அதுநாள் வரை இல்லாத ஒரு மாற்றத்தை சமீபமாகப் பாரிவேந்தனிடம் கண்டாள் பார்கவி.
அவனால் இத்தனை மென்மையாகப் பேச முடியுமா என்று ஆச்சரியப்பட்டுப் போனாள். அவளின் மனம் புரிந்து நடந்து கொள்ள மிகவும் முயற்சித்தான். ஆம், முயற்சித்தான். அவளுக்கு நன்றாகத் தெரியும் விதமாக.
ஞாயிறு அன்று அவள் பேசியதை வைத்தே அவள் மனம் அவனுக்குப் புரிந்திருக்க வேண்டும். தன் கைகளில் இருந்து நழுவுவதை இறுக பற்றும் முனைப்பில் இருந்தான்.
அந்தத் தீவிரம் அவளைத் தீவிரமாக மிரட்டியது. அவள் சற்று விலகி நிற்க முயன்றாலும் மேலும் நெருங்கி வந்தான் அவன். அன்பும், அக்கறையுமாக. ஆனால், உடல் அளவில் அவளை நெருங்கவில்லை அவன். அதற்கு அவனுக்கு வாய்ப்பும் அமையவில்லை.
கடந்த மூன்று நாள்களாக தினம் மாலை அவளைச் சந்திக்கிறான். அவளின் அலுவலகம் வந்து அவளுக்காகக் காத்திருக்கிறான். அவள் வேண்டாம் என்று சொன்னாலும் கேட்பதில்லை. அவன் ஒருவிதத்தில் தன்னை நெருக்குவதாக உணர்ந்தாள் அவள். அவனை விலக்கி நிறுத்த ஒரு நொடி போதும் அவளுக்கு. அவளுக்குள் ஒரு போராட்டம், அதற்குப் பதில் வேண்டி காத்திருந்தாள்.
அன்று மாலையும் அவளைத் தேடி அவளின் அலுவலகம் வந்திருந்தான் அவன்.
அவள் வேலை செய்த ப்ராஜெக்ட் இறுதி கட்டத்தில் இருந்ததால் அவளின் வேலை பளு அதிகரித்திருந்தது. இதே துறையில் இருப்பவனுக்கு இதெல்லாம் தெரியாதா என்ற எரிச்சல்தான் அவளுக்கு.
அவள் வேலை முடித்துக் கிளம்பவே ஏழு மணிக்கும் மேலாகியிருந்தது.
அவனது காரில் சாய்ந்து அவளுக்காகக் காத்து நின்றவனைப் பார்க்கையில் அவளுக்குப் பாவமாகி போனது.
“சாரி, உங்களை ரொம்ப வெயிட் பண்ண வச்சுட்டேன் போல.”
“இட்ஸ் ஓகே கவி”
“அதுக்குத்தான் உங்களை வர வேணாம்னு சொன்னேன்” என்றாள்.
சட்டென அவன் முகம் கடினமுற, “இட்ஸ் ஓகேன்னு சொன்னேன்” என்றான். இப்படித்தான் அவ்வப்போது அவனையும் மீறி அவனது சுயம் வெளிப்பட்டு விடுகிறது.
அவள் சரேலென்று அவனை நிமிர்ந்து நோக்க, “சாரி. நான் எப்போ உன்னைப் பார்க்க வந்தாலும் நீ வேணாம்னு சொல்ற. நான் வர்றது உனக்குப் பிடிக்காத போல இருக்கவும்தான் அப்படிப் பேசிட்டேன். தப்பா எடுத்துக்காத” என்றான்.
“நீங்க என்னைப் பார்க்க நேரா என் ஆஃபீஸ் வர்றீங்க பாரி. எங்க ப்ராஜெக்ட் இப்போதான் புரொடக்ஷன் போய் இருக்கு. நான் பிஸியா இருக்கேன்னு தெரிஞ்சும் நீங்க ஆஃபீஸ் வந்தா நான் என்ன செய்ய? என் சிட்டுவேஷனும் உங்களுக்குப் புரியணும் இல்ல?” என்று நிதானமாகக் கேட்டாள்.
“சாரி. இனிமே உன்னைக் கேட்காம வர மாட்டேன். ஓகே?”
