நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 27 (3)

இரண்டு வாரங்கள் கடந்திருந்தன.

தயாபரன் களைப்பின் மிகுதியில், அந்த இரவில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான்.

“தயா” மென்மையாக அவனை உலுக்கினாள் குறிஞ்சி.

“ம்ம், பசிக்குதா? தோசை ஊத்தி தரவா? பகலெல்லாம் வாந்தி எடு. நைட்ல பசிக்குதுன்னு என்னைப் போட்டு படுத்து” என்று அவன் புலம்பி புரண்டு படுக்க, “அப்போ நான் படுத்துறேனா உங்கள?” என்று எகிறினாள் அவள்.

அந்தக் குரல் அவனைச் சொடுக்கி எழுப்பியது.

“ஏய் குறிஞ்சி ஆத்தா மலையேறாதடி. பிளீஸ். மனுஷனுக்குத் தூக்கம் வருது”

“அப்ப கூட உங்களுக்குத் தூக்கம் வருதுன்னு சொல்றீங்க பார்த்தீங்களா..” என்று முடிக்காமல் அவள் முறைக்க, “அடியேய், இப்போ என்ன வேணும் உனக்குத் தூங்குனவன எழுப்பிவிட்டு” என்றபடி கண்ணைத் தேய்த்தவன், “சரி பால் சூடு பண்ணி தரவா?” என்று பாவமாகக் கேட்டான்.

“ம்ஹும், வேணாம்” என்றவள், அவன் மேல் சரிய முழங்கையைப் படுக்கையில் ஊன்றி படுத்திருந்தவன் பொத்தென்று படுக்கையில் விழுந்தான்.

குறிஞ்சி மலரும் அவன் மேனியில் விழ, “அடியேய், என்னடி..” கரகரத்த குரலில் வினவி, அவளின் விழிகளைக் கூர்ந்தான். மென்மையாக அவளை இழுத்து முத்தமிட்டான்.

“தயா”

“ம்ம்ம்”

“கைய காட்டுங்க”

“கையா? எதுக்கு டி?”

“காட்டுங்க சொல்றேன்” என்று அவனின் கைப் பிடித்து இழுத்து அவன் கையில் கனமான வெள்ளிக் காப்பை அணிவித்து விட்டாள். அத்தோடு அவன் விரலில் பொன் மோதிரமும் அவள் போட்டு விட, “என்னடி இது?” என்று ஆச்சர்யமானான் அவன்.

“பார்த்தா தெரியல தயா?”

அவள் முகத்தைச் சுருக்கி கோபமாகக் கேட்க, “நல்லா தெரியுது. ஆனா என்னத்துக்கு எனக்கு இப்போ இதுலாம் வாங்கிக் கொடுக்கற?” என்று அவன் கேட்க, “நீங்க எனக்குக் கிஃப்ட் வாங்கிக் கொடுக்கும் போதெல்லாம் நான் கேள்வி கேட்டேனா உங்கள?” என்று உதடு சுழித்தாள்.

“எப்பவும் நீங்களேதான் கிஃப்ட் பண்ணுவீங்களா? நாங்க கொடுக்கக் கூடாதா?”

அவள் உதட்டை விரலால் வருடியபடி, ‘என்ன?’ என்றான் கண்களால்.

“பிடிச்சிருக்கா?”

“ரொம்ப. பிடிக்காமயா நீ இப்போ இப்படி?” என்றவன் உதடுகள் மென்னகையில் விரிய, கைகள் அவள் வயிறை மெல்ல வருடியது. குறிஞ்சியின் கண்களில் எதிர்பார்ப்பு இன்னமும் மிச்சமிருக்க, “இப்பவும் எனக்குப் பிடிக்காமத்தான் நான் உனக்கு மெத்தையாட்டம் படுத்துருக்கேனா?” அவன் மார்பில் படர்ந்திருந்த அவளைக் குறிப்பால் கண் காட்டி கேட்டான்.

