நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 27 (2)

மாலை அவர்களை அழைக்கத் தாமதமாகத்தான் வந்தான். அவன் முகம் முழுமையான மகிழ்ச்சியில் வசீகரித்தது.

அதற்கு நேர்மாறாகத் துர்கா சோர்வுடன் அங்கிருந்த மர இருக்கையில் அமர்ந்திருப்பதைக் கண்டதும் விரைந்து அவர்களிடம் சென்றான்.

தரையில் மண்டியிட்டு குச்சியால் கிறுக்கி கொண்டிருந்த ரோஜா, “பட்டு ரோஜா” என்று அவன் அழைக்கவும் படக்கென்று எழுந்து அவனிடம் ஓடினாள்.

அவளின் கை காலில் அப்பியிருந்த மண்ணைத் துடைத்து விட்டு, “ரொம்ப நேரம் வெயிட் பண்ண வச்சுட்டேனா பட்டு ரோஜாவ” என்று அவளின் நெற்றியில் முட்டினான்.

“ம்ம்ம்” என்று கன்னம் குழைய சிரித்தாள். மகளை முத்தமிட்டு மனைவியின் பக்கம் திரும்பினான்.

“என்னங்க ஆளே டல்லடிக்கறீங்க? தலைவலியா?” என்று கேட்டான்.

“ம்ம்ம், வீட்டுக்கு போகலாமா?” என்று கேட்டாள் துர்கா. அவளிடம் ஆர்வமாக முக்கிய விஷயம் சொல்ல காத்திருந்தவன் அவளின் சோர்ந்த முகம் கண்டு எதுவும் சொல்லவில்லை.

இவரும் காரில் ஏற, காரில் கசிந்த பாடலுடன் இணைந்து முணுமுணுத்தபடி காரை செலுத்தினான்.

“ஶ்ரீ பார்மசில கொஞ்சம் நிப்பாட்டுங்க” என்று துர்கா சொல்லவும் புருவங்களை நெரித்தான்.

“என்னங்க மாத்திரை போடுற அளவுக்குத் தலைவலியா?” என்று அவன் கரிசனத்துடன் வினவ, “ம்ம், நீங்க இருங்க. நான் போய் வாங்கிட்டு வர்றேன்” என்று அவள் மட்டுமே கீழிறங்கி சென்று வாங்கி வந்தாள்.

அவர்கள் வீட்டுக்குள் நுழைந்ததும், வாசலில் நின்ற உண்ணாமலையிடம், “அப்பாத்தா” என்று ஓடினாள் ரோஜா.

“அவங்களுக்குத் தலை வலிக்குதாம்மா, பிளீஸ் இஞ்சி போட்டு டீ போட்டு தாங்களேன்” என்று அம்மாவிடம் ஶ்ரீகாந்த் கேட்க, “மருமகளை நான் வேலை ஏவணும்டா. இங்க என்னன்னா..” என்று மகனை முறைத்து சமையல் அறை சென்றார் அவர்.

துர்கா வேகமாக அறைக்குச் சென்று கதவடைத்துக் கொண்டாள்.

“அம்மா..”

“என்னப்பா?” பாலை அடுப்பில் ஏற்றி, பின்னால் திரும்பி கேட்டார்.

“உங்ககிட்டயும், அப்பாகிட்டயும் ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்.”

“என்னா விஷயம்?” என்று அவர் ஆர்வமாகக் கேட்க, “அப்பா இப்ப வீட்டுக்கு வர்றேன்னு சொன்னார். அவர் வந்ததும் சொல்றேன்ம்மா” என்றான்.

சரியெனத் தலையசைத்து, “நீ வா ராசாத்தி” என்று பேத்தியை அழைத்துச் சென்று முகம் கழுவி, உடை மாற்றி விட்டார்.

அதற்குள் துர்கா வெளியே வந்திருந்தாள். அவள் உடல் மொழியில் அப்படியொரு பதற்றம்.

