மறுநாள் அதிகாலையில் அவள் எழுந்திருக்க, அவளுக்கு முன்னே எழுந்திருந்தார்கள் அவளின் பெற்றோர்.
அவள் கீழிறங்கி கூடத்துக்கு வரவும், “இன்னைக்கு உனக்கு லீவ்னு சொன்ன பாரும்மா. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கியிருக்கலாம்ல? ஏன் சீக்கிரமா எழுந்துட்ட?” என்று அக்கறையுடன் கேட்டார் ரங்கராஜன்.
“அலாரம் அடிச்சி எழுப்பி விட்டுருக்கும். இல்லன்னா உங்க பொண்ணு இந்நேரம் எழுந்திருக்கற ஆளா? அதுவும் அவளா?” என்று காவேரி நொடிக்க, “என் பொண்ணைப் பேசாத நீ” என்று மனைவியைக் கடிந்தார் ரங்கராஜன். பார்கவி புன்னகையுடன் சோஃபாவில் தலை சாய்க்க, கணவருக்குக் காஃபி கொடுத்த காவேரி, “உனக்கும் தரவா?” என்று அவளைக் கேட்டார்.
“நானே கலந்துக்கறேன்ம்மா” என்று எழுந்து சமையல் அறை சென்றாள்.
கூடத்தில் அவள் பெற்றோர் பேசுவது அவள் காதில் தெளிவாக விழுந்தது.
அன்று அவர்களின் திட்டமே வேறாக இருந்தது போலும். இப்போது மகளின் முடிவு மாறிட அதற்குத் தகுந்தாற்போலத் தங்கள் திட்டத்தை மாற்றி அமைத்தார்கள்.
அப்போதே பாரிவேந்தன் வீடு சென்று தங்களின் முடிவை தெரியப்படுத்தித் திருமணத்தை நிறுத்தவிருந்தார்கள்.
பாரிவேந்தன் வீட்டினர் நிச்சயமாகப் பிரச்சினை செய்வார்கள் என்று எதிர்பார்த்து காவேரியின் அக்கா யமுனா குடும்பத்தையும் அவர்களோடு அழைத்துச் செல்ல முடிவு செய்தார்கள்.
முந்தின இரவே அக்காவுக்குத் தகவல் சொல்லியிருந்தார் காவேரி.
இப்போது மீண்டும் அழைத்துப் பேசினார்கள். நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை நிறுத்துவதும் அத்தனை எளிதில்லையே. ஆகவே முன்னேற்பாடாகப் பலதும் செய்தார்கள்.
காலை உணவை முடித்ததும் பார்கவியிடம் வந்தார் ரங்கராஜன்.
“நானும் அம்மாவும் அவங்க வீட்டுக்குப் போய்ப் பேசிட்டு வர்றோம் பாரும்மா. நீ எதுக்கும் கவலைப்படாத, அப்பா பார்த்துக்கறேன். உனக்குப் பிடிக்காத எதையும் அப்பா நடக்க விட மாட்டேன்” என்று உறுதியாகச் சொன்னார்.
அவள் நெகிழ்ந்த மனத்துடன் அப்பாவை பார்க்க, “நீ தனியா இருந்துப்பியாடா பாரு. இந்தச் சரளா வேற இன்னைக்குச் சீக்கிரம் வீட்டுக்குப் போகணும்னு சொன்னாளே” என்று காவேரி சொல்ல, “ம்மா, நம்ம வீட்ல நான் தனியா இருக்கதுல உங்களுக்குப் பயமா?” என்று கண்ணை உருட்டினாள் அவள்.
“பேசாம அந்தப் பிரியா பொண்ணு வீட்டுக்கு போயேன். உனக்கும் நல்லா பொழுது போகும்” என்றார்.
“அம்மா, அவ அவங்க மாமியார் வீட்ல இல்ல இருப்பா? அவங்களுக்கு வேற பிளான் இருக்கலாம் இல்லம்மா?”
