என் ஜீவனில் உறைந்திடு – 12 (1)

 ரோஜா, அக்காவின் கையை உதறி விட்டு எழுந்து கொண்டாள். அக்காவின் கேள்வி, மாமாவின் பேச்சு என எதுவுமே அவளுக்கு ரசிக்கவில்லை. அவர்களிடம் இருந்து விலகி, விறுவிறுவென முதல் தளத்திற்குச் சென்றாள். அவளை வரவேற்பது போலக் கதவும் திறந்திருந்தது.

நண்பகல் வெயிலை பொருட்படுத்தாமல் அவள் உள்ளே செல்ல, சீற்றத்துடன் அவளைத் தீண்டியது கடல் காற்று.

அந்தத் திறந்த வெளி உணவகத்தின் சமையல் பகுதியில் இருந்த மேஜையில் சாய்ந்து நின்றாள். சில நாட்களுக்கு முன்பு இளமாறனும், அவளும் இங்குச் சந்தித்ததோ, உணவு அருந்தியதோ, அவன் மனதை அவளிடம் சொன்னதோ நினைவுக்கு வராமல் மனத்தின் ஆழத்தில் அது அமிழ்ந்திட, அக்காவின் மேலான கோபம் மட்டுமே மேலோங்கி நின்றது.

மருத்துவர் சுகந்தியை, இளமாறனை அவர்களுக்குப் பின்னே, அவர்களது மருத்துவமனையில் வைத்தே பல முறை, பல வருடங்களாக, பலர் விமர்சித்து, நக்கல் பேசி, கிண்டலடித்து, குறை சொல்லி, ஒழுக்கத்தைக் கேள்வியெழுப்பி எனப் பலவித விமர்சனங்களை அவளே நேரடியாக, மறைமுகமாகக் கண்டிருக்கிறாள்தான். ஆனால், இனிமேல் அது போன்ற பேச்சுக்களை முகம் மாறாமல் கேட்க முடியாது என்றே அவளுக்குத் தோன்றியது.

“சாரி ரோஸ் குட்டி” பின்னால் இருந்து வந்து, தங்கையின் வலக்கரத்தை தன் இரு கரங்களிலும் பொதிந்து கொண்டு மன்னிப்பு கேட்டாள் நித்யா.

நித்யா அந்த நிமிடம் அக்கா என்பதைத் தாண்டி அந்நியமாகத் தெரிந்தாள் தங்கையின் கண்களுக்கு.

எத்தனை நாசூக்காகத் தெரியப்படுத்தி இருக்க வேண்டிய விஷயத்தை, அவளை உதாரணம் காட்டி, கேள்வி எழுப்பி அக்கா கணவருக்குப் புரிய வைத்ததை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

“இதைப் பத்தி நான் பேசினாலே உன்னால தாங்கிக்க முடியல. இனிமே இந்த மாதிரி பேச்சை அடிக்கடி கேட்க வேண்டியிருக்கும் நீ. அப்போ என்ன பண்ண போற ரோஜா? இளமாறன் சொந்தக்காரங்க, நம்ம சொந்தக்காரங்கன்னு கண்டிப்பா இதைப் பத்தி நேரடியாகவும், மறைமுகமாகவும் பேசதான் செய்வாங்க. அப்போல்லாம் கோபப்பட்டுட்டே இருக்கப் போறியா என்ன?”

“நித்திக்கா, இனிமேதான் புதுசா கேள்விபடப் போறோமா? பத்து வருஷத்துக்கு முன்னாடியே நம்ம காதுக்கு இந்தப் பேச்சு வந்தாச்சு. எனக்கு அடுத்தவங்க பேசுறது பத்தியெல்லாம் கவலையே கிடையாது கா. அவங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியமும் எனக்கு இல்ல. சுகந்தி டாக்டர் குடும்பம், நம்ம குடும்பத்தைத் தவிர மத்த எல்லோரும் எனக்கு அடுத்தவங்கதான்.” அழுத்தமாகச் சொன்னாள் ரோஜா.

