பார்த்திபன் காதலி – 14 (2)

அவன், அவளது அலுவலகம் செல்வதற்கும் அவள் கீழிறங்கி வருவதற்கும் சரியாக இருந்தது.

“என்னைக் காக்க வைப்பன்னு நினைச்சேன் பார்கவி”

“ச்சே ச்சே, எனக்காக இவ்வளவு தூரம் மெனக்கெட்டு வந்திருக்கீங்க. உங்களைப் போய்க் காக்க வைப்பேனா?”

“நீ காக்க வைக்கல சரி. ஒரு காஃபி வாங்கித் வரலாம் இல்ல? இந்தச் செயினுக்கு அவ்ளோ கூட வொர்த் இல்லையா என்ன?”

“ஐயோ இந்தச் செயின் இல்லாம நான் வீட்டுக்கு போய் இருந்தா எங்கம்மா காவேரி கிட்ட இருந்து எங்கப்பாவால கூட என்னைக் காப்பாத்தி இருக்க முடியாது. அதான் உங்களைக் காக்க வைக்கல நான். அப்படியே நீங்க கேட்ட காஃபியும் வாங்கித் தர்றேன் வாங்க” என்றாள்.

“ஓஹோ, அப்போ செயின் இல்லாம வந்திருந்தா என்னைக் கண்டுக்க மாட்ட அப்படித்தானே? காஃபியும் கிடைச்சிருக்காது”

“பார்த்தி, பிளீஸ் வாங்க” என்று அவனை வெளியே இழுத்துச் சென்றாள்.

இருவரும் தேநீருடன் சில தித்திக்கும் நிமிடங்களைச் செலவிட்டனர்.

அன்று அலுவலகத்துக்கு வண்டியில் வரவில்லை அவள்.

அவள் ஆட்டோ முன்பதிவு செய்யப் போக, அவளைத் தடுத்து, “உன்னை, நான் ட்ராப் பண்றேன் பாரு” என்று அவனே முன் வந்தான். அவள் மறுத்தாலும் விடவில்லை அவன்.

“ஓகே. ஆனா ஒரு கண்டிஷன். உங்க வண்டிய நான்தான் ஓட்டுவேன்” என்றாள்.

“என் வண்டியா? ஹலோ, உனக்குக் கியர் வண்டி ஓட்ட தெரியுமா முதல்ல? ஆள் இல்லாத ரோட்டுல ஸ்கூட்டி ஓட்டி பழகின ஆளுங்கதானே நீங்க? உன்னை நம்பி நா எப்படி என் வண்டியை தர்றது?” என்று தீவிரமாகக் கேட்டவனை, இடுப்பில் கை வைத்து முறைத்தாள்.

“நான் காலேஜ் படிக்கும் போது ஆசைப்பட்டு அப்பா கிட்ட கெஞ்சி கேட்டு கியர் வண்டி பழகினேன் தெரியுமா? ஆனா அதுக்கு அப்புறம் அப்பா என்னைக் கியர் வண்டி ஓட்ட விடல. வாங்கியும் தர மாட்டேன்னு சொல்லிட்டார். ஸ்கூட்டி தான் ஓட்டணும்னு ரூல் போட்டுட்டார்” என்றாள் ஏமாற்றத்துடன்.

அவன் போலி சோகத்துடன், கன்னத்தில் கை வைத்து, “டூ பேட்” என்றான்.‌

“என்ன நக்கலா? நான் ஆட்டோ புக் பண்றேன். நீங்க கிளம்புங்க”

“அப்போ என் வண்டி வேணாமா? ஓட்டணும்னு சொன்ன?” மீசை மறைத்த குறும்பு புன்னகையுடன் கேட்டான்.

“என்னை நம்பினா குடுங்க. உங்களுக்கும், உங்க வண்டிக்கும் ஒரு கீறல் கூட விழாது ஐ கியாரண்டி” என்றாள் உறுதியாக.

“என் உசுரையே உன் கையில் கொடுத்து வண்டியில ஏறுறேன், பார்த்தியை..”

“பத்திரமா பார்த்துப்பேன். பார்கவி இருக்கப் பயமேன்?” என்று அவனுக்கு அபயம் சொன்னாள். அவன் கீழிறங்கி நிற்க, லாகவமாகக் காலை தூக்கி போட்டு அவன் வண்டியை ஆக்கிரமித்தாள்.

