ஞாயிறு என்பதால் நல்ல கூட்டமிருந்தது.
அவனோடு இணைந்து நடந்தாள் அவள்.
“சாப்பிட்டியா பிரபா? சண்டே என்ன ஸ்பெஷல்?”
“அப்பா…” என்று ஆரம்பித்தவள் அவன் முறைக்கவும், “அப்பா ஃப்ரெண்ட் வீட்ல இருந்து மட்டன் பிரியாணி காலையிலேயே வந்துருச்சு. பதினொரு மணிக்கா அது டேஸ்ட் பார்த்தேனா, அதுனால இப்போ பசியில்லன்னு சாப்பிடாம வந்துட்டேன்” என்றாள்.
“அம்மா மீன் குழம்பு செஞ்சாங்க. நைட் போய்ச் சாப்பிடணும்” என்று அவள் சொல்ல, புன்னகைத்தான்.
“ஷாப்பிங் முடிச்சுட்டுச் சாப்பிடலாம்” என்று அழைத்துச் சென்றான். அவனது வண்டியை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி விட்டு நடந்து சென்றார்கள். வழி நெடுக வேடிக்கை பார்த்தபடி வந்தாள் பிரபாவதி.
இருவருக்கும் இடையே இடைவெளி இருந்தது. அவர்களைக் கடந்து செல்பவர்கள் எல்லாம் இருவருக்கும் நடுவே நுழைந்து செல்ல, அவளே அந்த இடைவெளியை இல்லாமல் ஆக்கினாள். அவனை நெருங்கி அவன் கைக் கோர்த்து கொண்டாள்.
“என்ன வாங்கணும்னு சொல்லு பிரபா?”
“தெரியலையே” என்று அவள் விழி விரிக்க, “சரி, அப்படியே எல்லாக் கடையையும் பார்த்திட்டு வா. ஏதாவது பிடிச்சா வாங்கிப்போம்” என்றான்.
முதலில் பல வண்ணங்களில் கண்ணைப் பறித்த வளையல் கடையைச் சில நொடிக்கும் மேலாக அவள் ஆசையாகப் பார்க்கவும், அவள் கைப் பிடித்து நிறுத்தினான் அவன்.
கண்ணாடி வளையல்கள் இரண்டு ஜோடி, கண்ணாடி பதித்த வேலைப்பாடு செய்த வளையல்கள் ஒரு ஜோடி என அவள் கண்கள் ரசித்த வகையெல்லாம் வாங்கிக் குவித்து விட்டான்.
“போதும்” என்று அவன் கைப் பிடித்துத் தடுத்தாள். அவன் வாங்கிக் கொடுத்த, அவள் உடைக்குப் பொருத்தமான இளஞ்சிவப்பு நிற கண்ணாடி வளையலை அப்போதே கையில் அணிந்து வளையோசை எழுப்பினாள்.
அடுத்து பொட்டு, சிறியதாகக் கைப்பை, ரகம் ரகமாக க்ளிப்கள் வாங்கினாள்.
அவன் அசந்து போகும் வகையில் அவளே நின்று பேரம் பேசி மூன்று குர்த்தா செட் வாங்கினாள். அம்மாவுக்கு ஒரு சேலை, அப்பாக்கு ஒரு சட்டை என வாங்கினாள்.
இருவருமாக அங்கிருந்த உணவகம் சென்று மதிய உணவு உண்டார்கள்.
“அப்பாக்கு இப்படிக் கூட்டமான இடத்துக்கு எங்களைக் கூட்டிட்டு வர்றதுனாலே அலர்ஜி, அவ்வளவா பிடிக்காது. அப்படியே கூட்டிட்டு வந்தாலும் பெரிய பெரிய கடைங்களுக்கு மட்டும்தான் கூட்டிட்டு போவார்” என்று உணவின் நடுவே விளக்கம் கொடுத்தாள்.
“ம்ம், இந்த மாதிரி கூட்டத்துல நம்மளை இடிச்சுட்டுப் போறதுலாம் நார்மல் பிரபா. வேணும்னு வில்லங்கம் பண்ற சிலர் இருக்கலாம். ஆனா முக்காவாசி பேர் தெரியாம இடிக்கிறதுதான்” என்றான்.
“ம்ம், அதுக்கெல்லாம் அப்பா ரொம்ப டென்ஷனாகி அடிக்கப் போய்டுவார். அம்மா இதுனாலயே எங்க ஏரியால இருக்கக் கடைங்கள்ல எங்களுக்கு எப்பவும் ட்ரெஸ் எடுத்துடுவாங்க”
“அதுவும் உங்கப்பாக்கு தெரிஞ்ச கடையாதான் இருக்குமே?”
