அழகான சூழல். அமைதியில்லா பல இதயங்களுக்கு அங்கு அமைதி கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. முயன்று பார்வையை பிள்ளைகள் திசைக்கு மாற்றினாள்.
இடத்தைச் சுற்றி வரவும், “ஹாய் கார்த்தி,” என்றான் அங்கு நின்றிருந்த புதியவனைப் பார்த்து.
இவனைப் போலவே நல்ல உயரமும் வாட்ட சாட்டமுமான ஆண்மகன். இன்முகத்தோடு கை குலுக்கிக் கொண்டே, “ஹே .. எபி! என்ன இந்தப் பக்கம்?” என்றான் கார்த்திக் என்பவன்.
“என் ஃபியான்சே, அலர்விழி. ரெண்டு பேரும் இன்னைக்கு ஃப்ரீ, அதுதான் ஒரு டிரிப் போட்டோம்” என்று அவனிடமும், “இவர் கார்த்திக், இவர் டானியேல் என் சர்ச் ஃப்ரெண்ட்ஸ். ஒரு வருஷமாப் பழக்கம்,” என்று அறிமுகபடுத்தி வைத்தான்.
அவர்கள் மூவரும் பேச அலர்விழி டேனியல் என்பவனின் விழியைத்தான் பார்த்து நின்றாள். நல்ல உயரமும் நல்ல களையான முகமும், வசீகரிக்கும் கண்களும்… கடல் பச்சையில் பழுப்பு கலந்த விழிகளுமாய் பார்ப்பவரை வசீகரித்தான்.
ஜான்சி, டேனியின் மனைவி, குழந்தை ஜோ-வோடு வரவும், அலர்விழி பார்வை ஜோ மீது பதிந்தது. ஒன்பது மாத ஜோ, அங்கிருந்த கோடி மலர்களை விட அழகாகத் தெரிந்தான். யாரிடமும் போக மாட்டான் என்ற குழந்தையை அலர்விழி ஆசையாய் தூக்கி கொஞ்சித் தீர்த்தாள்.
“உங்க பாப்பாவா அக்கா? ரொம்ப அழகா இருக்கான்”
“இல்ல மா… அண்ணன் மகன். என் பையன் அவன் அத்தையோட விளையாடிட்டு இருக்கான்,” என்று ஆரம்பித்து பெண்கள் இருவரும் பேச ஆரம்பித்தனர்.
பிஞ்சு விரல்கள் அவள் சுருள் முடியைப் பிய்த்து எடுத்தது. முடியை இழுத்து அதை வாயில் கொண்டு போன செவ்விதழ்களில் தான் எத்தனை பளபளப்பு. சிறிது நேரம் சென்றது. குழந்தை சிணுங்கவும், “பசிக்குது போல, அவன் அம்மாட்ட கொண்டு போறேன்,” என்று ஜான்சி குழந்தையோடு நகர்ந்து சென்றாள்.
அடுத்து என்ன செய்வதென்று அலர்விழிக்குத் தெரியவில்லை. விழிகளை உருட்டி வேடிக்கை பார்க்க, அதை கவனித்த கார்த்தி, “கிளம்புங்க எபி. சிஸ்டருக்கு போர் அடிக்குது போல. ரெண்டு பேரும் கண்டிப்பா வீட்டுக்கு வரணும்,” என்று விடைகொடுத்தான்.
“கண்டிப்பா! நாளைக்கு சர்ச்சுல பாப்போம் கார்த்தி… பை டேனி. ஆல் தெ பெஸ்ட். அப்பாட்ட பேசுங்க, நானும் சொல்றேன், லோன் கண்டிப்பா கிடைக்கும்” என்று ஏதேதோ பேசி, அடுத்த இரண்டு நிமிடங்களில் மீண்டும் ஜோடி நடக்க ஆரம்பித்தது.
“அந்த ஜோ குட்டி அழகில்ல? நம்ம மித்து பாப்பா மாதிரியே… கண்ணுலயே நிற்கிறான். அவன் கை அவ்வளவு சாப்ட். இந்த லிப்ஸ்? அது பனி படர்ந்த பிங்க் ரோஸ் பெட்டல்ல சன் லைட் பட்ட மாதிரி ஒரு க்ளோ! எனக்கு வேணும் மனோ.”
“அந்த பேபி பிங்க் லிப் கலர் ஈசியா கிடைக்கும் விழி. கடையில பாரு”
“ஆஆ… மனோ… நான் பாப்பாவ சொன்னேன்.”
