பார்த்திபன் காதலி – 15 (1)

பார்கவி அதிர்ந்து நிற்க, “வாங்க மாப்ள” என்று பாரிவேந்தனுக்குப் பின்னால் வந்து நின்று அவன் தோளில் கைப் போட்டு வீட்டுக்குள் அழைத்து வந்தார் ரங்கராஜன்.

அவர் கண்கள் மகளைக் கண்டனத்துடன் நோக்க, “வாங்க” என்று சொல்லி வழி விட்டு நின்றாள்.

அவளைப் பார்த்து புன்னகைத்து, ரங்கராஜனுடன் சென்று கூடத்துச் சோஃபாவில் அமர்ந்தான் அவன்.

இப்போது எதற்கு வந்திருக்கிறான்? முன்தினம், “நன்றாக யோசித்து ஒரு முடிவெடு” என்று அவள் சொல்லியிருக்க, என்ன முடிவுடன் வந்திருக்கிறான் அவன் என்ற கேள்வி அவள் கண்களில் தொக்கி நின்றது.

“பாரும்மா, போய் மாப்ளைக்குக் குடிக்க ஏதாவது கொண்டு வா” என்றார் ரங்கராஜன்.

அதற்குள் காவேரியே அங்கு வந்து விட்டார்.

“வாங்க மாப்ள” என்று வரவேற்று அவனுக்குத் தண்ணீர் கொடுத்து உபசரித்தார்.

பிரியதர்ஷினியும் கூடத்துக்கு வர, “இது பிரியதர்ஷினி, நம்ம பாரு ஃப்ரெண்ட் மாப்ள” என்று அவளை, பாரிவேந்தனுக்கு அறிமுகப்படுத்தினார் ரங்கராஜன்.

பார்கவி எதுவும் பேசாமல் அப்படியே சிலையாக நின்றிருந்தாள்.

பாரிவேந்தனை மணக்க மறுக்கச் சொன்னது அவள் மனம். அவனோடு ஒரு வாழ்க்கையை யோசிக்கவே முடியாமல் முரண்டியது அவள் மனம். சதா சந்தேகப்படுபவனோடு நிம்மதியாக ஒரு வாழ்க்கை எப்படிச் சாத்தியமாகும்?

அதே நேரம் அப்பாவின் மருத்துவ அறிக்கை அவள் கண்ணில் படபடத்தது. அப்பாவின் உடல் நிலையும், அம்மாவின் மனஅமைதியும் அவளுக்கு மிகவும் முக்கியம்.

அப்படியானால் அவளின் வாழ்க்கை? அவளின் மகிழ்ச்சி? என்று யோசிக்க யோசிக்க முடிவில்லா பாதையில் நிற்பது போலிருந்தது அவளுக்கு.

“பாரும்மா” என்று ரங்கராஜன் சத்தமாக அழைக்க, “ப்பா” என்று அவரை நிமிர்ந்து நோக்கினாள்.

“மாப்ள உங்கிட்ட ஏதோ பேசணுமாம், அவர மாடிக்கு கூட்டிட்டு போ” என்றார்.

“சரிப்பா” என்று அவனைத் திரும்பி பார்த்தாள். அவன் தயாராக எழுந்து நின்றிருந்தான்.

இம்முறை ஊஞ்சல் பக்கமே செல்லவில்லை அவள். அவனை நேராக மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றாள்.

அவள் வீட்டின் பின்புறம் இருந்த மாமரம் முழுக்கப் பிஞ்சு பிடித்திருந்தது. மாடியை உரசிக் கொண்டிருந்தது மரத்தின் கிளைகள்.

மொட்டை மாடியில் படர்ந்திருந்த கொடி சம்பங்கி பூவின் நூதன மணம் அவர்களின் நாசியைத் தீண்டி சென்றது. வானம் வெண்மையைத் தொலைத்து மாலை வண்ணம் பூசி செவ்வானமாய் வசீகரித்தது. காற்று இருவரையும் தொட்டுத் தழுவி நழுவி சென்றது.

“பார்கவி..” என்று அவன் அழைக்க, நன்றாக நிமிர்ந்து அவனை நோக்கினாள்.

அவள் கண்களைக் கூர்ந்து, “ஐ அம் சாரி” என்றான். அவளை நெருங்காமல் இரண்டடி இடைவெளி விட்டு விலகியே நின்றிருந்தான்.