“கிண்டல் பண்ணாதீங்க பார்த்திபன்”
அவன் உதடுகள் கேலி சிரிப்பில் வளைய, “உண்மையைச் சொன்னேன் பிரபா” என்றான்.
“எங்கப்பா ஒன்னும்..”
“பிளீஸ், அவரைப் பத்தி பேசாம நம்மளை பத்தி பேசலாமே. ம்ம்?” என்றான் அடர்ந்த குரலில். அவனது பிடித்தமின்மை விளங்க, அவளும் பேச்சை மாற்றினாள்.
“உங்களுக்கு ஸ்வீட் பிடிக்கும் இல்ல? இந்தாங்க” என்று அவள் தட்டில் சிறிய கிண்ணத்தில் இருந்த பாயாசத்தை அவனுக்குக் கொடுத்தாள்.
சட்டென்று அவனுள் மின்னல் போலப் பார்கவியின் நினைவு வந்து போனது.
“நான்லாம் நானே ஆல்ரெடி ஓவர் ஸ்வீட்ன்னு, இந்த ஆர்டிஃபிசியல் ஸ்வீட் சாப்பிடுறது இல்ல பார்த்திபன்” பற்கள் தெரிய புன்னகைத்து அவள் சொன்னது அவன் மனக்கண்ணில் வந்து நின்றது.
அவளது இலையில் இருந்த பால் பாயாசம், பாதம் பால், பால் பேடா, குட்டி ஜிலேபி என அனைத்தையும் ஒவ்வொன்றாக எடுத்து அவன் உண்டு, அவளிடம் ஏதோ வசனம் பேசியதாக அவனுக்கு நினைவு. எத்தனை முயன்றும் இப்போது அவனுக்கு நினைவில் வரவில்லை.
ஆனால் அப்போது அவள் வாய் விட்டு சிரித்த நினைவு. அன்று பந்தியில் இருந்த நிறையத் தலைகள் அவர்களைத் திரும்பிப் பார்த்தது மட்டும் அவனுக்கு நன்றாக நினைவிருக்கிறது.
“ஹேய் பாரு, இப்படிச் சத்தமா சிரிக்காத” என்று அவன் கண்ணை உருட்டி மிரட்டியதும், “கல்யாண வீட்ல வந்துட்டு சிரிக்காதன்னு சொல்றீங்களே பார்த்தி?” என்று கேட்டவளின் இதழ்களும் விழிகளும் சிரிப்பில் விரிந்திருந்தன.
“என்னாச்சு? பாயாசத்தை ஏன் இப்படி முறைச்சு பாக்கறீங்க?” என்ற பிரபாவதியின் கேள்வியில் சுயம் பெற்றான்.
அவள் நீட்டிய பாயாசத்தை வேண்டாமென்று மறுத்தான்.
“சாரி. ஐ ஆம் ஃபுல்” என்றான். பிடிவாதமாகப் பார்கவியின் நினைவை பின்னுக்குத் தள்ளினான்.
அவர்கள் இருவரும் உணவை முடித்து வெளியே வந்தார்கள்.
அவளைச் சில நிமிட நடை தூரத்தில் இருந்த பூங்காவிற்கு அழைத்துச் சென்றான். மரங்கள் அடர்ந்த பூங்கா அத்தனை ரம்மியமாக இருந்தது. வெயிலின் தாக்கத்தை மரங்கள் குறைத்திருக்க, இருவரும் பேசியபடியே நடந்தார்கள்.
“நாம பீச் போனதை உங்கப்பா கிட்ட சொன்னியா பிரபா? அவர் என்ன சொன்னார்?”
“அப்படியாம்மான்னு கேட்டுக்கிட்டார். வேற ஒன்னும் சொல்லல”
“ஓ?”
“நான்தான் சொன்னேனே. நீங்க நினைக்கிற மாதிரி எங்கப்பா ஒன்னும் டெரர் கிடையாதுன்னு...”
“அப்படியா? அப்போ நான் ஆன் சைட் போறது பத்தி அவர்கிட்ட பேசவா? முதல்ல நீ அவர்கிட்ட சொன்னியா இல்லையா?” என்று அவன் கூர்மையாகக் கேட்க, அவள் எச்சில் கூட்டி விழுங்கினாள்.
அவள் விழிகள் இரண்டும் விரிந்து அலைபாய, அவனை நேராகப் பார்ப்பதை தவிர்த்தாள்.
“பிரபா, நான் பேசவான்னு கேட்டேன்?”
“உங்க ஆஃபீஸ்ல ஃபர்ஸ்ட் கன்பார்ம் பண்ணட்டும். அப்புறமா அப்பாகிட்ட சொல்லிக்கலாம்” என்று திக்கி தடுமாறி அவனைப் பார்த்தாள்.
