என் ஜீவனில் உறைந்திடு – 18 (1)

ரோஜாவின் அணைப்பு இறுகிக் கொண்டே போனது. இளமாறன் முகமெங்கும் முத்தத்தால் நிறைத்தாள். அவனுக்கு அந்த அன்பின் ஆக்கிரமிப்பை கையாள முடியாமல் கால்கள் தடுமாறியது. எதையும் பற்றிக் கொள்ள முடியாமல், பிடிமானம் இல்லாமல் அவளையும் இழுத்தபடி படுக்கையில் விழுந்திருந்தான்.

துளி மென்மையும், அதி தீவிரமும், இறுக்கமான பிடிப்பும் கொண்டிருந்த அணைப்பில், அன்பு அதீதமாக இருக்கத் தன்னை முழுமையாக மனைவியிடம் ஒப்படைத்தான் இளமாறன். மறுகணமே அவனை விட்டு மூச்சு வாங்க விலகி அவன் மார்பில் தலை சாய்த்து படுத்து விட்டாள் ரோஜா.

“என்ன ரோஜா?” அவளைப் புரட்டி போட்டு முகம் பார்த்து கேட்டான். ரோஜா வெட்கத்துடன் புன்னகைக்க, முன்னேறினான்.

“இளா..” அவன் மார்பில் கை வைத்து தடுத்தாள். புருவங்களைக் கேள்வியாக ஒன்று சேர்த்து மனைவியைப் புதிராகப் பார்த்தான். அவள் முத்தமிட தொடங்கிய வேகத்தை வைத்து மோகம் என முடிவு செய்திருந்தான் அவன்.

அவள் தடுக்கவும், அவன் கண்களில் வந்த குழப்பத்தில் ரோஜாவிற்குச் சிரிப்பு வந்தது. அவளின் அவசரத்திற்கும், அன்பிற்கும், தவிப்பிற்குமான காரணம் அவனுக்கு விளங்கப் போவதில்லை, அவளால் விளக்கவும் முடியாது என்பது உரைக்கக் குற்ற உணர்ச்சியாக இருந்தது.

காதலில் காமம் துளிர்க்கலாம். அன்பில் அது எங்கிருந்து வரப் போகிறது?

அவளின் அணைப்பு அதீத அன்பின் வெளிப்பாடு மட்டுமே. முத்தத்தை மோகத்தின் மொழியாகப் பகிரவில்லை அவள்.

முத்தம் அன்பின் மொழி பேசி, என்றோ நிகழ்ந்த நிகழ்விற்கு அவனுக்கு அன்பையும், ஆறுதலையும் பகிர்ந்தது.

“பசிக்குது..” மெல்ல முணுமுணுத்தாள். அதைக் கேட்டதும் சத்தமின்றி உடல் குலுங்கச் சிரித்தான்.

அவளின் கன்னம் உரசி, இதழில் மென்முத்தம் பதித்து, “ம்ம்” என்றான்.

“ப்ச், இளா. நிஜமா பசிக்குது. சாப்பிட போகலாம். வாங்க” அவனை விலக்கி தள்ளி விட்டு எழுந்துக் கொண்டாள்.

“ஓகே. சாப்பிடலாம். ஆனா, உனக்குத் திடீர்னு என்னாச்சு?” கண்ணாடி முன் நின்று சேலையைச் சரி செய்யும் மனைவியைப் பார்த்தபடியே கேட்டான் இளமாறன்.

அவள் திரும்பி முறைக்க, ரோஜாவின் மலர்ந்த விழிகளை ரசித்தபடி, “ஓகே. நான் எதுவும் கேட்கல” என்று தோள் குலுக்கி படுக்கையில் இருந்து எழுந்தான்.

அன்று மாலை வரை அவனிடம் வெட்கமும், கூச்சமும் காட்டிய மனைவியின் இந்தத் திடீர் மாற்றம் அவனுக்கு வியப்புதான். அதிலும் அவள் தொடங்கிய வேகத்துக்கு முத்தத்தோடு நிறுத்தியது, அவனுக்குப் புரியவேயில்லை.

