பார்த்திபன் காதலி – 16 (1)

பார்த்திபனின் பதிலுக்காக அவன் முகம் பார்த்திருந்தான் பிரபஞ்சன்.

அவனோ அமைதியாக அங்கிருந்த பூச்செடிகளை ரசித்துக் கொண்டிருந்தான். குட்டி குட்டி பூங்கொத்தை செடியில் சொருகி வைத்தது போலக் கொத்தாய் மலர்ந்து நின்றிருந்தது செண்டு மல்லி பூக்கள். அதைப் பார்க்கவே அத்துணை அழகாக இருந்தது.

மாலை பொழுதில் மல்லி, ஜாதிப் பூ, செண்டு மல்லி, பாரிஜாதம் என மாடித் தோட்டம் முழுக்கப் பூக்கள் மலர்ந்திருக்க அதன் கலவையான மணம் அவர்களின் நாசியைத் தீண்டிச் சென்றது.

நீலநிற சேலையில் தலை நிறைத்த மல்லிகை சரத்துடன் அவன் கண்ணில் வலம் வந்தாள் பார்கவி.

அவனுக்குச் சடுதியில் அவஸ்தையான உணர்வு, அவசரமாக ஆழ்ந்த மூச்செடுத்தான்.‌‍

அன்று அவன், அவளைச் சந்திக்க அவளின் அலுவலகம் சென்ற போது வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

அவர்கள் பாதி வழியைக் கடக்கையில் மெலிதாக மழைத் துற ஆரம்பித்திருந்தது. வெயிலும், மழையுமாக வித்தியாசமான வானிலை நிலவியது. அவர்களின் மனங்களைப் போலவே!

“இப்படிச் சட்டுனு சொல்லாம கொள்ளாம மழை வரும்னு எதிர்பார்க்கல பார்த்தி. லேசா தூறுதேன்னு பார்த்தா சரியா மழைத் துளி என் மூஞ்சிலதான் விழுது” என்று பார்கவி சிரிப்புடன் சொல்ல, “நீ வண்டியை ஓரங்கட்டு பாரு. நான் டிரைவ் பண்றேன்” என்று அவளின் தோளில் தட்டினான்.

“ஹல்லோ பேச்சு பேச்சா இருக்கணும் மிஸ்டர் பார்த்திபன். நீங்க பேசாம உக்காருங்க, நான் டிரைவ் பண்றேன்” என்று அந்த வாகன இரைச்சலுக்கு நடுவே அவனுக்குக் கேட்க வேண்டுமே என்று கத்தியிருந்தாள் அவள்.

அவளின் தோளில் முகம் பதித்து, “பார்கவி” என்று அதட்டலாக அழைத்தான்.

“வண்டியை ஓரங்கட்டுங்க” அந்தக் குரலுக்குக் கட்டுப்பட்டு வண்டியை ஓரமாக நிறுத்தியிருந்தாள்.

மறுநொடி விரைந்து வண்டியில் இருந்து இறங்கியவன் அவள் முகத்தில் ஈரமாய்ப் படிந்திருந்த மழைத் துளிகளைத் துடைத்து விட்டு, அவளுக்குத் தலைக் கவசத்தை அணிவித்திருந்தான்.

அப்போது அவளின் உதட்டில் தவழ்ந்த புன்னகையையும், கண்களில் மின்னிய குறும்பையும் இப்போதும் அவனால் நினைவு கூர முடிந்தது.

அவள் விடை பெற்ற போது, அவளின் விரல்கள் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை நேராக்கின. “பா” என்ற தமிழ் எழுத்தில் அழுத்தமாய்ப் பதிந்திருந்தன இரண்டு விரல்கள்.

“தேங்க்ஸ் பார்த்தி” என்று அவனுக்கு விடை கொடுத்திருந்தாள். அதற்கு முன்பும் சில முறை அவளைச் சந்தித்திருக்கிறான்தான்.

பிரபஞ்சன், பிரியதர்ஷினி என அவர்களின் நண்பர்கள் இருவரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்று கொண்டிருந்த சமயம், விதி வசத்தால் அவர்கள் மீண்டும் சந்திக்க நேர்ந்தது. அன்று நண்பனுக்காக காரோட்டி சென்றிருந்தான்.

அன்றைக்குப் பிரபஞ்சன், பிரியதர்ஷினி இருவரும் மருத்துவர் அறை, பரிசோதனைகள் என அலைய, இவன் தனித்து அமர்ந்திருந்தான். அந்நேரம் பார்கவிதான் இவனோடு இருந்தாள்.