“இல்ல ரோஜா, நாம பேசும் போது சுகந்தி டாக்டர் பண்ணது தப்பேயில்லைன்னு நீ பேசின. அப்படித்தான் உன் இளமாறன்கிட்டயும் சொல்லியிருக்க. ஆனா, இன்னைக்கு உங்க மாமா ரியாக்க்ஷன் பார்த்தயில்ல?”

“சோ, எனக்கு உன்னோட பாய்ண்ட்டை நிரூபிக்க இப்படிப் பண்றியா கா?”

“ஐயோ ரோஜா, அப்படியில்ல குட்டி. பிளீஸ், நான் சொல்ல வர்றதை புரிஞ்சுக்கோயேன்.” நித்யா விளக்க முற்படுவது ரோஜாவுக்கு விளங்காமல் இல்லை. அவளது எண்ணம் எல்லாம் இளமாறனின் பெற்றோரின் வாழ்வை, 30 வருடத்து முந்தைய நிகழ்வை அவள் ஆராயவே விரும்பவில்லை.

அது அவர்களின் வாழ்க்கை. அதன் முடிவுகள் அவர்களது. அவ்வளவுதான்.

“சுகந்தி டாக்டர் அப்படியென்ன தப்பு பண்ணிட்டாங்கன்னு நீ இளமாறன்கிட்ட சொன்னதுதான் எனக்கு உறுத்தலா இருந்தது. அதைதான் உனக்குப் புரிய வைக்க டிரை பண்றேன்”

“நித்திக்கா, பிளீஸ். தவறுவது மனித இயல்பு. அந்தத் தவறை நேர்ப்படுத்தின பிறகும் குற்றம் சொல்றது, எனக்குச் சரின்னு படல. இதே சுகந்தி டாக்டர் வேற தப்பான முடிவுகள் எடுத்திருந்தா, குழந்தையைக் கை விட்டிருந்தா, ஏதாவது ஹோமில்..” மேலே சொல்ல முடியாமல் தொண்டையடைக்க, குரல் உடைய பேச்சை நிறுத்திக் கொண்டாள். இளமாறன் இல்லாமலே போய் இருப்பான் என்று நினைக்கையிலே அவளுக்கு ஏன் நெஞ்சை அடைக்கிறது.

மனது உருகி கண்களின் வழியே வெளியேற முயல, அழுது விடாமல் இருக்கப் பெரும் பிரயத்தனம் செய்தாள் அவள்.

“குழந்தையை எதுவும் செய்திருந்தாதான் தப்பு. அதை நல்லபடியா வளர்க்கிறதால உனக்குச் சரின்னு படுது. இல்லையா?” தங்கை சொல்லி முடிக்காததை அவள் மனதை அறிந்தவளாகக் கேட்டாள் நித்யா.

“எஸ் கா. கிட்டத்தட்ட. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு சூழ்நிலை. நான் யாரையும் குற்றம் சொல்ல மாட்டேன் கா. சூழ்நிலைகள்தான் முடிவுகளைத் தீர்மானிக்குது”

“நம்ம அப்பாவோட கவலை உனக்கு மாமியார் வீடு இல்லைங்கறதுதான். அப்படி இல்லாம போனதுக்குக் காரணம் நீ சொன்ன மாதிரி ஏதோ ஒரு சூழ்நிலையும், அதோட முடிவுமா இருக்கலாம். நான் சுத்தி வளைச்சு அதைத்தான் சொல்ல வர்றேன் ரோஜா. அப்பா, அம்மா ரெண்டு பேருக்கும் சுகந்தி டாக்டர் குடும்பத்தைப் பத்தி அடி முதல் நுனி வரைக்கும் தெரியும். நாங்க யாரும் அதைப் பத்தி பேசப் போறது கிடையாது. ஆனா, கண்டிப்பா உலகம் நாலு விதமா பேசும். அதைக் கண்டுக்காம கடக்க, ரெடியா இரு”

நித்யா சொல்ல அவளின் கருத்தை மெல்ல உள்வாங்கித் தலையசைத்தாள் ரோஜா.

