“நான் நம்ம பொண்ணைப் பத்தி பேசிட்டு இருக்கும் போது, உன் புராணத்தை ஏன் உள்ள கொண்டு வர்ற?” மனைவியைப் பார்த்து கத்தினார் சிவஹரி.
“நானும் நம்ம பொண்ணுக்காகதான் பேசிட்டு இருக்கேன்.”
“நீ பேசுறது அப்படித் தெரியலையே?” என்று கோபமாகச் சொன்னவர், “அந்தப் பையன் அவங்க அம்மாப்பா வீட்ல வளரல. இப்போ தாத்தா பாட்டி கூடவும் இல்ல. தனியா இருக்கான். நாளைக்கு ஏதாவது ஒன்னுன்னா நம்ம மக போய் நிக்கவோ, நாம போய்க் கேள்வி கேட்கவோ ஒரு குடும்பம் வேணாமா?” என்று கேட்டார். கணவரின் வாதத்தில் சித்ராவிற்கு நியாயம் மட்டுமல்ல, அர்த்தமும் இல்லாததாகப்பட்டது.
“இன்னைக்கு மகனுக்காகப் பொண்ணு கேட்டு வந்தது அவங்க தானே? கல்யாணத்துக்கு அப்புறம் மட்டும் மகனை கை கழுவி விட்டுடுவாங்களா என்ன?”
“சித்ரா, நான் என்ன சொல்ல வர்றேங்கறதை புரிஞ்சுக்காம பேசிட்டு இருக்க நீ”
“ஏன் புரியாம? அதெல்லாம் நல்லாதான் புரியுது. ரோஜாவுக்குக் கல்யாணத்துக்கு அப்புறம் போக வீடிருக்கணும். அதான், நாம இருக்கோமே. அம்மா நான் உயிரோடு இருக்க வரைக்கும் என் பொண்ணுக்கு எதுவும் நடக்க விட மாட்டேன்.”
“அம்மா பிளீஸ்” எட்டி அம்மாவின் கையைப் பிடித்தாள் ரோஜா.
“ரோஜாவே சரின்னு சொல்லிட்டா, அவ விருப்பத்தை மதிக்காம நீங்க இப்படிப் பேசுறது நல்லாவே இல்ல”
“ரோஜா விருப்பம் மட்டுமில்ல, ஒரு அப்பாவா அவளோட எதிர்காலத்தைப் பத்தியும் நான் யோசிக்கணும். சுகந்தி டாக்டர் மூத்த மகனுக்குக் கேட்கிறாங்கன்னு நான் நினைக்கல. அவங்க ரெண்டாவது பையனுக்கு..”
“மூத்த மகன்னு சொல்லாதீங்கப்பா. அவங்க பேர் இளமாறன்.” என்ற மகளை விசித்திரமாகப் பார்த்தார் சிவஹரி.
“வேற எப்படிச் சொல்றது ரோஜா? உங்கக்கா நித்யா பத்தி பேசும் போது எங்க மூத்த மகள், பெரிய பொண்ணுன்னு தானே பேசறோம்? வீட்ல ரெண்டு பசங்க இருக்கும் போது மூத்த மகன்னு சொல்றது நார்மல்தான்” என்று கணவரின் பேச்சை விளக்கினார் சித்ரா.
ரோஜாவின் பார்வை அப்பாவின் மேல் படிய, “சுகந்தி டாக்டருக்கு ஒரு பொண்ணு, பையன் இருக்கறதுதான் வெளில தெரியும் ரோஜா. நிறையப் பேருக்கு அவங்க மூத்த, சாரி பெரிய பிள்ளையைப் பத்தி தெரியாது. நானே இத்தனை வருஷத்துல ஒரு பத்து முறை கூட அந்தப் பையனை பார்த்திருக்க மாட்டேன். அதான் அவங்க கல்யாணம் பேச வந்ததும் அவங்க சின்ன மகன் வினோத்தான் மாப்பிள்ளைன்னு நினைச்சுட்டேன்” என்றார்.
ரோஜாவிற்கு மருத்துவமனையில் மற்றவர்களின் கிசுகிசுப்புகள் நினைவிற்கு வந்தது.