“ஐயோ, நான் என்னைக் கேட்கல தயா. இந்தக் காப்பு, மோதிரம் ரெண்டையும் கேட்டேன்” என்றாள்.

“குறிஞ்சி என்ன கொடுத்தாலும் எனக்குப் பிடிக்கும்” என்றான் காதல் மயக்கத்துடன்.

“ரெண்டு அடி தரவா?” நமுட்டு சிரிப்புடன் அவள் கேட்க, “அடியேன்…” என்றான் குறும்பாகக் கண்ணடித்து.

அவள் அடிக்கக் கையை ஓங்க, “ஆனா கையால இல்ல.” என்றபடி அவள் கையைத் தடுத்துப் பிடித்துத் தன்னைச் சுற்றி படர விட்டான். அவனும் அவள் மேல் பற்றிப் படர்ந்து இதழால் காதல் பாடம் நடத்தினான்.

அவன் கையில் இருந்த காப்பிலும், மோதிரத்திலும் இருவரின் முதல் எழுத்துகளும் பின்னி பிணைந்து இருப்பது போலச் செய்து வாங்கியிருந்தாள்.

இப்போது அவர்களின் நிலையும் அப்படித்தான் இருந்தது. வழக்கமான இரவென்றாலும் பிடித்தங்களால் அவர்களின் காதல் பித்தேறித்தான் போனது.

காலையில் குளித்துக் கடைக்குக் கிளம்பியவன், “தேங்க்ஸ், அழகா இருக்குடி. எனக்காக நீ வாங்கிக் கொடுத்தது இன்னும் ஸ்பெஷல்தான்” சட்டையின் கையை மடித்து விட்டு, காப்பை மேலேற்றினான். அவனது கவர்ச்சியைக் கூட்டியது அந்த வெள்ளிக் காப்பு.

“தயா, எனக்குச் சென்னையில் ஒரு சின்ன வேலை இருக்கு. ரெண்டு நாளைக்குச் சென்னை போகணும்னு சொல்லி இருந்தேனே” அவள் தயங்கி இழுக்க, “நான்தான் போக வேணாம்னு சொல்லிட்டேனே. உன் பிரெண்ட் நீ போகலன்னாலும் கல்யாணம் பண்ணிப்பா. நீ பேசாம இங்கேயே இரு” என்று அதட்டினான்.

அவள் முறைக்கவும், “அதுக்குத்தான் ஐஸ் வைக்க இதை வாங்கிக் கொடுத்தியா டி?” என்று கடுப்படித்தான்.

“ம்ம், புத்தி போகுது பாரு உங்களுக்கு.” என்று அவள் கடுப்பாக, “கண்ணை நோண்டிருவேன். இந்த முறைக்கற வேலையெல்லாம் வச்சுக்காத.” என்று விரல் நீட்டி எச்சரித்தவன், “நீ சென்னை போனா ஐயோ எப்ப வருவான்னு உன் பின்னாடியே ஓடி வருவேன்னு நினைக்காத. இந்த டைம் உங்கம்மா கிட்ட மாட்டி விட்டுடுவேன்” என்று மிரட்டி விட்டு அவன் செல்ல, அசட்டையாக உதடு சுழித்தாள் அவள்.

கடந்த இரண்டு மாதங்களாகப் பழனியப்பன், நாச்சம்மை, அலமேலு பெரும்பாலும் ஓய்வில் இருக்கிறார்கள்.

அலமேலு வாங்கியிருந்த புது வீட்டில் மாவு, மசாலா அரைக்கும் இயந்திரங்கள் வந்து இறங்கியிருந்தன. தற்போது அந்த வேலையை மட்டுமே மேற்பார்வை இடுகிறார் அவர்.

பெரும்பாலுமான பொழுதுகள் ஓய்வில்தான் இருக்கிறார். அதில் மகளுக்கு மிகுந்த மகிழ்ச்சி.

