“அப்பா..”
“என்ன பாரும்மா, இப்பத்தான் வர்றியா? உள்ள வாடா?” என்று அவளை வாஞ்சையுடன் அழைத்தார் ரங்கராஜன்.
தான் பேசியதை எல்லாம் மகள் கேட்டு விட்டாள் என்று அவளின் முகம் பாவம் தெளிவாகச் சொல்லிவிடக் காவேரி சங்கடத்துடன் அவளைப் பார்த்தார்.
“வா பாரு” என்று அவளை இழுத்து மேஜையில் அமர்த்தினார்.
“அம்மா பேசினதலாம் சீரியஸா எடுத்துக்காத பாரும்மா. அவங்க எவ்ளோ கேட்டாலும் நாங்க உனக்காகச் செய்வோம்டா” என்ற காவேரி, மகளின் கன்னம் வருடி முத்தம் வைத்தார்.
“அவங்க..” என்று ரங்கராஜன் ஆரம்பிக்க, “வேண்டாம்ப்பா” என்றாள் ஒற்றை வார்த்தையில்.
“என்னடா வேணாம்னு சொல்ற?”
“எனக்கு இந்தக் கல்யாணம் வேணாம்ப்பா” என்று தன் முடிவை அழுத்தமாக அப்பாவிடம் சொன்னாள்.
“அம்மாடி பாரு. அவங்க அப்படித்தான்டா கேட்பாங்க. மாப்ள வீடு இல்லையா? அவங்க..”
“பிளீஸ் வேணாம்ப்பா” என்று அப்பாவின் கையைப் பிடித்தாள். அவர் கரம் மெலிதாக நடுங்கியது. அழுத்தமாக ஆதரவாக அப்பாவின் கரம் பற்றினாள்.
“அவங்க கேட்கறதை அப்பா செஞ்சுடுவேன்டா. நீ அதைப் பத்தி கவலைப்படாத. எங்களுக்கு உன் சந்தோஷம்தான் முக்கியம்” என்று உணர்வு மிகுதியில் நடுங்கிய குரலில் சொன்னார்.
“அப்பா..”
அவளைப் பேசவே விடவில்லை அவர்.
காவேரிதான் இடைப்புகுந்து, “நீங்க கொஞ்சம் நேரம் பேசாம இருங்க” என்று கணவரை அதட்டி, மகளிடம் திரும்பி, “நீ சொல்லு பாரும்மா” என்று மகளின் முகத்தைக் கூர்ந்து நோக்கினார்.
“எனக்கு இந்தக் கல்யாணம் வேணாம்மா” என்றாள் தொண்டையடைக்க. பெற்றோர்கள் அல்லவா எப்படிப் பதறாமல் இருப்பார்கள். என்ன ஏதென்று கேள்வியாகக் கேட்டு அவளைத் துளைத்தெடுத்தார்கள். அவர்களிடம் எதையும் மறைக்காமல் மொத்தமாகத் தன் மனத்தைக் கொட்டி கவிழ்த்திருந்தாள்.
“உனக்குப் பிடிக்கலன்னு சொல்லியும் ஃபோர்ஸ் பண்ணானா அவன்?” மாப்பிள்ளை மரியாதை எல்லாம் கணத்தில் காணாமல் போய் இருந்தது.
“நீயேன் இதை அப்பாகிட்ட சொல்லல?”
“எங்கிட்ட சொன்னாங்க” என்று காவேரி தயக்கத்துடன் சொல்ல, “நீ பதிலுக்கு என்ன சொன்னியாம்? என் பொண்ணைப் பொறுத்துப் போகச் சொன்னியா?” என்று அடக்க முடியாத கோபத்துடன் கத்தினார். அவ்வளவுதான் அவருக்கு எல்லாவற்றையும் இணைக்க ஒரு நிமிடமே போதுமானதாக இருந்தது.
“இந்தச் சனிக்கிழமையும் அப்படி ஏதோ உன்கிட்ட பண்ணிட்டுதான் ரொம்ப நல்லவன் போல என்கிட்ட வந்து பேசினானா? ராஸ்கல்” என்று பல்லைக் கடித்தார்.
பார்கவியின் ஒரு தலை காதல் தோல்வி. அதனால் பெற்றோர் பார்த்த இந்தத் திருமணத்துக்குச் சம்மதித்தது. அதை அவனிடம் பகிர்ந்தது. அதையே அவ்வப்போது குத்திக் காட்டி அவன் பேசியது என எதையும் மறைக்கவில்லை அவள்.