“எப்பவும் இப்படித்தான் சொல்றீங்க. ஆனா..”
“அதான் சாரி சொல்லிட்டேனே பார்கவி”
எல்லாத் தவறுக்கும் மன்னிப்பு தீர்வில்லை என்று இவனிடம் யார் சொல்வது என்று அவளுக்கு ஆயாசமாக வந்தது.
மனத்துக்குள் எழுந்த பெருமூச்சை அடக்கி, புன்னகைத்து முன்னே நடந்தாள்.
“உனக்காக இவ்வளவு நேரம் வெயிட் பண்ணியிருக்கேன். என் கூட டின்னர் சாப்பிட்டுப் போகலாம் இல்ல கவி” என்று அவளை வழி மறித்துக் கெஞ்சலாகக் கேட்டான்.
“இவ்ளோ சீக்கிரம் எப்படி டின்னர் சாப்பிட?” என்று நாசூக்காக மறுத்தாள். கிட்டத்தட்ட தினமும் இதுதான் நடக்கிறது. இத்தனை நாளும் அவனது அழைப்பை தவிர்த்திருந்தாள். ஆனால் இன்று அவன் கண்ணில் கெஞ்சலும் அழுத்தமும் கலந்திருந்தது.
“பார்கவி பிளீஸ். ஒரு கப் காஃபி மட்டும்? எனக்காக? நான் வெயிட் பண்ணதுக்காக?” என்று வற்புறுத்தலாக அழைத்தான்.
அவளுக்கு வேறு வழி இருக்கவில்லை.
அவள் யோசிப்பதை கண்டதும் வேகமாகத் திரும்பி தனது கார் கதவை அவளுக்காகத் திறந்து பிடித்தான்.
“இல்ல, நான் என் ஸ்கூட்டில வர்றேன்” என்றாள். அவன் முகத்தில் அதிருப்தி அப்பட்டமாக வெளிப்பட்டது. நொடியில் அதை மறைத்திருந்தான் அவன்.
அந்தப் பகுதியில் இருக்கும் பிரபல உணவகத்தின் பெயரை சொல்லி அங்குப் போகலாம் என்றான்.
“இல்ல, என் வீட்டுக்கு போற வழியில இருக்க ரெஸ்டாரண்ட் போகலாம்” என்றாள் அவள் முடிவாக.
“அதுவும் சரிதான். உனக்கு லேட்டானா கூட அங்கருந்து வீட்டுக்குப் போறது ஈஸியா இருக்கும்.” என்றான்.
“ஒரு காஃபி தானே? அதுக்கு எதுக்கு லேட்டாகப் போகுது?” என்று கண்ணைச் சுருக்கி கேட்டு முன்னே நடந்தாள்.
அவள் தன் இரு சக்கர வாகனத்தில் விரைய அவளைப் பின் தொடர்ந்தான் அவன்.
உணவகம் வந்ததும் சமீபமாக இல்லாத பழக்கம் அவனிடம் திரும்ப வந்திருந்தது. மிகவும் இயல்பாக அவளை நெருங்கி கைப் பிடித்தான். அவள் உருவ முயன்றும் முடியவில்லை.
நால்வர் அமரும் மேஜையின் ஒருபுறம் இருவரும் அமர்ந்தார்கள். அவளை நெருங்கி அமர்ந்தான் அவன். சட்டென அவள் எழுந்திருக்கப் போக, அவளின் கையைப் பிடித்து அமர செய்தான்.
அவளுள் அசெளகரிய உணர்வு பரவியது.
“பிளீஸ் கவி, இப்படிப் பக்கத்துல கூட உக்கார மாட்டேன்னா எப்படி?” என்று அடிப்பட்ட குரலில் கேட்டான்.
“சொல்லு என்ன சாப்பிடுற?” என்று அவள் முகம் பார்த்து புன்னகைத்து கேட்டான். அந்தப் புன்னகையிலும் அவளுக்குப் போலித்தனமே தெரிந்தது.
எல்லாவற்றையும் பிடிக்கவில்லை என்ற பூதக் கண்ணாடி கொண்டு பார்த்துக் குற்றம் காணுகிறோமோ என்று குற்ற உணர்வாகிட அமைதியாக அமர்ந்திருந்தாள்.
