“ஆளை விடுங்க” முழுப் பலத்தையும் திரட்டி அவனை விலக்கி தள்ளி விட்டு உள்ளே ஓடினாள் ரோஜா. புன்னகையுடன் அவளைப் பின் தொடர்ந்தான் இளமாறன்.
அடுத்தப் பத்தாம் நிமிடம் தன் வீட்டுப் பெரியவர்களுடன் கிளம்பி விட்டான் அவன்.
சித்ரா நகையைப் பெரிதாகப் பார்க்கவில்லை. அவர்களின் அன்பை மட்டுமே பார்த்தார். அதுவே மகளுக்கு நிலைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.
பெரியவர்கள் இப்படி என்றால், சுகந்தி வேறொரு விதமாக இருந்தார். அவருக்கும் மருமகளுக்குச் செய்ய நிரம்ப ஆசை. ஆனால், ஏதோ ஒருவித தயக்கத்தில் நெருங்கவும் முடியாமல், தள்ளி நிற்கவும் இயலாமல் தவித்துக் கொண்டிருந்தார் அவர்.
திருமண ஜவுளி எடுக்கப் போன போது ரோஜா, “இந்தச் சேலை நல்லா இருக்கு. இது கூட..” என்று அந்த நேரத்து பிடித்ததில் கைக் காட்டிய புடவைகள் அனைத்தையும் அவர் எடுத்து வைக்க, பதறினாள் அவள்.
“அத்த ஒரு புடவை தானே எடுக்கணும்?” என்ற ரோஜாவின் கேள்வியில், “ஏன் நான் தொடுற எல்லாத்தையும் எடுக்கறீங்க?” என்ற மறைமுகக் கேள்வி இருந்தது.
“உனக்குப் பிடிச்சது எடு ரோஜா. அதுல ரெண்டு, மூனு எடுப்போம்” என்றவர், பத்து பதினைந்து புடவைகளை எடுத்து வைத்தார்.
“சரிங்க அத்த” பவ்யமாகப் பதில் சொன்ன மகளைப் பெற்றோர் பெருமையுடன் பார்க்க, நித்யா பொங்கிய சிரிப்பை அடக்கினாள்.
மொத்த பெண்கள் கூட்டமும் சேர்ந்து புடவை கடையைப் பிரித்துப் போட, ரோஜா களைத்துப் போனாள்.
திருமணப் பட்டு வாங்க சென்றிருந்தவர்களுக்கு அங்குக் கவனிப்பு சிறப்பாகவே இருந்தது. அவர்களுக்குக் குடிக்கக் காஃபி, தேநீர், குளிர்பானம் விநியோகிக்கப்பட இளமாறன் தன் கையில் இருந்த காஃபியை ரோஜாவிடம் கொடுத்து அவள் கையில் இருந்த பானத்தை இயல்பாக வாங்கி அருந்தத் தொடங்கினான்.
அவர்களையே விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் சுகந்தி.
“இது எப்படி இருக்கு அத்த?” நித்யா கேட்க, அவர் கவனம் அங்குத் திரும்பியது.
மேலும் ஒரு மணி நேரம் செலவழித்து, முகூர்த்த புடவை மற்றும் வரவேற்பிற்கான புடவையைத் தேர்ந்தெடுத்திருந்தனர். அத்துடன் கூட இரண்டு குடும்பங்களுக்கும் தேவையான புடவைகள் எடுக்கப்பட்டது. பெண்களுக்கு உரித்த குணமாகச் சித்ரா அப்போதும் தன் இரு பெண்களுக்கும் அரை டஜன் புடவை எடுத்து வைத்தார்.
சுகந்தி அவர் பங்கிற்குச் சில ஆயிரங்கள் தொடங்கிப் பல ஆயிரங்கள் மதிப்புள்ள ஐந்து பட்டு புடவைகளை மருமகளுக்கு வாங்கிக் கொடுத்தார். இம்முறை ஏனோ இளமாறனை திரும்பிப் பார்க்காமல் வாங்கிக் கொண்டாள் ரோஜா.
“காட்டன், சில்க் காட்டன், சிந்தடிக் சேலை கொஞ்சம் எடுப்போமா?” சித்ராவின் மனதில் இருந்த கேள்வியைச் சுகந்தி கேட்க, வேகமாகத் தலையசைத்தார் அவர்.