கூடத்தில் அமர்ந்திருந்த கணவனை, “ஶ்ரீ” என்று மெல்ல அழைத்தாள்.

“என்னங்க?” என்று அவன் கேட்க, “இங்க வாங்க” என்று செய்கை செய்தாள்.

அவனும் விரைந்து சென்று, மனைவியின் கைப் பிடித்து அறையை மூடினான்.

“நான் உங்ககிட்ட ஒரு அதி முக்கியமான விஷயம் சொல்ல காத்துட்டு இருக்கேன். நீங்க என்னன்னா என்னைய வெளில விட்டுட்டு கதவை மூடிட்டீங்க” என்று அவன் கோபிக்க, அவனை நெருங்கி அவன் கைப் பிடித்தாள்.

“என்னங்க ஈவ்னிங் ஷோவா?” என்று அவன் கண் சிமிட்ட, மேலும் அவனை நெருங்கி, “ஶ்ரீகாந்த்” என்றாள் அவன் கண் பார்த்து.

குனிந்து அந்தக் கண்களில் முத்தமிட்டான். அவள் பிடித்திருந்த அவன் கையைத் தன் வயிற்றில் வைத்து அழுத்தினாள்.

“எனக்கும் உங்ககிட்ட சொல்ல அதி முக்கியமான விஷயம் இருக்கு ஶ்ரீ”

“துர்கா” அவள் முகத்தை நிமிர்த்திக் கேள்வியாகப் பார்த்தான். அவன் கரத்தை வயிற்றோடு மேலும் அழுத்தி, கண்கள் கலங்க, “உங்கள அப்பான்னு கூப்பிட..” என்று அவள் சொல்லத் தொடங்குகையில், “அப்பா.. அப்பா.. அப்பா.. கதவத் தொறங்க” என்று கத்தினாள் ரோஜா.

ஶ்ரீகாந்த் உணர்ச்சி வசப்பட்டுக் கண்கள் கலங்க மனைவியை இழுத்து அணைத்து முத்தமிட்டான்.

“அப்பா” என்று அதற்குள் அவனை ஏலம் போட தொடங்கி விட்டாள் ரோஜா.

“இந்தா வந்துட்டேன் பட்டு ரோஜா” என்று நான்கே எட்டில் கதவை திறந்து மகளைக் கையில் அள்ளினான்.

“அப்பா.. ஶ்ரீக்கா” என்று அழைத்து அவன் கன்னத்தில் முத்தமிட்டாள் குழந்தை.

இருவருமாகச் சேர்ந்து அந்த மகிழ்ச்சியான செய்தியை முதலில் அவளிடம்தான் பகிர்ந்தார்கள்.

“ஐய்யா.. பாப்பா வரப் போகுது” என்று கை தட்டி ஆர்ப்பரித்தாள் குழந்தை.

“வாங்க, அத்தை கிட்ட சொல்லுவோம்” என்று அவர்கள் கூடத்துக்குச் செல்ல, அதற்குள் சிதம்பரமும் வந்து விட்டார். அவர்களிடமும் சந்தோஷச் செய்தியை பகிர, பெற்றவர்கள் பெரிதும் மகிழ்ந்தார்கள்.

உண்ணாமலை, துர்காவின் தலையில் கை வைத்து அழுத்திக் கொடுத்தார்.

“இதானாப்பா நீ சொல்லணும்னு சொன்ன முக்கியமான விஷயம்? ரொம்பச் சந்தோஷம்ப்பா ஶ்ரீ” என்று சிதம்பரம் சொல்ல, “இல்லப்பா” என்றான் மகன்.

“அப்புறம்? வேறென்ன? இன்னும் நல்ல செய்தி இருக்கா? சொல்லு கேட்போம்” என்று ஆர்வமாகக் கேட்டார் அவர்.

ரோஜா இனி சட்டப்படியாக அவன் மகள் என்னும் சந்தோஷ செய்தியை அவனும் சொன்னான்.