“இடம், பொருள், ஏவல்ன்னு எனக்குச் சொல்லிக் கொடுத்த நீயே இப்படி, இங்க வச்சு பேசினது, இப்பவும் அதையே பேசுறதுதான் என் கோபத்துக்குக் காரணம். இது செஃப்போட இடம். அதை நாம ரெண்டு பேரும் மறந்துட்டு பேசிட்டு இருக்கோம்” நித்யாவின் முகத்திற்கு நேராகச் சொன்ன ரோஜா, “ஒவ்வொரு குடும்பத்திலேயும் நாலு ரகசியம், பத்து பஞ்சாயத்து, ரெண்டு சண்டைக் கோழி, நாலு புறணி பேசுற கூட்டம் இருக்கத்தான் செய்யும். ஏன் உன் மாமியார் வீட்ல சண்டை சச்சரவு இல்லையா நித்திக்கா? நீ சமாளிக்கலையா? எல்லாத்துக்கும் அப்பாவா வந்து நாட்டாமை பண்றார்?” என்று தீர்க்கமாகக் கேட்க, நித்யா நமுட்டுச் சிரிப்பு சிரித்தாள்.

“வாய் பேசாத ரோசு” ரோஜாவின் கன்னம் தட்டி, மூக்கை கிள்ளினாள்.

அக்காவின் கையைத் தட்டி விட்டு, “நான் இளமாறனை கல்யாணம் பண்ணிக்க விரும்பறேன். அவ்ளோதான். அதுக்கு மேல பேச்சே கிடையாது” என்று முடிவாகச் சொன்னவளை,

“இதையே அப்பாகிட்ட சொல்லு” என்று சொல்லி வாய் மூட வைத்தாள் நித்யா. தங்கையின் முகம் வாடிப் போனதில் தன் தவறு புரிய, “சாரி ரோஜா. இங்க வச்சு நான் இதைப் பேசியிருக்கக் கூடாது. ரியலி சாரி.” என்று மனம் வருந்தி நித்யா சொல்ல, “இட்ஸ் ஓகே கா. மாமாகிட்ட வீட்ல வச்சே இதை நீ சொல்லியிருக்கலாம்.” என்ற தங்கையின் குரலில் இருந்த ஆதங்கத்தில் மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டாள் நித்யா.

“விடு நித்திக்கா, நீ கீழ போ. மாமாவும், மித்ரனும் தனியா இருப்பாங்க. செஃப் ரொம்பப் பிஸியா இருக்கார். அதுனால நாம இல்லாததைக் கவனிச்சிருக்க மாட்டார். நீ முதல்ல போ, நான் அப்புறமா வர்றேன்” என்றாள் ரோஜா.

நித்யா கீழே செல்ல, ரோஜா அந்தத் திறந்த வெளி உணவகத்தின் குடில்களைக் கடந்து சென்று, அவளின் இடுப்புயரத்தில் இருந்த கட்டைச் சுவரை பிடித்துக் கொண்டு நின்றாள்.

அவளுக்கு எதிரே சல்லடை கொண்டு சலித்து வைத்தது போன்ற பொன்னிற மணலும், அதைத் தொட்டு தீண்டியபடி மல்லாந்திருந்த கடலும், இரண்டையும் இணைக்க ஓடி ஓடி அலுத்துக் கொண்டிருந்த அலைகளும், கண்களுக்குக் குளிர்ச்சியாகக் காட்சியளித்தது.

அவளின் பின்னால் அரவம் உணர்ந்து, திரும்பிப் பார்க்காமலே, “ஹாய் செஃப்” என்றாள்.

“ஹேய், எப்படி ரோஜா?” வியப்புடன் வினவியபடி அவளுக்குப் பக்கத்தில் வந்து நின்றான் இளமாறன்.

கடலுக்கு முதுகையும், அவளுக்கு முகத்தையும் காட்டியபடி, சுவரில் ஒற்றைக் காலை உயர்த்தி வைத்து, சாய்ந்து நின்றான்.

ரோஜாவின் முகத்தைப் பார்க்க, அவள் கண்கள் லேசாகக் கலங்கி இருந்தது. ஆனால், அவனைப் பார்த்ததும் கண்களும் முகமும் கணத்தில் மலர்ந்து போக, இவளுக்கு மட்டும் “ரோஜா” என்று காரணப் பெயர் வைத்திருக்கிறார்கள் என மனதில் நினைத்து புன்னகைத்துக் கொண்டான்.

