” என்று அவனை ஓங்கி அறைந்திருந்தான் பார்த்திபன். அவனது கைத்தடம் பதியும் அளவுக்கு முரட்டு அடி.
“சார் அமெரிக்கா போயும் இதே வேலையைதான் பார்த்திருக்கார்.” என்றான் ஆத்திரத்துடன்.
“என்ன சொல்ற பார்த்தி?” மாணிக்கவேல் புரியாமல் கேட்க, அன்று காலை அவன் அறிந்து கொண்ட உண்மையை அங்கே பளிச்சென்று போட்டு உடைத்திருந்தான் அவன்.
பாரிவேந்தனின் காதல் கதையெல்லாம் பொய் இல்லை. உண்மையிலேயே அவனை ஒரு பெண் மனதார காதலித்து இருக்கிறாள். அவளிடம் நெருக்கமாகப் பழகி, அவள் நெகிழ்ந்த நேரம் அவளைத் தன் வசப்படுத்தி, பின்னர் அதையே காரணம் காண்பித்து அவளை மிரட்டி அவளைத் திருமணம் செய்யாமலே சில காலம் சேர்ந்து வாழ்ந்திருக்கிறான். அவளை அதற்குக் கட்டாயப்படுத்தியிருக்கிறான்.
அவனது அன்பை விட, அவனது கோபமும், சந்தேகக் குணமும், மனதளவில் மட்டும் இல்லாது, உடல் அளவிலும் அவன் செய்த கொடுமைகளைத் தாங்க முடியாது ஒரு கட்டத்தில் அவனிடம் இருந்து தப்பித்து இந்தியா வந்து விட்டாள் அந்தப் பெண்.
ஒரு வருடம் இங்கேயே இருந்து அந்தப் பெண் மனத்தளவில் தேறி தற்போது பூனேவில் பணிபுரிகிறாள். அவளுக்குத் திருமணமாகி நான்கு மாதங்களாகிறது.
அவளை இனி அடையவே முடியாது என்று தெரிந்த பிறகே வீட்டில் பெண் பார்க்க சொல்லியிருக்கிறான் அவன்.
ஒரு மோசமான கணத்தில் எடுத்த தவறான முடிவால் அவனிடம் சிக்கியிருக்கிறாள் பார்கவி.
மாணிக்கவேலிடம் பேசுகையில், “மாப்பிள்ளை வீட்டில் இருந்தோம். இந்தத் திருமணப் பேச்சை முறித்து விட்டோம்” என்று ரங்கராஜன் அவரிடம் சொல்லியிருக்க, அந்தத் தகவலை தெரிந்து கொண்டுதான் இங்கு வந்திருக்கிறான் அவன் என்பது அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்து போனது.
இவனை என்ன செய்தால் தகும் என்று கொலை வெறியுடன் அவனைப் பார்த்து நின்றான் பிரபஞ்சன்.
“அவளோட நார்மலா பேச வந்தேன் நான். நேத்து கூட என் கூட வெளில வர்றேன்னு என்கிட்ட சொன்னா.. அதுனால” என்று அவன் மீண்டும் மீண்டும் பழியை அவள் மீது தூக்கிப் போட, பார்கவிக்கு அப்படியே பற்றிக் கொண்டு வந்தது.
பிரியதர்ஷினி, ராதா இருவரின் பிடியையும் உதறி விட்டு, அவன் மேல் மீண்டும் பாய்ந்தாள்.
தன் உடலின் வலிமையெல்லாம் திரட்டி அவன் கன்னத்தில் இறக்கினாள்.
“பாரு, போதும் விடு அவனை.” என்று அவளை ஆதரவாக இழுத்துப் பிடித்தான் பார்த்திபன்.
அவளை இயல்பாக நெஞ்சோடு சேர்த்தணைத்துக் கொண்டான். உணர்ச்சி மிகுதியில் அவள் உடல் குலுங்க, சட்டென அவனை நிமிர்ந்து நோக்கிய கண்களில் வெற்று பார்வை. அதில் ஓர் அந்நியத்தன்மை இருந்தது.