சிரித்தான். “கடையில கிடைக்காதே! அது அவர் குழந்த டி… அத நாம எப்பிடி கேக்க முடியும்.”
“நக்கலு? நாமளும் பெத்துப்போம் மனோ. எதுக்கு தேவ இல்லாம நாளத் தள்ளிப் போட்டுக்கிட்டு?”
“அத தான் நானும் சொல்றேன். நீ தான்… நான் ஆசையா கிட்ட வந்தாலே ஓடற!”
“ஓடாத மாதிரி நிறுத்தி வைக்கத் தெரியல. என்னை இம்ப்ரெஸ் பண்ற அளவுக்கு உங்களுக்கு திறமை இல்லன்னு ஒத்துக்கோங்க மனோ.”
“இப்போ பாரு இங்கேயே உன்ன இம்ப்ரெஸ் பண்றேன்” சிரிப்போடு அவளை இழுக்க, துள்ளிக் குதித்தவள், மரத்தடியில் ஒற்றைக் காலை நீட்டி அமர்ந்திருந்தவன் மேல் விழப் போக… சட்டென்று அவளை அப்படியே இடது கையால் தூக்கியிருந்தான்.
“பாத்து வா விழி. அவர் மேல விழுந்திருப்ப.”
இரண்டடி சென்றவள் திரும்பிப் பார்த்தாள்.
நெடியவன். உடல் கட்டமைப்பை பகிரங்கமாகப் பறைசாற்றும் இறுக்கிப் பிடித்த கருப்பு டி-ஷர்டும், நீளமான கால்களில் முட்டி தொடாத பழுப்பு ஷார்ட்ஸ் அணிந்திருந்தான். கை கொள்ளா தலை முடி காற்றில் ஆடிக் கொண்டிருந்தது. மீசையும் தாடியும் கருப்பு கண்ணாடியும் முகத்தை மறைத்திருந்தாலும் பல பெண்கள் தூக்கத்தைக் கெடுக்கும் ஆண் அழகன் என்பதில் ஐயமில்லை.
“நம்ம ஊர் போல. க்ரீக் காட்ன்னு சொல்லுவாங்களே அப்டி இருக்கார். உங்க ஆர்ம்ஸ்ச விட அவர்து சூப்பர் இல்ல?”
இவன் முறைக்க… “உண்மைய தானே சொன்னேன்…” என்றாள்.
“போடி…” கோபித்து கொள்கிறானாம்.
“அவரைப் பார்த்துட்டேன்னு கோபமா?”
“போடின்னேன்!”
“சரி நீங்க வேணும்ன்னா யாரையாவது சைட் அடிங்க… நான் ஒண்ணும் உங்கள மாதிரி இல்ல, ஒண்ணும் சொல்ல மாட்டேனாக்கும். அதோ அந்தப் பொண்ணு நல்லா இருக்கா இல்ல…”
அவன் இன்னும் அதிகமாக முறைக்க, “இப்போ என்ன வந்துது உங்களுக்கு? ஒருத்தரையும் நான் பாக்கக் கூடாதா? அழகா இருக்கார், பாத்தது குத்தமா? அழகாப் பொறந்த அவர் குத்தம் அது!”
“நீ மட்டும் சூப்பரா இருக்கவன சைட் அடிப்பியாம் எனக்கு மட்டும் சப்ப ஃபிகர சைட் அடிக்க சொல்லுவ, ஒரு மனுஷனுக்கு கோபம் வராம என்ன வரும்? போடி… நானே தேடிக்கிறேன்”
“ஓஹ்.. அது தான் உங்க பிரச்சினையா? இருங்க உங்களுக்கு ஒரு சூப்பர் ஆளத் தேடுவோம்!”
இருவரும் அழகி எவளேனும் கண்ணில் படுகிறாளா என்று தேட, “ஓய் பட்டு, இவளப் பாருடி… செம்ம கண்ணு… அவ கண்ணுக்காகவே அவளப் பாக்கலாம்… இவள சைட் அடிச்சுக்கவா”
“கடல் பச்சையும் பழுப்பும்! உவேக்… போங்க மனோ அவ வேண்டாம்! அவ நல்லாவே இல்ல. என் கண்ணு தானே அழகுன்னு சொல்லுவீங்க…” இவள் சிணுங்க,
“ம்ம்ம்… என் ஆர்ம்சும்(arms) என் ஆப்ஸ்சும்(abs) தானே சூப்பர்ன்னு காலைல கூட சொன்ன?”
