பிரியதர்ஷினியின் அண்ணன் பிரகாஷ் திருமணத்தில்தான் பார்கவியை அவன் மீண்டும் சந்தித்தான்.
பட்டுப்புடைவை, பொன் நகை, பின்னல் நிறைத்த பூச்சரம், புன்னகையில் மலர்ந்த முகமாகப் பிரியதர்ஷினியுடன் பரபரப்பாகச் சுற்றிக் கொண்டிருந்தாள் பார்கவி.
பார்த்திபன் குடும்பம் பிரியதர்ஷினி குடும்பத்திற்குப் பல வருடமாகப் பழக்கம் என்றாலும் சமீபமாகத்தான் நெருங்கி பழகுகிறார்கள். அவனது ஒட்டு மொத்த குடும்பத்துக்கும் திருமண அழைப்பு வைத்திருந்தார்கள்.
பெற்றோர் மற்றும் தங்கை குடும்பத்துடன் வந்திருந்தான் அவன்.
திருமண மண்டபத்தில் இருந்த கூட்டத்தில் மிரண்டு தங்கை மகள் சிணுங்கி கொண்டேயிருக்க, அவளைத் தூக்கி கொண்டு ஓரமாக நின்றிருந்தான். இடது கரத்தில் குழந்தையை அணைத்து பிடித்தபடி, அலைபேசி கொண்டிருந்தான்.
அங்கே நல்ல காற்றோட்டம் இருந்தாலும், குழந்தை உடலை முறுக்கி வீல் என்று கத்தி அழுதாள். அவனைக் கடந்த சில தலைகள் திரும்பிப் பார்க்க, “சரி, தங்கம். தூங்குங்க பட்டே” என்று குழந்தையைத் தட்டிக் கொடுத்துச் சமாதானப்படுத்தினான்.
“ஹலோ பார்த்திபன்..” என்ற பரிட்சயமான குரலில் அவன் திரும்ப, “சொல்லவே இல்ல?” என்று விழிகள் போலியான அதிர்ச்சியில் விரிய, அவன் முன் இதழ்கள் புன்னகையில் மலர நின்றிருந்தாள் பார்கவி.
அவளை மேலிருந்து கீழாக, நீயா இது என்பது போல ஆச்சரியமாகப் பார்த்தவன், “வாவ்” என்றான் கண்கள் பிரம்மிப்பில் விரிய.
“என்ன வாவ்?” முறைப்புடன் கேட்டாள்.
“ஒரு நிமிஷம் யார் இந்தப் பியூட்டின்னு தெரியாம, என்னடா நம்மகிட்ட வந்து பேசுறாங்களேன்னு கன்பூஸாகிட்டேங்க”
“ஹலோ பார்த்தி, போதும் அடிச்சு விடாதீங்க” என்றாள் அலட்டிக் கொள்ளாத புன்னகையுடன். அவன் கையில் சிணுங்கிய குழந்தையை இயல்பாக வாங்கித் தன் தோளில் போட்டு தட்டிக் கொடுத்தாள்.
“ரே..ரே..ரே..ரே” என்று குழந்தையைத் தோளில் ஆட்டி அவள் தட்டிக் கொடுக்க இமைக்காமல் அவளையே பார்த்திருந்தான் அவன்.
அவளின் கழுத்தை கட்டிக் கொண்டு உறக்கத்துக்குச் சிணுங்கினாள் குழந்தை. பார்கவியின் கழுத்தில் இருந்த பொன் சங்கிலி கழன்று கீழே விழப் போக, பாய்ந்து அதைப் பிடித்தான் அவன்.
அதை, “இந்தாங்க” என்று அவளிடம் நீட்டினான்.
“உங்க குழந்தையைக் கையில வச்சுட்டு நான் செயினை எப்படிங்க வாங்குவேன்? நீங்களே வச்சுருங்க. வாங்கிக்கறேன்” என்றாள்.
‘உனக்குக் குழந்தை இருக்கா சொல்லவே இல்ல?’ என்று சற்று முன் அவள் கேட்ட கேள்வியைப் புரிந்துக் கொண்டவன், “நேஹா, என் தங்கச்சி பொண்ணு” என்று குழந்தையைக் கண் காட்டி சொன்னான்.
