செவ்வானம் ஒரு பக்கம், நீலக் கடலின் நிறமாய் ஒரு பக்கம் எனப் பார்க்கவே அழகாய் இருந்தது. கைபேசியில் இருந்த கூகுள் வரைபடத்தைப் பின்தொடர்ந்து நடந்து வந்தவன் கண்களுக்குச் சற்றுத் தூரத்தில் அந்த வாகனம் தென்பட்டது. சிகப்பு நிற வோல்வோ; புதிதாக வாங்கப்பட்டது என்பதை அதன் பளபளப்பும், இன்னும் எண் பொறிக்கப்படாத அதன் தோற்றமுமே கூறின. தமிழ்செல்வனின் பாதங்கள் அதே வேகத்தில் அந்த வாகனத்தை நெருங்கி வர, வாகனத்திலிருந்து குதித்து இறங்கினாள் சக்தி.
“ஹே குரங்கு!” என்றான் இரண்டடி பின்னே தள்ளி நின்று.
“டேய்… நீ எப்போதான்டா பயப்படுவ?”
“லூசு… நீ எங்கே இருக்கன்னு எனக்குத் தெரியாதா என்ன?”
“நடிக்காதேடா! ஹே… ஆமா பாரு, இது புது கார். பெரியப்பா போன வாரம்தான் எடுத்தாங்க.”
“என்னமோ அம்பாசிடர் வாங்குன மாதிரி காட்டுற!” என்றான் வாகனத்தைச் சுற்றிப் பார்வையிட்டவாறே.
“நீ ரெட்ரோ பைத்தியம்டா!” அவளைச் சிரிப்போடு கடந்தவன், “எங்கே இருந்து இந்த ஸ்பாட்டைப் பிடிச்ச?” என வினவினான்.
அவன் பார்வை அவ்விடத்தில் ரசனையாகப் படிந்தது. சக்தியின் வாகனம் நின்றிருந்த இடம் ஒரு சிறு ஓடைப் பாலம். நாணல் புற்கள் எங்கும் வளர்ந்து நிற்க, ஓடையின் இரு பக்கமும் நீண்ட நெடிய மரங்கள் வளர்ந்து, ஓடையின் இரைச்சல் சத்தமும் மரக்கிளையின் அசைவும் அவ்விடத்தை நிறைத்திருந்தது.
“தெரியலைடா… அப்படியே வண்டியை விடச் சொன்னேன், இங்கே வந்தோம்.”
“எதுக்குத் தனியா? அவனுங்களுக்குத் தெரிஞ்சா ஏதாவது சொல்லுவாங்களே!”
“சொல்லிக்கட்டுமே! இரு…” என்றவள் வாகனத்திலிருந்து தன்னுடைய உடைமைகளையெல்லாம் எடுத்து ஓட்டுநரை அனுப்பி வைத்துவிட்டு, அவன் கையில் ஒரு கூடையை வைத்தாள்.
“என்ன இது?” – எதிர்பார்ப்பே இல்லாமல் கேட்டவனுக்குள் ஒரு ஊகம் இருக்கத்தான் செய்தது. ஏற்கனவே சுமையான பையை வைத்திருந்தவள் கையில் தன்னுடைய மடிக்கணினிப் பையையும் திணித்தவன், அங்கிருந்த திட்டில் சென்று அமர்ந்துக்கொண்டான்.
“டேய் பண்ணி… தடிமாடு!”
“வேற சொல்லும்மா!” எனச் சலிப்பாகக் கூறியவன், அவள் கொண்டு வந்த உணவு வகைகளைப் பிரித்து வைக்கத் தொடங்கினான். “என்ன… கருவாடு வந்திருக்கு?”
சக்தி, “உனக்கு அதானே பிடிக்கும்?”
தமிழ், “ம்ம்… அன்னைக்குத்தான் காலையில ஒரு கிழவிகிட்ட திருடிச் சாப்பிட்டேன், வேற லெவல் டேஸ்ட்!”
சக்தி, “அப்போ இது நல்லா இல்லைன்னு சொல்றியா?”
