காலை நேரம் ரசனையோடு புலர்ந்தது. மார்க், ஆட்ரேயோடு நேரம் சென்றது. மனோவும் மார்க்கும் பேன்கேக் சுட்டுக் கொண்டு வந்தனர். குட்டிக் குட்டி கல்தோசை போல் இருந்தாலும் கொஞ்சம் இனித்தது. அதன் மேல் ஊற்றின மேப்பிள் சிரப்பும் தேன் போல் இனித்தது. இனிப்போடு ஆரம்பித்த காலை, நாள் முழுவதும் அதன் இனிப்பைத் தக்க வைத்துக் கொண்டது.
“உன் கூட கெஸ்ட் ஹௌஸ்ல இருக்கப் போற பொண்ணுட்ட பேசினியா?”
“அவ அம்மா வீட்டுக்குப் போயிருக்காளாம் மனோ. சண்டே நைட் எட்டு மணிக்குள்ள கண்டிப்பா வந்துடுவேன்னு மெசேஜ் பண்ணியிருந்தா. சாவி வீட்டு வாசல்ல இருக்க மூணாவது தொட்டிக்கு அடியில இருக்காம் எடுத்துக்க சொன்னா.” பேசிக் கொண்டே நகரத்தை உலா வந்தனர்.
“எனக்கு இந்த செடி வேணும் மனோ,” ஒற்றைத் தொட்டியில் ஒரு முழ நீள செடியில் கொத்தாய் பூத்திருந்த க்ரேப் ஹாயசிந்தை கையில் ஏந்தியவள் முகத்தில் அத்தனை பூரிப்பு.
பிங்க் மற்றும் பர்புள் என இருநிற ஹாயசிந்தை வாங்கிக் கொடுத்தான்.
“அடுத்து எங்க போறோம் மனோ?”
“இது ஸ்ப்ரிங் சீசன். உனக்குத் தான் இந்த பூ பிடிச்சிருக்கே, அது கொட்டிக் கிடக்கிற இடத்துக்கு. நதி பாத்திருக்கியா? வழியில பாறை இருந்தா அதை சுத்திக்கிட்டு ஓடுற நதியில, ஆயிரம் பூ கொத்தா மிதந்து வந்தா எவ்வளவு அழகா இருக்கும். அந்த மாதிரி ஒரு நிலத்தில பார்க்கலாம்,” என்றபோது கூட மலர் நதியை அவள் எதிர்பார்க்கவில்லை.
நதி தான். ‘பல்ப் ரிவர்’ என்றான் அந்த இடத்தை. 35000 பர்புள் நிற மலர்கள் மரத்தையும் செடிகளைச் சுற்றி நதி பாய்ந்து வருவது போல் தோற்றம் அளித்தது. அதன் ஓரத்தில் அங்கும் இங்குமாக 1500 மஞ்சள் டஃப்படில் பூக்கள்.
“வாவ் மனோ… நிஜமாவே வாவ் மனோ!” இன்பத்தில் திளைக்கவே வேறு வார்த்தை தெரியவில்லை. நேற்று தானே பார்க்க விரும்பினாள்? வோர்ட்ஸ்வொர்த் கவிஞனும் இப்படித்தான் விழி விரித்து மயங்கியிருப்பாரோ?! மனம் நெகிழ்ந்தது. இறுக்கி பிடித்த அவன் கையை வீடு வந்த பின்னரும் விடவே இல்லை. அடுத்த நான்கு மணி நேரமும் அவன் ஒற்றைக் கையில் காரை ஓட்ட அவன் வலது கை அவள் இடது கைக்குள் புதைந்திருந்தது.
‘அவ்வளவு தானே… விட்டுவிட்டுச் சென்று விடுவானே!’ இதயம் கனக்க பேச முடியவில்லை. ஒரு கட்டத்தில் அதே சிந்தனையோடு, ஜெட் லாகால் (jet lag) உறங்கியும் போனாள்.
நான்கு மணி நேரப் பயணம், வழக்கத்திற்கு மாறாக சாலை நெரிசலால் ஆறு மணி நேரம் என்று இழுத்தடித்தது. இரவு பத்தானது அந்த அடுக்கு மாடிக் குடியிருப்பு வந்து சேர.
வாங்கி வந்த உணவு சூடான கருப்பு காபியோடே உள்ளே செல்ல, இதமான சில மணி நேர அரட்டையோடு கண்கள் சொக்கிப் போக அன்றைய தினம் முடிவடைந்தது. மறு நாள் நடந்து சென்று அலுவலக கட்டிடத்தைப் பார்த்து வந்தனர். புது கைப்பேசியும் புது எண்ணும் வாங்கிக் கொடுத்தான். அருகிலிருக்கும் கடைகளுக்குச் சென்று வேண்டிய உணவு வகைகளை வாங்கி அடுக்கினர்.
அவள் சமைக்க… “நல்லா சமைக்கிற விழி,” என்றவன் நீண்ட நாளுக்குப் பின் வாய்க்கு ருசியாக உண்டான். கடைசியாக வீட்டில் அவள் சமையலை உண்டது அதன் பின் இன்று மீண்டும் அவள் சமையல்.
நேரம் சென்றது. “சொல்ல மறந்துட்டேன் பார்! இந்த சைட்ல, இதப் படி.. கார் ஓட்டப் பழகிறதுக்கு முன்ன இந்த டெஸ்ட் பாஸ் ஆகணும். பொறுமையா படி.” என்று ஓட்டுநர் உரிமத்திற்கான தளம் பற்றிய தகவலைக் கொடுத்தான். “டெஸ்ட் பாஸ் ஆனதும் நான் ட்ரெயின் பண்றேன். அப்புறம் ட்ரைவிங் டெஸ்ட் பாஸ் ஆனதும் லைசன்ஸ் கிடைச்சிடும்!”