“அதானே பார்த்தேன். எங்க எங்ககிட்டலாம் சொல்லாம கொள்ளாம கல்யாணம் பண்ணிட்டீங்களோன்னு நினைச்சேன்” என்று அவள் இழுக்க, “ச்சே என்னங்க பார்கவி நீங்க. நான் கல்யாணம் பண்றதுன்னு முடிவு பண்ணா கண்டிப்பா, ஃபர்ஸ்ட் உங்ககிட்ட சொல்லிட்டு தாங்க பண்ணுவேன்” என்றான் பற்கள் தெரிய புன்னகைத்து.
அவள் மெலிதாகச் சிரித்து, “என்கிட்ட ஏன் சொல்லப் போறீங்க? எனக்குப் புரியல?” என்று புரியா பாவனையுடன் விழி விரித்தாள்.
“நீதானே உங்கிட்ட சொல்லலன்னு இப்போ கோபிச்சுக்கிட்ட? சோ, உனக்குச் சொல்லாம கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொல்றேன்? ஓகே?” என்று கேட்டான்.
“அதையும்தான் பார்ப்போமே. இப்போ சும்மா அடிச்சு விட்டுட்டு அப்புறமா பொண்ணு பார்த்து எல்லாம் முடிவு பண்ணிட்டு எனக்கு இன்விடேஷன் அனுப்புவீங்களா இருக்கும்” என்று அன்று அவள் சொன்னது, இன்று துல்லியமாக அவன் நினைவில் வந்து நெஞ்சில் அழுத்தியது. அவளிடம் எதையும் சொல்லாமல்தான் விட்டு விட்டான்.
பிரபஞ்சன் வீடு நோக்கி விரைந்து கொண்டிருந்தவனின் கரத்தில் வண்டி தடுமாறிட, தன் மனத்தை நிலைப்படுத்திச் சமாளித்தான்.
“புருஷனும், பொண்டாட்டியும் ஓரமா நின்னு பேசுங்கப்பா. இப்படிப் பாதையை அடைச்சுட்டு நின்னு பேசிட்டு இருக்கீங்க, அதுவும் கையில் குழந்தையை வச்சுட்டு.. நாங்க உங்களை இடிச்சுட்டே போறதா?” அவர்களைக் கடந்து போன பெண்மணி சடைத்துக் கொண்டு செல்ல, “என்னது.. வழி விடுங்கன்னு சொன்னா விலகப் போறோம். அதுக்கு எதுக்கு இப்படிச் சத்தம் போடுறீங்க?” என்று அவர் மேல் பார்கவி பாய, “கூல் டவுன் பாரு” என்று அவளின் கைப் பிடித்து இழுத்தான் பார்த்திபன்.
வாசலில் ஒருபுறம் குழந்தையுடன் அவளும், மறுபுறம் அவனும் நின்றிருக்க, இருவருக்கும் இடையேதான் மக்கள் செல்ல வேண்டும். அப்போதுதான் அதை உணர்ந்து அவளைத் தன் பக்கம் இழுத்தான் அவன்.
இருவரும் பாதையில் இருந்து சற்றே விலகி நின்றார்கள்.
பார்கவி தட்டிக் கொடுத்ததில் கண்கள் சொருகவும், அவளின் சேலையை ஒற்றை விரலில் சுருட்டிக் கொண்டு, பெருவிரலை வாயில் திணித்து, அவள் தோளில் உறங்கியிருந்தாள் குழந்தை.
“என்னைப் பார்த்தா இவளுக்கு அம்மா மாதிரியா இருக்கு?” என்று அவனிடமே சந்தேகம் கேட்டாள். அவள் கவலை அவளுக்கு, பாவம்.
அவன் சிரிக்க, “அந்த அம்மாக்கு என்னைப் பார்த்தா கல்யாணமான பொண்ணு மாதிரியா இருக்கு?” என்று அவர்களுக்கு எதிரே சுவர் உயரத்துக்குப் பதித்திருந்த கண்ணாடியில் தன்னைப் பார்த்து முகம் சுழித்து வினவினாள்.
“அவங்க சொன்னதை நீ சரியா கவனிக்கல பாரு” என்றான் கேலிச் சிரிப்புடன்.
“ஆ, அதுவா? ஆங், நம்மளை பார்த்தா அப்படியா தெரியுது?” என்று அவன் கண்களைப் பார்த்துக் கண் சுருக்கி கேட்டவள், சட்டென்று முன்னால் திரும்பி கண்ணாடியில் இருவரையும் பார்த்தாள்.