நாச்சம்மை ஓய்வில் இருந்தாலும் பயங்கரப் பிஸி. பின்னே மகள், மருமகள் இருவரும் கர்ப்பமாக இருக்கிறார்கள் அல்லவா? அவர்களுக்குச் சமைத்து கொடுக்க, அவர்களைக் கவனிக்க என அவரின் பொழுது நகர்கிறது.

அன்று மாலை தயாபரன் வீடு வர, குறிஞ்சி வீட்டில் இல்லை.

“ம்மா, குறிஞ்சி எங்க?”

“அவளா.. சென்னை போகணும்னு சொல்லிட்டு இருந்தா” என்று அவர் சொல்லி முடிக்கும் முன் பதறி விட்டான்.

“என்னம்மா சொல்றீங்க? அவ போகணும்னு சொன்னா.. நீங்க போக விட்டுட்டீங்களா? நா அவ்வளவு சொல்லியும் கேக்காம” என்று கத்தினான். அந்நேரம் அலமேலு வீட்டுக்குள் வந்தவர், “தம்பி..” என்று தயங்கி இழுக்க, அவரையும் முறைத்தான் அவன். ஆனால் அவருக்குப் பதில் சொல்லாமலே பதட்டத்தில் மனைவியைத் தேடத் தொடங்கினான்.

மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கிறாள் பார் என்று மனைவியின் மேல் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அவளின் கைப்பேசிக்கு அழைத்தான். அழைப்புச் சென்றது ஆனால் அவள் எடுக்கவில்லை.

“இவளோட..” என்று பல்லைக் கடித்தான்.

“தம்பி..” அலமேலு மீண்டும் அழைக்க, “இருங்க அத்த வர்றேன்” என்று வேட்டியை மடித்துக் கட்டி வெளியேறினான்.

வீட்டு வாசலில் நின்றபடி அவசரமாக ஶ்ரீகாந்த்தை அழைத்தான்.

“ஶ்ரீ, கார் வேணும் மச்சா.” என்று அவன் படபடவென்று பேச, “கார் எதுக்கு? எங்க போறோம்?” என்று அவன் பின்னால் இருந்து கேட்டாள் குறிஞ்சி.

“அடியேய்” என்று கடுப்புடன் திரும்பியவன் கண்கள் மேடிட்ட வயிறுடன் நின்ற மனைவியைக் கண்டதும் கனிந்தன.

நைட்டி அணிந்து தலை பின்னி, பூ வைத்து அழகாக நின்றிருந்தாள். தான் ஒருவனை அழைத்தது கூட அந்த நொடி தயாபரனின் நினைவில் இல்லை. ஸ்ரீகாந்த், குறிஞ்சியின் பேச்சு கேட்கவுமே, இவர்களின் சம்பாஷணையில் குறுக்கிடாமல் கைபேசியை அணைத்து விட்டான்.

“என்ன தயா? எங்க போறோம்?” மீண்டும் அவள் கேட்க, “வீட்டுக்குள்ள போறோம் வா. ஒரு நிமிஷத்துல மனுஷனை பதற விட்டுட்டு ஒன்னும் தெரியாத மாதிரி கேள்வி கேட்கறா பாரு” என்று புலம்பியபடியே நடந்தான்.

நாச்சம்மை மகனை நமுட்டு சிரிப்புடன் ஏறிட்டார். அவரை முறைத்து விட்டு அலமேலு பக்கம் திரும்பி, “என்னங்க அத்த கூப்பிட்டீங்க?” என்று கேட்டான் அவன்.

“குறிஞ்சிக்கு வளைகாப்பு வைக்கணும்னு எனக்கொரு ஆச” என்று அவர் தயங்கி சொல்ல, “அதுக்கென்ன செஞ்சுடலாம்” என்றார் நாச்சம்மை.

“அது ஏழாவது மாசம்தானே செய்வாங்க அத்த?” என்று கேட்டு, இப்போதைக்கு மனைவியைப் பிரிய தனக்கு விருப்பமில்லை எனத் தகவல் தெரிவித்து விட்டான் அவன்.

