நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 24 (2)

“கீழ எல்லாரும் இருக்காங்க ஶ்ரீகாந்த். நாம தனியா இருந்தா தப்பா..” என்று அவள் சொல்ல வந்ததை முடிக்க விடாமல், “ஷ்ஷ்ஷ் துர்கா, ரொம்ப யோசிக்காதீங்க. எல்லாருக்கும் நம்மள நல்லா தெரியும்.” என்றான் அவன்.

“இன்னமும் ஊரு என்ன சொல்லும்? உலகம் என்ன சொல்லும்னு பயந்துட்டே இருப்பீங்களா? யாரு என்ன நினைச்சாலும் எனக்கு என்னடா, ஆமா தப்புப் பண்ணிட்டேன். என்ன இப்போ? பேசினா பேசிட்டு போங்கன்னு எங்கேயும் ஓடி ஒளியாம, தப்பான எந்த முடிவுக்கும் வராம குழந்தையை வளர்த்தீங்க தெரியுமா? அங்கதான் நீங்க கெத்தா நிக்கறீங்க துர்கா.”

“கெத்தாவா? ச்சே இல்லங்க..”

“அந்தத் துர்காவ பார்த்துதான் இந்த ஶ்ரீகாந்த் காதல்ல விழுந்தான்”

“நீங்க சொல்ற அளவுக்குல்லாம் நான் நல்லவ இல்ல”

“இது, இதுதான்ங்க என்னை இம்ப்ரஸ் பண்ணுது. ஆமா, நான் தப்பு பண்ணேன்னு துணிஞ்சு சொல்லவும் ஒரு தைரியம் வேணும்ங்க”

என்றான் பாராட்டாக. இப்போதும் அவள் மறுப்பாகத் தலையசைக்க, “நீங்க நினைச்சிருந்தா அன்னைக்கே கருவுல இருந்த ரெண்டு மாச குழந்தையைக் கலைச்சிட்டு..” என்று அவன் சொல்லவும், “ஐயோ..” என்று துடித்தாள்.

“குழந்தையைக் கலைச்சுட்டு உங்க வாழ்க்கையை நீங்க பார்த்திட்டு போய் இருக்கலாம்தானே? வெளில யாருக்கும் தெரிய போறதில்ல, அடுத்து அழகா கல்யாணம் பண்ணிட்டு நீங்க நிம்மதியா லைஃப்ல செட்டிலாகி இருக்கலாம்..”

“அதெப்படி ஶ்ரீகாந்த் நிம்மதியா இருக்க முடியும்? குழந்தையை.. சாரி என்னால நினைச்சு கூடப் பார்க்க முடியல. அப்படியொரு பாவத்தைப் பண்ணிட்டு நான் எப்படி நிம்மதியா வாழ்ந்திருக்க முடியுமா? ஊர், உலகத்தை விடுங்க, என் மனசாட்சிக்கு நான் பண்ண தப்பு தெரியும் தானே? குழந்தையை.. அந்தப் பாவத்த நான் துணிஞ்சு பண்ணியிருந்தா என் மனசாட்சியே என்னைக் கேள்வி கேட்டு உயிரோட கொன்னுருக்கும். ஊர், உலகத்தை இல்ல, என்னை நானே ஏமாத்திட்டு எப்படிங்க நிம்மதியா வாழ முடியும்?” உணர்ச்சி மிகுதியில் அவள் குரல் உடைந்து விட்டது.

“உங்களைப் பிடிக்க இதுதான் துர்கா முதல் காரணம்” மெல்ல அவளை நெருங்கி அவள் கண்களுக்குள் ஆழ பார்த்தான்.