அவள் பட்டுப் புடைவையில் தோளில் குழந்தையுடன் பெரிய பெண்ணாகப் பாந்தமாகத் தெரிந்தாள். அடர்ந்த சிகையும், அளவான மீசையும், கண்ணில் மின்னிய குறும்பு புன்னகையுமாக, அவனும் ஆள் அழகனாகத்தான் தெரிந்தான்.
குழந்தையுடன் இருவரும் இணைந்து நிற்கையில் தம்பதிகளாகத் தெரிந்தார்கள் போலும்.
மறுகணம் அவனை விட்டு விலகி நின்று இருவருக்கும் இடையே இடைவெளி உண்டாக்கினாள்.
“ஒரு பொண்ணும் பையனும் சேர்ந்து நின்னாலே போதுமே, இப்படி ஏதாவது சொல்லிடுவாங்க பூமர்ஸ்” என்று அவள் கோபமாக முணுமுணுக்க, அவன் சத்தமாகச் சிரித்திருந்தான்.
“ப்ச், பாப்பா தூங்குறா” என்று கண்ணை உருட்டி அவனை எச்சரித்தாள்.
அவனது சிரிப்புப் புன்னகையாக மாற அவனையே விழி எடுக்காமல் பார்த்தவளின் பார்வை, மீண்டும் கண்ணாடிக்குத் தாவி இருவரின் பிம்பத்திலும் பதிந்து நிலைத்தது.
அப்போது, “பாரு” என்று பிரியதர்ஷினி அவளை அழைக்க, குழந்தையை அவனிடம் கொடுத்து விட்டு தோழியுடன் சென்றிருந்தாள் அவள்.
மீண்டும் பந்திக்குச் செல்லும் போதுதான் அவளைப் பார்த்தான்.
அவனுக்கு வெளிவேலை இருக்கிறது என்று பெற்றோரை மண்டபத்திலேயே விட்டுவிட்டு அவன் விரைவாக வெளியேறிட முனைந்தான். அதைக் கண்டு, “பிளீஸ், சாப்பிட்டு போங்கண்ணா.” என்று அவனைத் தடுத்து நிறுத்தினாள் பிரியதர்ஷினி.
“பாரு. அண்ணாவை சாப்பிட கூட்டிட்டு போ. அவங்களைச் சாப்பிடாம அனுப்பாத. ஓகே?” என்று கட்டளையாகச் சொல்லி, அந்தப் பொறுப்பைப் பார்கவியிடம் ஒப்படைத்தாள்.
“கல்யாண வீட்டுக்கு வந்துட்டு சாப்பிடாம போகலாமா மிஸ்டர் பார்த்திபன்? விருந்து சோறை மிஸ் பண்ண கூடாது வாங்க” என்று அவனுக்கு முன்னே நடந்து, வர்றியா இல்லையா? என்பது போலப் பின்னால் திரும்பி அவனைப் பார்த்தாள்.
“பிரபா அண்ணாவை வேணா அனுப்பவா?” என்று கேட்டவள், அவன், “வேணாம்” எனவும், “ஓகே, அப்போ கூச்சப்படாம என் கூட வாங்க. உங்களுக்கு நான் கம்பெனி தர்றேன்” என்று அவனுடன் உணவு உண்ண அமர்ந்தாள்.
அவர்கள் வரிசையில் உணவு பரிமாறப்பட, “வறுவல், கட்லட் வைக்காதீங்க. பரோட்டா வேணாம். ஸ்வீட்ஸ் வேணாம்” என்று அவள் ஒவ்வொன்றாக மறுத்துக் கொண்டே வர, பரிமாறுபவர்கள் கடுப்பாகும் முன், அவன் கடுப்பாகி விட்டான்.
“எல்லாம் வேணாம், வேணாம்னு சொல்றதுக்கு எதுக்குச் சாப்பிட வரணும் நீ?” என்று அவள் புறமாகச் சாய்ந்து கிசுகிசுத்தான்.
“பரோட்டா மைதா பார்த்திபன், நான் சாப்பிட மாட்டேன். அப்புறம் பிரைட் ஐட்டம் கூட…”
“அந்த ஸ்வீட்டை விட்டுட்டியே..” என்றான் நக்கலாக.
“சுகர் பேஷண்ட்டா நீ?”
