என் ஜீவனில் உறைந்திடு – 13 (1)

மனம் மகிழ்ச்சியில் நிறையத் தாவி அம்மாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள் ரோஜா. அவளைப் பார்த்து மித்ரனும் ஓடி வந்து, பாட்டியை அணைத்துக் கொண்டான்.

மகளையும், பேரனையும் சிரிப்புடன் தன்னிடம் இருந்து சித்ரா பிரிக்க, “ம்மா…” என்று சிணுங்கிய ரோஜாவின் குரலில் மகிழ்வின் முழுமை.

அதே சென்னையின் மற்றொரு வீட்டில், “என்னப்பா சொல்றீங்க?” என்று அதிர்ச்சியுடன் கேட்ட இளமாறனின் குரலிலும் அதே மகிழ்ச்சியின் சாயல்.

“நம்பு மாறா. அப்பா, உண்மையைதான் சொல்றேன். இன்னைக்கு ரோஜா அப்பா நேரா எங்க ரூம் வந்து உங்கம்மாகிட்டயும், என்கிட்டயும் ரோஜாவை உனக்குக் கொடுக்கச் சம்மதம்னு சொல்லிட்டார். நீங்க வீட்டுக்கு வாங்க, நிச்சயம், கல்யாணம் பத்தி பேசலாம்னும் சொன்னார் தம்பி” மகன் விரும்பிய பெண்ணை அவனுக்கு மணமுடிக்க முடியாமல் போய் விடுவோமோ என்ற கவலையில் இருந்த சங்கரனுக்கும், சிவஹரியின் சம்மதம் அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. அதையே மகனிடமும் பகிர்ந்து கொண்டார் அவர்.

“ம்ம்” என்றான் இளமாறன். அவனின் அமைதிக்குப் பின்னிருந்த ஆனந்தத்தைக் கண்டு கொண்ட சங்கரன் சிரித்தபடி நின்றார்.

இரவு பத்தரை மணிக்கு வீடு திரும்பிய இளமாறன், வாயில் கதவும், வாசல் கதவும் திறந்திருக்க, “அப்பா” என்று அழைத்தபடியேதான் வீட்டுக்குள் நுழைந்தான். அவனைப் பார்த்ததும், “ஸ்வீட் கொடுங்க செஃப், ரோஜா வீட்ல சம்மதம் சொல்லிட்டாங்க” என்பதைதான் முதலில் சொன்னார் அவர்.

ரோஜா வீட்டில் இத்தனை விரைவாகச் சம்மதிப்பார்கள் என்று எதிர்பார்த்திராத இளமாறன், இன்னுமும் நம்ப இயலா பாவனையுடன் அப்பாவை பார்த்து அவரின் சிரிப்பில் மறுப்பாகத் தலையை அசைத்து நகர்ந்தான்.

“டின்னர் ஆச்சாப்பா?” என்று அவன் கேட்க, “நானும், அம்மாவும் இன்னைக்கு ஹாஸ்பிட்டல்லயே டின்னர் முடிச்சுட்டோம். அம்மாவுக்கு ஒரு எமர்ஜென்ஸி சிசேரியன் இருந்தது. அதான் நான் மட்டும் வந்தேன்” என்றவர், “நீ சாப்பிட்டியா?” என்று மகனிடம் கேட்டார்.

“ம்ம், ஹோட்டல்ல சாப்பிட்டேன்ப்பா.” என்றவன் நேராகச் சமையல் அறையை நோக்கி நடந்தான்.

பாலை காய்ச்சி அரைச்சக்கரை சேர்த்து அப்பாவுக்கு ஒரு குவளை கொடுத்து விட்டு, தனக்குத் தேநீர் தயாரித்துக் கொண்டான்.

இருவரும் கூடத்தில் வந்து அமர்ந்தனர்.