“போகலாம் சம்மந்தி வாங்க” என்று சித்ரா முன்னே நடக்க, “அம்மா, ஏற்கனவே நீங்க ரோஜாக்கு புதுசா வாங்கின சேலை பீரோ நிறைய இருக்கு.” நித்யா அம்மாவின் கைப் பிடித்துச் சொல்ல, “இருக்கட்டும் நித்தி. இன்னும் பத்து சேலை எடுப்போம். வெளில போகும் போது கட்டிப்பா. உனக்கும் கொஞ்சம் எடுக்கணும்” என்றவரை பார்த்து, “ம்மா” என்று பல்லைக் கடித்தாள் நித்யா. சித்ரா கண்டு கொள்ளவேயில்லை.
ரோஜா காலையில் இருந்து அலைந்த சோர்வில் முகம் வாடி விட அவர்களைப் பின் தொடர்ந்தாள்.
இளமாறன் நேராகச் சுகந்தி முன் சென்று, “லஞ்ச் சாப்பிட்டு வரலாம்” என்க, மகனை ஆச்சரியமாய்ப் பார்த்தார் சுகந்தி, சற்றே மகிழ்ச்சியாகவும்.
“சரி மாறா” என்றார் அவர்.
அனைவரும் வெளியே வர, “எந்த ஹோட்டல் மாறா?” என்று சுகந்தி கேட்க, “பாங்கரா பஞ்சாபி தாபா” என்றான் அவன்.
“அம்மா சொல்லு மாறா. மொட்டையா பேசாத” கஸ்தூரி சிறு குரலில் அவனைக் கடிந்து கொண்டது அங்கிருந்த அனைவருக்கும் கேட்டது.
ரோஜா சுகந்தியை திரும்பி பார்க்க சங்கடத்துடன் புன்னகைத்தார் அவர்.
“வாங்கத்த” ரோஜா அவரை ஒட்டிக் கொண்டு நடக்க, அவரும் இயல்பானார்.
அவர்கள் உணவகத்திற்குள் நுழைய, “ஹேய் செஃப். வெல்கம்” என்று ஓடி வந்து வரவேற்றார் அந்த உணவகத்தின் உரிமையாளர்.
“இது புதுசா ஓபன் பண்ண ஹோட்டலா செஃப்?” ரோஜா கேட்க, “எஸ்” என்றான் மாறன்.
“வாங்க, வாங்க” அவர்கள் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்றவர், அவர்களில் ரோஜாவை தேடிப் பிடித்துப் புன்னகைக்க, திரும்பி இளமாறனை பார்த்தாள் ரோஜா.
அவர்களுக்காக இரண்டு மேஜைகள் இணைத்துப் போடப்பட்டது.
அங்கிருந்த பணியாளர்கள் அனைவரும் பம்பரமாகச் சுழன்று வேலை செய்ய ஐந்து நிமிடங்களில் அவர்களின் முன்னே வெண்ணெய் மிதக்கும் பஞ்சாபி தாலி வைக்கப்பட்டது.
“லஸ்ஸி, அச்சாரி பன்னீர் டிக்கா, ரொட்டி, டால் மக்கனி, சர்சோ கா சாக் (கடுகு கீரை), மக்கி கா ரொட்டி (சோள ரொட்டி), அம்ரிட்சரி குல்ச்சா, பாலக் பன்னீர், ஜீரா ரைஸ், டால் ஃப்ரை, தயிர் பச்சடி, லோக்கி அல்வா (சுரைக்காய் அல்வா), சக்கர்பரா, பஞ்ஜிரி” எனத் தட்டை நிறைத்திருந்த உணவு முதலில் கண்களுக்கும், வெண்ணெய், பாலேட்டின் மணம் நாசிக்கும் விருந்தளித்தது.
“நல்ல பசியில உட்கார்ந்துட்டு சாப்பிடாம சாப்பாட்டை முறைச்சு பார்த்திட்டு இருக்க ரோஜா. சாப்பிடு” இளமாறன் அவளை அதட்ட, “எதுக்கு இந்த ஹோட்டலுக்குக் கூட்டிட்டு வந்தீங்க செஃப்?” என்று சந்தேகமாகக் கேள்வி கேட்டாள் ரோஜா. இளமாறன் உதடும் மீசையும் சிரிப்பில் துடிக்க, அவனைப் புன்னகையுடன் முறைத்தாள்.