அவள் தடுமாறுவள் என்று நினைத்து அவன் தடம் சொல்ல, அவளோ ஆரம்பக்கட்ட தயக்கத்துக்குப் பின் மிகவும் நிதானமாக வண்டியை செலுத்தினாள்.

அவளின் விரிந்த கூந்தல் அவன் முகத்திலும் கழுத்திலும் உரசி செல்ல, அவள் தலைமுடியை மொத்தமாகக் கையில் சுருட்டினான். காற்றுக்குப் பறந்து அவன் முகத்தில் மோதிய அவளின் துப்பாட்டவை அவளைத் தொல்லை செய்யாமல் உருவினான்.

அவளின் துப்பட்டா கொண்டு அவளின் தலைமுடியை கட்டி விட்டான்.

“அப்படியே எங்கப்பா பண்ற மாதிரியே பண்றீங்க பார்த்தி” பக்கவாட்டுக் கண்ணாடியில் அவன் முகம் பார்த்து சொன்னாள்.

அவள் விழிகளில் வித்தியாச உணர்வு, அவ்வப்போது அவனிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே வண்டியை செலுத்தினாள்.

“ஏய் பார்த்து பாரு” என்று பின்னால் அமர்ந்தபடி, அவளின் தோளில் பதட்டத்துடன் கைப் பதித்து பின்னால் அமர்ந்தவாறு வண்டியோட்டிக் கொண்டிருந்தான் அவன்.

“கூல் டவுன் பார்த்தி” என்று அவனைப் போலவே சொன்னாள். அவன் பதட்டத்தில் அவன் வீட்டுக்குச் செல்லும் வழியைச் சொல்ல, அவளும் அந்தச் சாலையில் பயணித்தாள்.

அப்போது சாலையோரம் இருந்த தேநீர் கடையில் இருந்து பாடல் கசிந்து வர, அவன் உதடுகள் தானாக அந்தப் பாடல் வரிகளை உச்சரித்தன.

“சற்று முன் கிடைத்த தகவல்படி தொலைந்து போனது என் இதயமடி உயிரே.. என் உயிரே..” என்று அவன் பாட, “பாட்டெல்லாம் பலமா இருக்கே பார்த்தி” என்று கிண்டலாகச் சொன்னாள் அவள்.

“உற்று பார்க்கும் விதம் புரிந்ததடி”

“புரிஞ்சா சரி” என்றாள் சிரிப்புடன். ஆனால் அவனுக்குப் புரியவில்லையே. அன்றைக்கு அவளுக்குமே அவள் மனம் புரிந்திருக்காது. அந்தக் கணத்தின் இனிமையைக் கலைக்க விரும்பாமல் விளையாட்டாகப் பேசியிருப்பாள் என்பது அவனுக்குப் புரிந்தது. ஆனால் பின்னால் இதையெல்லாம் யோசித்து நிறையக் குழம்பியிருப்பாள் என்பது இப்போது அவனுக்குத் தெள்ளத் தெளிவாக விளங்கியது.

அன்றோ அதையெல்லாம் உணராமல் பாடலை தொடர்ந்து பாடியிருந்தான் அவன்.

“நிலை மாறாமல் தலை சாயாமல், அடி உனக்கே வாழ்ந்திருப்பேன்” அந்த வரிகளின் அர்த்தம், தற்போது அவனைப் பார்த்துக் கொடூரமாகக் கேலி செய்வது போலிருந்தது.

அவனது தெருவில் நுழைந்து வண்டியை நிறுத்திய பார்கவி, தலைக் கவசத்தை அலட்சியாக அகற்றி தலை சாய்த்து அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

“பார்த்தீங்களா பார்த்தி, உங்க மேல ஒரு கீறல் கூட விழாம உங்களைப் பத்திரமா உங்க வீட்ல கொண்டு வந்து விட்டுட்டேன்” என்று புன்னகைத்தாள்.

அவன் கீழிறங்கி நிற்க, “பிளீஸ் இங்கருந்து என் வீடு பக்கம்தான். நான் ஆட்டோ புக் பண்ணிக்கறேன்” என்றாள்.