“உங்க கண்ணுக்கு வசதி மட்டும்தான் தெரியும். அந்தப் பையன்னா சரின்னு சொல்லி இருப்பீங்க, அப்படித்தானே? நாளைக்கு அவன் ஹாஸ்பிட்டலை கட்டிட்டு அழ, நம்ம பொண்ணு தனியா இருப்பா?” சித்ரா ஆதங்கப்பட,
“நம்ம பொண்ணு ஏன் தனியா இருக்கணும்? ரோஜா படிச்ச படிப்புக்கு ஹாஸ்பிடல் நிர்வாகத்தையும் அவளால பார்க்க முடியும்” சிவஹரி மகளைப் பார்த்து சொல்லி முடிக்க, சித்ரா படக்கென எழுந்து நின்றார்.
“உங்களுக்கு எல்லாமே பிசினஸ்தான் இல்ல? நம்ம மக வாழ்க்கையும் பணத்தோட தொடர்புப்படுத்தாதீங்க. வாழ்க்கையில் பணத்தைத் தாண்டி நிறைய விஷயம் இருக்குங்க. வீடுன்னா அதுல பாசம், சந்தோஷம், நிம்மதி இதெல்லாம்தான் இருக்கணும். பணத்தைக் கட்டிட்டு…”
“என்ன பணத்தைக் கட்டிட்டு? பணம் இல்லாமலாம் வாழ முடியாது சித்ரா. இன்னைக்கு இருக்க உலகத்தில பணம் இல்லாதவனை எவனும் மதிக்க மாட்டான். நீ சரின்னு சொல்ற அந்தப் பையன், வெறும் செஃப். நான் பார்த்த மாப்பிள்ளை ரகுவரன். ஏழு ஹோட்டல் ஓனர். இவனை மாதிரி பத்து பேருக்கு வேலை கொடுக்கிறவன் அவன்.”
“ஆனா, அந்த ரகுவரனை உங்க பொண்ணுக்கு பிடிக்கலையே”
“ரோஜாக்குப் பிடிச்சிருக்கும். அவ என் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து, சரின்னு சொல்லியிருப்பா. அவளைக் குழப்பி விட்டது நீதான். எங்க ஐயா குடும்பத்தில் என் பொண்ணைக் கண்ணை மூடிட்டு எந்தப் பயமும் இல்லாம கட்டிக் கொடுத்து இருப்பேன் நான். ஆனா, இவனுக்கு ஒழுங்கா ஒரு குடும்பமே இல்ல..”
“திரும்பத் திரும்ப அதையே சொல்லாதீங்க. அவரோட வேலை, வருமானம், நல்ல பையனா இதை மட்டும் பாருங்க. குடும்பம், குடும்பம்னு சொன்னதையே சொல்லிட்டு இருக்காதீங்க. இவ்வளவு பேசுற நீங்க என்னை எத்தனை முறை எங்க வீட்டுக்கு அனுப்பி இருப்பீங்க?”
“சித்ரா…”
“இல்ல, நீங்க பதில் சொல்லுங்க. என்னை எத்தனை தடவை எங்கம்மா வீட்டுக்கு அனுப்பி இருக்கீங்க? அது கூட வேணாம். உங்க அண்ணா, தங்கச்சி வீட்டுக்கு எப்பவாவது அனுப்பி இருக்கீங்களா? அவங்களோட என்னை உறவாட விட்டுருக்கீங்களா? என்னை எங்க வீட்டுக்கும் அனுப்பினது கிடையாது. உங்க பக்க ஆளுங்க கூடவும் பழக விட்டது கிடையாது. நீங்க எல்லாம் என்ன தகுதி இருக்குனு குடும்பத்தைப் பத்தி கவலைப்படுறீங்க?” சோஃபாவில் அமர்ந்திருந்த கணவரை நின்ற வாக்கில் கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்தார் சித்ரா.
சிவஹரி கோபத்தில் உடல் இறுக, “ஏய்..” என்று கத்தினார்.
ரோஜா சிறு வயதில் இருந்தே பெற்றோரின் சண்டைகளைப் பார்த்து வளர்ந்தவள்தான் எனினும், இம்முறை தன்னை வைத்தே இந்தச் சூழல் எனும் போது மிகுந்த பதட்டமாகினாள்.