தமிழ், “ஏன் பொண்ணுங்க எப்பவும் காம்ப்ளக்ஸ்ஸாவே யோசிக்கிறீங்க?”
“அப்போ எப்படி இருக்குன்னு சொல்லு?”
“யார் சமைச்சது?”
“அண்ணி.”
“ம்ம்… நல்லா இருக்கு. என்ன… உன் அண்ணனைத் தாலி கட்ட வச்சு அந்தப் பொண்ணோட வாழ்க்கையைப் பாழாக்கிட்டீங்க!”
சக்தி, “ரொம்பப் பேசாதேடா! என் அண்ணன் கண்டிப்பா ஒருநாள் மாறுவார்.”
“எப்போ? அறுபது வயசுலயா?”
சக்தி, “அது எதுக்கு சார் உங்களுக்கு? ஆனா எனக்கும் கொஞ்சம் பயமாதான் செல்வா இருக்கு. எந்த முன்னேற்றமும் அவங்ககிட்ட இல்லை.”
கருவாட்டுத் துண்டு இரண்டை எடுத்து வைத்து அவளிடம் நீட்டினான் தமிழ்செல்வன். அவள் அதனை மூக்கைப் பிடித்து விழுங்க, “உன் அண்ணன் கையில இருந்து உங்க ஆபீஸ், கடை பொறுப்பை வாங்குங்க; மாற்றம் தன்னாலேயே வரும்” என்றான் தமிழ்.
“அதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம்?” – உண்பதை நிறுத்திவிட்டு அவளைப் பார்த்தவன், “பேச மாட்டேங்கிறான், பழக மாட்டேங்கிறான்னு குடும்பமா மாறி மாறிப் பேசிக்கிறீங்களே, அதுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்திருப்பீங்களா?” என்றான்.
“அதான் அவங்க டெய்லி நைட் டூ மார்னிங்…”
அவள் தலையில் நறுக்கென்று கொட்டியவன், “யோசிக்கவே மாட்டியா? இங்கே ஒர்க் முடிஞ்சு உடனே நீ உன் ரூமுக்குப் போனா என்ன பண்ணுவ? பேச யாருமே இல்லைன்னு தூங்குவ. அங்கே ஆள் இருந்தும் நெருங்கிப் பழகப் பிடிக்காமத் தூங்குவாங்க.”
சக்தி, “அவங்க என்ன குழந்தையா எல்லாவற்றையும் நம்மளே செய்ய? அவங்க மனசு வைக்கணும்ல!”
தமிழ், “சரிதான்… அதுக்குன்னு சந்தர்ப்பமே கொடுக்காம இருக்கவும் கூடாதுல்ல?”
உண்டு முடித்தவன் எழுந்து சென்று அந்த ஓடையில் கையைத் கழுவி வந்தான். அவன் வந்தும் சக்தி ஆழ்ந்த சிந்தனையிலேயே இருந்தாள்.
“இல்லாத மூளையைப் புரட்டிப் புரட்டி யோசிக்காதே. உனக்கு ஒரு பாக்ஸ் வச்சேன், சாப்பிட மாட்டேன்னா சொல்லிடு; நானே எடுத்துட்டுப் போய்க்கிறேன்.”
“எப்பப் பாரு வேஸ்ட் பண்ணக் கூடாதுன்னு கிளாஸ் எடுத்துட்டே இருடா! சரி வரியா… கொஞ்ச நேரம் தண்ணியில விளையாடலாம்?”
கால்கள் அமர்ந்த வாக்கிலேயே காற்றில் ஆட, ஒரு குச்சியை எடுத்து அவள் காலிலே அடித்தான். “இப்போதான் ஒரு வாரம் டிமிக்கி கொடுத்துட்டு வந்த, அதுக்குள்ள இன்னொரு லீவுக்கு (Leave) பிளான் போடுறியா?”
“நான் எதையும் பிளான் பண்ணலை. வாடா கொஞ்ச நேரம் விளையாடலாம்.”
“நேரம் என்னன்னு பார்த்தியா? ஆறு தாண்டிருச்சு. முடியவே முடியாது!”
