பார்த்திபன் காதலி – 15 (2)

மொட்டை மாடியில் இருவரும் தேநீர் கோப்பையுடன் நின்றிருந்தார்கள்.

பார்கவியின் கோப்பையில் ஆவி அலைபாய்ந்து தேநீர் அதன் சூட்டை இழந்து உயிர் விட்டிருந்தது. ஒரு மிடறு கூட அருந்தாமல் அப்படியே கையில் கோப்பையை இறுக பற்றியிருந்தாள்.

காற்று அவள் முகம் தீண்டி செல்ல, மாலை வெயில் அவள் முகத்தின் பக்கவாட்டில் விழ பேரழகியாகத் தெரிந்தாள் அவள். தான் அழகு என்றே உணராத அழகி அவள்.

“சாரி கவி” என்றான் கரகரத்த குரலில். சடாரென்று அவன் புறம் திரும்பினாள்.

அவளின் இதழ்கள் கேட்க வேண்டிய கேள்வியைச் சுருங்கிய அவளின் விழிகள் கேட்டன.

“சாரி, அன்னைக்கு யோசிக்காம ரொம்பப் பேசிட்டேன் இல்ல? அதுக்குத்தான் சாரி சொல்றேன். ஐ ஆம் ரியலி ரியலி சாரி கவி. பிளீஸ், நான் வேணும்னு அப்படிப் பேசல. உன்னைப் பார்த்தாலே பொஸசிவ்வாகி என்னை அறியாம அப்படிப் பேசிடுறேன். என்னால என்னைக் கண்ட்ரோல் பண்ண முடியல” என்றான். அதில் இரட்டை அர்த்தம் இருந்ததோ என்று சந்தேகமாக அவனைக் கூர்ந்தாள் அவள்.

“சத்தியமா உன்னைச் சந்தேகப்பட்டு நான் அப்படிக் கேட்கல கவி. அது கம்ப்ளீட்டா என்னோட பொஸசிவ்னஸ்ஸால தான் நான் அப்படிப் பேசுறேன், நடந்துக்கிறேன்னு நீ புரிஞ்சுக்கணும். நான் என்னை நியாயப்படுத்த இதைச் சொல்லல.. நான் உன்னை ஹர்ட் பண்ணணும்னு நினைக்கல”

“ஆனா நீங்க நடந்துக்கிட்ட விதம் என்னை ரொம்பவே ஹர்ட் பண்ணிடுச்சு. நமக்கு எங்கேஜ்மெண்ட் தான் ஆகியிருக்கு. இப்பவே நீங்க இப்படிலாம் நடந்துக்கிட்டா.. நாளைக்கு நீங்க எப்படி மாறுவீங்கன்னு நினைச்சாலே எனக்கு…”

“பிளீஸ், பிளீஸ். எதுவும் நெகட்டிவா சொல்லாத கவி. இது என் கேரக்டரே கிடையாது. பிளீஸ் ட்ரஸ்ட் மீ.” என்று கிட்டத்தட்ட கெஞ்சினான். ஒரு வேகத்தில் எட்டி அவளின் கைப் பிடிக்கப் போனவன், அவள் முகம் பார்த்துத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு கையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டான். அவளைத் தொட்டு விடக் கூடாது என்ற உறுதியுடன் கைகள் இரண்டையும் காற்சட்டை பையில் திணித்தான்.

“நீங்க ஒரு டைம் அப்படிப் பேசியிருந்தா நான் சீரியஸா எடுத்துருக்க மாட்டேன். ஆனா நீங்க ஆல்மோஸ்ட் மூனு நாலு முறை அப்படிப் பேசிட்டீங்க. அதைப் பத்தி பேசினா நான் ஹர்ட் ஆவேன்னு உங்களுக்குக் கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். அப்படியும் பேசி இருக்கீங்கன்னா..”

“பிளீஸ், சாரி கவி. ஒரே ஒரு முறை நான் சொல்றதை கொஞ்சம் கேளேன்” என்று கெஞ்சினான்.

“நேத்து நான் வீட்டுக்குப் போனதும் என் மூஞ்சை பார்த்தே நமக்குள்ள சண்டைன்னு எங்கம்மா கண்டுபிடிச்சுட்டாங்க. என்னடா பிரச்சினைன்னு அம்மா கேட்கும் போது என்னால வாயே திறக்க முடியல பார்கவி. நான் பேசினதை எப்படி எங்கம்மா கிட்ட சொல்ல முடியும்? என்னை அடி வெளுத்துட மாட்டாங்க? ஆனா நான் சொல்லாமலே எனக்கு அவ்வளவு திட்டு விழுந்தது. என் மருமகள் எனக்குப் பொண்ணு மாதிரி. அவளை நீ ஒழுங்கா நடத்தலன்னா நானே உன்னைக் கேள்வி கேட்பேன்டான்னு கோபத்துல என்னைக் கத்திட்டாங்க. நான் நேத்து நைட்டே உன்கிட்ட மன்னிப்பு கேட்கணும்னு நினைச்சேன் பார்கவி. ஆனா உன் கோபம் கொஞ்சம் குறையட்டும்னு வெயிட் பண்ணி இப்போ வந்தேன்” என்று சொன்னான்.