“கவி..” என்று அவன் குரல் அவளை உலுக்க, “காஃபி போதும்” என்றாள்.
“ஏதாவது லைட்டா ஸ்நாக்ஸ் ஆர்டர் பண்ணு”
“இல்ல, வேணாம். காஃபி மட்டும் போதும். நான் இப்படி அன்டைம்ல காஃபி குடிக்க மாட்டேன்”
“அப்போ எனக்காகத் தான் காஃபி குடிக்கற இல்லையா?” என்று புன்னகைத்தான். அவளுக்கு ஐயோ என்றானது.
“சரி, உனக்கு எதுவும் வேணாம்னா எனக்கு ஆர்டர் பண்ணு” என்று உணவக ஊழியரை அழைத்தான்.
அவர் வந்து நின்றதும், “ம்ம், எனக்கு ஆர்டர் பண்ணு கவி” என்றான்.
“உங்களுக்கு என்ன வேணும்னு நீங்களே சொல்லுங்களேன்”
“உனக்குப் பிடிச்சது ஆர்டர் பண்ணு” என்றான் அழுத்தமாக.
பணியாளர் சற்றே விலகி நிற்க, “இனிமே நான் உனக்குப் பிடிச்சது மட்டும்தான் சாப்பிடணும்னு இருக்கேன். ம்ம், நீ எனக்கு ஆர்டர் பண்ணு” என்று அவள் புறம் திரும்பி சொன்னான்.
“பாரி, ஐ ஆம் ரியலி டையர்ட்”
“அச்சோ” என்று அவளை நெருங்கி நெற்றியில் கை வைத்தான். அனிச்சையாகப் பின்னே நகர்ந்தாள் அவள்.
“உனக்கு முடியலன்னு முன்னாடியே சொல்ல மாட்டியா கவி?” என்று கேட்டவன், இருவருக்கும் காஃபியும், சிற்றுண்டியும் சொன்னான்.
அவளுக்கு உண்ணும் மனநிலையே இல்லை. வேண்டாம் என்று மறுத்தாள்.
“எனக்காகப் பிளீஸ்” என்று அவளுக்கு ஊட்டி விடப் போனான்.
“எனக்காகக் கவி”
“உங்களுக்காக நீங்கதான் சாப்பிடணும் பாரி” பட்டென்று சொல்லியே விட்டாள். மறுநொடி கோபச் சாயம் பூசியது அவன் முகம். அவள் கவனித்ததும் முயன்று முறுவலித்தான்.
“சாரி” என்றான். கடந்த மூன்று நாள்களாக இல்லாத விதமாக இன்று அவனது நிறம் மாறி கொண்டேயிருந்தது. அவனது பொறுமையைத் தான் நிரம்பச் சோதிக்கிறோம் என்று அவளே அந்நிமிடம் உணரத் தொடங்கினாள்.
அவளின் கைப் பிடித்து, “உனக்கு ஆர்டர் பண்ணதையும் நானே சாப்பிடுறேன் விடு” என்று அனைத்தையும் அவனே உண்டான்.
அவனிடம் இருந்து கையை உருவினாள்.
ஆண்களின் மனம் அவர்களின் உடலில் இருக்கிறது. பெண்களின் மனம் அவர்களின் உணர்வில் இருக்கிறது என்பதை இவனுக்கு யாராவது எடுத்துச் சொன்னால் புண்ணியமாகப் போகும் என்று மனத்தில் புலம்பினாள்.
அவனோ வேறு பேச்சுக்குத் தாவியிருந்தான். “எங்க வீட்ல ப்ரீ வெட்டிங் சூட் எடுக்கலையான்னு கேட்டாங்க? நான் உன்னைக் கேட்டுச் சொல்றதா சொல்லியிருக்கேன். நெக்ஸ்ட் வீக் பிளான் பண்ணுவோமா?” என்று அவளிடம் கேட்டான்.
“எனக்கு அதுலலாம் பெருசா இன்ட்ரெஸ்ட் இல்ல.” என்று அவள் சொல்லவும், “நம்ம கல்யாணத்துலயாவது போட்டோ எடுக்கலாமா இல்ல அதுவும் கூடாதா?” என்று கிண்டலாகக் கேட்டான்.
“சாரி, சாரி. உனக்குப் பிடிக்காத எதுவும் நடக்காது விடு” என்றான்.