துர்கா மகிழ்ச்சியில் உறைந்து விட்டாள். அவள் கண்கள் இரட்டை மகிழ்ச்சியில் கலங்கிட, வைரமாக மின்னியது கண்ணீர் துளி.

“அழ கூடாது” என்று அவளின் கண்ணைத் துடைத்து விட்டார் உண்ணாமலை.

ஶ்ரீகாந்த் அவர்களின் திருமணம் முடிந்ததும் வக்கீலை சந்தித்து, முறையாக எல்லா விஷயங்களையும் செய்து, சட்டப்படியாக ரோஜாவை தன் மகளாக்கியிருந்தான்.

கடந்த ஒரு வார காலப் பதட்டத்தின் காரணம் அதுதான். இரண்டு மாதங்களாக அலைகிறான். எல்லா வேலையும் ஏற்கனவே முடிந்திருந்தது. இன்று அந்த மகிழ்வான செய்தி கிட்டவும் வீட்டினருடன் பகிர்ந்து விட்டான்.

“ரொம்பச் சந்தோஷம் தம்பி” என்று மகனின் தோளில் தட்டினார் சிதம்பரம்.

“நான் போய்ச் சட்டுனு ஏதாவது ஸ்வீட் செய்யறேன். ஒன்னுக்கு ரெண்டு நல்ல செய்தி சொல்லி இருக்கீங்க” என்று உண்ணாமலை பரபரத்து உள்ளே செல்ல, “அத்த கோவிலுக்குப் போயிட்டு வருவோமா?” என்று அவரிடம் கேட்டாள் துர்கா.

“கோவிலுக்குப் போகணும்தான். அதுக்கு முன்ன உங்க வீட்டுக்குப் போய்ச் சொல்லிட்டு வந்திடலாம்” என்றார் அவர்.

அவசரம் அவசரமாகக் கேசரி செய்து, சாமிக்கு படைத்து வணங்கி வேண்டிக் கொண்டார்கள்.

“ஶ்ரீ” கணவனின் அணைப்பில் பொருந்தி நின்றவள், தயக்கத்துடன் அவனை அழைக்க, “ம்ம்ம்” என்றான்.

“பயமா இருக்கு ஶ்ரீ” என்றாள் உடைந்த குரலில்.

“நான் இருக்கேன்ங்க, நம்ம பிள்ளையை நல்லபடியா நாம வளர்க்கலாம். பயம் நல்லது தாங்க. ஆனா அது உங்களை டிஸ்டர்ப் பண்ற அளவுக்குப் பயப்படாதீங்க. இப்போ நீங்க மன அமைதியோட இருந்தாதான் நம்ம குழந்தை ஹெல்த்தியா இருக்கும்ங்க” என்று அவன் சொல்ல, ஆமோதித்து அவன் மார்பில் தஞ்சமடைந்தாள்.

“நல்ல விஷயம் சொல்றதுக்கு எல்லாம் நேரம் காலம் பார்த்துட்டு இருக்கக் கூடாது, வாங்க” என்று அப்போதே அவர்களை அழைத்துக் கொண்டு துர்காவின் அம்மா வீட்டுக்கு வந்து விட்டார் உண்ணாமலை.

குறிஞ்சி ஆவலே உருவாக அவர்களுக்காகக் காத்திருந்தாள். துர்கா அவளிடம் தன் சந்தேகத்தைப் பகிர்ந்திருக்க, அவள்தான், “நீ கர்ப்பமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது, ஹாஸ்பிடல் வா, டெஸ்ட் பண்ணி பார்க்கலாம்” என்று சொல்லியிருந்தாள்.

இடையில் துர்காவை இரண்டு முறை அழைத்து விட்டாள் குறிஞ்சி.

“வெயிட் பண்ணு குறிஞ்சி, சொல்றேன்” என்று அவள் சொல்லியிருக்க, இவளுக்குதான் காத்திருக்கும் பொறுமையில்லை.