சுகந்தியின் கண்கள் அவர்களையே வட்டமிட்டது. அவளுக்குக் காஃபி எடுத்துக் கொடுத்தது முதல், அவளின் பசி உணர்ந்து உணவருந்த அழைத்து வந்தது முதல் எதுவும் அவரது பார்வையில் இருந்து தப்பிக்கவில்லை.
“இளா செஃப், பிளீஸ் என்ஜாய் யுவர் மீல் அண்ட் புட் எப்படி இருக்குனு சொல்லுங்க” உணவகத்தின் உரிமையாளர் ஹிந்தியில் அவனிடம் வேண்டுகோள் வைக்க, “கண்டிப்பா வீர்” என்றான் மாறன்.
“நாம புஃட் டேஸ்ட்டிங் பண்ண வந்திருக்கோமா செஃப்?” ரோஜா குரலை தழைத்து அதிர்ச்சியும் கோபமுமாகக் கேட்க, “பேசாம சாப்பிடு டி” என்றான் அவன்.
“உங்களை…” என்றவள் வேண்டுமென்று அவனுக்குப் பன்னீர் ஊட்ட போனாள்.
“ஷ்ஷ்ஷ் ரோஜா” என்று அவன் தடுக்க, உதடு சுழித்து விட்டு உண்ண ஆரம்பித்தாள்.
ஜீரா ரைஸ், டால் ஃப்ரை, அப்பளம் அவனுக்கு நகர்த்தி விட்டு, மற்றதை அவள் உண்ண ஆரம்பித்தாள்.
அவர்களுக்குள் நடந்த அந்த இயல்பான பேச்சு, பார்வை, அன்பு, அக்கறை எல்லாம் பார்க்க பார்க்க மகிழ்ச்சியில் நெஞ்சம் தளும்ப, மெலிதாகத் துளிர்த்த பொறாமையைப் பின்னுக்குத் தள்ளி விட்டார் சுகந்தி.
அனைவரின் முன்பும், இளமாறன் அவரிடம் இயல்பாகப் பேசினான், பழகினான். ஆனால், மறந்தும் கூட அம்மா என்று அழைக்காததை நேரம் சென்றே உணர்ந்தாள் ரோஜா. அடுத்தடுத்த முறை அவள் கவனிக்க, சாதாரணமாகவே அவன் டாக்டர் என்றும், எவ்வித அடை மொழியும் இல்லாது பேசுவது அப்போதுதான் அவளுக்கு உரைத்தது.
அவளின் முகத்தில் வந்து போன உணர்வுகளைப் பார்த்து சுகந்தி அவளின் அருகில் வந்து கைப் பிடித்துக் கொண்டார்.
அவர்கள் உணவை முடித்திருக்க, இளமாறன் உணவக உரிமையாளருடன் பேசிக் கொண்டிருந்தான்.
மகனை பார்த்தபடியே, “ரோஜா” என்றழைத்தார்.
“அத்த..”
“அது…” என்றவர் ஆழ்ந்த மூச்செடுக்க, “இட்ஸ் ஓகே அத்த. நீங்க எதுவும் சொல்ல வேணாம்” என்றாள் ரோஜா.
“நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல ரோஜா. அவன் கோபமும், என் வருத்தமும், கோபமும், ரொம்பச் சின்னப்பிள்ளத்தனமானது. வெளில இருந்து பார்க்கிறவங்களுக்கு அதைப் புரிஞ்சுக்கக் கூட முடியாது. அவனோட கோபத்தை, உணர்வுகளை நான் மதிக்கிறேன் ரோஜா. அவனா சரியாகி வருவான். வருவான் தானே?” நம்பிக்கையுடன் கேட்டவரின் குரல் உணர்ச்சி மிகுதியில் கலங்கி, தடுமாற, அவரின் கைப் பிடித்து அழுத்தினாள் ரோஜா.
இளமாறன் சார்பாக எந்த நம்பிக்கையையும் அவள் கொடுக்கத் தயாராக இல்லை. அது அவனது உணர்வு. கோபமும், சமாதானமும் அவனதாக இருக்க, முடிவும் அவன் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் மௌனமாய்ச் சுகந்தியின் கைப் பிடித்து நின்றிருந்தாள் ரோஜா.
அவளின் கன்னம் தட்டினார் சுகந்தி.
சற்று நேரத்தில் இளமாறன் வர அங்கிருந்து கிளம்பினார்கள்.
நாட்கள் விரைவாக நகர, திருமண நாளும் வந்து சேர்ந்தது.