மறுநாள் அதிகாலையில் குறிஞ்சியும் தயாவும் சென்று புதுமணத் தம்பதிகளை மறு வீட்டுக்கு அழைத்து வந்தார்கள்.
“தயா மாமா” என்று இப்போது தவ்வி கொண்டு வந்தாள் ரோஜா.
“நான் உன் கூட டூ” என்று குறிஞ்சி முகம் திருப்பிக் கொள்ள, “பழம் விடு குறிஞ்சி அத்த” என்று அவள் முன் இரண்டு விரல் நீட்டி கொஞ்சினாள் குழந்தை.
அவளை அப்படியே அள்ளி அணைத்துக் கொண்டு வீட்டுக்குக் கிளம்பினார்கள்.
அவர்கள் வீட்டில் அன்று காலை உணவே நாட்டுக்கோழி குழம்பு, மட்டன் குழம்பு, இட்லி, தோசை என விருந்து அமர்க்களப்பட்டது.
பால் பணியாரம், உக்காரை என இனிப்பிலும் இரண்டு வகையைச் செய்து அசத்தி விட்டார் அலமேலு.
மதிய விருந்துக்கு வாவல் மீன் வறுவல், ஊளி மீன் குழம்பு, நண்டு மிளகு பிரட்டல், இறால் வறுவல், சீலா மீன் புட்டு, நண்டு ரசம் என வகையாகச் சமைத்திருந்தார்கள்.
“டேய், போதும்டா. இதுக்கு மேல என்னால ஒரு வாய் கூடச் சாப்பிட முடியாதுடா தயா” என்று வயிறை பிடித்து அலறி விட்டான் ஶ்ரீகாந்த்.
“நீங்க இலையைக் காலி பண்ணாம எழுந்துக்கக் கூடாது அண்ணா.” என்று குறிஞ்சி அவனை மிரட்ட, பாவமாக முழித்தான் அவன்.
“அண்ணிக்கு ஊட்டி விட்டு காலி பண்ணுங்க” என்று அவள் கலாட்டா செய்ய, துர்காவின் முகம் செந்நிறம் பூசியது. அவள் தலை கவிழ, ஶ்ரீகாந்த் தனக்குக் கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் அவளுக்கு ஊட்டி விட்டுத்தான் ஓய்ந்தான்.
மாலை தேநீர் நேரம் அவ்வளவு கலகலப்பாகக் கழிய, ரோஜா அங்கும் இங்கும் ஆடிக் கொண்டிருந்தவள் தேநீரை அம்மாவின் மேல் கொட்டி விட்டாள்.
துர்கா பட்டு புடைவையை வேகமாக உதற, “டக்குன்னு போய்க் கழுவு துர்கா. இல்லனா கறை பிடிச்சிரும்” என்றாள் குறிஞ்சி.
துர்கா வேகமாக எழுந்து மாடிக்குச் செல்ல அவளைப் பின் தொடர்ந்தான் ஶ்ரீகாந்த்.
“ஶ்ரீக்கா” என்று கத்தி அழைத்து ரோஜா அவர்களின் பின்னேயே ஓடப் போக, அவளைத் தடுத்து பிடித்தாள் குறிஞ்சி.
“நீ வா, நான் உனக்குத் தலை சீவி பூ வச்சு விடறேன்” என்று குழந்தையைத் தங்களின் அறைக்கு அழைத்துச் சென்றாள்.
ரோஜாவுக்கு முகம் கழுவி, தலை அலங்காரம் செய்து, அழகாக இரண்டு பக்க ஜடையிலும் பூ வைத்து அவளை அழகாக்கி விடவும், “ஆச்சி” என்று கத்திக் கொண்டு வெளியில் ஓடினாள் குழந்தை. குறிஞ்சியும் சேலையில் இருந்து இலகுவான உடைக்கு மாறி வெளியே வர, “இங்க வா குறிஞ்சி” என்று அவளை அழைத்து அவளுக்குத் தலை பின்னி பூ வைத்து விட்டார் நாச்சம்மை.
அந்நேரம் துர்காவும் ஶ்ரீகாந்த்தும் ஜோடியாக மாடியில் இருந்து கீழிறங்கி வர, குறிஞ்சியின் கண்கள் துர்காவின் மேலேயே அழுத்தமாகப் படிந்தன.
துர்கா புதுப் புடைவை மாற்றியிருந்தாள்.
“இந்தச் சேலை உனக்கு நல்லா இருக்கு துர்கா” என்று சத்தமாகச் சொன்ன குறிஞ்சி, மெதுவாக நடந்து அவளை நெருங்கி, “அப்புறம் கூச்சம் போய்டுச்சா துர்கா?” என்று அவளிடம் ரகசியம் போலக் கேட்டாள்.
அவர்களுக்கு மிக நெருக்கத்தில் நின்றிருந்த ஆண்கள் இவருக்கும் அது கேட்டு விட அவர்கள் பேச்சின் உள்ளர்த்தம் என்னவென்று முழுதாகப் புரியா விட்டாலும் ஏதோ கிண்டல், கேலி எனப் புரிந்து புன்னகையுடன் நின்றார்கள் அவர்கள்.
துர்காவின் முகம் வெட்க சிவப்பை பூசிக் கொள்ள, “பேசாம இரு குறிஞ்சி” என்று செல்லக் கண்டிப்புடன் சொன்னாள் அவள்.
“நான்தான் சொன்னேன்ல்ல? கல்யாணம் முடிஞ்சதும் கூச்சம்லாம் காணாம போயிடும்” என்று மேலும் அவள் கேலி செய்ய, துர்கா சேலை முந்தானையால் முகம் மூடினாள்.