“நீங்க சாரி சொல்லணும்னு நான் எதிர்பார்க்கல பாரி”

“நீ எதிர்பார்க்கிறது என்கிட்ட மாற்றம் வரணும்னு எனக்குத் தெரியும் பார்கவி. நான்தான் சொன்னேனே, இது நான் இல்லைன்னு.. நான்.. அப்படி நடந்துக்கிட்டதுக்கு ஐ ஃபீல் வெரி பேட்” அவன் குரலில் மெய்யான வருத்தம் இருந்தது. அவளைப் பார்க்காமல் வானை வெறித்தான். மெதுவாகத் தொண்டையைச் செருமி சீர் செய்து கொண்டான்.

“ஒரு காதல் தோல்வி நம்மளை எப்படி உடைச்சு போடும்னு உனக்கு நல்லா தெரியும் இல்லையா பார்கவி?”

“இப்போ எதுக்கு அதைப் பத்தி பேசுறீங்க?”

“பிளீஸ், நான் சொல்றதை கேளு. அப்போதான் நான் ஏன் அப்படி நடந்துக்கிட்டேன்னு உனக்குப் புரியும். திரும்பவும் சொல்றேன், நான் என்னை நியாயப்படுத்தல.‌ நான் பண்ணது தப்புதான். அதுக்காகக் கோபப்பட்டு நீயும் என்னை விட்டுட்டா நான் பைத்தியம் ஆகிடுவேன் கவி” என்றான் உடைந்த குரலில். அந்தக் குரல் அவளை ஏதோ செய்ய, அவனையே இமைக்காமல் பார்த்திருந்தாள்.

“நான் நாலு வருஷமா லவ் பண்ண பொண்ணு அவ. லவ் கூட அவதான் ஃபர்ஸ்ட் சொன்னா. என் மேல பைத்தியமா இருந்தா. நானும், அவதான் என் எதிர்காலம்னு இருந்தேன். இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டு நான் எங்க வீட்ல பேசப் போன நேரம்.. அவ என்னை விட்டுட்டு போய்ட்டா.. என்னால அதைத் தாங்கிக்கவே முடியல. ஊருக்கு வர டிக்கெட் எல்லாம் போட்டுட்டேன். ஆனா என்னோட வர வேண்டிய அவ என் கூட இல்ல.”

“ஓ? சாரி” என்றாள் மனதார.

“அவ போன் எடுக்கலன்னதும் அவங்க வீட்லதான் ஏதோ பிரச்னை பண்றாங்க போலன்னு நினைச்சேன். ஆனா அவளை அடுத்தப் பத்தே நாள்ல வேற ஒரு பையன் கூடப் பார்த்ததா ஃப்ரெண்ட் சொல்லவும் உடைஞ்சு போய்ட்டேங்க. அப்படியே செத்துடணும் போல இருந்தது.”

“ஐயோ..” என்றாள் அதிர்ச்சியுடன். இப்போது அவனைப் பார்த்த கண்களில் பரிதாபமும், துளி கரிசனையும் இருந்தது.

“நாலு வருஷ லவ்.. சட்டுன்னு என்னைத் தூக்கி போட்டுட்டு போயிட்டா.. ரொம்பக் கஷ்டப்பட்டு அதுல இருந்து மீண்டு வந்தேன் கவி. இனி என் லைஃப்ல பொண்ணே வேணாம்னு இருந்தேன். கல்யாணமா? அதுக்கு நான் செட்டாக மாட்டேன்னு எங்கம்மா போன் பண்ணாலே அவங்ககிட்ட கத்தினேன்.”

“ம்ம்ம்.”

“ஆனா ஊருக்கு வந்து உன் ஃபோட்டோ பார்த்ததும் எனக்கு நானே இன்னொரு வாய்ப்பு குடுத்தா என்னன்னுதான் தோணுச்சு. உன்னை எப்படியாவது என்னோட பிடிச்சு வைக்கணும், உனக்கு என்னைப் பிடிக்க வைக்கணும்னு நினைச்சேன். அதான் உன்னை நெருங்கினேன். அண்ட் எனக்கு உரிமையும் இருக்குதானே?” உதடு வளைத்து சின்னதாய் புன்னகைத்தான்.

“இப்போ உனக்கு என்னைப் புரியுதுதானே கவி? எங்க உனக்கு என்னைப் பிடிக்கலையோன்னு.. நீயும் என்னை வேணாம்னு சொல்லிடுவியோங்கற பயத்துலதான் அப்படிப் பேசிட்டேன் கவி. ட்ரஸ்ட் மீ, ஐ பிராமிஸ் யூ. இனிமே தெரியாம கூட உன்னை ஹர்ட் பண்ற மாதிரி எதுவும் பேச மாட்டேன், பண்ணவும் மாட்டேன்” என்று சற்றே அவளை நெருங்கி வந்து எதிர்பார்ப்புடன் அவள் முகம் பார்த்தான்.