“உனக்கு வேலை எப்படிப் போகுது மாறா? நிச்சயம், கல்யாணம் இதுக்கெல்லாம் தேதி முடிவு பண்ணணும். நிச்சயத்தைச் சிம்பிளா அடுத்த வாரமே வீட்டோட வச்சுட்டு, கல்யாணத்தை நீ சொல்ற மாதிரி முடிவு பண்ணிக்கலாம்னு ரோஜா அப்பா சொன்னார். உங்கம்மா, உன்னைக் கேட்டுதான் முடிவு பண்ண முடியும்னு சொல்லிட்டா. நீ சொல்லுப்பா. உனக்கு எப்படி வசதிப்படும்?” சங்கரன் கேட்க,

“வேலை எப்பவும் பிஸிதான்ப்பா. நீங்க தேதியை முடிவு பண்ணிட்டு சொல்லுங்க. நான் அதுக்கேத்த மாதிரி லீவ் எடுக்கிறேன். நிச்சயதார்த்தம் அடுத்த வாரம் ஓகேதான்ப்பா. ஆனா, கல்யாணத்துக்குக் கொஞ்சம் அவகாசம் வேணும்”

“ஒரு ஆறு மாசம் கழிச்சு கல்யாண தேதி பார்த்தா போதுமா மாறா? அவ்ளோ இடைவெளி போதும் தானே?” என்று அவர் யோசனையுடன் கேட்க, “ப்பா, ஒரு மாசம் தள்ளி கல்யாணத்தை வைங்கன்னு சொல்ல வந்தேன். மேக்ஸிமம் ரெண்டு மாசம் ஓகே. அதுக்கு மேல வேணாம்” தீவிரமாகச் சொல்லிக் கொண்டு போன மகனைப் பார்த்துச் சத்தமாகச் சிரித்து விட்டார் சங்கரன்.

“இது லவ் மேரேஜ்ங்கறதை நான் சுத்தமா மறந்துட்டேன் மாறா” குறுநகையுடன் அவர் சொல்ல, தேநீருடன் சேர்த்து சிரிப்பையும் விழுங்கினான் இளமாறன்.

“மாறன், ரோஜா நடுவுல என்னமோ இருக்குனு உங்கம்மாதான் முதல் நாள்ல இருந்தே சொல்லிட்டு இருந்தா. அவ சந்தேகப்பட்டதை நீங்க சந்தோஷ செய்தியாக்கினதுல சந்தோஷமா சுத்திட்டு இருக்கா” சிரித்தபடி கூறினார்.

“நான் தாத்தா, அம்மம்மாகிட்ட கலந்து பேசிட்டு உனக்குத் தகவல் சொல்றேன் மாறா. சரியா?” அவன் ஒப்புதலாகத் தலையசைக்க, “அப்போ நான் வீட்டுக்கு கிளம்பவா?” என்று எழுந்தார் சங்கரன்.

“காலைல போங்கப்பா” இளமாறன் சொல்ல, “சரி மாறா. அம்மாக்கு கால் பண்ணி சொல்லிடுறேன்” என்று அலைபேசியுடன் நகர்ந்தார்.

ஐந்து நிமிடங்கள் கழித்து மகனுக்கு அருகில் வந்து அமர்ந்தார்.

“அடுத்தப் புதன் கிழமை நாள் நல்லாருக்குனு அம்மா சொல்றா. அப்பவே நிச்சயம் வச்சுப்போமா?”

“ஒரு நிமிஷம்ப்பா” என்று அலைபேசியை எடுத்து ஹோட்டலின் முன் பதிவில் இருந்த முக்கிய நிகழ்வுகளைப் பார்த்தான். ஒரு வரவேற்பு நிகழ்ச்சி மட்டும் இருந்தது. அவனில்லா விட்டாலும் அவனுக்கு அடுத்தப் பதவியில் இருக்கும் செஃப் பார்த்துக் கொள்வார் என்ற உறுதியில், “அன்னைக்கே வச்சுக்கலாம்ப்பா. ரோஜா வீட்ல ஒரு வார்த்தை கேட்டுக்கோங்க” என்றான்.