நானே கொண்டு வந்து விடுகிறேன் என்று அவன் வலியுறுத்தினாலும் அவள் சம்மதிக்கவில்லை.

“ஏற்கெனவே இன்னைக்கு எனக்காக ரொம்ப அலைஞ்சுட்டீங்க பார்த்தி. இட்ஸ் ஓகே.” என்று முடித்து விட்டாள். அவள் முன் பதிவு செய்த ஆட்டோ வரவும், ஏறி அமர்ந்தாள். அப்போதுதான் அவனுக்கு அவளைச் சந்திக்கச் சென்ற காரணம் நினைவு வர, “பாரு வெயிட்” என்றான்.

“உன் செயின்” என்று அவளின் சங்கிலியை நீட்டினான். அதை வாங்கி அவள் அணிய சிரமப்பட, குனிந்து இயல்பாகவே அவனே அணிவித்து விட்டான்.

இருவரின் உதடுகளும் கண்களும் புன்னகைத்து பிரிந்தன.

இப்போது வண்டியை செலுத்திக் கொண்டிருந்தவன் மனத்தில் அலை அலையாய் அவள் நினைவு மோதிட, அந்நினைவில் மூழ்கி மூச்சு முட்டி தடுமாறினான்.

அந்தக் தாக்கத்தில் நண்பனிடம் சொன்னதை மறந்து அவனது மாமனார் வீட்டுக்கே சென்று விட்டான் அவன்.

“வாடா” என்று வரவேற்று அவனை உள்ளே அழைத்துச் சென்ற பிரபஞ்சன், “என்ன, உன் பிரபா கூடச் சண்டையா?” என்று கேட்டான்.

பிரியதர்ஷினி வீட்டினர் அனைவரும் வீட்டில் இருக்க, அவர்களிடம் பேசி விட்டு நண்பர்கள் மொட்டை மாடிக்கு வந்தார்கள்.

“என்னடா பார்த்தி?” என்று அக்கறையுடன் கேட்டான் பிரபஞ்சன்.

பார்த்திபன் மொட்டை மாடி படிக் கூண்டின் சுவரில் ஒற்றைக் காலை உயர்த்தி வைத்து நின்று நண்பனை பார்த்து, “பிரபா.. நான் ஒரு பொண்ண ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன்டா” என்றான் கரகரத்த குரலில். நண்பனின் முகம் பார்க்க முடியாமல், அங்கிருந்த பூச் செடிகளை வெறித்தான்.

“யார? பிரபாவதியவா?”

“இல்லடா, வேற பொண்ணு.. ப்ச், சத்தியமா அப்போ எனக்குத் தெரியல மச்சா. ஐ டிடிண்ட் ரியலைஸ்” என்று குற்ற உணர்ச்சியுடன் நெற்றியை கீறினான்.

“இப்படிப் புதிர் போடாம தெளிவா பேசு பார்த்தி. பொண்ணை ஹர்ட் பண்ணிட்டேன்னு அசால்ட்டா சொல்ற? எனக்குப் பயந்து வருதுடா” என்று படபடத்தான்.

“ஹர்ட்னா பிசிக்கலா இல்லடா. அவ மனசை.. உடைச்சுட்டேன். என்கிட்ட வந்து லவ் சொன்னாடா பிரபா. என்னை நேசிக்கிறதா சொன்ன முதல் பொண்ணு அவ. என்னை ரொம்பப் பிடிக்கும்னு சொன்ன பொண்ணை… ஹர்ட் பண்ணிட்டேன் பிரபா..” பரிதவித்துப் பிசிரடித்தது பார்த்திபன் குரல்.

“யாருன்னு கேட்டதுக்குப் பதில் சொல்லுடா பரதேசி. இது எப்போ நடந்தது? நீ ஏன் என்கிட்ட சொல்லல?” என்று அடுக்கடுக்காகக் கேள்விகளை அடுக்கி பதிலுக்காக நண்பனை பார்த்து நின்றான் பிரபஞ்சன்.

பார்த்திபன் பார்வை பார்கவியின் வீட்டுப் பக்கம் பாய்ந்து மீண்டது.

“யாருடா?” இருவருக்கும் நடுவே கனமாக அமர்ந்திருந்தது அந்தக் கேள்வி.

error: Content is protected !!
Scroll to Top