மாலை நான்கு என்று கடிகாரம் காட்ட, இருவர் முகமும் சோர்ந்து போக ஆரம்பித்தது. இனி என்று பார்க்க முடியும்? தெரியவில்லை.
“செலவுக்கு வச்சுக்கோ,” என்று பணத்தையும், “இந்த கார்டையும் வச்சுக்கோ. என்ன வேணுமோ வாங்கிக்கோ,” என்று கடன் அட்டையையும் கொடுத்தான்.
எதுவும் பேசாமல் வாங்கிக் கொண்டாள். கொடுத்தல் வாங்கல் எல்லாம் கணக்கில் நிற்பதில்லை என்ற நிலை அவர்களிடம்.
“கிளம்பட்டா?” விழியின் விழி பார்த்து நின்றவனுக்குப் போக மனமில்லை. கேட்டு நின்றவளுக்கும் அனுப்ப மனமில்லை, அவனும் மறுநாள் கல்லூரி செல்ல வேண்டுமே. என்ன சொல்ல?
“பத்து நிமிஷம் இருங்க மனோ. டீ குடிச்சுட்டுப் போலாம்.” நேரம் கடத்த உக்தி கண்டுபிடித்தவளாய் அவன் முகம் பார்த்தாள்.
“மசாலா டீ போடேன்…” இன்னும் ஐந்து நிமிடங்கள் கூட எடுத்துக் கொள்ளேன் என்று நினைத்திருப்பான் போலும்.
அவள் அடுக்களை செல்ல, சோஃபாவில் அமர்ந்து கொண்டவனின் பார்வையும் சிந்தனையும் விழி மீது உரசி நின்றது. முதுகைக் காட்டி நின்றிருந்தாள். தள்ளி இருக்க முடியாமல் எழுந்து சென்றான்.
இரு தோளிலும் கை பதியவுமே, இடி வாங்கிக் கொண்டிருந்த இஞ்சி இளைப்பாறியது. அசைவில்லாமல் நின்றிருந்தவள் கை வழியே இறங்கிய அவன் உள்ளங்கை அவள் விரலோடு பின்னிக் கொண்டது.
“விழி,” என்றான், காதில் கீதமாய் இறங்கியது. “மிஸ் பண்ணுவேன் டி” கைகள் இடையைக் கட்டிக் கொள்ள, நெஞ்சோடு சாய்ந்து கொண்டாள். பெண்ணவள் தலையில் கன்னம் பதிய நின்றவனுக்குள் புதைந்து போக வழியில்லாது போகவே இருவரும் சிலையாய் நின்றனர். இருவர் மனதிலும் தாகம். தணியாத தாகம்… கூடவே இருக்க முடியாதா என்ற தொடுவானத்தைத் தொடும் ஆசை.
அரை மணி நேரம் சென்றது. டீ கோப்பையை அடுக்களைக்குள் வைத்தவளுக்கு மனோவிற்கு விடை கொடுக்கப் பிடிக்கவில்லை.
அழத் தயாராக இருந்தவளிடம், “போக மனசே இல்ல டி” என்று நூறாவது முறையாக கூறிவிட்டான். இருந்தும் “கிளம்பறேன் விழி, பத்திரம் டி பட்டு” என்றான், ஷூ அணிந்து கொண்டே.
வாசல் கதவு வரை சென்றாள். “நீ கீழ வர வேண்டாம். நான் கிளம்பறேன். எதுனாலும் கூப்பிடு… எந்நேரம்னாலும் கூப்பிடு… வரேன்.” கன்னம் தட்டி பத்திரம் சொன்னான்.
கண்கள் பனிக்க… “ம்ம்” என்றாள்.
வெளியே செல்ல கால் வைத்தவன் என்ன நினைத்தானோ, உள்ளே வந்து இழுத்து அணைத்துக் கொண்டான். காத்திருந்தவள் போல் அவனுள் புதைந்து போனாள்.
“பாத்து இருந்துக்கோடி பட்டு… எமர்ஜன்சினா 911 கூப்பிடு.” இதயம் படபடத்தது. தனியாக விட்டுச் செல்லும் படபடப்பு அது. அலர்விழியின் அம்மா, அப்பா, நகு என்று அனைவரின் தவிப்பையும் ஒன்றாய் அனுபவித்தான்.
அணைத்தவனைப் பிரியும் பாரம் தாங்காமல் சொட்டு நீர், கட்டுபாட்டையும் மீறி பெண்ணவள் கன்னத்தை முத்தமிட்டது. தாகம் கொண்டவனின் உதடு சொட்டு நீர் போதாமல் அதன் இணையோடு இணைந்தது.
நிமிடங்கள் கரைய… தாகம் அதிகரிக்க தான் செய்தது. திண்ணிய மார்பிலிருந்து விலகியவள், “நேரம் ஆகுது. கிளம்புங்க. லவ் யூ மனோ…” என்று விடை கொடுக்க, “பார்த்து இருந்துக்கோ” தலை வருடியவன், நெற்றியில் மீண்டும் இதழ் பதித்துக் கிளம்பினான்.
இனித்த ஈர முத்தம் தந்தவனின் நினைவோடு அவள் அமர்ந்திருக்க, அந்த கட்டிடம் தாண்டி எபியின் கருப்பு நிற இன்ஃபினிட்டி சாலையில் நுழைந்தது.