அவன் பேச்சு, பார்வை, அவளைப் புகழ்ந்தது என அன்றைக்கு அவள் மயங்க ஆயிரம் காரணங்கள் இருந்தன. பின்னாளில் யோசிக்க எல்லாவற்றின் உண்மைத்தன்மையும் புலப்பட்டது. ஆனால் பயனில்லையே. அதையெல்லாம் ஶ்ரீகாந்திடம் பகிர பயந்து அவள் நிற்க, “நேத்து நடந்தத பத்தி கவலைப்பட்டுட்டு, நாளைக்கு என்ன நடக்குமோன்னு பயந்துட்டே இருந்தா இன்னைக்கு வாழவே முடியாதுங்க.” என்றான்.
“என்னால எப்படிப் பழச மறக்க முடியும்னு நீங்க நினைக்கலாம். மனுஷ மனச பத்தி உங்களுக்குத் தெரியலைங்க. நமக்கு நிரந்தமான, நமக்கான நேசம் கிடைச்சிட்டா போதும். கடந்த காலக் கசடுலாம் காணாம கரைஞ்சு போயிடும்ங்க. ஐ ப்ராமிஸ் யூங்க, என் நேசம் உங்களை எல்லாத்தையும் மறக்க வைக்கும். நம்ம வாழ்க்கையை நாமதான் முடிவு பண்ணணும். நாளைய நாள் கண்டிப்பா வந்துதான் ஆகும். அதை அப்போ ஃபேஸ் பண்ணிப்போம்.” என்று அவளை நெருங்கி நின்றான்.
“பின்னாடி திரும்பி பார்த்துட்டே நடந்தா முன்னாடி போகவே முடியாதுங்க. என் கை பிடிச்சுக்கோங்க, நமக்கான பாத தானா விரியும். நீங்க தடுமாறினா நான் வழி பார்த்து கூட்டிட்டு போறேன். நான் தடுமாறினா நீங்க தாங்கிக்க மாட்டீங்களா என்னை?” என்று அவள் முகத்தை நிமிர்த்திக் கேட்டான். துர்காவின் கண்கள் தானாகக் கலங்கின. அவள் முகத்தை விட்டு உயர்ந்த அவன் கரம் அவள் முன் நீண்டது.
“உங்களுக்குச் சம்மதம்னா பிடிச்சுக்கோங்க” என்றான். மெலிதான தயக்கத்துடன் நீண்டது அவள் வலக்கரம், அழுத்தமாக அதைப் பற்றிக் கொண்டான் ஶ்ரீகாந்த்.
“உங்க பாஸ்ட்ட அதுவொரு கெட்ட கனவா நினைச்சு இப்பவே மறந்துடுங்க. நாளைக்கு நம்ம லைஃப்ல எவ்ளோ மோசமான சிட்டுவேஷன் வந்தாலும் அந்தக் கனவின் சாயல் கூட உங்க நினைவில் வராம பார்த்துக்க வேண்டியது என் பொறுப்புங்க.” என்று உளமார சொல்லி அவளின் உள்ளங்கையை அழுத்தினான். உணர்ச்சிவசப்பட்டாள் அவள். அவள் உதடு கடித்து நிற்க, அவளின் தலை கோதி கொடுத்தான். அந்த அன்பில் கனிந்து நிமிர்ந்து கலங்கிய கண்களுடன் அவன் முகம் பார்த்து, “நீங்க ஏன் முன்னாடியே என் லைஃப்ல வரல ஶ்ரீ?” என்று கேட்டாள்.
“நாம ரெண்டு பேரும் இங்கேயேதானே இருந்தோம்? அப்பவே என்னைத் தேடி வந்திருக்கலாம் இல்ல நீங்க? நீங்க என் வாழ்க்கையில் வந்திருந்தா..”
“ஷ்ஷ்ஷ், அதான் இப்ப வந்துட்டேனே துர்கா” மென்மையாய் அவளைத் தோளோடு சேர்த்தணைத்தான்.
மாலை நேரம் இருவரையும் மல்லிகை மணம் சூழ, மனம் கனிய அப்படியே நின்றிருந்தார்கள்.
“என் கைக்குள்ள வந்துட்டீங்க, ஆனா உங்க மனசுல நான் இருக்கேனான்னு இன்னமும் நீங்க சொல்லலையே” அவன் சீண்டலாகக் கேட்க, வெட்க புன்னகை சிந்தினாள்.
“ஆஹா..” என்றான் ரசனையாக.
“இது போதுங்க. இனி எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்” என்று உவகையுடன் சொல்லி, அவளை விடுவித்து, அவள் கைக் கோர்த்து கீழே அழைத்துச் சென்றான். அவன் கரத்தை அவள் விலக்க முயற்சிக்க, அவனோ விடவில்லை.
“கீழ எல்லாரும் இருக்காங்க” என்று அவள் முணுமுணுக்க, “அதுக்கு என்னங்க? உங்க கையதானே பிடிச்சுருக்கேன். கட்டியா பிடிச்சேன், அவங்க கோவிச்சுக்குவாங்கன்னு நீங்க கவலைப்படுறதுக்கு. ம்ம்?” என்று அவன் கண் சிமிட்டி கேட்க, ஆவென்று அவனை வாய் திறந்து பார்த்தாள் அவள்.
“ரெண்டு மாசம் கழிச்சு உங்களை மொட்டை மாடில வச்சுக் கட்டிப்பிடிச்சா கூட எவனும் என்னைக் கேள்வி கேட்க முடியாது” என்று அவன் திரும்பி அவள் முகம் பார்த்துச் சொல்ல, அவளோ முன்னே பார்த்து, “தயா” என்றாள்.
ஶ்ரீகாந்த் வேகமாக அவள் கையை விட்டு விலகி நின்றான்.