மருத்துவமனை காத்திருப்பு அறையில் மணிக்கணக்கில் இருவரும் பேசியிருந்தார்கள். என்ன பேசினோம் என்று இப்போது போட்டு மூளையைக் கசக்கினான். இதுதான் என்று இல்லாமல் எல்லாமே பேசிய நினைவு அவனுக்கு.

“பார்த்தி, உங்க ஃப்ரெண்ட் பிரபா செக்கப்காக வந்திருக்கோம் நாம. பிளீஸ், பீ சீரியஸ். இப்படிச் சும்மா என்னைச் சிரிக்க வைக்காதீங்க” என்று பார்கவி சிரித்துக் கொண்டே சொன்னது அவனின் ஆழ்மனத்தில் இருந்து மேலெழுந்து வந்தது.

அந்தச் சிரிப்பு, மழலையின் சிரிப்பாய் நம்மையும் சேர்ந்து சிரிக்கச் சொல்லும் வகையில் இருக்கும். ஆனால் சமீபமாக அவள் சிரித்தே அவன் பார்க்கவில்லை. புன்னகை தொலைத்த அந்தப் பூ முகம் அவனை நிரம்பத் தொந்தரவு செய்தது.

“நான் அவகிட்ட மன்னிப்புக் கேட்கணும்டா பிரபா. ஆனா இப்போ போய்ச் சாரி கேட்டு அவ லைஃபை நான் காம்ப்ளிக்கேட் பண்ண விரும்பல.” என்றான் உணர்ச்சிகள் துடைத்த குரலில்.

“நான் யாருன்னு கேட்டேனே பார்த்தி?”

“யாருன்னு தெரிஞ்சா என்னடா மாறிட போகுது. நான் அவளை ஹர்ட் பண்ணது, பண்ணதுதானே? என்னால எதையும் மாத்த முடியாதுன்னும் போது…”

“மன்னிப்பாவது கேட்டுடு, உங்க ரெண்டு பேருக்குமே அது பெரிய ரிலீஃபா இருக்கும்” என்று நண்பனின் தோளில் ஆதரவாகக் கைப் போட்டான் பிரபஞ்சன். பார்த்திபன் அப்படியே பின்னால் சாய்ந்து நின்றான். அவன் பார்வை மீண்டும் பார்கவியின் வீட்டு மொட்டை மாடியை தொட்டு மீண்டது.

அங்கே நின்றிருந்த பார்கவி அவனது தேடிய விழிகளுக்குள் விழுந்தாள். அவன் கண்கள் சட்டென விரிய அவளுக்குப் பக்கத்தில் நின்றிருந்தவனும் பார்வையில் விழுந்தான்.

இருவருக்கும் இடையே இருந்த இடைவெளி இவனைப் புருவம் சுருக்க வைத்தது.

“உன் லைஃப்ல எனக்குத் தெரியாத பக்கங்கள் கூட இருக்காடா பார்த்தி?” பிரபஞ்சன் ஆதங்கத்துடன் கேட்க, “பொறாமையா மிஸ்டர் பி?” என்று கிண்டலாகக் கேட்டான் அவன்.

“என்ன நடந்ததுன்னு தெளிவா சொல்லுடா. எனக்குத் தலையும் புரியல, வாலும் தெரியல” என்று கையை விரித்தான் பிரபஞ்சன்.

“முதல்ல நீ ஏன் அந்தப் பொண்ணோட லவ்வ அக்செப்ட் பண்ணல? எனக்கு அதுக்குக் காரணம் சொல்லு? அப்படியே யார் அந்தப் பொண்ணுன்னும் சொல்லு” என்று பிரபஞ்சன் கேட்க, “திரும்பத் திரும்ப யாருனு கேட்காதடா பிரபா” என்று முறைத்தான்.

“சரிடா, எப்பா. நான் எதுவும் கேட்கல. நீயே சொல்லு” என்று கையைக் கட்டிக் கொண்டு தள்ளி நின்றான்.

“அதான் சொன்னேனே..”

“டேய்..” என்று பல்லைக் கடித்தான் பிரபஞ்சன்.

“சாரிடா. அவ.. என்கிட்ட லவ் சொல்லும் போது அதை ஏத்துக்கற நிலைமையில நான் இல்லடா.. அப்படியே ஷாக்காகிட்டேன்”

“ஏன்? லவ்னா உனக்கு அவ்ளோ வெறுப்பு வர்ற அளவுக்காடா பார்த்தி என் லவ் உன்னைப் படுத்திருச்சு?”