“ஆமா ஆமா… நீங்க தான் சூப்பர். அந்த மனுஷன் நல்லாவே இல்ல. அவள மாதிரியே அவரும் உவேக்!”
“ஆமா ஆமா நாம ரெண்டு பேர் தான் அழகு!” இருவரும் வயிறு வலிக்க சிரித்துக் கொண்டனர். மீண்டும் அமர்ந்திருந்தவன் பக்கம் பார்வை போக, பிள்ளைகளோடு ஓடிக் கொண்டிருந்த கண்ணழகி அமர்ந்திருந்தவன் மேல் விழுந்து சில்லறை பொறுக்கிக் கொண்டிருந்தாள்.
“என்னங்க அந்தப் பொண்ணு அவர் மேல விழுந்துட்டா… ரெண்டு பேர் கண்ணும் மோதுது. ஜோடிப் பொருத்தம் சூப்பர். நாம சைட் அடிக்க வேற ஆளத் தேடுவோம்.”
அடுத்த நொடி, விழுந்தவள், எழுந்து திரும்பிப் பார்த்துக் கொண்டே ஓடினாள். கிரேக்கச் சிலை உயிர் பெற்றது.
“அந்த பொண்ணப் பாத்ததும் அவர் முகத்த பாருங்களேன். இன்னும் அழகா தெரியறாரில்ல? என்னங்க அவர் செம்ம ஹயிட்!”
“வழியப் பாருடி!” பொறுக்க முடியாமல் காய்ந்தான்.
“இவருக்கு பொறுக்காதே! எங்கேயோ பார்த்த ஃபேஸ்ங்க அவருது”
“பிஸினஸ் மாகசீன் படிப்பீயா? அதுல அப்பப்போ வருவான். ஏகே!”
“அட… ஆமா! சூப்பர் மனோ நீங்க. எங்கேயோ பாத்த மாதிரி இருக்கேன்னு நினைச்சேன். எனக்கு கால் வலிக்குது மனோ… உக்காருவோமா?”
இருவரும் ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டு கையிலிருந்த வேர்க் கடலையைக் கொறிக்க, உயிர் பெற்ற கிரேக்கச் சிலை… எதையோ தொலைத்தவன் போல் அங்கும் இங்கும் தேட ஆரம்பித்தான்.
“என்னங்க… அவர் எதையோ தொலைச்சுட்டார் போல. தேடறார்.”
“நீ எதுக்கு டி அவனையே பார்த்துட்டு இருக்க?”
“ப்ச்… சும்மா இருங்க! அவர் முகம் பூரா அவ்வளவு வலி. என்னத்த தொலைச்சாரோ? ரொம்ப முக்கியமானது போல. மனுஷன் பயித்தியம் பிடிச்சா மாதிரி அங்கேயும் இங்கேயும் ஓடிக்கிட்டு இருக்கார். நான் போய் என்னன்னு கேக்கவா?”
“பேசாம இரு விழி!”
“அந்தப் பொண்ணு வேணும்ன்னே மேல விழுந்திருப்பாளோ? பிக் பாக்கெட்டா இருப்பா போல. அவ தான் திருடியிருப்பா”
“லூசு, அவ டேனியோட தங்க. ஏற்கனவே சர்ச்ல கார்த்தியோட பார்த்திருக்கேன்.”
“ஓ…”
பேச்சு திசை மாறியது. வருவோர் போவோர் என்று அனைவரையும் வாய்க்குள் போட்டு அரைக்க, நேரம் சென்றது.
“போலாமா விழி. இருட்ட ஆரம்பிக்குது. உனக்கு குளுருமே டி பட்டு.”
இருவரும் நடக்க ஆரம்பித்தனர். அலர்விழி கண்களில் மீண்டும் அதே பச்சை-பழுப்பு கண்ணழகி விழுந்தாள். அவளும் எதையோ தொலைத்திருப்பாள் போலும். உடல் நடுங்க… மனம் எதையோ தேட… அங்குமிங்கும் படபடப்போடே சென்று தேடினாள். அவனைப் போலவே அவளுக்கும் தேடியது கிடைக்கவில்லை போலும்.
அவள் முகத்தில் மாலை இருந்த ஜீவனில்லை. அலர்விழிக்கு பார்க்க பாவமாயிருந்தது. அவன் அமர்ந்திருந்த மரத்தை வருடியவள், அவனைப் போலவே அதே இடத்தில் அசையாமல் அமர்ந்து கொண்டாள். முட்டியில் முகம் புதைத்தவளின் உடல் குலுங்கியது.