“ம்க்கும்” என்று ஶ்ரீகாந்த் தொண்டையைச் செரும, “அடிப்பாவி குறிஞ்சியாத்தா உன் வாய்க்கு சென்சார் போடு, வா இப்படி” என்று மனைவியின் கைப் பிடித்து உள்ளே இழுத்துச் சென்றான் தயா.
“துர்கா இங்க வாடா” என்று அலமேலு அழைக்க, “தப்பித்தோம்” என்று அவரிடம் ஓடி விட்டாள் அவள். ஶ்ரீகாந்த் ரோஜாவுடன் அமர, பழனியப்பனும் அவர்களோடு இணைந்து கொண்டார்.
ஶ்ரீகாந்த் ரோஜா பிணைப்பு அவர்களுக்கு எவ்வளவு ஆச்சரியத்தை அளித்ததோ அதே அளவு மகிழ்ச்சியையும் தந்தது.
பாசமும், பிணைப்பும் ரத்த பந்தத்தால் மட்டுமல்ல நேசத்தாலும் துளிர்க்கும்தானே? அது நிலை பெற நேசம் போதுமே. அங்கும் அதுதான் நிகழ்ந்தது.
குறிஞ்சி அறைக்குள் நுழைந்ததும், “என்ன தயா, வெளில எல்லோரும் இருக்கும் போது என்னைய உள்ள தள்ளிட்டு வர்றீங்க? வெட்கம், கூச்சம்லாம் கிடையாதா உங்களுக்கு?” என்று குறும்பு புன்னகையுடன் கிண்டலாகக் கேட்க, “ரொம்பப் பேசுற நீ” என்று அவளின் உதட்டை சுண்டி விட்டான்.
“ஆமா, அதென்ன என் வாய்க்கு சென்சார் போடுறது? எப்டி போடுவீங்க?” என்று அவள் சந்தேகம் கேட்கும் போதே அவளின் இதழை தன்னிதழால் அணைத்து மூடி செயல் முறை செய்திருந்தான் தயா.
“ரூமுக்குள்ள ஓகே? வெளில வச்சு எப்படித் தயா சென்சார் போடுவீங்க?”
“உன் வாய் அடங்குதா பாரு” என்று மீண்டும் அவளின் உதட்டை சுண்டி விடப் போனவனின் விரல் அவள் முகம் சுழிக்கவும் அப்படியே கீழிறங்கியது.
முன் போல அவளிடம் கடுமை காட்ட முடியவில்லை அவனால்.
“ப்ரெக்னன்ட்டா இருந்தா இப்படியொரு பெனிபிட் இருக்கா. இம்புட்டு நாளும் எனக்கு இது தெரியாம போச்சே தயா. உங்க குடுமி இனிமே என் கையிலயா? சிறப்புச் சிறப்பு” என்று அவள் சிரிக்க, “இதுக்கெல்லாம் சேர்த்து வச்சு உனக்கு இருக்குடி” என்று அவளை இடையோடு சேர்த்து அணைத்தான்.
“சேர்த்து வச்சு என்ன குடுப்பீங்க தயா?” நமுட்டு சிரிப்புடன் நக்கலாக அவள் கேட்க, “என்னைய குடுக்கறேன் போதுமா?” என்று அவளைப் பேச விடாமல் செய்திருந்தான்.
அலமேலு துர்காவிற்குத் தலை பின்னி விட்டு, அவளின் பின்னலை நிறைத்து பூ சூடி விட்டார். ஶ்ரீகாந்த்தின் கண்கள் அடிக்கடி அவளைத் தொட்டு மீண்டன.
இரவு உணவு முடிந்ததும் வம்படியாக ஶ்ரீகாந்த்தை அழைத்துக் கொண்டு மாடியேறி விட்டான் தயா.
குறிஞ்சி, துர்கா கூட அங்குதான் இருந்தார்கள். அவர்கள் இருவரும் எதையோ தீவிரமாகப் பேசி கொண்டிருந்தார்கள்.
ஶ்ரீகாந்த்தின் பார்வை மீண்டும் துர்காவின் பக்கமே பாய, “அப்புறம் ஶ்ரீ” என்று அவன் தோளில் கைப் போட்டான் தயா.
“என்னடா ஶ்ரீங்கற? ஒழுங்கு மரியாதையா மச்சான்னு கூப்பிடு இனிமே. நான் உனக்கு அக்கா புருஷன் டா” என்று ஶ்ரீகாந்த் விறைப்பாகச் சொல்ல, “என்னடா மச்சான் சொன்ன?” என்று வேண்டுமென்றே அவனைச் சீண்டினான் தயாபரன்.
“டேய்..”
“என்னங்க மச்சா, நீங்க மட்டும் என்னைய மரியாதையே இல்லாம பேசுறீங்களே இது நியாயமா?”
“ஏன்டா தயா, இப்போ என்னடா வேணும் உனக்கு?”
“அப்படி வாங்க மச்சா வழிக்கு” என்று அவனைச் சீண்டி சீட்டி அடித்தவன், “நான் எங்க அக்காவை கூட்டிட்டு கீழ போறேன்” என்று வேட்டியை மடித்துக் கட்டினான்.
“டேய் டேய் தயா” என்று தவித்து அவன் கைப் பிடித்து ஶ்ரீகாந்த் தடுக்க, “மரியாதை மரியாதை மச்சான்” என்று மச்சானை மேலும் சீண்டினான் அவன்.
“டேய்..” என்று பல்லைக் கடித்தவன் உடனே தன்னைக் கட்டுப்படுத்தி ஒட்டு மொத்த பற்களையும் காட்டி புன்னகைத்து, “தயா..” என்று தொடங்க, தயாபரன் வெடித்துச் சிரித்து விட்டான்.