“நீ எதுக்கும் கேட்டுப் பாரு. உன்னைத் தனியா விட்டுப் போக எனக்கு என்னென்டோ இருக்கு” என்று பிடிவாதமாகச் சொன்னார்.
தன் முடிவை குறித்து இன்னமும் பிரியதர்ஷினியிடம் சொல்லிருக்கவில்லை பார்கவி. சிறியதாகக் குறிப்பு கொடுத்து குறுஞ்செய்தி அனுப்பி இருந்தாள். எப்படியும் இப்போது அவளை அழைத்துப் பேசுவாள்தான். அதையே அம்மாவிடம் சொன்னாள்.
பெற்றோரின் முன்னே பிரியதர்ஷினியை அழைத்து அவளின் அன்றைய திட்டம் குறித்துக் கேட்டறிந்தாள்.
“பிரபா ஆஃபீஸ் போயாச்சு பாரு. அத்தையும் கோச்சிங் சென்டர் போயிட்டாங்க. நான் அம்மா வீட்டுக்குதான் வர்றேன். அங்க வந்ததும் நாம மீட் பண்ணுவோம். நீ சொல்ல போற அந்த முக்கியமான விஷயத்தை நான் ஆல்ரெடி கெஸ் பண்ணிட்டேன். இருந்தாலும் நீ சொல்ற மாதிரி வராது இல்ல? சோ எனக்கு நீயே சொல்ற, ஓகே?” என்று பேசி அழைப்பை துண்டித்திருந்தாள். அதையே பெற்றோரிடம் சொன்னாள்.
“சரிடா. அப்போ பத்திரமா இரு” என்று காவேரி சொல்ல, “என்ன நீ சும்மா பத்திரம்னுட்டு.. நீ பயப்படாம இரு பாரும்மா. அப்பா எல்லாத்தையும் பார்த்துக்கறேன்” என்று மகளுக்கு நம்பிக்கை சொன்னார் ரங்கராஜன். சரளா வரவும் அவர்கள் பாரிவேந்தன் வீட்டுக்கு விரைந்தார்கள்.
அவள் மனம் லேசாக இருக்கச் சரளாவிடம் கதை பேசிக் கொண்டிருந்தாள். மறுநாள் அவரின் மகளுக்குப் பதினாறாவது பிறந்தநாள் அதனால்தான் இன்று விரைவாக வீடு செல்வதாகச் சொன்னார் அவர்.
“பொண்ணுக்குப் புதுத் துணி வாங்கணும் பாரும்மா. உங்கம்மா நாலு நாளைக்கு முன்னாடியே காசு கொடுத்துட்டாங்க. இன்னைக்கு வெள்ளன போய்ப் பொண்ணுக்கு தெரியாம புதுத் துணி வாங்கி வைக்கணும்” என்று கண்களில் ஆசையும், ஆவலும், அன்பும் மின்ன சொன்னார்.
“பாருங்க கா, நீங்க என்கிட்ட சொல்லவேயில்ல. பாப்பாக்கு ஸ்வீட் சிக்ஸ்டீன் பெர்த்டேவா, சூப்பர்” என்றாள்.
“நீயி வேலையா இருந்த பாரும்மா. அதான் நா சொல்லல” என்று அவர் சொல்ல, “நான் கொஞ்சம் கடை வரைக்கும் போயிட்டு வர்றேன்கா. நான் வந்த பிறகு நீங்க வீட்டுக்கு போங்க” என்று அவரிடம் சொல்லி விட்டு கடைக்குச் சென்றாள்.
*****
பார்த்திபனின் அலைபேசி தொடர்ந்து அலறிக் கொண்டிருந்தது. அவனோ குளித்துக் கொண்டிருந்தான்.
“பார்த்திபா உன் போனு அடிக்குது பாரு” என்று சத்யபாமா சத்தம் போட, “யாருன்னு பாருங்கம்மா” என்று பதில் குரல் கொடுத்தான் அவன்.