திரும்பித் திரும்பி பார்த்து நடந்து கொண்டிருந்தவளுக்கு நன்கு தெரிந்தது அந்தப் பெண் அழுவது. ஐயோ என்றிருந்தாலும் என்ன செய்ய முடியும்? அவனைத் தான் தேடுகிறாள் என்று தோன்றியது. அவனும் இவளைத் தான் தொலைத்து விட்டு தேடினானோ?
அலர்விழி மனதில் ஒரு வித கனம் ஏறிக் கொண்டது. கார் வீட்டை நோக்கிச் செல்ல மனம் பூங்காவிலேயே நின்று விட்டது. வெளிவர முடியவில்லை. ஏற்கனவே உணர்ச்சிக் குவியலாயிருந்தவளுக்கு பார்த்த காட்சி, ஒரு வித பயத்தைக் கொடுத்தது.
பிரிந்து போனால் இப்படித்தான் இருக்குமோ? பூங்காவில் பார்த்த வலி நிறைந்த… ஜீவனற்ற இரு முகங்களும் கண் முன் வந்தன. தேவையே இல்லாமல் அவர்களிடத்தில் தங்களைப் பொருத்திப் பார்க்க பயம் அடிமனதை கவ்விக் கொண்டது.
‘சிறகு நீட்டுகின்ற நேரம் பார்த்து
வானெல்லாம் மழை
வரைந்து காட்டுகின்ற வண்ணம் இன்று
என்ன செய்ததோ பிழை
அடி மனதில் இறங்கிவிட்டாய்
அணுஅணுவாய் கலந்துவிட்டாய்
அடி மனதில் இறங்கிவிட்டாய்
அணுஅணுவாய் கலந்துவிட்டாய்’
வாகனத்தில் பாடல் நின்றது. “தூங்கிட்டியா விழி? வீடு வந்துடுச்சு டா, எழுந்திரி” தோளில் சாய்ந்திருந்தவளை மெல்ல தட்டி எழுப்பினான்.
“ஏன் மனோ, இந்தப் பாட்டுல அவன் பொண்டாட்டி செத்துடுவா இல்ல? அப்புறம் என்ன ஆகும்?”
“ஹீரோ வைஃப் இறந்துடுவா, ஹீரோயின் பாய்-ஃபிரெண்ட் இறந்துட்டான்னு நியூஸ் வரும். இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகும். அப்பறம் எப்படி பழைய வாழ்க்கையில இருந்து வெளி வந்து அடுத்து புது வாழ்கைய ஆரம்பிக்கிறாங்கன்னு கதை போகும்.”
“ஏன் மனோ நான் செத்துட்டா, வேற கல்யாணம் பண்ணிப்பீங்களா?”
“பின்ன? காலம் பூரா சிங்கிளா? ச்சான்சே இல்ல! வேணும்ன்னா என் பொண்ணுக்கு உன் பேர் வைக்கறேன். அலர்விழி ஜூனியர்ன்னு!” ஏதோ விளையாட்டு போல் கேட்கிறாள் என்று அவனும் விளையாட…
“ஏதாவது காரணத்தால நாம பிரிஞ்சா, நான் செத்துடுவேன் மனோ!” என்றவள் உள்ளே சென்று விட்டாள்.
என்னானது இவளுக்கு? அவள் முகமும் சரி இல்லை. யோசனையில் உழன்றவளைப் பேச வைக்க முயன்று தோற்றான். இரவு உணவைக் கொறித்தவளுக்கு அது தொண்டையில் இறங்க மறுத்தது. ‘மரத்தடியிலிருந்து அவள் சென்றிருப்பாளா? அவன் அவளை அங்கு தேடி வந்திருப்பானா?’ என்னவென்றே தெரியாமல் மனம் பாடுபட்டது.
“போ விழி. படு. ரொம்ப டையர்டா தெரியற. என்ன யோசிக்கிறன்னு தெரியல. ஆனா எதையும் யோசிக்க வேண்டாம்… போய்ப் படு. நான் விளையாட்டுக்குத்தான் அப்படி சொன்னேன். உனக்கும் அது தெரியும். நீ மட்டும் தான் டி என் வாழ்க்கை. மனச போட்டு குழப்பிக்காம தூங்கு” என்றான்.