அவனை முகம் கொள்ளா புன்னகையுடன் கண்கள் மின்ன பார்த்த பார்கவி இல்லை இவள். யாரோ தெரியாத ஒருவரை பார்ப்பது போல அவனைப் பார்த்தாள். மறுநொடி உடலை உதறி வேகமாக அவனிடம் இருந்து விலகி நின்றாள்.
பிரபஞ்சன், மாணிக்கவேல் இருவரும் பிரபஞ்சனின் காரில் பாரிவேந்தனை அழைத்துக் கொண்டு காவல் நிலையம் செல்ல, பார்த்திபன் பெண்கள் மூவரையும் மருத்துவமனை அழைத்துச் சென்றான்.
பார்கவியின் பெற்றோர் நேராக மருத்துவமனை வந்து விட்டனர்.
மகளை அப்படியொரு நிலையில் பார்க்க பெற்ற மனம் வேதனையில் வெந்து போனது.
“பாரும்மா” என மகளை ஆதரவாக அணைத்துக் கொண்டார் காவேரி. மகளின் கைப் பிடித்துப் படுக்கையின் விளிம்பில் அமர்ந்தார் ரங்கராஜன்.
அவள் நெற்றியில் பெரிய கட்டுப் போட்டிருந்தார்கள். கையில் இருந்த காயத்துக்கு மருந்தும், கழுத்தில் இருந்த காயத்துக்கு மருந்தும் கட்டும் போட்டிருந்தார்கள். எல்லா இடங்களிலும் கட்டைப் பார்க்க பார்க்க காவேரியால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.
“நீங்களே இப்படி அழுதா எப்படி? நீங்க தைரியமா இருந்தாதான் அவ சீக்கிரமா தேறி வருவா” என்று அவரைத் தேற்றினார் ராதா.
பிரியதர்ஷினி தோழியின் தலை மாட்டில் இருக்கைப் போட்டு அவளை விட்டு நொடியும் நகராமல் அருகிலேயே அமர்ந்திருந்தாள்.
“நீங்க ரெண்டு பேரும் வாங்க, நாம போய் டாக்டர் பார்த்துட்டு வந்துருவோம்” என்று பார்கவியின் பெற்றோரை மருத்துவரிடம் அழைத்துப் போனார் ராதா.
காவல் நிலையம் சென்றிந்தவர்களும் அந்நேரம் வந்து விட்டார்கள். மாணிக்கவேல் மனைவியோடு சேர்ந்து மருத்துவரை காணச் செல்ல, நண்பர்கள் இருவரும் பார்கவி இருந்த அறைக்கு வந்தார்கள்.
“அவங்களுக்கு நெத்தியில நல்ல அடி, அஞ்சு தையல் போட்டிருக்கு. செயின் அறுத்ததுல கழுத்துல விரல் நீள காயம். ஆனா காயம் ரொம்ப ஆழமா இல்ல. சீக்கிரம் சரியாகிடும். ஓகே? முழங்கையில, மணிக் கட்டுல, கணுக்கால்லன்னு நிறைய இடத்துல ரத்தம் கட்டியிருக்கு. மத்தபடி வேறெந்த..” என்று தொண்டையைச் செருமி சீர் செய்தவர், “பெருசா காயப்படல உங்க பொண்ணு. தேங்க் காட். ஃபிசிக்கலி அபியூஸ் பண்ணப்படல. ஆனா இந்த ட்ராமா (Trauma) அவங்களை மனசளவுல ரொம்பப் பாதிச்சுருக்கும். நீங்கதான் அவங்களுக்குச் சப்போர்ட்டா இருக்கணும்” என்றார்.
இரண்டு நாள்கள் மருத்துவமனையில் வைத்துச் சிகிச்சை கொடுத்து பின்னர் அவளை வீட்டுக்கு அழைத்துச் செல்வது நல்லது எனப் பரிந்துரைத்தார்.