எதற்காக இந்த மன்னிப்பு என்று கேட்க தோன்றவில்லை அவளுக்கு. காலம் கடந்த பின் வரும் எதுவும் அதன் மதிப்பை இழந்து விடுகிறது. மன்னிப்பு மட்டும் விதிவிலக்கா என்ன? அதற்குக் கால வரையறை கிடையாதோ?

“எதுக்குச் சாரி சொல்றீங்க?”

என்று கேட்டாள். அவன் பதில் சொல்லும் முன், “பார்கவி” என்று காவேரி அழைக்கும் சத்தம் கேட்டது.

“ஒரு நிமிஷம் கீழ வந்துட்டு போம்மா. இந்த டீய எடுத்துட்டு போ” என்று குரல் கொடுத்தார் அவர்.

“இருங்க, வந்துடுறேன்” என்று கீழிறங்கி சென்றாள்.

பிரியதர்ஷினி அவளைக் கண்டதும் அருகில் வந்து, “பாரு, இட்ஸ் யுவர் லைஃப். உனக்கு மனசுக்கு நெருடலா இருந்தா இப்போவே தெளிவா அவர்கிட்ட பேசிடு. ஓகே? நீ என்ன முடிவெடுத்தாலும் உங்கப்பா உனக்குத்தான் சப்போர்ட் பண்ணுவார். உனக்காக நானும் பிரபாவும் இருக்கோம். புரியுதா?” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொன்னாள்.

வெறுப்பை, கோபத்தை, ஏமாற்றத்தை கூட எளிதாகக் கடந்து விடலாம் போல, பல சமயங்களில் அன்பை கடப்பதுதான் கடினமாக இருக்கிறது.

“ம்ம்ம்” என்று தலையசைத்தாள் பார்கவி.

“பாரும்மா” என்று ரங்கராஜன் அழைக்க, அப்பாவிடம் சென்றாள்.

அவளைத் தன் அலுவலக அறைக்கு அழைத்துச் சென்றார் அவர்.

“மாப்ள கூடச் சண்டையாடா பாரும்மா?” எடுத்ததும் அவர் அப்படிக் கேட்க, என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் அதிர்ச்சியுடன் அப்பாவை ஏறிட்டாள்.

“என்னடா அப்படிப் பாக்கற? அப்பா என்னா ஏதுன்னுலாம் உன்கிட்ட கேக்க மாட்டேன், பயப்படாத” என்றார் சிரித்து. மகளின் கைப் பிடித்துத் தன் இருக்கையில் அமர்த்தி அதன் முன்னிருந்த மேஜையில் சாய்ந்து நின்று அவளைப் பார்த்தார்.

“அப்பா, நாங்க சண்டைலாம் போடலப்பா.. அவங்க..” என்று அவள் தயங்க, “அப்பா எதுவும் கேட்கலையேடா. மாப்ளயே என்கிட்ட எல்லாம் சொல்லிட்டாரு” என்றார் சிரித்துக் கொண்டே.

அதைக் கேட்டதும் அவள் முகம் இறுகியது. இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. தன் காதல் கதையை அப்பாவிடம் சொல்வதில் அவளுக்குத் தயக்கமில்லை. ஆனால் எந்தச் சூழ்நிலையில் உண்மையைச் சொல்கிறோம் என்பதில்தானே இருக்கிறது அதன் மதிப்பு.

எதன் மதிப்பையும் காலம்தானே முடிவு செய்கிறது.

“என்னப்பா சொன்னாங்க?”

“அவரு உன்கிட்ட கோபமா பேசிட்டார்ன்னு சொன்னாருடா. ‍ஆனா உன் மேல தப்பில்லைன்னு சொன்னாரு. என்கிட்ட நேரா வந்து மன்னிப்பு கேட்டுட்டார். நல்ல பையன்தான் இல்லடா?” என்று ஆர்வமாக மகளின் முகம் பார்த்துக் கேட்டார்.

“உங்ககிட்ட ஏன்ப்பா மன்னிப்பு கேட்டாங்க? ஃபர்ஸ்ட் நீங்க ரெண்டு பேரும் எப்படி மீட் பண்ணீங்க? எதுக்காக மீட் பண்ணீங்க?” என்று கேட்டாள்.

இதென்ன குட்டியை முட்டி விட்டு ஆட்டிடம் போய்ச் சமாதானம் சொல்வது?