“அப்படிச் சொன்னா உங்கப்பா அமைதியா கேட்டுப்பாரா பிரபா?”
“இல்ல, நான் ஆசைப்பட்டா அப்பா தடுக்க மாட்டாங்க” என்றாள்.
“அப்படியா?” என்று போலியாக வியந்தான். அவள் ஆசைப்பட்டுத் தனியாக இந்தத் திநகர் வரை கூட அவளால் வர முடியவில்லை. கடற்கரையில் கால் நனைக்க முடியவில்லை. அப்படியும் அப்பாவை விட்டுக் கொடுக்காமல் பேசுகிறாளே என்று அவளை வியந்து நோக்கினான்.
“அப்படித்தான். இப்போ கூட அப்பாவே வந்து என்னை இங்க விட்டுட்டு போகலையா?” என்று அவள் ரோஷத்துடன் கேட்க, “உன்னைப் பத்திரமா பார்த்துக்கப் பாடிகார்ட் நான் இருக்கேன்னு நம்பி விட்டுட்டு போய் இருப்பார்.” என்றான் கிண்டலாக.
“சும்மா எங்கப்பாவ கிண்டல் பண்ணாதீங்க. இங்க பார்த்துக்கற நீங்க, என்னை யூஎஸ் போனா மட்டும் பார்த்துக்க மாட்டீங்களா என்ன? அது அப்பாக்கு தெரியாதா?”
“நான் பார்த்துக்கறது இருக்கட்டும் பிரபா. உங்கப்பாவால உன்னைப் பார்க்க முடியாதே. அதை யோசி. அவரும் அதைத்தான் யோசிப்பார்”
“அப்பா ஓகே சொல்லுவார். அவர்கிட்ட நான் பேசறேன்”
“இல்ல பிரபா. அது சரியா இருக்காது. சீக்கிரமே எங்க வீட்ல இருந்து பேசுவாங்க. ஓகே?” என்று அவள் கண் பார்த்துக் கேட்டான்.
அவள் கண்கள் அவனையே நோக்கின.
“நான் ஃபர்ஸ்ட் பேசவா பிளீஸ்?” என்று கெஞ்சலாகக் கேட்டாள்.
“இது ரொம்ப முக்கியமான விஷயம் பிரபா. நாங்க ரொம்ப நாளைக்கு உங்க வீட்ல சொல்லாம இருக்க முடியாது. அது என்னையும், என் அப்பா அம்மாவையும்தான் தப்பா காட்டும். சும்மாவே உங்கப்பா எங்க வீடு தேடி வந்து நிக்கறார், கேள்வி கேக்கறார். அதுவே எங்கம்மாக்கு ரொம்ப வருத்தம். இதுல அவர் வீட்டுக்கு வந்த சத்தம் போட்டா..” என்று சொல்லி முடிக்காமல் அவன் தோள் குலுக்க, அவன் கைப் பிடித்து, “அப்பா அப்படியெல்லாம் எதுவும் செய்ய மாட்டார். நான் பார்த்துக்கறேன்” என்று வாக்குறுதி அளித்தாள்.
“ஓகே. ஆனா நீ பேசுறதுக்கு முன்னாடி நானே உங்கப்பா கிட்ட நேரடியா பேசிடுறேன்” என்று உறுதியாக, அவள் மறுக்க முடியாத தொனியில் சொன்னான். அவளும் சரியென்று விட்டாள்.
மாலையை நெருங்கும் வேளையில் மீண்டும் கடைகளுக்குள் சுற்றித் திரிந்து, நிதானமாக அங்கிருந்து கிளம்பினார்கள்.
அவள் வீட்டு வாசலில் கொண்டு போய் வண்டியை நிறுத்தினான்.
“நீ ஏன் எப்போ பாரு ஆட்டோ, கேப், உங்கப்பான்னு வெயிட் பண்ணிட்டு இருக்க? ஸ்கூட்டி ஓட்டுவதானே? அதை எடுத்துட்டு வரலாம் இல்ல?” என்று கேட்டான்.
“நான் டிரைவிங் லைசென்ஸ் எடுக்க வண்டி ஓட்டி பழகினது. அதுக்கு அப்புறம் எல்லாத்துக்கும் அப்பாவே என் கூட வரவும், நான் வண்டி ஓட்டுனதே இல்ல” என்று உதடு பிதுக்கினாள்.
கோவிந்தனை நினைத்தாலே அவனுக்குக் கோபம் கோபமாக வந்தது. இப்படியா மகளுக்கு அதீத கட்டுப்பாடுகள் விதிப்பார் மனிதர் என்ற எண்ணமே அவனுக்கு எரிச்சலை தந்தது.