“நான்லாம், நானே ஆல்ரெடி ஓவர் ஸ்வீட்ன்னு இந்த ஆர்டிஃபிசியல் ஸ்வீட் சாப்பிடுறது இல்ல பார்த்திபன்” என்று கண் சிமிட்டி புன்னகையுடன் சொன்னாள்.
அவள் இலையில் இருந்த அத்தனை இனிப்பையும் அவனே எடுத்து உண்டிருந்தான். அத்துடன் அவன் ஏதோ வசனம் பேசியிருந்தான். அவன் சொன்ன வசனத்திற்கு வாய் விட்டு சிரித்திருந்தாள் அவள்.
அந்தச் சிரிப்பு அவளை இன்னுமே அழகாக்கியது.
அன்று அப்படி என்ன சொன்னான் அவன்? எதற்காக அப்படிச் சிரித்தாள்? எத்தனை முயற்சித்தும் அவனால் நினைவு கூர முடியவில்லை.
அவர்கள் உணவை முடித்ததும் அவனை வண்டி நிறுத்துமிடம் வரை வந்து வழியனுப்பி விட்டே சென்றிருந்தாள்.
அது அவர்களின் திருமண மண்டபம். அவளை அறிந்தவர் தெரிந்தவர் அவளிடம் பேச, நலம் விசாரிக்க, மிக இயல்பாக அவர்களுக்குப் பதில் சொன்னாள்.
அவளிடம் விடை பெறும் போது இதமான மனநிலையில் இருந்தான் அவன்.
அவனது வேலையெல்லாம் முடித்து மாலை வீட்டுக்கு சென்ற பிறகே கால் சட்டை பையில் இருந்த அவளின் தங்கச் சங்கிலியை கவனித்தான்.
அவனது உள்ளங்கையில் அடங்கிய சங்கிலியில், “பா” என்ற தமிழ் எழுத்து வெண்ணிற கற்கள் பதித்துக் கண்ணைப் பறித்தது.
அதை மென்மையாக வருடியவன், அவளிடம் சேர்க்க முயற்சித்தான்.
“பார்கவி, நான் பார்த்திபன்..”
“சொல்லுங்க பார்த்தி. என்ன திடீர்னு கால் பண்ணியிருக்கீங்க?” ஏதேனும் முக்கிய விஷயமா என்ற கேள்வி அவள் கேள்வியில் தொக்கி நிற்க, “ஏன் ஏதாவது விஷயம் இருந்தாதான் உங்களுக்குக் கால் பண்ணணுமா பாரு. சும்மா பேச கூப்பிட மாட்டேனா?” என்று இடக்காகக் கேட்டான்.
“பார்த்தி..”
“பாருங்களேன், என்கிட்ட பேச மாட்டேங்கறீங்க” என்று போலியாக அலுத்துக் கொண்டான்.
“ஐயோ, அப்படியெல்லாம் இல்ல. நான் ப்ராஜெக்ட்ல இஸ்யூனு வீணா போன ஆபீஸ் வந்திருக்கேன். நீங்க என்னன்னு சொன்னா..”
“என்னனு சொல்லிட்டுப் போனை வைடான்னு சொல்றீங்க? அப்படித்தானே?”
“அச்சோ, பார்த்தி. பிளீஸ்..” என்று அவள் திணற, அவன் சத்தமாகச் சிரித்திருந்தான்.
“உங்க கழுத்துல ஒரு செயின் இருக்குமே, அது எங்க?” என்று அவன் கேட்டதும், அந்தப் பக்கம் அவள் தன் கழுத்தை ஆராய்வதை அவதானித்துப் புன்னகைத்தான்.
“என்ன காணோமா?”
“ஆமா, என் செயின் உங்ககிட்ட இல்லையா?” என்று காலை அவனிடம் கொடுத்த நினைவில், எதிர்கேள்வி கேட்டாள்.
“என்கிட்டதான் இருக்கு. உன் ஆஃபீஸ் கொண்டு வந்து தரவா?”
“சாரி. உங்களுக்கு வீண் அலைச்சல். நானே நாளைக்கு வந்து வாங்கிக்கவா?” என்று கேட்டாள்.
“இல்ல, நானே கொண்டு வந்து தர்றேன்” என்று அழுத்திச் சொன்னவன், நேராக அவளது அலுவலகம் சென்றிருந்தான்.