“உங்க தாத்தாவும், ரோஜா அப்பாவும் சேர்ந்துதான் நல்ல நாள் பார்த்திருக்காங்க போல. காலைல நானும் சிவஹரிகிட்ட பேசுறேன்” என்ற அப்பாவையே பார்த்துக் கொண்டிருந்தான் இளமாறன்.

எதையோ சொல்ல விழைவதும், வேண்டாம் என முழுங்குவதுமாக இருந்தவனின் தோளில் கைப் போட்டு, “என்ன யோசிக்கிற மாறா? எதுவும் பிரச்சனையா? அப்பாகிட்ட சொல்லு, சரி பண்ண முடியுமா பார்க்கறேன்” என அக்கறையுடன் கேட்டார்.

“நிச்சயதார்த்தத்துக்கு நகை, புடவை, மோதிரம் எல்லாம் வாங்கணும் தானே ரோஜாக்கு? இல்லையாப்பா?” என்று கேட்டவன், “என்ன வாங்கணும்னு சொன்னா நானே போய் வாங்கிட்டு வந்துடுவேன். இல்லனா, உங்க அக்கவுண்ட்டுக்குப் பணம் அனுப்பறேன்ப்பா. அம்மம்மா, வெண்பா பார்த்து அவங்களுக்குப் பிடிச்சதை வாங்கினாலும் சரிதான்” மிகவும் தயங்கி தடுமாற்றத்துடன் சொல்லி முடித்தவனை, அப்படியே அசையா பார்வை பார்த்திருந்தார் சங்கரன்.

தன் தோளில் இருந்த அப்பாவின் கரம் இறுகுவதை மாறனால் நன்றாக உணர முடிந்தது.

“இல்லப்பா…” என்று ஆரம்பித்த மாறன், அப்பா தொண்டையைச் செருமவும் அமைதியானான்.

“மாறா, உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறது ஒரு பெற்றோரா எங்க கடமைன்னு கத்தி பேச விரும்பல நான்.” அப்பாவின் கடினமான அந்தக் குரலே அவரின் மனவருத்தத்தைச் சொல்ல, மறுத்து பேச நினைத்தான் மாறன். தான் என்ன சமாதானம் சொன்னாலும் அவரின் வருத்தம் போகாது என்பது புரிந்து அமைதியாய் அப்பாவை பார்த்தான் அவன்.

“நீ பிறக்கும் போது நானும், உங்கம்மாவும் அப்போதான் படிப்பை முடிச்சுருந்தோம்‌. டாக்டராகனுங்கறது எங்க ரெண்டு பேரோட ஆசை மட்டுமில்ல, நம்ம ரெண்டு குடும்பத்து பெரியவங்களோட கனவு. ஆனா, அன்னைக்கு எங்களுக்கு அதை விடச் சந்தோஷம் தந்தது நீதான். படிப்பு, வேலை, குடும்பம்னு பல கவலை இருந்தாலும் உன்னைக் கையில வாங்கும் போது நான் எவ்ளோ சந்தோசமா இருந்தேன்னு என்னால விவரிக்கவே முடியாது. நான் சொன்னாலும் உனக்குப் புரியாது. நாளைக்கு உன் குழந்தையைக் கையில் வாங்கும் போதுதான் உனக்கு என்னோட உணர்வுகள் புரியும். பெருமை, பூரிப்பு, பாசம், பொறுப்புன்னு மனசு கிடந்து தளும்பும்.”

“ஒரு ஆணுக்கு அப்பாங்கற அடையாளம், கர்வம் மாறா. எனக்கு அதைத் தந்தவன் நீ. எங்க மூத்த மகன். உன்னை வச்சு, உனக்காக நிறையக் கனவு கண்டு, கற்பனையில் ஆசை வளர்த்திருந்தோம். ஆனா, ப்ச்” என்று வெளிப்படையாய் வலியுடன் சலித்துக் கொண்டு தொடர்ந்தார்.