“இந்த அசோக்கு பேசுறான்டா” என்று அவர் சொன்ன மறுநிமிடம் பாதித் துடைத்த உடலில் ஈரம் சொட்ட, தலை முடி மொத்தமும் நீர் வடிய, இடையில் ஈர கைலி, மார்பில் ஈர துண்டுடன் வெளியே வந்திருந்தான் பார்த்திபன்.
மகனைப் பார்த்ததும், “ஏன்டா அப்படி என்னடா அவசரம்?” என்று அதிர்ச்சியுடன் கேட்டார் சத்யபாமா.
“நீ போனை குடும்மா” என்று அவரிடம் இருந்து அலைபேசியைப் பிடுங்கி, காதில் வைத்து, “டேய், அசோக் சொல்லுடா” என்று பரபரத்தான்.
“அப்படியே நின்னு போன் பேசிட்டு இருக்காம சாப்பிட வாடா” என்று அவனிடம் சொல்லிச் சென்றார் அவர். அவனது அலைப்பேச்சு கிட்டத்தட்ட அரை மணி நேரத்துக்கும் மேல் நீண்டது.
அதன் பிறகு அவசரமாக உடை மாற்றித் தயாராகி வண்டி சாவியுடன் வெளியே வந்தான்.
“சாப்பிட வா பார்த்திபா”
“வேணாம்மா. நான் பிரபஞ்சனை பார்க்க போறேன்” என்றான். அவன் அவசரமாக நடக்க, அவனை நிறுத்தினார் சத்யபாமா.
“நான் சொல்றத கேட்டுட்டு போ. உன் மாமனார் நேத்து அப்பாக்கு போன் பண்ணாராம்”
“எதுக்கும்மா?”
“கல்யாண பத்திரிக்கை அடிக்கறதுக்கு, பேர் எழுதி குடுங்கன்னு கேட்டாராம். அப்புறம் அவங்க பொண்ணு பேர்ல வீடு ஒன்னு புக் பண்ண போறாராம். உன் பேர்லயும் சேர்த்து புக் பண்றதா சொல்லியிருக்கார்”
“என்னம்மா சொல்ற?” நம்பவியலாத அதிர்ச்சியுடன் கேட்டான்.
“ஆங் சொரைக்காய்க்கு உப்பில்லைன்னு சொல்றாங்க. போடா பார்த்திபா, உனக்குப் புரியலையா என்ன? உங்களைத் தனிக் குடித்தனம் வைக்கப் பிளான் பண்றார் அந்த மனுஷன்” என்று உடைத்துச் சொன்னார்.
“இந்தப் போலீஸ்கார் வேற” என்று நெற்றியை கீறினான்.
“நான் நைட் வந்து அப்பாகிட்ட பேசறேன். போலீஸ்காரர் போன் பண்ணா எனக்குப் பேச சொல்லுங்க. என்னம்மா?” என்று கேட்டு, அவர் தலையசைத்ததும் வாசலுக்கு நகர்ந்திருந்தான்.
“இந்தப் பார்கவி பொண்ணு வீடு கல்யாண பத்திரிக்கை வைக்க வர்றேன்னு சொன்னாங்க.” என்று அம்மா சொன்னது அவன் காதில் விழ வேகமாக அவனது வண்டியை ஆக்கிரமித்தான், அவசரமாகப் பிரபாவதியை அழைத்தான்.
அந்தப் பக்கம், “ஹாய்..” என்று ராகம் பாடினாள் அவள்.
“பிரபா..”
“ம்ம் பிரபாவுக்கு என்னவாம்? நீங்க என்கிட்ட பேசி நாலு நாளாச்சு. தெரியுமா?” என்று மனத்தாங்கலுடன் கேட்டாள்.
“எனக்கு உன்னை மீட் பண்ணணும் பிரபா” என்றான் அடர்ந்த குரலில்.