அவன் யோசனையில் மூழ்கியிருந்த நேரத்தில் ரோஜா குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள்.

சற்று நேரத்தில், “இளா, சாரி” என்று அவன் தோள் தொட்டு சொன்ன மனைவியை எழுந்து தோளோடு அணைத்துக் கொண்டான்.

“ஹேய் ரோஜா, என்ன சாரி எல்லாம் சொல்ற? எதுக்கு? தேவையேயில்ல.” அவள் கண்களைக் கூர்ந்துப் பார்த்தபடி சொன்னான்.

“சும்மா சாரி சொல்ற? அப்படியே சாரியை (சேலையை) மாத்திட்டு வர்ற? என்ன பண்ற நீ?” அவன் சிரிப்புடன் கேட்க, “அந்தச் சேலை உங்க அம்மம்மாவோடது தெரியுமா? அவங்க எனக்குக் கொடுத்தது. அவங்களோட முப்பதாவது கல்யாண நாளுக்கு உங்கம்மா எடுத்துக் கொடுத்த சேலையாம். வெள்ளி ஜரிகை வச்ச சேலை அது.” பேச்சை மாற்றினாள் ரோஜா.

“ஓ, உனக்கு ரொம்ப அழகா இருந்ததே. ஏன் மாத்திட்ட?” அவன் கேட்க, “ஹெவியா இருந்தது இளா, அதான்” பதில் சொல்லிக் கொண்டே அறையை விட்டு வெளியில் வந்தாள்.

“ம்மா, நித்திக்கா..” குரல் கொடுத்துக் கொண்டே படியில் இறங்கினாள்.

“ம்மா, பசிக்குது. சாப்பிட என்ன இருக்கு?” கத்திக் கொண்டே கூடத்துக்குள் நுழைந்தாள்.

இளமாறன் இப்போதும் மனைவியைப் புதிராகப் பார்த்தான். தங்களோடு இரவு உணவு உண்டு விட்டு செல்லும்படி அன்புடன் வற்புறுத்திய கஸ்தூரியிடம் பசியில்லை என்று மறுத்து விட்டு வந்த மனைவி, தற்போது பசி என்று கத்துவதைப் பார்க்கையில் அவன் புருவம் மீண்டும் முடிச்சிட்டது.

“வீட்ல நீயும், அம்மம்மாவும் என்ன பேசினீங்க?”

சட்டென மனைவியின் கைப் பிடித்து நிறுத்திக் கேட்டான் இளமாறன்.

“ரோஸ் குட்டி, இங்க வா. டின்னர் ரெடி” நித்யா உள்ளிருந்து கத்தினாள்.

“இதோ வர்றேன் கா” பதில் குரல் கொடுத்த ரோஜா, “வாங்க சாப்பிடலாம். எனக்குப் பசிக்குது” என்றாள் திரும்பி கணவனிடம். மௌனமாய் அவளோடு உணவு மேஜைக்குச் சென்றான் இளமாறன். அவன் கேள்விக்குப் பதிலளிக்காமல் அவள் தவிர்த்ததைப் பெரிதுபடுத்தவில்லை இளமாறன்.

“அம்மா எங்க கா?” ரோஜா கேட்க, “மித்ரனை தூங்க வைக்கப் போனாங்க ரோஸ்” என்ற நித்யா, இளமாறனை பார்த்ததும், “உங்களுக்குத் தோசை ஓகே தானே?” என்று தயக்கத்துடன் கேட்டாள்.

“நீங்களும் அதானே சாப்பிட போறீங்க?” தீவிர முகபாவத்துடன் கேட்டான் இளமாறன். ரோஜா பக்கென்று சிரித்து விட்டாள்.

நித்யா இருவரையும் மாறி மாறிப் பார்த்து, “நான் எதுவும் தப்பா கேட்டுட்டேனா?” என்று கேட்க, “க்கா..” என்று குரலை உயர்த்திக் கண்ணை உருட்டினாள் ரோஜா.

“தோசைக்குத் தொட்டுக்க என்ன நித்திக்கா? சட்னியா? இல்ல, சாம்பாரா?”