“உன் வாழ்க்கையில் எல்லா முடிவையும் நீதான் எடுத்த. என்கிட்ட வந்து, இதைப் பண்ண போறேன்ப்பா, இதைச் செய்யவான்னு நீ கருத்து மட்டும்தான் கேட்கும் போது, என்னால உன்னைத் தடுக்க முடிஞ்சது இல்ல. எங்க கனவை விட, உன்னோட ஆசைக்குத்தான் மதிப்பு கொடுத்தோம் நாங்க.”

“இன்னைக்கு உன் கல்யாணம் கூட உன் விருப்பம்தான். பொண்ணும் உன் செலக்சன்தான். உன்னோட பெற்றோரா இப்பவும் நீ ஆசைப்பட்ட பொண்ணை உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கணும்னுதான் அவசர அவசரமா ஓடிப் போய் அவங்க வீட்ல பேசினோம். பெத்தவங்களுக்கு அவங்க பிள்ளைங்க கல்யாணத்தைப் பத்தி ஆயிரம் ஆசைகள் இருக்கும். எங்க மூத்த மகன் நீ. இளமாறன் பெற்றோரா சும்மா சபையில் கைக் கட்டி எங்களால நிக்க முடியாது.”

அதற்கு மேல் பொறுக்க முடியாமல், “அப்பா சாரி. பிளீஸ்” என்றான் இளமாறன்.

“எனக்கு உன் கோபமும் வருத்தமும் புரியுது மாறா.”

“அச்சோ, நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்லப்பா. எனக்கு உங்க மேல என்ன கோபம்? உங்க மேல எதுக்குக் கோபப்படப் போறேன் நான்?” என்று நிதானமாகக் கேட்டவன், “உங்ககிட்ட ரோஜாக்கு என்ன வாங்கணும்னு தானே கேட்டேன்? ரோஜாக்கு வாங்குறது.. நான் வாங்கிக் கொடுக்கணும்னு ஆசைப்பட்டேன்ப்பா. அதைத்தான் அப்படிச் சொன்னேன்” அப்பாவின் முகம் பார்த்து சொன்னவன், சட்டென முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

சங்கரனுக்கு அப்போதுதான் மகன் மனம் புரிந்தது. மீண்டும் மகன் தோளில் கைப் போட்டு தன்னோடு அவனைத் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டு சத்தமாகச் சிரித்தார்.

“நாளைக்கே ரோஜாவை கூட்டிட்டு போய் உனக்குப் பிடிச்சது எல்லாம் வாங்கிக் கொடு. யார் வேணாம்னு சொல்லப் போறா? இல்ல, கல்யாணத்துக்கு அப்புறம் வாங்கிக் கொடுத்தா யார் உன்னைத் தடுக்கப் போறாங்க?” என்று அவர் கேட்க புன்னகைத்தான் இளமாறன்.

“ஆனா, நிச்சயம், கல்யாணம் எங்க பொறுப்பு மாறா. காசை கணக்கு பார்த்துச் செலவு பண்ற நிலையில கடவுள் நம்மளை வைக்கல. அதுனால ஏதாவது காரணம் சொல்லி எங்க கையைக் கட்டிப் போடாத, பிளீஸ்” என்று அவர் முடிக்க, “சரிங்கப்பா” என்றான். அவனால் பெற்றோருக்கு எத்தனையோ மனத்தாங்கல் இருக்கையில், மேலும் அவர்களைக் காயப்படுத்த விரும்பாமல், அவர்களின் விருப்பத்திற்கு முதல் முறையாக வளைந்து கொடுத்தான் அவன்.