“இப்பவும் உங்களுக்கு ஏன் என்னைப் பிடிச்சது, எதுக்காக என்னைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறீங்கன்னு எனக்குப் புரியவே இல்ல”

அவள் குழப்பத்துடன் சொல்ல, “தெரியாம இருக்கறதுதாங்க நல்லது. அப்போதான் என்னால காலம் முழுக்க உங்க கேள்விக்குப் பதில் சொல்லிட்டே இருக்க முடியும். என்னோட நேசம் ஏன்னு காரணம் சொல்லி உங்களுக்கு நிரூபிக்கும்ங்க” மேலும் நெருங்கி நின்றவன் மூச்சு காற்று அவள் முகத்தில் மோதியது.

அவன் கரம் தானாக உயர்ந்து அவளை அணைத்துக் கொண்டது. காற்றைப் போல இயல்பாக அவளைத் தழுவினான்.

“நீங்க என் மனசுல வந்து பல வருஷம் ஆச்சுங்க. இப்போ நான் உங்க வீட்டுக்கும் வந்துட்டேன். ஆனா நீங்க, உங்க மனசுக்குள்ளயும் எனக்கு இடம் தர மாட்டீங்கறீங்க. நான் ஏகத்துக்கு இடம் கொடுத்தாலும், என் வீட்டுக்கும் வர தயங்கறீங்க. இன்னும் ஒரே மாசத்துல கல்யாணத்தை வச்சுட்டு எனக்கு நீங்க சம்மதம்னு கூடச் சொல்லாதது சரியில்லங்க” அவள் கண்களை ஊடுருவி கெஞ்சினான்.

அவள் கரம் மெல்ல உயர்ந்து பதிலாக அவனை அணைக்கவும், அவள் கன்னத்தில் அழுந்த முத்தம் பதித்தான் அவன். தனக்கானவனின் நெஞ்சில் சேர்ந்த நிம்மதி அவளின் மூச்சில் வெளிப்பட்டது.

“அப்படியே வாய் வார்த்தையாவும் பதில் சொல்லுட்டீங்கன்னா அடியேன் அமைதியாகிடுவேன்” என்று மெல்ல அவள் முகம் நிமிர்த்திக் குறும்பாகக் கண் சிமிட்டினான். ‍

“என்ன சொல்லணும்?”

“ஓகேதான்”

“ஓகே” என்று சொல்லி வேகமாக விழிகளைத் தாழ்த்தி அவள் உதடு கடிக்க, ஒற்றை விரலால் அவள் உதட்டை வருடி விடுவித்தவன், “நம்ம கல்யாணம் முடியற வரைக்கும் நான் நல்லவனா நடிக்க விரும்பறேங்க. வாங்க கீழ போய்டுவோம்” என்று தீவிரமாகச் சொன்னவன், அதைவிடத் தீவிரமாக அவளை ஒருமுறை அணைத்து விடுவித்தான்.

“வாங்க” என்று அவளுடன் நெருக்கமாக நடந்து கீழிறங்கினான்.

உண்ணாமலை, சிதம்பரம் இருவருக்கும் வெளிவேலைகள் இருக்க, இவர்கள் வந்ததும் விடை பெற்றுக் கொண்டார்கள்.

“நாங்க போய்ட்டு வர்றோம்” என்று உண்ணாமலை சொல்ல, “சரிங்க‌ அத்த” என்று துர்கா விடை கொடுக்கவும், அவர் முகத்தில் மெச்சுதலான புன்னகை வந்து போனது.

ரோஜாவை தூக்கி முத்தமிட்டு விடை பெற்றார் அவர்.

அதையெல்லாம் பார்த்திருந்த நாச்சம்மையின் மகிழ்ச்சியை அளவிடப் புதியதாக அளவுகோல் கண்டுபிடிக்க வேண்டும் என்ற நிலையில் இருந்தார் அவர்.

மகள், பேத்தி என இருவரின் கன்னத்தையும் வழித்து, “என் கண்ணே பட்டிருக்கும்” என்று வாஞ்சையாக நெட்டி முறித்தார்.

“குறிஞ்சி.. அத்த..” என்று குறிஞ்சியைத் தேடி ஏலம் போட்டாள் ரோஜா.