“ப்ச், பிரபா. அப்படியெல்லாம் இல்லடா. அவ லவ் சொல்லும் போது எனக்குப் பிரபாவதியோட எங்கேஜ்மெண்ட் முடிவாகி இருந்தது.” என்று படபடத்து நெற்றியை கீறினான்.

“எங்கேஜ்மெண்ட் முடிவாகிதானே இருந்தது? எங்கேஜ்மெண்ட் ஆகலையே?”

“என்னடா பிரபா, இப்படிப் பேசுற?”

“இல்லடா, நீ இப்போ வந்து சொல்றதை பார்த்தா உனக்கும் அந்தப் பொண்ணு மேல ஃபீலிங்ஸ் இருக்க மாதிரி இருக்கு. உனக்கு எங்கேஜ்மெண்ட் ஆகாத போது நீ நினைச்சுருந்தா அந்தப் பொண்ணுகிட்ட ஒழுங்கா பேசியிருக்கலாம். இப்போ இப்படிக் கில்ட்டா பீலாகி புலம்ப வேண்டி இருந்திருக்காது பாரு. அதுக்குச் சொன்னேன்” என்றான். நண்பனின் வார்த்தைகளில் இருந்த உண்மை அவனைச் சுட்டது.

“அப்போ எனக்கு அந்தப் பொண்ணு மேல பயங்கரக் கோபம்தான் வந்தது பிரபா. நல்லா போய்ட்டு இருக்க என் லைஃப்ல, நடுவுல வந்து நோ பால் போட்டு குழப்புறாளேன்னுதான் இருந்தது”

“சரி, இப்ப மட்டும் என்ன மாறிடுச்சு? எதுக்காக இப்படிப் பைத்தியக்காரன் போலப் புலம்பிட்டு இருக்க?”

“உனக்குப் புரியாதுடா பிரபா” என்று கத்தினான்.

“என்னை மறக்க.. அவ.. அவ மூவ் ஆன் ஆகிட்டா. ஆனா அவ நான் பார்க்கும் போதெல்லாம் சந்தோஷமா இல்லைன்னு அவ முகமே சொல்லுது. ஐ ஃபீல் டெரிபில்டா மச்சா” என்று நெற்றியில் அறைந்து கொண்டான். அவன் தோளில் ஆதரவாகக் கைப் போட்டு, “அவளோட முடிவுக்கு நீ காரணமாக முடியாது பார்த்தி. சும்மா டோண்ட் ப்ளேம் யுவர்செல்ப்” என்று தேற்றினான்.

“அவளைப் பார்க்கும் போதெல்லாம் பயங்கரமா ப்ளர்ட் பண்ணியிருக்கேன்டா. அவளைச் சீண்டி, சிரிக்க வச்சுருக்கேன். அவளுக்காக..” என்று கிரிக்கெட் போட்டியின் போது அவன் அடித்துத் தெறிக்க விட்டதைச் சொல்ல வந்தவன், அப்படியே பாதியில் நிறுத்தியிருந்தான்.

“நான் ப்ளர்ட் ‍பண்ணது எனக்கு அந்நேரம் தப்பா தெரியலடா. ஆனா இப்போ யோசிச்சா அவ மேல தப்பில்லைன்னு அப்பட்டமா தெரியுது. அவளுக்குக் காதல் மொட்டு விட நான்தான் விதை போட்டுருக்கேன். அதை அவகிட்ட சொல்லிடணும்னு நினைக்கிறேன் டா” என்று அவன் உணர்ச்சி வசப்பட்டுப் பேசிக் கொண்டே போக, “டேய் நிறுத்து, அந்தப் பொண்ணு கமிட்டட்னு சொன்னதானே?” என்று கேட்டான்.

பார்த்திபன் ஆமென்று தலையசைக்க, “எதுனாலும் நல்லா யோசிச்சு பண்ணு. இது ஜஸ்ட் லைக் தட்னு உன்னாலயும் சொல்ல முடியாது. நீ உண்மையைச் சொன்னதுக்கு அப்புறம் அந்தப் பொண்ணாலயும் இதை ஈஸியா கடக்க முடியாது. சோ யோசிச்சுக்கோ” என்றான் அழுத்தம் திருத்தமாக.

பார்த்திபன் மீண்டும் மௌனமானான்.

“இப்பவும் என்னால நம்பவே முடியல பார்த்தி. எப்படிடா என்கிட்ட மறைச்ச? நான் அந்தப் பொண்ணைப் பார்த்திருக்கேனா? நமக்குத் தெரிஞ்சவங்களா? இல்ல உன் ஆஃபீஸ்ல ஒர்க் பண்ற யாருமா?” அவன் ஒவ்வொரு கேள்வியாகக் கேட்டுக் கொண்டே வர, கடைசிக் கேள்விக்கு மட்டும் மையமாக மண்டையை ஆட்டியிருந்தான் பார்த்திபன். அதைத் தன் கேள்விக்கான பதிலாக எடுத்துக் கொண்டான் பிரபஞ்சன்.