“ம்மா, பேசாம இருங்க. நாளைக்குப் பேசிக்கலாம்” என்று அம்மாவின் கையைப் பிடித்து இழுத்தாள்.
“நீ கையை எடு ரோஜா” என்ற சிவஹரி, “இப்போ என்ன உன் பிரச்சனை?” என்று மனைவியிடம் எகிற, “எனக்கு ஆயிரம் பிரச்சனை இருக்கு. ஆனா, அதையெல்லாம் கேட்க உங்களுக்கு நேரமிருக்கா?” என்று நக்கலாகக் கேட்டார்.
“ஏன்மா?” ரோஜா கெஞ்ச, “ரோஜாவை கல்யாணம் பன்றவன் அவளுக்காக நேரம் ஒதுக்கணும். வேலை காசுன்னு அது பின்னாடியே ஓடக் கூடாது. ரோஜா ஆசைப்பட்டா நம்ம வீட்டுக்கு அவளை அனுப்பணும். நாளைக்கு அவளுக்கே நாலு குழந்தைங்க பிறந்தாலும், எனக்கு ரோஜா குழந்தைதான். என் பிள்ளைங்களுக்கு எப்பவும் நான் இருப்பேன். நாம எதுக்காக ரெண்டு பிள்ளைங்க பெத்துக்கிட்டோம்? அவங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருக்கணும்னு தானே? ரோஜா நம்ம ரெண்டு பேரையும் விட அவ அக்கா நித்யா கூடதான் க்ளோஸ். நாளைக்கு வர்றவன், அவங்க ரெண்டு பேரையும் உங்களை மாதிரி பிரிச்சு வைச்சான்னா ரோஜா என்ன பண்ணுவா சொல்லுங்க?”
“உன்னை மாதிரி சாகப் போக மாட்டா என் பொண்ணு. அவளை அப்படித்தான் வளர்த்துருக்கேன் நான். தைரியமா எதையும் சமாளிக்கும் பொண்ணா…” கர்ஜித்தார் சிவஹரி. சித்ராவின் கண்கள் கலங்கி, உடல் நடுங்க, அப்பாவின் வார்த்தைகள் அந்த நேரத்தில் மிகக் குரூரமாகப்பட்டது ரோஜாவிற்கு.
“அப்பா, பிளீஸ். இப்படிப் பேசாதீங்க. எனக்குக் கல்யாணமே வேணாம். நீங்க ரெண்டு பேரும் சண்டை போடாம இருந்தா போதும்” அழுகுரலில் சொன்ன மகளைப் பார்த்ததும்தான் தன் சுயம் பெற்றார் சிவஹரி.
ரோஜா பெற்றோருக்கு நடுவில் சென்றதே கிடையாது. அவர்களின் பிரச்சனையில் தலையிட்டதும் கிடையாது. அவர்களின் வாக்குவாதங்களைத் தடுத்ததும் கிடையாது.
அம்மாவின் குரல் உயர்ந்தால் அப்பா ஒதுங்கிப் போவதும், அப்பா கோபமாக இருந்தால் அம்மா தழைந்து போவதும்தான் வாடிக்கை என்பதால், அவளுக்கு அங்கே பெரிதாக நாட்டாமை வேலை இருந்ததில்லை. அம்மா அதற்கு வாய்ப்பளித்தும் இல்லை என்பதும் ஒரு காரணம்.
பிள்ளைகள் இருவரிடமும் அப்பாவை விட்டுக் கொடுத்ததே இல்லை சித்ரா. மூத்த மகளின் திருமணத்திற்குப் பின்புதான் அப்பா பற்றிய சிறிய குறைகளும், சில்லறை புகார்களும் சொல்கிறாரே தவிர ஒரு நாளும் அவரைக் குற்றவாளியாக்கியது கிடையாது அவர். ரோஜாவின் திருமணப் பேச்சு, அதுவும் அப்பாவின் முன்னாள் முதலாளி குடும்ப வாரிசுடன் எனும் போதுதான் சித்ரா அதிகமாகப் பேசவும், மறுக்கவும், எதிர்த்து நிற்கவும் தொடங்கியிருந்தார்.