“அத்தை ஹாஸ்பிட்டல் போகணும், எனக்கு டியூட்டிக்கு டைமாகுது ரோசு. நீ அம்மா கூட விளையாடு” என்ற குறிஞ்சி, பரபரப்பாக மருத்துவமனை பணிக்கு கிளம்ப அறைக்குள் நுழைந்தாள்.

அந்நேரம் வீட்டுக்குள் நுழைந்த தயா, அவர்களின் அறைக்குச் செல்ல, “தயா மாமா” என்று அவன் பின்னே ஓடியது வாண்டு.

“இரு ரோஜா, மாமா வருவாங்க” என்று மகளை இழுத்துப் பிடித்தாள் துர்கா.

“என்னக்கா?” என்று அவன் திரும்பிக் கேட்கவும், “அவ சும்மா கூப்பிட்டா தயா, நீ போ” என்று தம்பியை அனுப்பி வைத்தாள்.

தயாபரன் அறைக்குள் நுழைய, குறிஞ்சி வேகமாகப் படுக்கையில் இருந்து புடவையை உருவி மார்பில் இட்டு, “ஷ்ஷ் தயா, கதவை தட்டிட்டு வர மாட்டீங்களா?” என்று கண்ணை உருட்டினாள்.

“என்னடி முறைப்பு? அந்தக் கண்ணை அப்படியே.. நோண்டிருவேன்” என்று மிரட்டியவன், அதற்கு நேர்மாறாக அவளின் இரு கண்ணிலும் ஈரமாய் முத்தம் வைத்தான்.

“தயா.. எனக்கு நேரமாகுது..” என்று அவள் திக்கவும், “நான் ரொம்ப நேரம் எடுத்துக்க மாட்டேன்” என்று அவள் காதில் கிசுகிசுத்தான்.

“அச்சோ தயா.. ஆளை விடுங்க.. இது ஆகுற கதை இல்ல” என்று அவன் மார்பில் கை வைத்து தள்ளினாள்.

“குறிஞ்சியாத்தா தயாபரனுக்குக் கருணை காட்டுடி” அவள் கழுத்தில் முகம் புதைத்து முணுமுணுத்தான்.

“தயா..” என்ற மனைவியின் குரல் பேதத்தை உணர்ந்தவன், அவளை அணைத்து உடல் குலுங்க சிரித்தான்.

“காலையில தானே தயா..” என்று அவள் சிணுங்க, “தயாக்கு தாராள மனசு. ம்ம், உனக்குப் புரியல” என்றவன், அவளின் கூந்தலுக்குள் கை நுழைத்து, அவள் இதழ்களில் புதைந்தான்.

நீண்ட ஒற்றை முத்தத்துடன் மோகத்துக்கு முடிவுரை எழுதி முடித்திருந்தான்.

சில பல நிமிடங்களில் குறிஞ்சி தயாராக, அவனோ அதுவரை அலைபேசியில் கடைக்குத் தேவையான வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தான்.

“போலாம் தயா” இருவரும் ஒன்றாகக் கதவைத் திறந்து வெளியே செல்ல, கூடத்தில் அமர்ந்திருந்த துர்காவின் கண்கள், குறிஞ்சியை மேலிருந்து கீழாக அளவிட்டு, குறும்பும், கேலியுமாகப் புன்னகைத்தன.

அவளோ புரியாமல், “என்னை எதுக்கு இப்படி முழுங்கற மாதிரி பார்க்கற நீ?” என்று துர்காவை நெருங்கி கேட்டாள்.

“ஏன் பார்க்க கூடாதா?” துர்காவின் பார்வையே அவளைப் பரிகசித்தது. காலையில் உடுத்தியிருந்த பட்டு புடைவையைக் களைந்து மருத்துவமனை செல்ல வேறு உடைக்கு மாறியிருந்தாள் அவள்.

“நீ எதுக்குப் பார்க்கணும்ங்கறேன்?”

“ஓ, அப்போ என் தம்பி பார்த்தா ஓகேவா?”