“உங்ககிட்ட யார் சார் பெர்மிஷன் கேட்டது?”
தமிழ் சுதாரிக்கும் முன்பு அந்தத் திட்டில் எழுந்து நின்றவள், அந்தச் சிறு கால்வாயில் குதித்தாள். இதைத் துளிக்கூட எதிர்பார்க்காதவன், நிதானமாகத் திரும்பி அவளை முறைத்தான். அதற்குள் பெண்ணவளோ மூழ்கி எழுந்திருக்க, இவனைப் பார்த்து அசட்டுப் புன்னகை ஒன்றைச் சிந்தி விளையாட்டைத் தொடங்கினாள்.
இரவு நேரத்தைத் தொட்ட பிறகும் நீரின் குளுமை அதிகரிக்காமல், மிதமான வேகத்தில் பாய்ந்தோடும் நீரில் மீனாய்த் துள்ளி விளையாட அவ்வளவு ஆனந்தமாய் இருந்தது. செயற்கையாக உருவாக்கப்பட்ட அந்த நீச்சல் குளங்களில் எத்தனை நாட்கள் குளித்தாலும் இதன் இதத்திற்கு ஈடாகுமா? வாய்ப்பே இல்லை.
குளிக்கும் ஆர்வத்தில் கவனிக்கப்படாத கொடியானது உடலைத் தழுவிய நொடிகளில் பாம்போ எனப் பயந்து நடுங்கி நிதானிப்பதும் அழகு. கால்களை ஈயாய் மொய்க்கும் கால்வாய் மீன்களும் அழகு. இரு பக்கமும் மரங்களுக்கு நடுவில் உலகை மறந்து வானை ரசிப்பதும் அழகுதான். இதுபோன்ற சந்தர்ப்பங்கள் அவளுக்கு அமைவதெல்லாம் மிகவும் அரிது. வேண்டுமென நினைக்கும் வரம் கையில் கிடைக்கையில் விட்டுக்கொடுக்க முடியுமா? இறுக்கமாகப் பிடித்துக்கொண்டாள்.
மனம் நிறைந்த பிறகும் தண்ணீரிலேயே நின்றவள் நடுக்கத்தை உணர, அவன் அவளது பையில் துவாலையைத் தேடினான்.
“தூண்டில் தேடுறீங்களோ?” திடீரெனக் காதின் அருகில் மெதுவாகக் கேட்ட நிமலனின் குரல் ஒரு நொடி பயத்தைத் தான் கொடுத்தது. நெஞ்சினில் கை வைத்து நிமிர்ந்தவன், “பிசாசுக்குப் பிறந்த பிசாசு!” என்றான் சற்றுப் பீதியோடு.
“ஆமா… இவரு பயந்துட்டாரு!” என நம்பாமல் தமிழைப் பார்த்த நிமலனின் பின்னே ஒட்டி வந்து நின்றான் சுசிகரன்.
தமிழ், “நீங்க இங்கே என்னடா பண்றீங்க?”
சுசிகரன், “தல தனியா போச்சேன்னு…”
தமிழ், “அதான் முண்டம் பின்னாடியே வந்துட்டீங்களே!”
“பேச்சை நிறுத்தாதே தல… நீ தனியா போனியே, கதைக்கு ஐடியா தேவைப்படும்னு உன்னைத் தேடி வந்தோம்.”
நிமலன் குறுக்கிட்டு, “ஆனா வந்தாத்தானே தெரியுது… நீ மீன் பிடிக்க வந்திருக்கேன்னு!”
“மீனா?” குழப்பமாக இருவரையும் பார்த்தான்.
சுசிகரன், “ஆமா… சக்திவாய்ந்த மீன்!”
‘சக்திவாய்ந்த மீன்’ என்பதில் அழுத்தம் கொடுத்து அவன் கூற, வேகமாகச் சக்தி நோக்கித் தமிழின் பார்வை சென்றது.
“அட போங்கடா கொங்காங்கோ!” தலையில் அடித்தவன், ஓடிச் சென்று சக்தியிடம் துவாலையை ஒப்படைத்தான்.