தயாபரன் உணவகத்தில் வேலையாக இருக்க, அவனையும் அழைத்து உடனடியாக வீட்டுக்கு வரச் சொன்னாள்.

“இங்க பாரு குறிஞ்சி ஆத்தா, நீ மாசமா இருக்கச் சரித்தேன். அதுக்காக நீ போடுற தாளத்துக்குலாம் நான் ஆட மாட்டேன் தெரிஞ்சுக்கோ, இங்கன எனக்குத் தலைக்கு மேல வேலை கெடக்கு, போனை வைடி” என்று கத்தி விட்டான்.

ஆனால் எப்போதும் போல அடுத்த அரை மணி நேரத்தில் மனைவிக்குப் பிடித்த ஆட்டுக்கால் கேக்குடன் வீடு வந்து விட்டான்.

“எதுக்குடி இப்போ அவசரமா வீட்டுக்கு வர சொன்ன?” என்று அதட்டலாக அவன் கேட்க, “ம்ம்ம்ம், எனக்கு வீட்ல பொழுது போகல. அதான் உங்களை ஒரண்டை இழுக்கலாம்னு” என்று அவள் இழுக்க, “கொல்ல போறேன் உன்னைய” என்று பல்லைக் கடித்தான்.

அவனை நெருங்கி, “நீங்க சிகரெட் அடிக்கிறத விட்டதும் உங்க லிப்ஸ் கலர் மாறிடுச்சு தயா” என்று உதட்டை உதட்டால் உரசினாள்.

“உன்னைய வெறுப்பேத்தவே இப்போ சிகரெட் அடிக்கணும் போல இருக்குடி” என்று அவளோடு இழைந்தான்.

“உங்க பிள்ளைக்கு ஆகாது” என்று மேடிட்ட வயிறை அவன் மேல் உரசினாள். அதில் அவன் மேனி சிலிர்க்க, “சிகரெட்டா அப்படினா என்னாது குறிஞ்சி ஆத்தா?” என்று கேட்டானே பார்க்கலாம். குறிஞ்சி சத்தமாகச் சிரித்து விட்டாள்.

“ஏய் எங்கயாவது பிடிச்சுக்கப் போகுதுடி போதும், சிரிப்பை நிப்பாட்டு” என்று அப்போதும் அவளை அதட்டி கொண்டிருந்தான் தயாபரன்.

அந்நேரம் அவனது அக்காவின் குடும்பம் வீடு வந்தது.

நாச்சம்மை, பழனியப்பன் என அனைவரும் அங்கிருக்க, இப்போது அவர்கள் வீட்டில் மகிழ்ச்சி வெள்ளம் பரவியது.

ரோஜா இனி ஶ்ரீகாந்த்தின் மகள். அதைக் கேட்டு நெகிழ்ந்து நின்றார் நாச்சம்மை.

அலமேலு உணவகத்தில் இருந்தார்.

“அத்த வீட்டுக்கு வாங்கத்தே” என்று துர்கா அழைக்க, உடனே வீடு வந்தார் அவர். துர்காவையும், ரோஜாவையும் இறுக அணைத்து இருவரின் நெற்றியிலும் முத்தமிட்டார்.

மகளுக்கு இப்போதே பழங்கள், பாதம், பிஸ்தா என வாங்கிக் கொடுத்து விட்டார் நாச்சம்மை. மறுநாள் இரண்டு குடும்பமும் இணைந்து கோவிலுக்குச் சென்றார்கள்.

அலமேலு கும்மாயம் செய்து எடுத்து வந்திருந்தார். அது துர்காவுக்கு மிகவும் பிடித்த இனிப்பு. அவளுக்கு ஊட்டி விட்டு மகிழ்ந்தார்கள்.

அனைவரும் இணைந்து நிறைவாகச் சாமி தரிசனம் செய்து வீடு திரும்பினார்கள். இருவரின் இல்லத்திலும் மகிழ்ச்சி நிறைந்திருந்தது.

error: Content is protected !!
Scroll to Top