“எப்படினா? ஒரு செஃப்க்கு மட்டும்தான் சென்ஸ் ஆப் ஸ்மெல் சரியா வொர்க் ஆகுமா என்ன? எங்களுக்கும் வேலை செய்யும். அடுப்புல குழம்பு கொதிக்கும் போதே உப்பு பத்தலைன்னு நீங்க சொல்ற மாதிரி, தூரத்தில் நீங்க வந்தாலே உங்க வாசத்தை வச்சு சொல்லிடுவேன்” கெத்தாக முகத்தையும், தோள்களையும் உயர்த்திச் சொன்னவளைப் பார்த்து வியந்தான், விழித்தான். ஆனால், வாய் திறக்கவில்லை.

“ம்ம். இதைக் குடி” தான் எடுத்து வந்திருந்த குளிர்பானத்தை அவள் முன் நீட்டினான்.

அவன் கண்களைப் பார்த்துக் கொண்டே கையில் வாங்கினாள் ரோஜா.

ரோஜா நிறத்தில் இருந்த அந்தப் பானத்தைச் சிரிப்பும், சந்தேகமுமாகப் பார்த்தாள்.

இனிப்பும், புளிப்பும் கலந்த சுவையில் இருந்த அந்தப் பானத்தை ஒரு மிடறு அருந்தி விட்டு, “ரோஸ் ஆப்பிள், வாட்டர் ஆப்பிள்? ஜம்பக்கா? இல்ல, சாம்பக்கா?” ஆங்கிலம், மலையாளம் எனப் பல விதத்தில் அந்தப் பழத்தின் பெயரை குறிப்பிட்டு அவள் கேட்க, “ம்ம்” என்றான் இளமாறன்.

“இது ஜூஸ் விட ஊறுகாய் போட்டா ரொம்ப நல்லாருக்கும் இல்ல செஃப். குட்டி குட்டியா வெட்டி உப்பு, காரம் போட்டு வெச்சா போதும். ஒரு நிமிஷத்துல காலியாகிடும்” அவள் ரசித்துச் சொன்னதில் துளிர்த்த புன்னகையை மறைக்கவில்லை அவன்.

கருப்புக் காற்சட்டை, கைகள் மடித்து விடப்பட்ட, கழுத்து வரை மறைத்திருந்த வெள்ளை செஃப் கோட் எனச் சீருடை சகிதம் சாதாரணமாக நின்றவனை அந்தப் புன்னகை நொடியில் அழகனாக்கி காண்பிக்க, அவனைத் தன் கண்களால் புகைப்படம் எடுத்துக் கொண்டாள் ரோஜா. மனது மென்மையாக, “செக்ஸி செஃப்” என்று முணுமுணுத்தது.

அவனையே விழியெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு நாளின் முக்கால்வாசி நேரத்தை உணவோடு செலவிடுபவன் என்று சொன்னால் நம்ப முடியாத அளவுக்கு உடலை பேணியிருந்தான்.

அவன் கையில் இருந்த குளிர் பானத்தைக் கூர்ந்து கேள்வியாகப் பார்த்தவள், பதிலுக்காக அவனது கண்களைப் பார்த்தாள்.

அந்தக் கண்களில் தெரிந்த தீவிரத்தில் அனிச்சையாய் புன்னகைத்தான் இளமாறன்.

அந்தக் கண்களில் காதல் தெரியவில்லை அவனுக்கு. காதலை தாண்டிய பலதும் பளிச்செனப் புலப்பட்டது. ரசனை, அன்பு, கருணை என வானவில்லாய் வர்ணஜாலம் காட்டியது.