“தேங்க்ஸ் செல்வா… ரொம்பக் குளுருச்சு.”
“சொன்னா கேட்டியா?”
“அடேப்பா! இவரு அடுத்தவங்க சொல்றதை அப்படியே கேப்பாரு பாரு!” நிமலனின் குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்த சக்தி, “ஹாய் சுசி அண்ணா! ஹாய் நிமல்!” என உற்சாகமாக வரவேற்றாள்.
“என்ன அக்கா… ஊர்ல குளிக்காம டைரக்டா இங்கே வந்துட்டியோ?” என நிமலன் அவளைக் கேலி செய்ய, “நானாச்சும் ஒரு நாள் தான்டா… நீ வாரம் ஒரு நாள் குளிக்கிறவன்!” என்றாள்.
தமிழ், “அவன் அடுத்த தலைமுறைக்கு இயற்கை வளத்தைச் சேர்த்து வைக்கிறான்… என்னடா நிமலா?”
“தலன்னா தல தான்!” என்றான் நிமலன் தமிழ்செல்வனுக்கு ஒரு சல்யூட் வைத்து.
“எனக்குத் தெரியாதா இந்த நாயைப் பத்தி! கண்டவன் யூஸ் பண்ண மேட்டரை மணிக்கணக்கா வேடிக்கை பார்க்க நேரம் இருக்கும், ஆனா குளிக்க மாட்டான்!”
பேச்சுவாக்கிலேயே சுசிகரனுக்குத் தமிழ் கண் காட்ட, தமிழின் காலைப் பிடிக்க சுசிகரன் இடுப்போடு பிடித்துத் தூக்கி நிமலனைத் தண்ணீருக்குள் தள்ளிவிட்டிருந்தான். ‘ஐயோ… அம்மா… காப்பாத்துங்க…’ போன்ற கதறல்கள் அவ்விடத்தையே நிறைத்தன. நான்கே அடி ஆழம் தான்; அந்த ஓடையின் சிறு வேகம் அந்த ஆண்மகனை மிரட்டியது போல! மூன்று நாட்கள் குளிக்காமல் இருந்தவன் ஒருவழியாகக் குளித்திருக்க, சுற்றியிருந்தவர்கள் சற்று நிம்மதியடைந்தனர்.
சக்தி துவாலையை உடை மேல் போர்த்தி அமர்ந்திருக்க, நிமலன் தன் சிகையை விரல்களால் களைந்து காய வைத்துக்கொண்டிருந்தான். நால்வரும் அதே இடத்தினில் அமர்ந்திருக்க, இருள் கவ்விய அவ்வேளையில் அந்த கிராமமே அடங்கியிருந்தது.
“அப்புறம் செல்வா… எந்த அளவு வேலை போயிட்டு இருக்கு?”
“எல்லாம் நல்லாத்தான் போகுது. சவுண்ட் இன்ஜினீயர்ஸ் கூட நல்லா வேலை பார்க்குறாங்க” – அவளைக் குறிப்பிட்டே அவன் வேடிக்கை பார்த்த வண்ணம் கூற, பட்டென அவன் தோளில் அடித்தவள் உதட்டைச் சுளித்தாள்.
“இருக்கும் இருக்கும்” என்றவளுக்கு, மூன்று ஆண்களின் சலசலப்பின் மத்தியிலும் பின்னே கேட்ட சத்தம் ரீங்காரமாய் மனதை மீட்டியது. வேகமாக எழுந்தவள் தன்னுடைய பையினுள் இருந்த Sony PCM-D100 என்னும் ஆடியோ ரெக்கார்டர் சாதனத்தை எடுத்து மீண்டும் தண்ணீரை நோக்கி ஓடினாள்.
“தல! இந்த அக்கா மறுபடியும் குளிக்கப் போகுது” என நிமலன் வேகமாக தமிழை எச்சரிக்க, அவளை ஒரு நொடி திரும்பிப் பார்த்தவன், “அவ ஆடியோ ரெக்கார்ட் பண்ணப் போறாடா” என்றான் நிதானமாக.
