பார்த்திபன் காதலி – 16 (2)

பார்கவியின் முடிவை அறிந்து கொள்ளும் முனைப்புடன் அவளைப் போட்டு உலுக்கினாள் பிரியதர்ஷினி.

“என் மைண்ட் ப்ளாங்க்கா இருக்கு பிரியா”

“என்ன பாரு இப்படிப் பேசுற?” என்று சலிப்புடன் கோபமாகக் கேட்டாள்.

“அப்பா இப்பத்தான் காலையில பாரி அவர்கிட்ட மன்னிப்பு கேட்டார்னு சொன்னார். அண்ட் பாரி இப்போதான் மனசு விட்டு அவரோட லவ் ஸ்டோரியா என்கிட்ட சொல்லியிருக்கார். அப்பாவா, பாரியான்னு பார்த்தா எனக்கு அப்பா ரொம்பவே முக்கியம். இன்பேக்ட் எனக்கு அவர் மட்டும்தான் முக்கியம். ஆனா நான் கொஞ்சம் என்னையும் பத்தி யோசிக்கணும்தானே?”

“அப்பாடா, இப்பவாவது உன்னைப் பத்தி யோசிச்சியே..”

“நான் எதையும் யோசிக்காம பண்ண ஒரு காரியம்தான் என்னை இங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கு பிரியா” என்றாள் கண்கள் கலங்க.

“ப்ச், பாரு” என்று தோழியைக் கண்டனத்துடன் முறைத்தாள்.

“என்னை என்ன முடிவெடுக்கச் சொல்ற பிரியா? ஏற்கனவே அவசரப்பட்டு நான் எடுத்த ஒரு முடிவுதான் என்னை இங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கு. இனிமே எந்தவொரு முடிவையும் நான் அவசரமா எடுக்கறதா‌‍ இல்ல” என்றாள் தீர்க்கமாக.

“அப்படின்னா? நீ பாரிக்கு என்ன பதில் சொன்ன?”

“நான் எந்தப் பதிலும் சொல்லல. அப்பா நான் என்ன சொன்னாலும் செய்வாங்க பிரியா. அதுக்காக என் இஷ்டத்துக்குக் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டு, அவங்க எல்லா ஏற்பாடும் பண்ணின பிறகு இப்போ போய் “கல்யாணத்தை நிறுத்துங்கப்பா, எனக்குப் பிடிக்கலன்னு” நான் சொல்ல முடியாதுல்ல பிரியா? அப்பாம்மாக்கு நான் சரியான ரீசன் சொல்லணும். அப்படியொரு ரீசன் எனக்குக் கிடைக்கலைன்னா.. நான் பாரியை…”

“ப்ச், சொல்லாத பாரு. அவர் பேரை சொல்லும் போது உன் முகத்துல, வாய்ஸ்ல ஒரு பீலிங்கும்‌ இல்ல. உனக்குப் பிடிக்காத ஒருத்தரோட லைஃப் லாங் எப்படிப் பாரு இருக்கப் போற?” என்று மெய்யான அக்கறையுடன் கேட்டாள்.

“கல்யாணத்துக்கு இன்னும் மூனு வாரம் இருக்கு பிரியா. எனக்கொரு மூனு நாள் டைம் குடேன். லெட் மீ திங்க் கிளியர்லி.” என்றாள் அவள்.

மனத்தில் ஒரு விலகல் வந்த பின் விளக்கங்கள் எல்லாம் வார்த்தை விரயம்தானே!

“அந்த அவன் மட்டும் என் கையில கிடைச்சான், மவனே செத்தான். அநியாயமா உன்னை இப்படி உடைச்சு போட்டுட்டானே” என்று கோபத்துடன் பல்லைக் கடித்தாள் பிரியதர்ஷினி.

“பிரியா” என்று அதட்டி அழைத்து, “அவர் மேல தப்பே கிடையாது. இட் வாஸ் மை மிஸ்டேக். அவரை ப்ளேம் பண்ணாத” என்றாள் அழுத்தமாக.