துர்கா சிரித்து விட்டாள். அதன் எதிரொலி அவன் முகத்திலும் பிரதிபலித்தது.
இருவரும் புன்னகையுடன் கீழிறங்க, அதைக் கண்ட இரண்டு குடும்பத்தினர் முகங்களும் நிம்மதியில் நிறைந்து மலர்ந்து புன்னகைத்தன.
ஶ்ரீகாந்த், “அம்மா, அப்பா, சேர்ந்து நில்லுங்க” என்று சொன்னவன், பெற்றோர் எழுந்து நின்றதும், துர்காவின் கரம் பிடித்து அவர்கள் முன் நின்றான். ரோஜாவும் உண்ணாமலையோடு எழுந்து நின்றவள், அப்படியே கட்சி மாறி அம்மாவிடம் வந்தாள்.
ஶ்ரீகாந்த், துர்கா இருவருக்கும் நடுவில் நின்றாள் குழந்தை.
அவர்கள் இருவரும் பெரியவர்களின் பாதம் பணிந்து ஆசி பெற, குழந்தையும் அவர்களோடு சேர்ந்து விழுந்து அவர்களை வணங்கினாள்.
“நல்லா இருக்கணும்” மனதார வாழ்த்தினர். துர்காவின் பெற்றோரிடம் ஆசி பெற்றனர்.
“என்னத்தா இப்போ உனக்கு என் பையனை கட்டிக்கச் சம்மதமா?” உண்ணாமலை துர்காவை கேட்க, ஆமென்று மெதுவாகத் தலையசைத்தாள்.
அப்பொழுது, “அம்மாவ மிரட்ட கூடாது” என்று முகத்தைச் சுருக்கி ரோஜா சத்தமாகச் சொல்ல, “ஆத்தாடி. நான் உங்கம்மாவ மிரட்டல ஆத்தா. என் மருமககிட்ட ஒத்த கேள்வி கேட்டேன். அது குத்தமா?” என்று அவளிடம் கேட்டார். குழந்தை புரியாமல் கண்களைச் சுருக்க, “ஶ்ரீக்கா வீட்டுக்கு போகலாமான்னு அப்பத்தா அம்மா கிட்ட கேட்டாங்க பட்டு ரோஜா, அம்மாவ மிரட்டல” என்று அவளைத் தூக்கி விளக்கம் சொன்னான் ஶ்ரீகாந்த்.
“அம்மா உங்க வீட்டுக்கு வரவாளா? எதுக்கு?”
“அம்மா மட்டுமில்ல, நீயும்தான்”
“நானா?” என்று விழி விரித்தாள்.
“ஆமா. எதுக்குன்னா? நான் உன் வீட்டுக்கு வந்தேன்ல? அதேபோல நீயும் என் வீட்டுக்கு வரணும்ல? ம்ம்? ஶ்ரீமதி அத்த இருக்காங்க இல்ல?..” என்று அக்காவை கை காட்டியவன், “அவங்க வீட்ல அண்ணா, அக்கா இருக்காங்க. அவங்களும் நம்ம வீட்டுக்கு வருவாங்க, உன் கூட விளையாட. ஜாலியா இருக்கும்ல? அப்புறம் நாம டெய்லி ஸ்கூலுக்குக் கார்ல போலாம். ஒன்னா உக்காந்து சாப்பிடலாம். வெளில போலாம். நீ சைக்கிள் ஓட்டலாம்.”
“பட்டர்பிளை சைக்கிள்”
“ஆமா, புதுப் பட்டர்பிளை சைக்கிள் வாங்கிடுவோம் பட்டுக்கு. அப்பச்சி உனக்கு ஹோம்ஒர்க் எழுத ஹெல்ப் பண்ணுவாரு. அப்பத்தா தினமும் உனக்குக் கதை சொல்லுவாங்க” என்று அவன் நீட்டி முழக்க, “நான் வர்றேன்” என்று வேகமாகப் பதில் சொன்னவள், மெதுவாகத் திரும்பி துர்காவை பார்த்து விட்டு, “அம்மா என்ன சொன்னாங்க?” என்று கேட்டு அவன் கையைச் சுரண்டியது வாண்டு.
“அம்மாகிட்ட நீயே கேளேன்”
“என்ன கேட்க?”
“ஶ்ரீக்கா வீட்டுக்கு போலாமான்னு கேளு.”
“ஓகே” என்று திரும்பி, “ம்மா, நாம ஶ்ரீக்கா வீட்டுக்கு போலாமா?” என்று தலையை அசைத்து, கண்கள் ஆர்வத்துடன் மின்ன கேட்டாள் குழந்தை. மகளே ஆசைப்பட்டுக் கேட்ட பிறகு துர்கா எங்கே மறுக்கப் போகிறாள்.
சரியென்று தலையசைத்தாள்.
“அக்கா..” பின்னால் இருந்து தயா அழுத்தமாக அழைக்க, அதன் பொருள் புரிந்து, “போகலாம் செல்லம்.” என்றாள் மகளிடம்.
“அப்பத்தா வந்து உங்கள கூட்டிட்டு போறேன்” என்று தன் கொடியை மறக்காமல் நிலைநாட்டினார் உண்ணாமலை.
அவரின் இந்த மாற்றமே அனைவருக்கும் போதுமானதாக இருந்தது.
ஶ்ரீகாந்த் பேச்சை கேட்டிருந்த துர்காவின் பெற்றோருக்கு அதுவரை இருந்த பயம், தயக்கம் எனத் தடயம் இல்லாமல் அழிந்து போயின. இனி மகளின் வாழ்வு மலர்ந்து விடும் என மகிழ்ச்சியுடன் நின்றிருந்தார்கள்.