படுக்க வைத்து, அவள் உறங்கியதும் வெளியே வந்தவனுக்கு செய்ய வேலையிருக்க மடிக்கணினியோடு அமர்ந்தான். நடு ஜாமத்தில் அலர்விழிக்கு முழிப்பு தட்டியது. எழுந்து வந்தாள். வெளியே சோஃபாவில் மனோ படுத்திருந்தான். அவனருகில் அமர்ந்து கொண்டாள். அப்பொழுது தான் படுத்தவன், மங்கிய ஒளியில் தன்னருகில் அவளைப் பார்த்ததும் எழுந்தமர்ந்தான்.
“என்ன டி? தூக்கம் வரலியா?”
“கல்யாணம் பண்ணிக்கலாம் மனோ. எங்க வீட்டுல ஒத்துக்காட்டா? எங்க அம்மா முகத்தப் பார்த்து ‘நீங்க எனக்கு முக்கியம் இல்ல, மனோ மட்டும் தான் வேணும்’ன்னு சொல்ல என்னால என்னைக்குமே முடியாது. கல்யாணம் பண்ணிட்டு போய் நின்னா ஒத்துகிட்டு தானே ஆகணும்! கல்யாணம் பண்ணிப்போம் மனோ” என்றாள், அவன் தோளில் சாய்ந்தபடி.
“விழி.. மணி மூணு! என்ன பேசிட்டு இருக்க? எதுனாலும் காலையில பேசிக்கலாம். தூங்கு போ…”
“பார்க்கில, அந்தப் பொண்ணு அவரத் தேடி வந்தா மனோ… அவர மாதிரியே அவளும் தொலச்சத தேடினா மனோ… ரெண்டு பேர் முகத்த பார்த்தா உயிரே இல்ல மனோ அதுல. அவங்க ரெண்டு பேரும் பிரிஞ்சுட்டாங்கன்னு நினைக்குறேன்.”
“விழி மா… என்ன டி ஆச்சு உனக்கு?”
“அவ அவர் உக்கார்ந்தருந்த மரத்தை தடவினா மனோ. எவ்வளவு வலியோட அத தடவியிருப்பா? குலுங்கிக் குலுங்கி அழுதா மனோ!”
“நீயா கற்பனை பண்ணாத விழி!”
“கற்பனையோ நிஜமோ… பயமா இருக்கு மனோ. என்னால நீங்க இல்லாம பொணம் மாதிரி வாழவே முடியாது மனோ. சத்தியமா செத்துப் போய்டுவேன்.”
“ஏய்… என்ன டி? அறை வாங்காம வாய மூட மாட்ட போல இருக்கு! போ டி. போய் தூங்கு!”
பெண் அசைந்தாளில்லை.
“விழி…” மெல்ல தலை வருடினான். “பட்டு…”
“…ம்ம்…”
“உன்ன விட்டு எங்கேயும் போக மாட்டேன் விழி. அப்பிடி நான் செத்து தான் போகணும்ன்னு விதி இருந்தா, நாம என்ன பண்ண முடியும்? ஏதோ கெட்ட நேரம், நான் இல்லாமப் போயிட்டாலும் நீ வேற கல்யாணம் பண்ணிட்டு வாழணும். உன்ன பார்த்துட்டு உன் கூடவே இருப்பேன். அதுக்காக நீயும் உயிரை விட நினைக்கக் கூடாது சரியா?”
தலை உயர்த்தி அவனைப் பார்த்து புன்னகைத்தாள். “கண்டிப்பா எங்க இருந்தாலும் சேர்ந்து தான் இருப்போம் மனோ! தனியா இருக்கவே மாட்டேன்” என்றாள் தீர்மானமாய். கேட்டவனுக்கு வலித்தது. ஏன் தன்னை குழப்பிக் கொள்கிறாள் என்று புரியவில்லை.
தலையை அவன் வருட, மார்பில் சாய்ந்து கொண்டவள் நிம்மதியாக உறங்க, அன்றைய இரவு மனோவிற்கு தூங்கா இரவாகிப் போனது.
எது நீ எது நான்
இதயம் அதிலே
புரியும் நொடியில் பிரியும் கனமே
பனியில் மூடிப்போன பாதை மீது வெயில் வீசுமா…
இதயம் பேசுகின்ற வார்த்தை உந்தன் காதில் கேட்குமா
அடி மனதில் இறங்கிவிட்டாய்
அணுஅணுவாய் கலந்துவிட்டாய்
அடி மனதில் இறங்கிவிட்டாய்
அணுஅணுவாய் கலந்துவிட்டாய்.