“நாளைக்கு உனக்கு லீவ்தானே? எங்கக்கா வீட்டுக்கு போவோமா? சாத்வி பாப்பா உன்னைக் கேட்டுட்டே இருந்தாளாம்” என்றவனை, ஆச்சர்யத்துடன் பார்த்தாள்.
“அந்தப் பாப்பாக்கு என்னை ஞாபகம் இருக்கா?”
“ஏன் இல்லாம? உன் முகம்லாம் மறக்கற முகமா கவி. நீ அப்படியொரு அழகு.” ரசனையாக அவளைப் பார்த்துச் சொன்னான். அவன் கண்கள் அவள் மேனியை வருட, மீண்டும் அவளை அசெளகரிய உணர்வு ஆக்கிரமித்தது.
“நாளைக்கு எங்க ப்ராஜெக்ட்ல இஸ்யூன்னா நான் கால்ல கனெக்ட்டாகணும். அம்மா வேற ஏதோ பிளான் வச்சிருந்தாங்க. அதுனால என்னால..”
“வர முடியாது. புரியுது” என்றான் கடினமுற்ற குரலில்.
“சரி, சாட்டர்டே போவோமா?”
“நான் அம்மாகிட்ட கேட்டுட்டு சொல்றேன். ஏதோ ஷாப்பிங் போகணும்னு சொல்லிட்டு இருந்தாங்க” என்று அவள் சொன்னதும் அவன் முகம் கடினமாகி இயல்பானது.
“இன்னும் என்னை இப்படி அவாய்ட் பண்ணா எப்படிக் கவி?” என்று இறுக்கமாக அவளின் கையைப் பிடித்தான். அந்த நொடி அவள் இழுத்துப் பிடித்திருந்த எதுவோ ஒன்று அவளுள் மொத்தமாய் அறுந்து போனது.
அடுத்த இருபதாம் நிமிடம் வீடு சென்றவளுக்குக் கதவை திறந்து விட்ட சரளா அக்கா, “நான் வீட்டுக்கு போறேன் பாப்பா” என்று அவளிடம் சொல்லி கொண்டு வெளியேறினார்.
அவள் நேராகப் பெற்றோரைத் தேடி சென்றாள்.
ரங்கராஜனின் அலுவல் அறையில் அவர்கள் இருவரும் ஏற்கெனவே தீவிரமான விவாதத்தில் மூழ்கியிருந்தார்கள்.
“அந்தம்மா மனசுல என்ன நினைச்சுட்டு இருக்குன்னு எனக்குப் புரியல. நம்ம பொண்ணு என்ன அதுக்குப் பணம் காய்ச்சி மரமா? வாய் கூசாம அம்புட்டு லட்சம் கேட்குது? நாம என்ன பணம் அச்சடிக்கறோமா இங்க? நமக்கு இருக்கறது ஒரே பொண்ணுன்னு நம்மளை மிரட்டுற மாதிரியே எப்போ பாரு பேசுது. அது பேச்சே எனக்குப் பிடிக்கல சொல்லிட்டேன். ஆ ஊன்னா கல்யாணத்த நிறுத்திடுவோங்கற மாரியே அபசகுணமா பேசுது. போம்மா உன்னால முடிஞ்சத செஞ்சுக்கோன்னு சொல்லிடலாம் போல இருக்கு எனக்கு. நீங்கதான் என் வாயை கட்டிப் போடுறீங்க. இல்லன்னா அவ்ளோதான், நான் நல்லா கேட்டு விட்ருவேன்”
“எம்எல்ஏ வீட்ல இருந்து அவங்க பையனுக்குப் பொண்ணு தர ரெடியா இருந்தாங்களாம். ஆனா இவங்க நம்ம பொண்ணு அழகை பார்த்து மயங்கிட்டாங்களாம்.. எப்போ பாரு அதையே சொல்லிட்டு.. அழகான மருமகளும் வேணும். அவ கை நிறையக் காசும் கொண்டு வரணும். நல்லா இருக்கே இவங்க பேராசை..” என்று மூச்சை பிடித்துப் புலம்பிய, அம்மாவின் பேச்சை முழுக்கக் கேட்டு வாயிலிலேயே அசையாமல் நின்றிருந்தாள் பார்கவி.