“ஆல் ஓகே ரோஜா? ஏன் இங்க வந்து தனியா நிக்கிற?” கரகரத்த குரலில் விசாரித்தான். கண்களை மூடித் திறந்தாள். இப்போது அதில் கருணையும், மென்மையும் தெரிய அவளை அப்படியே இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது அவனுக்கு. இந்த உணர்வுகள் அவனுக்குப் புதிது. இதுவரை யாரையும் சொந்தம் கொண்டாட விழைந்ததில்லை அவன். சொந்தங்களையே தூர நிறுத்தி பழகியவன், ரோஜாவை மட்டும் சொந்தமாக்கி கொள்ளத் துடித்தான்.

அவளை முதல் முறையாகப் பார்த்த நிமிடத்தில் இருந்து, இப்படித்தான் உணர்கிறான். எந்த நிமிடம் வேண்டுமானாலும் பொங்கத் தயாராகக் காத்திருக்கும் பாலை போல, உணர்வுகள் நிரம்பி கொதி நிலையிலேயே இருந்தது அவன் மனது.

“அக்காக்கு இந்தச் செட் அப் காட்ட மேல கூட்டிட்டு வந்தேன் செஃப். அப்படியே காத்து நல்லா இருக்கவும் இங்கேயே நின்னுட்டேன். நான் கீழ வர்றதுகுள்ள நீங்க மேல வந்துட்டீங்க” அவள் பேசுவதை விட, கடல் காற்று அவள் முகத்தில் பேசி, முடியை கலைத்து விளையாடுவதைதான் அதிகவனத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

ரோஜா, அவன் கையில் இருந்த பானத்தை வாங்கி ருசி பார்த்தாள். அவள் முகம் நவரசத்தையும் காட்டியது.

“லெமன் ஜுஸ் தானே செஃப்? ஆனா, காரமா இருக்கே? கூடவே பிளாக் சால்ட் போட்டீங்களா?” மீண்டும் பருகி ருசியைச் சோதித்து அவள் கேட்க, “ம்ம், காந்தாரி மிளகாய் குட்டித் துண்டு சேர்த்தேன்” என்றான்.

நாக்கை தட்டி சத்தம் எழுப்பி, “இனிப்பு, புளிப்பு, உப்பு, காரம், நைஸ்” என்றாள்.

“ம்ம், உங்கக்கா அவங்க குழந்தையைச் சாப்பிட வைக்கிறாங்க. நாமளும் போகலாம் ரோஜா” அவன் அழைக்க, மறுப்பின்றி அவனைப் பின் தொடர்ந்தாள்.

உணவகத்தின் அத்தனை மேஜைகளும் நிறைந்திருந்தது. இரண்டு குழுக்களாக 25 நபர்கள் அமரும் படி மேஜை, இருக்கைகளை மாற்றிப் போட்டிருந்தார்கள்.

ஒரு ஓரத்தில் அக்கா குடும்பம் அமர்ந்திருக்க அவர்களை நோக்கி நடந்தனர் இருவரும்.

இளமாறன் நேராகச் சசிகுமாரிடம் சென்று, “இங்க ரொம்பச் சத்தமா இருக்கு. நாம மேல போய்டலாம், வாங்க” என்று அழைக்க, அவனை முறைத்தாள் ரோஜா.

அவர்களை அழைத்துச் சென்று மேலே இடம் பார்த்து நிழலும், கடல் காற்றும் நிறைந்திருந்த இடத்தில் அமர வைத்து விட்டுச் சென்றான் அவன்.

கப்பை, மீன் கறி, சோறு, நாடன் கோழி கறி, மோரு கறி, தீயல், அவியல், காளன், ஓலன், மீன் பீரா, கூட்டுக் கறி, புளிசேரி, எரிசேரி, ரெண்டு வகைத் தோரன், பச்சடி, கிச்சடி, பப்படம், ஊறுகாய், சக்க பிரதமன், பாலடா பிரதமன், பல வகைச் சம்மந்தி எனக் கேரளத்தின் சத்ய உணவு அவர்களுக்குப் பரிமாறப்பட்டது.

ஆண்கள் இருவருக்கும் இடையில் இயல்பான பேச்சு வார்த்தை ஓடிக் கொண்டிருக்க, பெண்கள் இருவரும் அவர்களைக் கவனித்தபடி உண்டு கொண்டிருந்தனர்.

error: Content is protected !!
Scroll to Top