“ச்சீ, துர்கா. விவஸ்தை கெட்டவளே” முகம் சிவக்க துர்காவின் தோளில் அடித்தாள்.

“யாரோ என் தம்பி இருந்தா அந்த ரூமுக்குள்ளாற போகக் கூச்சமா இருக்குன்னு சொன்ன ஞாபகம். அந்தப் பொண்ணை உனக்குத் தெரியுமா குறிஞ்சி?” என்று தீவிரமாக அவளுக்கு நினைவுபடுத்த, “அப்படியா? அந்தப் பொண்ணை ரொம்ப நல்லா தெரியும். அப்புறம் அந்தப் பொண்ணு ஒரு விஷயம் சொன்னா, கல்யாணமானதும் கூச்சம் எல்லாம் இருந்த இடம் தெரியாம ஓடி போய்டுமாம் துர்கா. அவளுக்குப் பெரியவங்க சொன்னாங்களாம். நாளைக்கு உனக்குக் கல்யாணமானதும் வேணும்னா டெஸ்ட் பண்ணி..” என்று அவள் சொல்லி முடிக்கும் முன், “நீ ஒன்னும் சொல்ல வேணாம் குறிஞ்சி ஆத்தா” என்று அவளின் வாயை அடித்து மூடினாள்.

அவளின் உள்ளங்கையில் சிரித்த குறிஞ்சியின் முகம் சந்தோஷத்தில் மலர்ந்திருக்க, அவளை அப்படிப் பார்த்த துர்காவின் மனமும் நிறைந்தது.

தன்னால் தடுமாறிய தம்பியின் வாழ்வு தற்போது நேராகிய மகிழ்வு அவளை நிறைத்துப் புன்னகைக்கச் செய்தது.

“தயா, உனக்காக வெயிட் பண்றான், நீ போ குறிஞ்சி” என்று தம்பி மனைவியை அவனை நோக்கி தள்ளி விட்டாள்.

குறிஞ்சி சிரிப்புடன் கணவனிடம் சென்று அவன் பின்னே நெருக்கமாக அமர்ந்தாள்.

அவள் கரம் அனிச்சையாக அவன் தோளில் பதிந்தது.

“ஏன் குறிஞ்சி, பேசாம கல்யாண செலவோட செலவா உனக்கொரு வண்டி வாங்கிடுவோமா?” என்று தயா கேட்க, “ஏன்?” என்று ஒற்றை வார்த்தையில் எதிர்கேள்வி கேட்டாள்.

“என்னால நீ டெய்லி அவசரமா ஹாஸ்பிடல் கிளம்பி போற மாதிரி ஆகிடுதே. அதுதான் யோசிச்சேன்”

“பரவாயில்ல தயா. பத்தே நிமிஷம்தான்னாலும் எனக்கு உங்களோட இந்தப் பைக் ரைட் ரொம்பப் பிடிச்சிருக்கு.” என்று அவனை மேலும் நெருங்கி அவனது முதுகோடு ஓட்டிக் கொண்டு அவன் தோளில் முகம் பதித்தாள்.

“சோதிக்காத குறிஞ்சியாத்தா. நீ இம்புட்டு நெருக்கினா, நான் அப்படியே வண்டியை வீட்டுக்கு திருப்பிடுவேன்” என்று மிரட்டினான்.

“திருப்புங்க, யாரு வேணாம்னு சொன்னா” என்று அவள் அலட்டிக் கொள்ளாமல் சொல்ல, “திருப்பிடுவேன்” என்று அவன் பொய்யாக மிரட்டவும், சத்தமாகச் சிரித்திருந்தாள் அவள்.

தயாபரன் இதழ்கள் தாராளமாகப் புன்னகை புரிய, மழை நாளில் மனைவியுடனான அந்தக் குறுகிய பயணத்தை மனம் முழுக்க மகிழ்ச்சியில் நனைய, ரசித்து அனுபவித்தான் அவன்.

error: Content is protected !!
Scroll to Top