“மதியம் வச்ச மட்டன் குழம்பு இருக்கு ரோஜா. அம்மா சிக்கன் குழம்பு செய்யறேன் சொன்னாங்க. உங்க மாமா பாம்பே சட்னி, கல் தோசை சாப்பிடணும் போல இருக்குன்னு சொன்னார்.” நித்யா சொல்ல,

“பாம்பே சட்னியா?” என்று முகம் சுழித்தாள் ரோஜா. கணவனைத் திரும்பிப் பார்த்து, “உங்களுக்கு ஓகே?” அவள் கேட்க, “ம்ம்” என்று தலையசைத்தான் இளமாறன்.

ரோஜா இருக்கையைப் பின்னே நகர்த்தி விட்டு எழுந்து சமையல் அறையை நோக்கி நடந்தாள்.

“ஹாய் மாறன், ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணுங்க. தோசை ரெடி. இன்னைக்கு உங்களுக்கு நான்தான் செஃப்” சமையல் அறை வாசலில் நின்று கத்தினான் சசிகுமார்.

அவனிடம் இருந்து தோசைக் கரண்டியை வாங்கிய ரோஜா, “நீங்க போய் உட்காருங்க மாமா. உங்களுக்கு நான் தோசை ஊத்தி தரேன்” என்றவள், நித்யாக்குக் கண் காட்ட, கணவனை வெளியில் தள்ளிக் கொண்டு போனாள் அவள்.

ரோஜா சமையல் மேடையில் இருந்த அனைத்தையும் ஓரமாக ஒதுக்கி விட்டு, கார சட்னிக்கு வதக்கி அவசரமாக அரைத்து தாளித்தாள்.

இரண்டு அடுப்பில் கல் வைத்து ஒருபுறம் கல் தோசையும், மறுபுறம் முறுகலான தோசையும் வார்த்து எடுத்தாள்.

கல் தோசை, பாம்பே சட்னியை கணவனுக்குப் பரிமாறினாள் நித்யா.

ரோஜா, இளமாறனுக்குத் தோசை, கார சட்னி, தேங்காய் சட்னி பரிமாறி, “சாப்பிடுங்க இளா” என்றாள்.

“ப்ரோட்டக்கால்ஸ் ஃபாலோவ்டு?” தட்டில் கை வைக்காமல் குறுநகையுடன் கேள்வி கேட்டான் இளமாறன்.

ரோஜா திரும்பி சசிகுமாரை பார்க்க, தோசை, கார சட்னி, தேங்காய் சட்னி மூன்றும் தன் தட்டிலும் வைத்து, உண்டு கொண்டிருந்தான் அவன்.

அவன் உண்பதை பார்த்தபடியே, “எஸ் செஃப்” என்றாள் ரோஜா சிரிப்புடன்.

“உங்கக்கா உதைக்கப் போறாங்க” அவனுக்குத் தண்ணீர் ஊற்ற குனிந்தவளின் காதில் முணுமுணுத்தான் இளமாறன். புன்னகையுடன் நகர்ந்தாள் ரோஜா.

“என்ன சிரிப்பு ரோஸ் குட்டி?” நித்யா கேட்க, அவளுக்குப் பதில் சொல்லாமல் சமையல் அறைக்குச் சென்று தோசை வார்க்கத் தொடங்கினாள்.

“அவர் என்ன கேட்டார்? நீயேன் சிரிச்ச?” நித்யா விடுவதாக இல்லை.

“ப்ரோட்டக்கால் ஃபாலோ பண்ணேனா கேட்டார் கா. ஆமா சொன்னேன்?”

“புரியல”

“விவிஐபி கெஸ்ட்டுக்கு சமைக்கும் போது சில ரூல்ஸ் ஃபாலோ பண்ணணும் கா. காய்கறி, மாசலா இப்படி எல்லாம் செக் பண்ணிதான் கிட்சனுக்கு அனுப்புவாங்க. அப்புறம் சமைக்கும் போதும் செக்யூரிட்டி வாட்ச் பண்ணுவாங்க. கடைசியா சாப்பாடு டெஸ்ட் பண்ணிதான் அவங்களுக்குப் போகும்.