“ஓ, அதான் எனக்குத் தெரியல போல.” என்றான். மறுகணம் பார்கவியின் வீட்டுப் பக்கம் பார்த்திபன் பார்வை சென்றது. அங்கே அவள் இல்லை. ஆனால் அவன் கண்களில் அவள் பிம்பம் மறையாமல் அவனைச் சோதித்தது.

அவளிடம் விளையாட்டாக, இளமைக்கே உரிய வேகத்தில், வம்பு செய்ய அவன் பேசியது, அவளை இவ்வளவு பாதிக்கும் என்று தெரிந்திருந்தால், இப்படி வினையாக வந்து முடியும் என்று தெரிந்திருந்தால்.. இல்லை, நிச்சயம் செய்திருப்பான்தான். அப்படி மிக இயல்பாகத் தோழமை உணர்வுடன் பழகுபவள்தான் பார்கவி. இல்லையென்றால் இத்தனை வருடங்களில் இல்லாமல், திடீரென்று அவளுக்கு எப்படிக் காதல் பூ பூத்திருக்கும்?

தான் எல்லைக் கோடு வரைந்திருந்ததாக நினைத்தது எத்தனை தவறு என்று இப்போது அவனுக்குப் புரிந்தது.

தற்போது இருவருமே வெவ்வேறு பாதையில் நிற்கிறார்கள். காலம் கடந்து விட்ட பிறகு, இருவரின் வாழ்வையும் சிக்கலாக்காமல் இருக்கவே விரும்பினான் அவன்.

கண்களை இறுக மூடித் திறந்து மனத்தைச் சமன் படுத்தினான்.

“நான் காலையில வீட்ல இருந்து வந்துட்டு, இன்னும் வீட்டு பக்கமே போகல. அம்மா கடுப்பாகப் போறாங்க. நான் வீட்டுக்கு கிளம்பறேன் பிரபா.” என்று நண்பனிடம் சொன்னான்.

“உனக்கு நான் ஏதாவது ஹெல்ப் பண்ண முடியும்னா சொல்லு பார்த்தி. அந்தப் பொண்ணை ஹர்ட் பண்ணிட்டோம்ங்கற குற்ற உணர்ச்சி உனக்கு வேணாம். உனக்கு ஓகேன்னா நான் அந்தப் பொண்ணு கிட்ட பேசறேன். நானும் பிரியாவும் பேசுறோம்”

என்று அவன் தோளில் கைப் போட்டு அழுத்தினான்.

பட்டென்று, “வேணாம் பிரபா” என்ற இரண்டே வார்த்தையில் வந்தது பதில்.

“இந்தக் கில்ட்டோட நீ லைஃப் லாங் இருக்கப் போறியா மச்சா? ஒரு சாரி உனக்கும் அந்தப் பொண்ணும் மனசளவுல விடுதலையையும், நிம்மதியையும் தரும்னா.. நான் உனக்காக அதைச் செய்யறேன்டா”

“நான் பண்ண தப்புக்கு நீ மன்னிப்பு கேட்பியா? போடா..” என்றான் கோபமாக.

இதற்கு மேல் பார்கவியிடம் பேச அவனுக்கு வாய்ப்பு கிடைக்காது என்றே அவனுக்குத் தோன்றியது. அவள் விலகி இருக்க முடிவு செய்த பின், அவளை நெருங்க அனுமதிக்க மாட்டாள் என்று சரியாகக் கணித்தான். ஆனால் இருவரும் திருமணத்துக்குப் பிறகு அமெரிக்காவில் சந்தித்துதானே ஆக வேண்டும்? அப்படி ஒருவேளை அவளைச் சந்தித்தால்? என்ற எண்ணமே அவனைக் கலவரப்படுத்தியது. அவளின் நல்வாழ்வுக்காக மனதார வேண்டிக் கொண்டான். அப்போதைக்கு அதை மட்டுமே அவனால் செய்ய முடிந்திருந்தது.

பிரபஞ்சன் அவனிடம் ஆறுதலாகப் பேசிக் கொண்டிருக்க, “நான் வர்றேன் பிரபா” என்று அங்கிருந்து கிளம்பி விட்டான். நண்பனுக்காக மனம் வருந்தி நின்றான் பிரபஞ்சன்.

error: Content is protected !!
Scroll to Top