வீட்டின் பின் வாசல் படிக்கட்டில் அமர்ந்திருந்தான் பார்த்திபன். அவன் கையில் ஆவியை அலைபாய விட்டுக் கொண்டிருந்த சூடான காஃபி கோப்பை இருந்தது.
சென்னை இன்னமும் இருளுக்குள் மூழ்கியிருந்த அதிகாலை பொழுது. ஞாயிறு என்பதால் மற்றைய தினங்களைப் போல அத்தனை பரபரப்பு இல்லை. இன்று அவனுக்குக் கிரிக்கெட் போட்டி இருக்கிறது. அதற்குச் செல்லத்தான் தயாராகி அமர்ந்திருந்தான்.
“தோசை ஊத்தி தரவா பார்த்திபா? சாப்பிட்டு போறியா?” அவனது அம்மா சத்யபாமா அவனுக்குப் பின்னால் இருந்து கேட்க, “இல்லம்மா வேணாம். நீங்க போய் இன்னும் கொஞ்ச நேரம் படுங்க. நான் பசங்களோட வெளில சாப்பிட்டுக்கறேன்” என்றான்.
அவனுக்கு எதிரே இருந்த அரிநெல்லிக்காய் மரம் முழுக்கச் சடை சடையாய் காய்ப் பிடித்திருந்தது.
“இந்த வருஷம் நெல்லிக்கா நல்லா காய்ப் பிடிச்சிருக்கு இல்ல? நானும் நாலு நாளா பறிச்சு தாடாங்கறேன். நீ காதுலயே போட்டுக்க மாட்டேங்கற. உன்னை எதிர்பார்க்காம நானே ஸ்டூலை எடுத்து போட்டுப் பறிக்கப் போறேன் பாரு”
“ப்ச், நான் ஈவ்னிங் வந்து பறிச்சு தர்றேன்ம்மா”
“நீ அப்படியொன்னும் சலிச்சுட்டு எனக்குச் செய்ய வேணாம். நான் என்னா எனக்கா கேட்டேன். உன் தங்கச்சிக்கு ரொம்பப் பிடிக்குமே, அவளுக்கு ஊறுகாய் போட்டு குடுப்போம்ன்னு கேட்டா.. உனக்கு உன் கிரிக்கெட்தான் முக்கியமா இருக்கு இல்ல?, போடா” என்று புலம்பினார்.
அம்மாவையும், மரத்தையும் மாறி மாறிப் பார்த்து நெற்றியை கீறினான்.
“அஞ்சு நிமிஷ வேலை, அதுக்குப் போய்..” என்று சத்யபாமா ஆரம்பிக்க, “வர்றேன் இரும்மா” என்று அவர் கேட்டதைச் செய்து விட்டே ஓய்ந்தான்.
“தோசை ஊத்துறேன் சாப்பிட்டு போவ இரு”
“ஒன்னும் வேணாம் போம்மா. போய் உங்க பொண்ணுக்கு ஊறுகாய் போடுற வேலையைப் பாருங்க” என்றான் கோபம் போல.
சத்யபாமா சிரிப்புடன், “உக்காரு பார்த்திபா” எனச் சொல்ல, “இல்லம்மா எனக்கு லேட்டாகுது, நான் வர்றேன்” என்று மறுத்தான். தன் கிரிக்கெட் கிட் பேகை எடுத்துத் தோளில் மாட்டினான். மறுகரத்தில் அவனது அலைபேசி இருக்க, இந்நேரம் பிரபாவதியை அழைப்பதா வேண்டாமா என்ற யோசனையுடன் நின்றிருந்தான்.
அவளுக்குக் குறுஞ்செய்தி அனுப்பினான். மறுநிமிடம் அவளே அவனை அழைத்து விட்டாள்.
“பிரபா, நீ இன்னைக்கு ஃப்ரீயா?”
“ம்ம், பெருசா பிளான் எதுவும் இல்ல.”
“அப்போ நாம வெளில போகலாமா? என்னோட வர்றியா?” என்று கேட்டான்.
“எங்க கூட்டிட்டுப் போகப் போறீங்க?” என்று ஆர்வமும் அதற்குத் தடைப் போட்ட தயக்கமுமாகக் கேட்டாள்.