“அவரோட இருக்கும் போது.. என்னால.. நானாவே இருக்க முடியலப்பா. இப்படியே வாழ்க்கை முழுக்க நடிக்கணுமான்னு மலைப்பா இருக்கு” என்று அவள் உடைந்த குரலில் சொல்ல, காவேரி மகளை மார்போடு சேர்த்தணைத்துக் கொண்டார்.
“ஐ ஆம் சாரிம்மா, சாரிப்பா” என்றாள் கண்ணீருடன். அவளின் மனப் போராட்டத்தை, அவள் மனம் மாறச் செய்த முயற்சிகளை எல்லாம் சொன்னாள். அதைக் கேட்ட பெற்றவர்களுக்கு மனம் உருகி போனது.
“தினம் கண்ணு முழிக்கும் போது என் பொண்ணு சந்தோஷமா, நிம்மதியா இருக்கணும்னு வேண்டிக்கறேன்டா பாரும்மா. அப்பா உன் விருப்பத்துக்கு மாறா ஏதாவது செய்வேனா..” என்று கலங்கிய குரலில் கேட்டார். அப்பாவின் கையை இறுக பற்றினாள். அதுநாள் வரை அவள் மனத்தில் அடைத்து வைத்திருந்த இறுக்கம் கண்ணீராக வெளியேறியது.
மகளின் கண்ணீரை துடைத்து விட்ட காவேரி, “நீ விரும்பினதா சொன்னியே அந்தப் பையன் யாருடா?” என்று கேட்டார்.
“அம்மா” என்று அவள் சிணுங்க, “நம்ம பொண்ண கட்ட அவனுக்குக் கொடுத்து வைக்கல விடு காவேரி” என்றார் ரங்கராஜன்.
அப்பாவுக்குத் தண்ணீர் எடுத்து நீட்டினாள் பார்கவி.
“அப்பா ஹார்ட் ஸ்ட்ராங்கா இருக்குடா பாரும்மா. நீ பயப்படாத. இதுக்கெல்லாம் அப்பா நெஞ்சை பிடிக்க மாட்டேன்” என்று கேலி பேசினார்.
அவள் முறைக்கவும், “எங்களுக்காக யோசிச்சு நீ இவனைக் கல்யாணம் பண்ணிட்டு கஷ்டப்பட்டிருந்தாதான் அப்பாவால தாங்கியிருக்க முடியாதுடா” என்று உடைந்தார்.
“என் மேல கோபம் இல்லையேப்பா?”
“நீ இந்த முடிவை எடுத்ததுல அப்பாக்கு சந்தோஷம்தானே தவிரக் கோபம் சத்தியமா இல்லடா” என்றார் மகளின் தலை கோதி.
“அப்பாடா. எனக்கு அந்தக் குடும்பத்த சுத்தமா பிடிக்கல. அதுவும் அந்தப் பொம்பளை, பணப் பேய். எப்போ பாரு, உங்க பொண்ணு அழகு, உங்க பணம், சொத்துன்னு. அது ஆளும், அது பேச்சும்..” என்று முகத்தைச் சுளித்துக் காவேரி சொல்ல, வாய் விட்டு சிரித்தார் ரங்கராஜன்.
“அப்பா, நான் கண்டிப்பா நீங்க சொல்ற பையனைதான் கல்யாணம் பண்ணிப்பேன். ப்ராமிஸ்ப்பா..” என்று சொல்லி பெற்றோரை மாறி மாறிப் பார்த்தாள்.
“மிச்சத்தையும் சொல்லி முடி” என்று காவேரி நக்கல் செய்ய, “இப்போதைக்கு நாங்க கல்யாண பேச்சே எடுக்கல, போதுமா?” என்று சிரித்துக் கொண்டே ரங்கராஜன் கேட்க, அந்தச் சிரிப்பு அவளையும் தொற்றியது.
“எங்கக்கா இருக்காளே அவளைக் கவனிக்கிறேன் மொதல்ல” என்று காவேரி கறுவ, “அட விடும்மா. உங்கக்காக்கு அவங்களைப் பத்தி தெரியாம இருந்திருக்கும்” என்றார் ரங்கராஜன்.
“அப்படித் தெரியாத வரனை எதுக்கு நம்ம தலையில கட்டினா அவ?” என்று பதிலுக்குக் கோபமாகக் காவேரி கேட்க, அவள் மெல்ல அங்கிருந்து நழுவினாள்.
அன்று இரவு உணவு முடித்தும் கூட அவளின் பெற்றோர் அதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர்.
பல நாள்கள் கழித்து நன்றாக ஆழ்ந்து உறங்கினாள் பார்கவி.
ஒரு சரியான முடிவு தரும் நிம்மதி அலாதியானதுதானே!