“அவன் கிடக்கிறான். நாம ஏழு இல்லன்னா ஒன்பதுல செய்வோம். இப்பவே வேணாம்” என்று அவருக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தார் நாச்சம்மை.

ஏற்கனவே துர்கா குறிஞ்சிக்குக் கை நிறையக் கண்ணாடி வளையல் அணிவித்திருக்க, அவர்களின் அறையில் மனைவியைத் தன் கை வளைவில் நிறுத்தி ஆழ மூச்செடுத்தான் தயாபரன்.

நேற்றைய இரவு போல் இல்லாமல் இன்று தயா தன் மனைவியை நள்ளிரவில் மெதுவாகத் தட்டி எழுப்பினான்.

“என்ன தயா?”

“எந்திரிச்சி குளி குறிஞ்சி.”

“ஹ்ம்ம், இப்பவா?” தூக்கக் கலக்கத்தில் அவளுக்கு எதுவும் புரியவில்லை.

“ம்ம், ஹீட்டர் ஆன்ல இருக்கு போ” என்று பிடிவாதமாக அவளை எழுப்பிக் குளிக்க அனுப்பி, அடுத்த அரை மணி நேரத்தில் அவளைக் கிளப்பிக் காரில் ஏற்றி இருந்தான்.

“உங்களுக்கு இதே வேலையா போச்சு. எப்போ பாரு என்னைய பொம்மை மாதிரி தூக்கி கார்ல போட்டுட்டு கிளம்பிட வேண்டியது. இப்போ எங்க போறோம்?” என்று அவள் எகிறினாள்.

அவள் எகிறவும்தான் அவனுக்கு இவர்களின் திருமணத்திற்கு முந்தைய பயணம் நினைவில் வர தயாவின் முகத்தில் தாராளமாய் விரிந்தது புன்னகை.

“கண்ணை மூடி பேசாம தூங்கு. இல்ல பசிச்சா பின்னாடி இருக்கப் பையில ஸ்னாக்ஸ் இருக்கு. இதையும் நாய்க்கு போடாம நீ எடுத்து சாப்பிடு. நாம போக வேண்டிய இடம் வந்ததும் நானே உன்னை எழுப்பி விடறேன்.” என்று அவளுக்கு இருக்கையை நன்றாகப் பின்னே சாய்த்து படுக்க வசதி செய்து கொடுத்தான்.

தயாவின் பேச்சில் குறிஞ்சிக்கும் சிரிப்பு வந்தாலும் தாய்மையின் அசதியும் அதிகாலையின் இதமும் அவளை ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்த்தியது. தயாபரன் அவளின் உறக்கம் கலையாதவாறு நிதானமாகக் காரை செலுத்தினான்.

அதிகாலையில் அவர்களின் பயணம் கொடைக்கானலில் நிறைவடைந்தது. மலை ஏறும் போதே கண் விழித்து விட்டாள் குறிஞ்சி.

“கொடைக்கானலா போறோம் தயா? ஹனிமூனா? இப்பவா?” கைகளை வயிற்றில் வைத்தபடி அவள் உதடு குவித்துக் கேட்க, சிரித்து விட்டான் அவன்.

நல்லதொரு ரிசார்டில் அறை எடுத்து சிறிது நேரம் ஓய்வெடுத்து, அங்கேயே காலை உணவை முடித்துப் பின்னர் ஊரை சுற்றிப் பார்க்க வெளியேறினார்கள்.

“இதுக்குத்தான் என்னைச் சென்னை அனுப்ப மாட்டேன்னு சொன்னீங்களா தயா?”

“உன்னை எங்கேயும் இனி தனியா அனுப்ப என்னால முடியாது. அதுனால அனுப்பல” என்றவனைக் கடுமையாக முறைத்தாள்.