“எனக்கும் வண்டியோட்டணும்னு தோனுனதே இல்லைங்க. அதுனால அப்படியே இருந்துட்டேன். இனிமே கண்டிப்பா வண்டியை எடுக்கறேன். ஓகே? நீங்க வேணா பாருங்க. சீக்கிரமே உங்களைப் பின்னாடி வச்சு நான் வண்டி ஓட்டுறனா இல்லையான்னு” என்று அவள் சவால் போலச் சொல்ல, அவளையே இமைக்காமல் பார்த்தான் அவன்.
அவனது மனக் கண்ணில் மீண்டும் பார்கவியின் நினைவு ஆக்கிரமித்தது.
அவன் வண்டியை அவள் ஓட்டிய நாளின் தாக்கத்தில் திகைத்து நின்றிருந்தான்.
“ஹாஹாஹா பார்த்தி, பார்த்தீங்களா உங்களைப் பத்திரமா, உங்க மேல ஒரு கீறல் கூட விழாம உங்க வீட்ல கொண்டு வந்து விட்டுட்டேன்” அவன் வண்டியை ஆளுமையுடன் ஆக்கிரமித்திருந்தவள், அப்படியே அவளின் பின்னால் அமர்ந்திருந்த அவன் புறம் திரும்பி, சிரித்தபடி கேட்டது, இப்போது அவன் நினைவில் வந்து இம்சித்தது.
பார்கவி தலைக் கவசத்தை அகற்றி அலட்சியமாகத் தலைமுடியைக் கோதி விட்டு, தலை சாய்த்து அவனைப் பார்த்துப் புன்னகைத்தது, இன்று இந்த நொடி ஏன் அவனுக்கு நினைவில் வர வேண்டும் என்று தடுமாறினான்.
‘உனக்கு என்னைப் பிடிக்கும் அளவு நமக்கு நடுவில் என்ன நடந்தது?’ என்ற கேள்வியை அவளிடம் அவன் கேட்டதில்லை. ஆனால் அப்படிச் சில நிகழ்வுகள் நடந்திருக்கிறது என்று சமீபமாக உணர்கிறான்.
அன்று அவள் கண்கள் கலங்க நின்றதை இப்போது நினைத்துப் பார்க்கையில் அவன் மனத்தில் மீண்டும் சிறியதாகத் துளிர் விட்டது குற்ற உணர்ச்சி. அவனுக்கு உடனடியாக நண்பன் பிரபஞ்சனிடம் பேச வேண்டும்.
“என்ன நீங்க, நான் வண்டி ஓட்டுறேன்னு சொன்னதுக்கா இப்படி ஷாக்காகி நிக்கறீங்க?”
“இல்ல, சாரி.” என்று பிரபாவதியின் முகம் பார்க்க முடியாமல் திணறினான்.
“வீட்டுக்குள்ள வந்துட்டு போங்களேன்” என்று அவன் கைப் பிடித்து அழைத்தாள்.
“இன்னொரு நாள் வர்றேன் பிரபா. கண்டிப்பா, ஓகே?” என்று கேட்டவன், அவளுக்கு வாங்கியதை எல்லாம் எடுத்து அவளிடம் நீட்டினான். அவள் மதில் கதவை திறந்து உள்ளே சென்றதும் வண்டியை நகர்த்தித் தெரு முனைக்குச் சென்று நிறுத்தி நண்பனுக்கு அழைத்தான்.
“பிரபா, வீட்லதானே இருக்க? உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். நான் அபார்ட்மெண்ட் வரவா?”
“என்னடா மச்சா உன் வாய்ஸே சரியில்லையே? என்னாச்சு?”
“அட, எங்கடா இருக்க. அதைச் சொல்லி தொலை” என்று எகிறினான்.
“பிரியா வீட்ல. நம்ம பழைய ஏரியா. நீ இங்க வந்துரு”
“அங்கயா?”
“ம்ம், ஆமாடா. நான் தனியாதான் இருக்கேன். என் பொண்டாட்டி அவ ட்ரெண்ட் பார்கவி வீட்ல இருக்கா. சோ நாம மீட் பண்ண அவ டிஸ்டர்ப்பென்ஸா இருக்க மாட்டா.” என்று அவன் குறுநகையுடன் சொல்ல, இவனால் சிரிக்க முடியவில்லை.
“நான் உன் மாமனார் வீட்டுக்குலாம் வரல மச்சான். நீ நம்ம கிரவுண்ட் பக்கம் வா. எனக்கு உன்கிட்ட பேசணும்” என்று அழுத்தமாகச் சொல்லி அழைப்பை துண்டித்தான்.
அவனுக்குப் போகும் வழியெங்கும் பார்கவியின் நினைவே நெஞ்சில் நிறைந்திருந்தது.