“எங்க போகலாம்னு நீயே சொல்லு, உன் விருப்பம்தான்” என்றான்.
“ம்ம்ம். இப்படிக் கேட்டா.. சத்தியமா எனக்கு ஐடியா இல்லங்க”
“ஓகே. அப்போ நான் சாய்ஸ் தர்றேன் உனக்கு. திநகர், பாண்டி பஜார் போகலாமா? ஷாப்பிங்?” என்று அவளின் ஆசைப் பட்டியலில் அடுத்து இருந்ததைக் குறிப்பிட்டுக் கேட்டான்.
“பாண்டி பஜாரா?” ஆச்சர்ய அதிர்ச்சியில் ஒலித்தது அவள் குரல்.
“நான் அப்பாகிட்ட கேட்டுட்டு சொல்லவா?”
“பொறுமையா பெர்மிஷன் கேட்டுட்டு அப்புறமா எனக்குக் கால் பண்ணு ஓகே?”
“கோபப்படாதீங்க பிளீஸ். அப்பா திடீர்னு எங்கயாவது போகணும்னு சொல்லுவாங்க. அதான்”
“ஏய் பிரபா கூல் டவுன். நான் நார்மலாதான் சொன்னேன். நான், உன்னை எங்க கூட்டிட்டு போனாலும் எங்கம்மா கிட்ட சொல்லிடுவேன். அது போலதானே நீயும்? சோ எனக்குப் புரியும். ஓகே? நீ உங்கப்பாகிட்ட பேசிட்டு கூப்பிடு” என்று சொல்லி அழைப்பை துண்டித்தான்.
சமையல் அறை சென்று அம்மாவிடமும் தகவல் சொன்னான்.
“ஆமா, அந்தப் பொண்ண வெளில கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு நீ கிரிக்கெட் விளையாட போற? எதுக்கும் உன் மாமனாருக்கு போன் பண்ணி சொல்லிட்டு போப்பா. அப்புறம் உன்னைய காணோம்னு நம்ம வீடு தேடி வந்து எங்களை மிரட்ட போறாரு” என்றார் கிண்டலும் கோபமுமாக.
கோவிந்தன் அப்படி மகனை தேடி வீடு வரை வந்தது அவருக்குப் பிடிக்கவில்லை.
இந்தச் சம்பந்தத்தில் பெண் வீட்டினரின் கை ஓங்கி இருப்பதில் அவருக்கு லேசாக அதிருப்தி என அப்பட்டமாக மகனிடம் வெளிப்படுத்தி விட்டார்.
“ம்மா, நான் அன்னைக்கே தெளிவா சொல்லிட்டேன். அவரு வீட்டுக்குலாம் வர மாட்டார் இனிமே” என்றான்.
“ஆமா, அன்னைக்கு யாருக்கோ வேலை கேட்டாரே. அது உண்மைதானா? அந்தப் பையன் உன்கிட்ட வேலை கேட்டு வந்தானா?”
“இல்லம்மா”
“அதானே பார்த்தேன். அந்தப் போலீசு உன்னைப் பார்க்கத்தான் வந்தார்ன்னு எங்களுக்குத் தெரியாது பாரு. இப்பவே இப்படி உன்னைய அடக்கி வச்சா..” என்று அவர் எச்சரிக்கும் தொனியில் சொல்ல, “ம்மா, அவர் இல்ல, யாரும் என்னைய அடக்க முடியாது. நான் அன்னைக்கே அவர்கிட்ட தெளிவா பேசிட்டேன். நீங்க ஃப்ரீயா விடுங்க” என்று அம்மாவை சமாதானப்படுத்தினான்.
“அந்தப் பொண்ணும் உன்கிட்ட மட்டுந்தான் பேசுது. நாளைக்கு என்னண்டு எங்களோட ஓட்டுமோ?”
“எங்கேஜ்மெண்ட்டான என் கூடப் பேசாம உங்களோடவாமா பேசிட்டு இருப்பா? நல்லா இருக்கே உங்க நியாயம்.” என்று சொன்னவன், “நல்ல பொண்ணும்மா பிரபா. நான் போன் பண்ணி தரேன், நீங்க பேசுறீங்களா?” என்று கேட்டான்.