“இது திடீர் பிளான் குறிஞ்சி ஆத்தா, வா போவோம்.” என்று அவன் அழைத்துச் சென்றது, கொடைக்கானல் மலையில் வீற்றிருந்த குறிஞ்சி ஆண்டவர் கோவிலுக்குத்தான்.

இருவரும் மனம் நிறைய முருகனை வழிபட்டு வெளியே வந்தார்கள்.

அங்கே மதுரை மல்லிகை கிடைக்க மனைவிக்கு வாங்கித் தந்தான்.

அவன் எடுத்து வந்திருந்த நீல நிற சில்க் காட்டன் சேலையில் அழகோவியமாக இருந்தாள் அவள்.

“குளிருது தயா. இங்க போட சேலை எல்லாம் செட்டாகாது. ஒழுங்கா எனக்கு டிரஸ் கூட எடுத்து வைக்கல நீங்க” என்று அவள் சடைக்க, “அதெல்லாம் சரியாதான் எடுத்து வச்சுருக்கேன் வாடி” என்று அவளின் தோளில் கைப் போட்டு அணைத்து அழைத்துச் சென்றான். அவனின் கதகதப்பு அணைப்பின் வழி கடத்தப்பட அமைதியாக வந்தாள்.

பயணம் முடியவும் காரிலிருந்து குறிஞ்சியை இறங்கியவன் சற்றுத் தூரம் நடந்ததும் அவள் கண்களை மூடி கவனமாக அழைத்து வந்தான்.

“குறிஞ்சி கண்ணைத் திறந்து பாரு” என்று அவள் காதோரம் கிசுகிசுத்தான்.

கண்ணைத் திறந்தவள் முன்னே நீல நிற பூக்கடல்.

“வாவ் தயா” என்று அவள் கண்கள் அதிர்ந்து விரிந்தன. உதடுகள் புன்னகையில் மலர்ந்து பிரிந்தன.

அவள் கண் முன்னிருந்த காட்சி, அவள் காண விரும்பிய, அவளின் பல வருடத்தைய கனவு.

கொடைக்கானல் மலை முழுக்க நீல குறிஞ்சி பூத்துக் கிடந்தது. அந்தக் காட்சியைக் காண்பதற்குக் கொள்ளை அழகாக இருந்தது.

நீல நிற குறிஞ்சி பூக்களின் முன் நீல நிற சேலையில் குறிஞ்சியும் நிற்க, மனைவியை ரசித்து நின்றிருந்தான் தயாபரன். இப்போது விளங்கியது குறிஞ்சிக்கு அவளின் நீல நிற சேலைக்கான அர்த்தம்.

அந்தக் குறிஞ்சியின் அதிசயம் போல இந்தக் குறிஞ்சியின் முகமும் பல சந்தோச உணர்வுகளால் பூத்துக் கிடந்தது.

“குறிஞ்சி, பிடிச்சிருக்கா?”

“ரொம்ப” என்றாள் உன்மத்தத்துடன்.

“பூ தானே?”

“இல்ல” என்று மெதுவாகத் தலையசைத்து, “தயாபரனை” என்று மெல்ல அவன் மார்பில் சாய்ந்து முத்தமிட்டாள்.

அவளின் இடையில் கைப் போட்டு இறுக அணைத்துக் கொண்டான் தயாபரன்.

கொடைக்கானலில் அதிசயங்களை விடக் குறிஞ்சிக்கு அவள் கைகோர்த்து நடக்கும் இந்தத் தயாபரனின் அன்பும் காதலும் தனக்கு மட்டுமேயான அதிசயமாகத் தோன்ற காதல் மீகி கனிந்து நின்றாள்.

பனிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் இந்தக் குறிஞ்சி போல, அவளும் அவனுக்கு அதிசயம்தான்.

நேசம் நிறைந்த நெஞ்சங்கள் காதலால் நிறைந்திருந்தன.

சுபம்!

error: Content is protected !!
Scroll to Top