அவன் வார்த்தைகள் லேசாக அவளுள் தாக்கத்தை உண்டாக்கியது. ஆனாலும் அவளின் அடி மனத்தில் லேசான உறுத்தல் அழியாமல் இருந்தது.

“உன் சம்மதம் இல்லாம என் மூச்சு காத்து கூட இனிமேல் உன் மேல படாது கவி. நான் வசனம் பேசுறேன்னு நினைக்காத. நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் கூட நான் உன்னை எதுக்கும் ஃபோர்ஸ் பண்ண மாட்டேன்” என்றான் அழுத்தம் திருத்தமாக.

“லவ் ஃபெயிலியர் கொடுக்கிற பெயினை உன்னால உணர முடியும் இல்ல? நாம ரெண்டு பேரும் சேர்ந்து நம்ம கடந்த காலத்தைக் கடந்து வருவோம் கவி. ஹெல்ப் மீ” என்றான் அவள் கண்களை ஊடுருவி.

“என்னோடது ஒரு தலை காதல். நான் அதை எப்பவோ கடந்துட்டேன், மறந்துட்டேன்னு டையலாக் அடிச்சு விட விரும்பல. நான் இதுதான் என்னோட பியூச்சர்னு உங்களை நோக்கி நகர்ந்து வர்றேன். ஆனா நீங்க என்னை ஒவ்வொரு முறையும் பிடிச்சு பின்னால தள்ளி விட்டுட்டே இருந்தீங்கன்னா..”

“எனக்குப் புரியுது. என் தப்புதான். மன்னிச்சுடு பிளீஸ்” என்று அவள் கையைப் பிடித்து விட்டான். அவனிடம் இருந்து கையை மெதுவாக உருவியவள், “வாங்க கீழ போகலாம்” என்றாள்.

“கவி, இப்படி எதுவும் சொல்லாம போனா நான் என்ன நினைக்க?” என்று பதறினான். அவனுக்குப் புன்னகையில் பதில் சொல்லி கீழிறங்கினாள்.

“அப்பாடா” என்று ஆழ்ந்த பெருமூச்சொன்றை வெளியிட்டு அவளைப் பின் தொடர்ந்தான் அவன்.

அவளின் பெற்றோர் கூடத்தில் அமர்ந்து பிரியதர்ஷினியிடம் பேசிக் கொண்டிருக்க, அவர்களிடம் சில நிமிடங்கள் பொதுவாகப் பேசி பின் விடைப் பெற்றிருந்தான்.

அவன் போனதும் அவளைப் பிடித்துக் கொண்டாள் பிரியதர்ஷினி.

“பாரு, என்ன பேசினீங்க?”

என்று அக்கறையுடன் அவள் முகம் பார்த்துக் கேட்டாள்.

அவளுக்குத் தோழியிடம் எதையும் மறைக்கத் தோன்றவில்லை. அவன் சொன்னதை எல்லாம் அப்படியே ஒப்பித்திருந்தாள்.

“ஓ? நாலு வருஷ லவ்வா?”

“ம்ம்”

“ஆனா உங்கப்பா விசாரிச்சப்போ லவ்லாம் இல்லைன்னு சொன்னாங்களாம். எப்படி?”

“அது நார்மல்தானே ப்ரியா? யாருக்கா இருந்தாலும் கல்யாணத்துக்கு விசாரிக்கறாங்கன்னா எல்லாரும் நல்ல விதமாதானே சொல்லுவாங்க?”

“ம்ம், அதை யோசிச்சாதான் பயமா இருக்கு பாரு. அவருக்கு லவ் ஃபெயிலியர் கூட ஓகே. ஆனா அதுனால உன்னைச் சந்தேகப்பட்டுப் பேசுறது.. எனக்குச் சரியா படல பாரு. பிரபா என்னை லவ் பண்ணது எங்கத்தைக்குத் தெரியும் தெரியுமா?

இவருக்கு நாலு வருஷ லவ்னா அவர் வீட்ல எப்படித் தெரியாம இருக்கும்?”

“இப்போ என் லவ் எங்க வீட்ல தெரியுமா என்ன பிரியா? அது போலத்தான்” என்றாள் பார்கவி.

பிரியதர்ஷினி தோழியை அழுத்தமாகப் பார்த்து, “அப்போ நீ என்ன டிசைட் பண்ணியிருக்க?” என்று கேட்டாள்.

பார்கவிக்கு மற்ற எல்லாவற்றை விடவும் அப்பாவின் உடல்நலம்தான் பிரதானமாக இருந்தது.

“பாரு” என்று அவளை உலுக்கிய தோழியை மௌனமாய்ப் பார்த்து நின்றிருந்தாள் அவள்.

error: Content is protected !!
Scroll to Top