சுசிகரன், நிமலன் இருவர் பார்வையும் மீண்டும் சக்தியிடம் சென்றது. அந்த ரெக்கார்டரை ஓடையும் தரையும் சந்திக்கும் இடத்திற்கு எடுத்துச் சென்றவள், மெல்ல எட்டுகளை வைத்து அந்த ஓசையைச் சேமித்து வந்தாள்.
“என்ன ரெக்கார்ட் பண்றீங்க சவுண்ட் இன்ஜினீயர்?” சுசிகரன் கேள்விக்கு பெருகிய சிரிப்போடு அதைப் போட்டுக்காட்டினாள். மெல்லச் சலசலக்கும் நீரோடையின் சத்தத்தோடு, வண்டுகளின் ரீங்காரமும் இலைகளின் அசைவும் அவ்வளவு தெளிவாக மெல்லிய இசையாகக் கேட்டது.
“அறிவே இல்லாத உனக்கு எப்படித்தான் காத்து மட்டும் இவ்வளவு தெளிவா கேட்குதோ?” என வியப்போடு சுசிகரன் பார்க்க, “இந்தக் கேள்வி எனக்கும் பல வருஷமா இருக்குடா. இதுல ஒரு ஆச்சரியமான விஷயம் என்னன்னா, இவளுக்குச் சின்ன வயசுல சத்தமா சவுண்ட் வந்தாலே பிடிக்காது” என்றான் தமிழ்.
சக்தி, “அது எனக்குமே தெரியல. ஏன் செல்வா… இதே மாதிரி ஒரு மரத்துக்கு அடியிலதானே நாம கதை கதையா பேசுவோம்?”
ஆமோதிப்பாய்த் தலையசைத்தவன், “மறக்க முடியுமா? அந்த மரம் பல பொய் சத்தியங்களைப் பார்த்திருக்கு” என்றான். “அப்படி என்ன பொய் சத்தியம் பண்ணீங்களாம்?” என நிமலன் கேட்க, சக்தி உண்மை அறிந்தவளாய் பற்களைக் காட்டினாள்.
“ஒரு நாள் வேகமா வந்தா… வீட்டுல குலாப் ஜாமூன் பண்ணாங்களாம், அதுக்கு மேடம் உருண்டை போட்டு கொடுத்திருக்கா. உடனே ‘நான் குக் ஆகப் போறேன், ஹோட்டல் கட்டப் போறேன், நீ வந்தாக்கூட உள்ள விட மாட்டேன்’னு ஒரு வாரம் நாடகம்” என்றான் தமிழ்.
நிமலன், “அய்யய்யோ! இது தவறாச்சே. அப்புறம் எப்படி முடிவு மாறுச்சு?”
தமிழ், “ஒண்ணுமில்ல… ‘மூணு அட்டெம்ப்ட் தர்றேன், ஒரு ஹாஃப் பாயில் உடையாமப் போட்டு எடுத்துட்டு வா’ன்னு கேட்டேன். அவ்வளவுதான், அடுத்த நாள் ‘எனக்கு இது பிடிக்கலை’ன்னு சொல்லிட்டா” என்றான் சிரித்தவாறே.
நிமலன், “என்ன அக்கா… தோத்துட்டியா?”
“தோக்குறதுக்கு முதல்ல ஸ்டவ் ஆன் பண்ணணும்ல? ஸ்டவ் ஆன் பண்ணப் பயந்துட்டு வாபஸ் வாங்கிட்டாடா” – தமிழ் சிரித்த சிரிப்பில் சக்திக்கு வெட்கமும் கோபமும் கலந்தது.
“சிரிக்காதேடா!” – அவளிடம் சளைக்காமல் அடி வாங்கியவன், “இதுகூடப் பரவாயில்லை… ஒரு நாள் சிங்கர் ஆவேன்னு வந்து நின்னா” என்றான்.
“செல்வா!” என எழுந்து அவன் வாயை அடைக்கப் பார்த்தவளின் பிடியிலிருந்து திமிறி விலகினான் தமிழ்செல்வன். “இல்லை, நான் இதைச் சொல்லியே ஆகணும்.”