“மண்டபம் டெக்ரேஷன் பண்ண புக் பண்ணியிருந்த ஆளுங்க இன்னைக்கு மண்டபம் பார்க்க வந்திருந்தாங்க பாரும்மா. மாப்ளைக்கு அங்க வச்சே டெமோ காட்டினாங்க. நீதான் எதுலயும் இன்ட்ரெஸ்ட் காட்ட மாட்டேங்கற. ஆனா மாப்ள ஆசையா வந்து எல்லாத்தையும் பார்த்தார்டா. அப்போதான் என்கிட்ட சாரி சொன்னார். என் பொண்ணுக்கிட்ட சின்னதா சண்டை போட்டதுக்கே என்கிட்ட வந்து மன்னிப்பு கேட்கற பையன்கிட்ட நானும் முறைச்சுட்டு நிக்க முடியுமா சொல்லு?” என்று குறுநகையுடன் கேட்டார்.

இது ரங்கராஜனின் குணமே அல்ல. இதுவே மற்ற நேரமாக இருந்திருந்தால் அவளிடம் தோண்டி துருவி கேள்விகளைத் தொடுத்திருப்பார். அவளின் முகம் பார்த்தே ஏதோ சரியில்லை என்று கண்டுபிடித்திருப்பார். ஆனால் இன்றைக்கு அவரின் கவனம் எல்லாம் மகளின் கல்யாண வேலைகளில் குவிந்திருக்க, மகளைக் கவனிக்கத் தவறி விட்டார் அவர்.

“நீ போய் அவர்கிட்ட சமாதானம் ஆகுடா. சரியா?” மகளின் தலை கோதி அவர் கேட்க, சரியெனத் தலையசைத்தாள் அவள்.

“பாரு, உங்கப்பா கிட்ட அப்புறமா வந்து செல்லம் கொஞ்சுவ. இப்போ போய் மாப்ளகிட்ட பேசிட்டு வா” என்று காவேரி மகளை அழைத்தார்.

அவர் கையில் தேநீர், சிற்றுண்டி அடங்கிய தட்டு இருக்க அதை மகளிடம் நீட்டினார்.

அவள் வாங்கிக் கொண்டு மாடியேற, “உங்க மாப்ள என்னா சும்மா சும்மா வீட்டுக்கு வந்து நிக்கறார்? இதென்ன பழக்கம்? எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கல. ஆமா சொல்லிட்டேன்” என்று காவேரி அதிருப்தியுடன் சொல்ல, “இது நம்ம காலம் இல்ல காவேரி. இன்னைக்கு இருக்கப் பசங்க நிச்சயமானதும் அவங்க விருப்பத்துக்கு வெளில போறாங்க. நம்ம மாப்ள அப்படி எங்கேயும் கூட்டிட்டு போகாம நம்ம வீடு தேடி வந்துதானே நம்ம பொண்ணு கிட்ட பேசுறார். அது வரைக்கும் சந்தோஷப்படு.‌‍ இதெல்லாம் நாம தடுக்க முடியாது காவேரி” என்றார்.

அவன் தொட்டு தொட்டுப் பேசுகிறான் என்று மகள் சொன்னது அவர் மனத்தை உறுத்தியது போலும். கணவரை முறைத்து, “பத்து நிமிஷத்துல உங்க பொண்ணைக் கீழ கூப்பிடுறீங்க நீங்க சரியா?” என்று கறாராகக் கேட்டார்.

“காவேரி..”

“என்னை மிரட்டுனீங்கன்னா இப்பவே உங்க பொண்ணைக் கீழ கூப்பிட்டுருவேன் பார்த்துக்கோங்க” என்று பதிலுக்குக் கணவரை மிரட்டினார். அவர்களின் வாக்குவாதத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த பிரியதர்ஷினி, இருவருக்கும் இடையே சென்று சமாதானம் செய்தாள்.

ரங்கராஜன் நீட்டிய பட்டியலை வாங்கிப் பத்திரிக்கைகளில் பெயர் எழுதத் தொடங்கினாள் அவள்.

“இன்னைக்குப் பிளான் பண்ண பாதிப் பேருக்குப் பத்திரிக்கை வைக்க முடியலம்மா” என்று அவர் புலம்ப, “நாளைக்குப் போய் வைங்கப்பா” என்றாள் பிரியதர்ஷினி. அங்கே மேஜையில் முதலில் இருந்த பத்திரிக்கையில் பார்த்திபனின் பெற்றோர் பெயர் எழுதியிருந்தது.

error: Content is protected !!
Scroll to Top