“பார்க்கலாமே. நான் இன்னைக்கு ஃப்ரீதான். நீங்களும் லீவ்தானே? வாங்களேன் வெளில போகலாம். நான் அப்பாகிட்ட கேட்டுட்டு வர்றேன்” என்றாள்.
“உங்கப்பா கிட்ட பெர்மிஷன் கேட்டு வை. ஆனா இன்னைக்கு இல்ல, நாளைக்கு மீட் பண்ணலாம். உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்” என்றான் அழுத்தமாக.
“அப்படியென்ன இம்பார்டெண்ட்டான விஷயம்? இப்ப சொல்லலாம் இல்ல?”
“நேர்ல சொல்றேன் பிரபாவதி” என்று முடித்து விட்டான். மறுநிமிடம் பிரபஞ்சனை அழைத்துப் பேசி விட்டு, அவனைச் சந்திக்க நிதானமான வேகத்துடன் வண்டியை விரட்டினான்.
***
பார்கவி இரண்டு கைகளிலும் இரண்டு பையைத் தூக்கி கொண்டு வீட்டினுள் நுழைந்தாள்.
“இந்தாங்கக்கா” என்று சரளா அக்காவிடம் கொடுத்தாள்.
“என்ன பாரும்மா இத்தனய கொண்டாந்து கொடுக்கற?” அவளை ஆனந்த அதிர்ச்சியுடன் ஏறிட்டார்.
ஒரு பையில் பழங்கள், இனிப்புகள், சாக்லேட் மாற்றதில் புதிய தாவணி பாவாடை சட்டை இருந்தது. தந்த நிற பாவாடைக்கு, அரக்கில் பொன் சரிகையோடிய தாவணி எடுத்திருந்தாள்.
“ரொம்ப அழகா இருக்கு பாரும்மா” சரளாவுக்கு அத்தனை மகிழ்ச்சி.
“இந்தாங்கக்கா” என்று நகைக்கடை பெட்டியை நீட்டினாள்.
“தங்கம் இல்லக்கா, வெள்ளிதான் வாங்கினேன்” என்றாள். அதில் அழகிய வேலைப்பாடு கொண்ட கொலுசு இருந்தது. சரளா நன்றி சொல்ல, “அடப் போங்கக்கா” என்று சிரிப்புடன் சொல்லி உள்ளே சென்றாள்.
பிரியதர்ஷினியை எப்போது வருகிறாள் என்று கேட்க அவளை அழைத்துப் பேசினாள்.
“அப்பாம்மாக்கும் இன்னைக்கு லீவ் இல்ல பாரு, நான் அவங்களோட இருக்கேன். ஒரு பத்து நிமிஷம் டைம் கொடு, வந்துடுறேன்” என்றாள் அவள்.
“பிரியா இப்போ வந்துடுவாக்கா, நீங்க கிளம்புங்க” என்று சரளாவை அனுப்பி வைத்தாள்.
மெலிதாக ஒரு பாடலை முணுமுணுத்தவாறு பார்கவி கணினியில் மூழ்கிய வேளையில் வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது.
கதவை திறந்தவள் நிச்சயமாகப் பாரிவேந்தனை எதிர்பார்க்கவில்லை.
திருமணம் நின்ற விஷயம் தெரிந்து தன்னைச் சமாதானம் செய்ய வந்திருக்கிறானோ என்ற எண்ணத்துடன் அவனைப் பார்த்தாள்.
அவனோ அவசரமாக அவளை இடித்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்தான். அதே வேகத்தில் திரும்பி வீட்டின் கதவை அடைத்து தாழிட்டு அவள் புறம் திரும்பினான்.
“என்ன பண்றீங்க?” அதிர்ச்சியுடன் அவள் கேட்க, அவள் தோளில் கைப் போட்டு சுண்டியிழுத்தான்.
அவன் கண்களில் இருந்த தீவிரமும், உடல் மொழியில் தெரிந்த கோபமும், அவளுள் எச்சரிக்கை மணியை அதிர விட்டது.