“ப்ளீஸ்டா… அது மட்டும் வேண்டாமே!” என அப்பாவியாக முகத்தை வைத்துப் பார்க்க, “இந்த சீன் எல்லாம் இங்கே இல்லை. இன்னைக்குச் சொல்லியே தீருவேன். ஆமா, என்ன பாட்டு பாடுன?”
“நான் சொல்ல மாட்டேன்” என்றாள் வீறாப்பாக.
“நானே சொல்றேன்… எந்திரன் படத்துல ‘காதல் அணுக்கள்’ சாங். ஒரு லைன் தான் பாடியிருப்பா…” வேகமாக ஓடி வந்தவள் அவன் சிகையைக் கொத்தாகப் பிடித்துப் பேச்சைத் தடுக்க, அவனோ மேலும் மேலும் சிரித்தான்.
“அக்கா சும்மா இரு!” என நிமலன் சக்தியைப் பிடித்து வைக்க, தமிழ் தொடர்ந்தான்:
“பாவம், மரத்துல இருந்த காக்கா காண்டாகிடுச்சு போல… பட்டுன்னு ஒரு எச்சத்தைப் போட்டுச்சு பாரு, நேரா இவ மூக்குல வந்து லேண்ட் ஆகி…” அன்றைய நிகழ்வை நினைத்து தமிழ் சிரிக்க, அவனை கைகள் வலிக்க அடித்துத் தன்னையே சமாதானம் செய்துகொண்டாள் சக்தி.
இதில் சுசிகரனும் நிமலனும் தமிழோடு சேர்ந்து கொள்ள, “அவ்வளவு மோசமாவா இருந்துச்சு தல?” என்று சிரிப்போடு கேட்டான் சுசிகரன்.
“காக்காவே காண்டாகிடுச்சுங்கிறேன்! சொர்ணாக்கா பாடுனதுன்னு நினைச்சிருச்சு போல. பாவம், அதுக்கு ஸ்ரேயா கோஷல்னு தெரியல” தமிழின் கேலியில் மற்ற இருவரும் வயிற்றைப் பிடித்துச் சிரிக்க, எங்காவது சென்று முட்டிக்கொள்ளலாம் போல இருந்தது சக்திக்கு.
“தல… நினைச்சுப் பார்க்கவே சிரிப்பா இருக்கே! மிஸ் பண்ணிட்டேன்” நிமலனுக்குச் சக்தியை சாதாரணமாகவே கேலி செய்ய அவ்வளவு பிடிக்கும். இதில் லட்டு போன்ற விஷயம் கிடைத்தால் கேட்கவா வேண்டும்?
“அவ்வளவுதானே? சக்திம்மா… இங்கே, இந்த மரத்துக்கு அடியில வந்து பாடு. நிமலா ஒரு மாற்றம்… இந்தத் தடவை வவ்வால் எச்சம்!” சிரிக்காமல் தீவிரமாகத் தமிழ் கூறியதில், கைக்குக் கிடைத்த ஒரு பெரிய கட்டையை எடுத்து அவனை அடிக்கச் சக்தி ஓட, அவள் கையில் வழக்கம் போல தமிழ் அகப்படவில்லை.
ஒரு கட்டத்தில் தானாகவே நின்றவன், தன்னை அடிக்க வந்த அவள் கைகள் இரண்டையும் பிடித்துக்கொண்டு, “உனக்கு இப்படியும் நான் ஹெல்ப் தான் பண்ணிருக்கேன் சக்தி” என்றான்.
“ப்ராடு! என் இமேஜ் இதுக்கும் மேல டேமேஜ் ஆக என்னடா இருக்கு?” என்றவள் அவனிடமிருந்து கையை உருவும் முனைப்பில் இருந்தாள்.
அவனோ அடக்கப்பட்ட சிரிப்போடு, “அப்போ இதுக்கு மேல என்ன நடந்தாலும் உனக்குக் கவலை இல்லை” என்றவன், அவளைத் தாண்டிப் பின்னே அமர்ந்திருந்த இருவரையும் பார்த்து, “சுசி… அன்னைக்கு இன்னும் ஒண்ணு நடந்துச்சு…” என்றான்.
