நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 26 (3)

ஶ்ரீகாந்த்தை தோளோடு சேர்த்தணைத்து, “தேங்க்ஸ் மச்சா, எனக்கு அதைத் தவிர வேற என்ன சொல்லன்னு தெரியல” என்றான் குரல் உடைய.

“டேய் தயா, என்னடா..”

“இல்ல ஶ்ரீ. எங்கக்காவ இப்படிப் பார்க்க மாட்டோமான்னு எவ்வளவு ஆசைப்பட்டு இருப்பேன் தெரியுமா? ஒரு கண்ணி பூ வைக்கக் கூடத் தயங்குவா அவ. சத்தமா சிரிக்க மாட்டா, மனசு விட்டு ஒழுங்கா பேச மாட்டா. குறிஞ்சி கூட மட்டும்தான் க்ளோஸா இருப்பா. ஆனா அவ உன் கூட இருக்கும் போது.. எனக்குச் சொல்ல தெரியல ஶ்ரீ. அவளை அப்படியே ஏத்துக்கிட்டதுக்கு..”

“திரும்பத் தேங்க்ஸ் சொல்லாதடாயப்பா. ஏற்கனவே ஏழு ஜென்மத்துக்கும் சேர்த்துத் தேங்க்ஸ் சொல்லிட்ட, போதும் விடு” என்று அவன் தோளில் தட்டி தேற்றினான்.

இப்போது துர்காவின் பார்வை அடிக்கடி அவர்கள் மேல் பாய, “அக்கா” என்று அவளை அழைத்தான் தயா.

“டேய் தயா” என்று உண்மையிலேயே ஶ்ரீகாந்த் பதற, “வாக்கா கீழ போலாம்” என்று அவளை அழைத்தான்.

துர்காவும் எழுந்து அவனிடம் வர, அவள் கைப் பிடித்து முன்னே நடந்து விட்டான் தயாபரன்.

“அடப்பாவி டேய் தயா” அலறியே விட்டான் ஶ்ரீகாந்த். ம்ஹும், ஒன்றும் வேலை செய்யவில்லை. அக்காவை அழைத்துக் கொண்டு கீழிறங்கி விட்டான் அவன். அவர்களை வால் பிடித்துக் குறிஞ்சியும், ரோஜாவும் கூடவே செல்ல, “பட்டு ரோஜா, நீ என்கிட்ட வா தங்கம்” என்று குழந்தையை அழைத்தான். அவள் உடனே அவனிடம் ஓடி வர, “நீயாவது இன்னும் கட்சி மாறாம இருக்கியே. அது போதும் எனக்கு” என்று அவன் சொல்ல, குழந்தைக்குத் தூக்கம் வந்தது போலும். அவனைத் தூக்க சொல்லி கைக் தூக்கினாள். அவன் தூக்கவும், அவன் தோளில் சாய்ந்து விட்டாள்.

அவர்கள் கீழிறங்கியதும் தயாபரன் வந்து ரோஜாவை வாங்கினான்.

“டேய் தயா என்னடா?” என்று ஶ்ரீகாந்த் பரிதவிக்க, “பொறுமை புது மாப்ள” என்று மச்சானை சீண்டினான் அவன். ஶ்ரீகாந்த் முதலில் நண்பன் தானே. அந்த உரிமையை இப்போதும் எடுத்துக் கொண்டான் தயா.

“துர்கா, சந்தோஷமா இரு.” என்று பெரிய மனுஷி போலச் சொன்ன குறிஞ்சி, “ரோஜா எங்களோட இருக்கட்டும். நான் அம்மா வீட்டுக்கு போறேன். காலையில பார்க்கலாம்” என்று அவள் மறுக்க வாய்ப்புக் கொடுக்காமல் ரோஜாவுடன் அம்மா வீடு நோக்கி நடந்தாள் குறிஞ்சி. துர்கா வேகமாக வந்து மகளின் முகம் தாங்கி, அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு அனுப்பினாள்.

“இப்போ மேல போங்க மச்சா” என்று புன்னகையுடன் சொல்லி ஶ்ரீகாந்த் தோளை அழுத்திக் கொடுத்து தானும் மனைவியைப் பின் தொடர்ந்தான் தயாபரன்.

துர்கா, ஶ்ரீகாந்த் மாடி அறையைத் திறக்க, குப்பென்று பூ வாசம் அவர்களின் முகத்தில் அறைந்தது. அறையின் மிதமான அலங்காரம் காணவே இதமாக இருந்தது.

ஶ்ரீகாந்த் கதவை அடைத்த கையோடு மனைவியை அணைத்தான். துர்கா அவன் அணைப்பில் பொருந்தி நின்றாள்.

இதற்கு முன் வாழ்க்கை அவளுக்குக் கசப்பையே தந்திருந்தது.

ஶ்ரீகாந்த் அவளைக் கசக்காமல் காதல் பாடம் படித்ததால் அவளுக்கு இனித்தான். முத்தத்தில் தொடங்கி மொத்தமாகக் கரைந்து மொத்தமானார்கள். இரவு இனிதாக இருவரையும் இணைத்தது.

error: Content is protected !!
Scroll to Top