“நீயே பேசிக்கோ” என்று போலி கோபத்துடன் முகம் திருப்பினார். அந்நேரம் பிரபாவதி அவனை அழைக்க, அழைப்பை ஏற்றவன் அம்மாவின் கையில் அலைபேசியைத் திணித்திருந்தான்.
“ஹலோ.. என்னம்மா நல்லா இருக்கியா?” என்று அவர் ஆரம்பிக்க, பிரபாவதி பேசினாள்.
ஐந்தாம் நிமிடம், “எனக்கு டைமாகுது, போனை குடும்மா” என்று அம்மாவிடம் இருந்து அலைபேசியை அவன் பிடுங்க வேண்டியதாக இருந்தது.
“அப்புறம் போலீஸ்கார் பொண்ணு, சொல்லுங்க. உங்களுக்கு வெளில போகப் பெர்மிஷன் கிடைச்சதா?”
“எங்கப்பாவை ரொம்ப டெரர் போலப் பில்ட் அப் பண்ணாதீங்க”
“ரைட்டு நான் பில்ட் அப் பண்ணல. நீ விஷயத்துக்கு வா”
“அப்பா ஓகே சொல்லிட்டாங்க. நீங்க மதியம் வீட்டுக்கு வந்து என்னைப் பிக் அப் பண்ணிக்கறீங்களா?” என்று தயக்கத்துடன் கேட்டாள்.
“இல்ல, அது முடியாதே. நான் இப்போ மேட்ச் போறேன். நான் கிரவுண்ட்ல இருந்து நேரா திநகர் வந்துடறேன். நீயும் அப்படியே வந்திடு.” என்றான்.
“இல்ல, அப்பா நீங்க கூட்டிட்டு போறதா இருந்தா ஓகேன்னு சொன்னாங்க. இல்லன்னா..” என்று அவள் இழுக்க, “ப்ச்” என்று கோபத்துடன் சலித்தான்.
“சரி, நீ ஒரு மூனு மணிக்கா ரெடியா இரு. நான் வந்து உன்னைப் பிக் அப் பண்ணிக்கறேன்”
“கோபமா?”
“போலீஸ்காரன் பொண்ணுக்கிட்ட எங்கருந்து கோபப்பட? முடியாது போலயே.. அதை விடு. எனக்கு இடையில கால் பண்ணாத, என்னால கால்ஸ் அட்டென்ட் பண்ண முடியாது. அதான் இப்பவே சொல்லிடுறேன்”
“இதையே என்கிட்ட எத்தனை முறை சொல்லுவீங்க? நான் உங்களுக்குப் போன் பண்ண மாட்டேன். போதுமா?” என்றாள் அழுத்தமாக.
“ஓகே. அப்போ ஈவ்னிங் மீட் பண்ணுவோம்” என்றான்.
அன்றைக்கு அவனது அணியினர் முதலில் பேட் செய்தார்கள். அவன் இரண்டாவது ஆளாக இறங்கி 60 ரன்கள் அடித்து ஆட்டமிழந்திருந்தான். ஆகையால் பனிரெண்டு மணிக்கெல்லாம் அணியினரிடம் அனுமதி பெற்று அவன் மைதானத்தை விட்டு வெளியேறி வெளியே வந்திருந்தான்.
பிரபாவதியை அழைத்துச் சொல்ல, அவளே நேராகத் திநகர் வந்து விடுவதாகச் சொன்னாள்.
அவளுக்காகச் சாலையோரம் வண்டியை நிறுத்தி காத்திருந்தான். அப்பாவுடன் அங்கு வந்து இறங்கியவளை பார்க்க அவனுக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
மகளை இறக்கி விட்ட வேகத்தில் காவல் நிலையம் செல்ல வேண்டும் என்று சொல்லி அவனிடம் அதிகம் பேசாமலே அங்கிருந்து சென்று விட்டார் கோவிந்தன்.
அவனென்ன அவரையா பார்க்க வந்தான். பிரபாவதியை பார்த்து புன்னகைத்து, “போகலாமா?” என்று தலையசைத்தான்.