தமிழ் கூறுவதைக் குழப்பத்தோடு சிந்தித்துப் பார்த்த சக்திக்குச் சட்டெனப் பொறி தட்ட, “செல்வா வேண்டாடா… வேண்டாடா ப்ளீஸ்!”
“இந்த பொண்ணு அந்த எச்சத்தை மழைன்னு நினைச்சு நக்கிட்டாடா!”
“தல கேட்கல…” என்றார்கள் அவர்கள் இருவரும் கோரஸாக. ஆனால் அவனை மறுமுறை கூறவிடாமல் வெளுத்து வாங்கியிருந்தாள் சக்தி.
“எப்படியெல்லாம் என் மானத்தை வாங்குற நீ? மனுஷனாடா நீ? பண்ணி, குரங்கு, நீர்யானை…” அவனுக்கோ அவள் அடித்தது, திட்டியது எல்லாமே சிரிப்பாகத்தான் இருந்தது. வலிப்பது போல் நடித்து நடித்துச் சிரிப்போடு அனைத்தையும் வாங்கிக்கொண்டான்.
“உன்கிட்ட எவ்வளவு பெரிய முக்கியமான விஷயத்தைச் சொல்லணும்னு வந்தேன் தெரியுமா?”
“என்ன… சமைக்கப் போனியா?” மீண்டும் அவன் அதே இடத்திற்கு வந்து நிற்க, சக்திக்குக் கோபம் வந்துவிட்டது.
“உன்கிட்ட சொல்ல மாட்டேன். நான் சுசி அண்ணாகிட்டதான் சொல்லுவேன்.”
சுசிகரனிடம் வந்து, “அண்ணா… ஒரு ஹாப்பி நியூஸ்.”
“சொல்லும்மா” என்றான் அவனும் நல்ல பிள்ளை போல். அவளுக்கோ சொல்வதற்குச் சற்றுத் தயக்கமாக இருந்தது. “அது வந்து… எனக்கு என் சஞ்சீவ் அத்தான் கூடக் கல்யாணம் பிக்ஸ் ஆகிடுச்சு.”
ஒருவாறாக அவள் கூறிவிட, அவளுக்குப் பின்னே வந்த தமிழ்செல்வன்தான் அனைவருக்கும் முன்பாக, “வாவ்! சக்தி… சொல்லவே இல்லை. கங்கிராட்ஸ். கல்யாணப் பெண்ணாகிட்ட, வாழ்த்துகள்!” என்றான்.
“தேங்க்ஸ் செல்வா. எனக்கே தெரியாது, திடீர்னு எல்லா அரேஞ்ச்மென்ட்ஸும் பண்ணிட்டாங்க. வா வா, போட்டோஸ் காட்டுறேன்” மீண்டும் அதே இடத்திற்குச் சென்று அமர்ந்து, அவனையும் தட்டி அமரக் கூறினாள்.
அவனோ சிறு தயக்கமும் இன்றி அருகே அமர்ந்திருக்க, அன்று எடுத்த புகைப்படங்கள் ஒவ்வொன்றையும் அவனுக்குக் கதைகளோடு விளக்க, அவனோ அத்தனை சுவாரசியமாக அதைக் கேட்டுக்கொண்டிருந்தான்.
இவர்கள் இருவரையும் பார்த்த நிமலனுக்கு அத்தனை கோபமும் ஆற்றாமையும் வந்தது. வேகமாக எழுந்தவன் அதை விட வேகமாக நடக்க, “நிமலா எங்கே போற?” என்றாள் சக்தி.
“அவனுக்கு என்ன அவசரமோ… அவனை விடு. நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து எடுத்த போட்டோவைக் காட்டு” எனத் தமிழ் அவளை மீண்டும் அவள் உலகிற்கு அழைக்க, சுசிகரன் நிமலனைப் பின்தொடர்ந்து சென்றிருந்தான்.