“வாட்எவர்” என்று கண்ணை உருட்டி, “உன்னை மாதிரி ஒருத்திய மிஸ் பண்ணது, அந்தப் பைத்தியக்காரன் லாஸ். ஹி வில் ஃபீல் ஃபார் இட்” என்று உதடு சுழித்து, கடுப்புடன் சொன்னாள்.

“ஐயோ பிரியா, இப்படிச் சாபம் கொடுக்கற மாதிரி பேசாத. அவர் நல்லா இருக்கணும்” என்று அவளின் வாயில் அடித்தாள் பார்கவி.

“உனக்கு இந்தப் பாரியை எப்படியாவது பிடிச்சுரும்னு நம்பறியா?” முகத்தைப் பாவமாக வைத்து பிரியதர்ஷினி கேட்க, “உனக்குத் தெரியும்ல பிரியா? உன்னைப் போலவே எனக்கும் எங்கப்பாதான் ஹீரோ. எங்கம்மா மேல அப்பாக்கு இருக்க அன்பை பாத்து சின்னதுல ரொம்பப் பொறாமைப்பட்டிருக்கேன். அம்மா கிட்ட சண்டைக்குப் போய் இருக்கேன். பொதுவா நல்ல அப்பாக்கள் பலர் நல்ல கணவரா இருக்கறது இல்ல. ஆனா எங்கப்பா இஸ் ஜெம். அவரை மாதிரியே ஒருத்தர்.. அட்லீஸ்ட் அவர் அளவுக்கு இல்லைன்னாலும் கொஞ்சம் எங்கப்பாவை போலவே என்னைப் பார்த்துக்கறவன் என் லைஃப் பார்ட்னரா வரணும்னு கற்பனை பண்ணியிருந்தேன்.”

“ஐயோ, பாரு”

“அது இப்போ கற்பனையாவே போயிடும் போல” என்று வருந்தினாள்.

பிரியதர்ஷினி என்ன ஆறுதல் மொழி சொல்வதென்று தெரியாமல், தோழியின் கைப் பிடித்து அழுத்திக் கொடுத்தாள்.

“பாரு, நீ என்ன முடிவெடுத்தாலும்…”

“நீ, பிரபஞ்சன், என் அம்மாப்பா எல்லாரும் எனக்குச் சப்போர்ட் பண்ணுவீங்கன்னு எனக்குத் தெரியும்.” என்று அவள் சொல்ல வந்ததைச் சொல்லி முடித்தாள் பார்கவி.

“அப்புறம் எதுக்குத் தயங்கற? தைரியமா ஒரு முடிவுக்கு வா” என்று அழுத்திச் சொன்னாள் பிரியதர்ஷினி.

“பிரபா, கால் பண்றாங்க. நான் வீட்டுக்கு போறேன்” என்று அதே தெருவில் இருந்த அவள் வீட்டுக்கு கிளம்பி விட்டாள். அவளை வழியனுப்ப வாசல் வரை சென்றவள் கண்ணில் விழுந்தான் அவர்களை வண்டியில் கடந்த பார்த்திபன்.

முதல் போல முடிவு என்றும் இருப்பதில்லை!

அதற்காக முதலிலேயே தேங்கி நிற்க முடியாது இல்லையா? முடிவை நோக்கி நகரத்தானே வேண்டும்.

பார்த்திபன் அவளின் முதலாக இருந்தாலும் தற்போது முடிவை நோக்கி அவளை நகர்த்தியது காலம். அதற்கு உடன்பட்டாள். உண்மையில் அவன் நினைவு அவள் நெஞ்சில் இனிமையான ஒன்றாக உறைந்திருந்தது.

அவன் வேறொரு பெண்ணுக்கு நிச்சயிக்கப்பட்டவன், அவனை நினைப்பதும் தவறு என உணர்ந்து தெளிந்திருந்தாள். முதல் காதலை மறப்பது அத்தனை எளிதில்லையே. அது மறுக்கப்பட்டது என்றாலும்!

காவேரி கணவரை கோபமாகப் பேசிக் கொண்டிருக்க, பெற்றோருக்கு நடுவில் நடுவராக நுழைந்தாள் அவள்.

error: Content is protected !!
Scroll to Top