பொதுவாக இது போன்ற சூழலில் பெண்கள் தங்களைத் தாங்களே குற்றவாளி கூண்டில் ஏற்றி விடுவார்கள். அந்நேரம் குடும்பத்தினர் அவர்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டுமே தவிர, அவர்களைக் கேள்வி கேட்டு குடைந்து அவர்களைக் குற்ற உணர்ச்சிக்குள் தள்ளி மேலும் அவர்களை உடைத்துப் போடாதீர்கள், பின்னர் அவர்களைக் காப்பாற்றுவது கடினம் என எடுத்துரைத்தார்.
பார்கவி தற்போது அந்நிலையில்தான் இருந்தாள். தன்னைத்தானே நொந்து வெறுத்து புலம்பி கொண்டிருந்தாள்.
“நான் கதவை திறந்திருக்கக் கூடாது பிரியா” என்றாள்.
“அவனை வீட்டுக்குள்ள விட்டிருக்கக் கூடாது நான்”
“முதல்ல இந்தக் கல்யாணத்துக்கு நான் ஓகே சொல்லியிருக்கக் கூடாது. எல்லாம் என்னால.. என்னாலதான். எல்லாத்துக்கும் காரணம் நான்தான். என்னாலதான் இப்போ எல்லாரும் கஷ்டப்படுறீங்க. மை மிஸ்டேக்” என்று கண்கள் கலங்க புலம்பினாள்.
“அந்தப் பாரிலாம் உன் பக்கத்துல வர்றதுக்கே தகுதி இல்லாத ஆளு. அவனைப் பத்தி பேசாத. நம்ம அப்பாங்க அவனைப் பாத்துப்பாங்க. அவன் செஞ்ச தப்புக்கு உன்னைய ப்ளேம் பண்ணுவியா நீ? இதே வேலையா திரிஞ்சுருக்கான் பிராடு பரதேசி” என்று பல்லைக் கடித்துச் சொன்னாள் பிரியதர்ஷினி.
பார்கவிக்கு அப்போதுதான் உறக்கத்திற்கு மாத்திரை கொடுத்திருந்தார்கள். மருத்துவனையின் சிறிய படுக்கையில் நோயாளி உடையில் கலைந்த ஓவியம் போலிருந்தவளை பார்க்கும் போதே மனம் வருந்தி, அவளுக்காக வேண்டி உருகியது.
“நோ பிரியா. இட் வாஸ் மை மிஸ்டேக். நீ அவனை எதுக்கு ப்ளேம் பண்ற? அப்படி ப்ளேம் பண்ணணும்னா நீ என்னைத்தான் பண்ணணும். அவனைக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிச்சவ நான்தானே?” என்று கேட்டாள். அந்தக் குரலில் இருந்த வருத்தமும் வெறுப்பும் அவளாலேயே தாங்க முடியாததாக இருந்தது.
“நோ. நீ அவனுக்கு எஸ் மட்டும் சொல்லல. சரியான நேரத்துல அவனை வேணாம்னு சொல்லியிருக்க. சோ பிளீஸ் பாரு. டோண்ட் ப்ளேம் யுவர்செல்ப்.” என்று அவளின் கையைப் பிடித்து மென்மையாக அழுத்திக் கொடுத்தாள் பிரியதர்ஷினி.
அதே அறையின் ஓர் ஓரத்தில் நின்றிருந்த பார்த்திபன், “எல்லாமே என்னால” என்று வருந்தி குரல் நடுங்க உச்சரித்தான். அவன் பக்கத்தில் நின்றிருந்த பிரபஞ்சன் பட்டென்று திரும்பி திகைப்புடன் அவனைப் பார்த்தான்.
நம் வலிகளுக்குக் காரணமாக நாமே இருப்பதாக நம்பி, நம்மை நாமே குற்றம் சாட்டி கழுவில் ஏற்றுகிறோம்.
காலம் தந்த காயங்களைக் காலமே ஆற்றும்!
கலைந்து போன காதலை போலவே காயம் கொண்ட மனமும் ஆறட்டும்!