எல்லோருக்கும் இல்ல, முதல்வர், பிரதமர் இந்த மாதிரி…” ரோஜா விளக்கிக் கொண்டிருக்கும் போதே, “அடிப்பாவி” என்று கத்தினாள் நித்யா.

“இப்போ உன் செஃப் சாப்பிடுற சாப்பாட்டை முதல்ல என் புருஷன் சாப்பிட்டு டெஸ்ட் பண்ணியிருக்கார். அப்படித்தானே?” நித்யா கேட்க, அவளுக்குப் பதில் சொல்லாமல் இருவருக்கும் சென்று சூடாகத் தோசையை வைத்து விட்டு வந்தாள் ரோஜா.

“நித்திக்கா..” சிரிப்பை அடக்கியபடி ரோஜா அழைக்க, கோபத்துடன் தங்கையின் தோளில் அடித்தாள் நித்யா.

“ச்சே. என்னக்கா நீ. மாமாவை போய்.. எப்படிக் கா? நான்தான் முதல்ல டேஸ்ட் பண்ணேன். உப்பு, காரம் பார்க்காமலா சட்னி அரைப்பேன்? அவர் சும்மா கிண்டலுக்குக் கேட்டார். சோ, நானும் அப்படியே பதில் சொன்னேன்” தங்கையை நம்பாத பார்வை பார்த்து முறைத்தாள் நித்யா.

“உங்களுக்குத் தோசை ஓகேவான்னு நீ கேட்கிற? இன்னைக்கு உங்களுக்கு நான்தான் செஃப்னு மாமா சொல்றார். அம்மா நாம ஒவ்வொரு வேளை சாப்பிட உட்காரும் போதும், அவர் முகத்தையே பார்க்கறாங்க. அவருக்கு எப்படி இருக்கும் நித்திக்கா? அவர் செஃப்தான். அதுக்காக? அவங்களும் நம்மளை மாதிரி நார்மல் புட் தானே சாப்பிடுவாங்க? அவரை நார்மலா ட்ரீட் பண்ணுங்க. நமக்கும் கேன்டீன் இருக்கு. அதுனால வீட்ல ஏதாவது மாறிடுச்சா கா? எல்லா வீடும் போல நம்ம வீட்லயும் நார்மல் சமையல் தானே?” ரோஜா கேட்கவும் நாக்கை கடித்து, தலையில் அடித்துக் கொண்டாள் நித்யா.

“அதில்ல ரோஜா. அவர் பெரிய செஃப்” என்று இழுக்க, “அட போக்கா” என்று அடுத்தத் தோசையுடன் நகர்ந்தாள் ரோஜா.

“ரோஜா, நீயா தோசை ஊத்துற? நீயும் மாப்பிள்ளை கூட உட்கார்ந்து சாப்பிட வேண்டியது தானே? நித்தி, தங்கச்சியை அடுப்புல நிக்க விட்டுட்டு நீ என்ன பண்ற?” மூத்த மகளை அதட்டியபடி அங்கு வந்தார் சித்ரா.

“என்னம்மா நான் செய்யக் கூடாதா? அக்காவை ஏன் அதட்டுறீங்க?” என்ற ரோஜாவின் கையில் இருந்த கரண்டியை பிடுங்கி சமையல் செய்யும் பெண்ணை அழைத்துக் கொடுத்தார்.

இளமாறன் போதும் என்று எழுந்து சென்று கைக் கழுவி வந்து மனைவியின் பக்கத்தில் அமர்ந்து கொண்டான்.

“நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க முதல்ல” மகள்களிடம் சொன்னார் சித்ரா.

மூவருக்கும் தட்டு வைத்து உணவை பரிமாறியபடியே, “அப்பா எப்போ வருவார் மா? கால் பண்ணாரா?” என்று கேட்டாள் ரோஜா.

“அப்பா வர லேட்டாகும் சொன்னார். நாம சாப்பிட்டுப் படுக்கலாம்” என்றார் சித்ரா.

இளமாறனுக்கு அலைபேசி அழைப்பு வர, அங்கிருந்து எழுந்து சென்றான் அவன்.

error: Content is protected !!
Scroll to Top