“நான் காலைல வீட்டுக்கு போயிட்டு ஹாஸ்பிடல் போகணும். நேரமாச்சு, தூங்கலாம் மாறா” சங்கரன் சொல்ல, இருவரும் உறங்கச் சென்றார்கள்.

அப்பா ஆழ்ந்த உறக்கத்திற்குச் செல்லும் வரை காத்திருந்தான். அதன் பின் அவருக்கு முதுகு காட்டி படுத்து ரோஜாவிற்குக் குறுஞ்செய்தி அனுப்பினான்.

“ஹேய் ரோஜா..”

“ரோஜா, ரோஜாவை எந்தப் பெயரில் அழைத்தால் என்ன? ம்ம், ரோஜா, ரோஸ், ரோசான்னு உலகத்தின் எந்த மொழியில் அழைத்தாலும் ஒரே அர்த்தம்தான் வரும். இல்லையா? ஆனா, இந்த ரோஜா இனி இளமாறனின் ரோஜா. இளமாறன் காதலி.” தனக்குள் சொல்லிக் கொண்டவன் அதையே அவளுக்கும் செய்தியாக அனுப்பியிருந்தான்.

“ஆமா, ரோஜா. நமக்குக் கல்யாணம் நிச்சயம் பண்ண போறாங்களாம். நாம எப்போ லவ் பண்றது?” உதட்டில் நெளிந்த குறுநகையுடன் மனதில் தோன்றியதை அப்படியே அனுப்பி வைத்தான்.

அப்போதுதான் உறங்கச் சென்ற ரோஜாவின் தூக்கத்தைத் தொடர்ந்து ஒலித்த குறுஞ்செய்தி அறிவிப்பு கலைக்க, புரண்டு படுத்து அலைபேசியை எடுத்தாள்.

மறுகணமே தூக்கம் தூரமா போக, சத்தமாகச் சிரித்தாள் ரோஜா.

அவளை, “ரோஜா..” என்று தூக்கத்திலேயே அதட்டினாள் நித்யா. மெல்ல படுக்கையில் இருந்து எழுந்து தலையணையின் மேல் உடலை சாய்த்து சரிந்து அமர்ந்தாள் ரோஜா. மித்ரன், நித்யா இருவரின் உறக்கத்தைக் கலைக்காதிருக்க அலைபேசி சத்தத்தைக் குறைத்து வைத்தாள்.

அப்பா, அம்மா இருவரும் நிச்சய, திருமணத் தேதி குறித்து விவாதித்தது அவளுக்குத் தெரியும். இளமாறன் வீட்டுப் பெரியவர்களுடன் நாள் குறிக்கச் சென்றது வரை கூடத் தெரியும். அப்பா வெளியே செல்வதற்காக அன்று முழுவதும் கேன்டீனை கவனித்துக் கொண்டது அவள்தான். ஆனால், அதற்கு மேல் அவளுக்கு எந்தத் தகவலும் தெரியாது. காலை வரை காத்திருக்க நேராமல் இப்போதே இளமாறன் வழியாகத் தெரிந்துக் கொண்டதில் அவளின் இதயத் துடிப்பு இரட்டிப்பாகியது.

“ஹலோ ஷேக்ஸ்பியர் செஃப்” என்று அழைத்துக் கண்ணடிக்கும் எமோஜிக்களைக் கணக்கில்லாமல் குறும்பாக அனுப்பி வைத்தாள்.

“இதே கேள்வியை நேர்ல பார்க்கும் போது கேளுங்க. பதில் சொல்றேன்” என்ற அவளின் செய்தியை பார்த்ததும் இளமாறனின் ‍உதடுகள் மெல்ல பிரிய, சத்தமில்லாமல் சிரித்தான் அவன்.

“ஓகே. வெயிட் பண்றேன்” என்று முடித்து விட்டான்.

“அட செஃப். சரியான சாம்பார் நீங்க” என்று புலம்பியபடி கண்ணை மூடினாள் ரோஜா.

error: Content is protected !!
Scroll to Top