நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 26 (1)

துர்கா – ஶ்ரீகாந்த் திருமண நிச்சயம் தேவக்கோட்டையில் வெகு விமர்சையாக நடந்து கொண்டிருந்தது.

உண்ணாமலை சிதம்பரம் தம்பதிகளின் ஒரே புதல்வன் ஶ்ரீகாந்த், ஊருக்குள் அவர்களுக்கு மிகுந்த செல்வாக்கு வேறு, பின்னே கேட்கவும் வேண்டுமா? தயாபரன் உறவுகள் பிரமித்துதான் போனார்கள்.

பலர் மெய்யாகவே துர்காவுக்காக மகிழ, சிலர் பொறாமையால் சலசலக்கவும் செய்தனர்.

“ம்மா, யார் என்ன பேசினாலும் காதுல போட்டுக்காதீங்க” என்று திருமண விழா ஆரம்பித்ததுமே நாச்சம்மையிடம் சொல்லி விட்டான் தயாபரன். அதனால் நாச்சம்மையும் தேவைக்கு அதிகமாக யாரிடமும் பேசவில்லை. அதற்கு அவருக்கு நேரமும் இல்லையே.

குறிஞ்சி, துர்காவின் நிழலாக நிற்க, தயாபரன் ஶ்ரீகாந்த்துடன் இருந்தான்.

பெரியவர்கள் வந்தவர்களை வரவேற்க, உபசரிக்க எனப் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்க, ரோஜாவை தன்னுடன் வைத்துக் கொண்டார் உண்ணாமலை.

“அப்பத்தா கைய பிடிச்சுக்கோ ராசாத்தி” என்று அவளின் சுண்டு விரலை பிடித்துக் கொண்டு மண்டபம் முழுக்கச் சுற்றி வந்தார்.

அவரது உறவினர் குடும்பம் வர அவர்களை இடம் பார்த்து அமரச் செய்து கொண்டிருந்தவரை, “பெரியம்மா..” என்று குறிஞ்சி அழைக்கவும் சட்டெனத் திரும்பினார்.

“என்னத்தா குறிஞ்சி?”

“பெரியம்மா, ரோஜாவ நான் கூட்டிட்டு போகட்டுமா?”

“இத கேட்கவா இறங்கி வந்த? ஒரு எடத்துல அமைதியா உக்காருன்னு உன்னைய சொன்னேனா இல்லையா நானு?” என்று அவளை உரிமையாகக் கடிந்து கொண்டார். இதே உண்ணாமலைதான் பெரியம்மா என்று அழைத்ததற்கு அவளை முன்னர்க் கோபித்தார் என்று சொன்னால் அவளாலேயே நம்ப முடியாது இப்போது. ஏனெனில் மனுஷி அப்படி மாறியிருந்தார். அதை மாற்றம் என்பதை விடத் துர்காவை தன் குடும்பமாக ஏற்றுக் கொண்டதால் வந்த இணக்கம் என்று எடுத்துக் கொண்டாள் அவள்.

குறிஞ்சியின் கர்ப்பச் செய்தியை தற்போதைக்கு யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று நாச்சம்மை சொல்லியிருந்தார். ஆனால் மறுநாள் மருத்துவமனை சென்று பரிசோதனை வாயிலாகக் கர்ப்பத்தை உறுதி செய்து விட்டு வந்ததும் ஶ்ரீகாந்த் குடும்பத்திற்கு மட்டும் தகவல் சொல்லி விட்டார் நாச்சம்மை.

உண்ணாமலை, சிதம்பரம் அப்போதே நேரில் வந்து குறிஞ்சியைப் பார்த்துச் சென்றார்கள். இப்போதும் அவளை அப்படிக் கவனிக்கிறார் அவர்.

“ஏதாவது சாப்பிட்டியா குறிஞ்சி? டிஃபன் ரெடியாம் நீ சாப்பிடு வா. வெறும் வயித்தோட சுத்தாத, இந்தா இந்தப் பழத்தை சாப்பிடு” என்று அக்கறையாக அன்பை பொழிந்தார். மருமகளின் நாத்தனாரையே இப்படிக் கவனிப்பவர், நாளை தன் மருமகளை எப்படிக் கவனிப்பார் என்று அதிலேயே அவளுக்குப் புரிந்திட, குறிஞ்சி நெஞ்சில் நிம்மதி நிறைந்தது.

“ரோஜா குட்டி எங்கிட்டயே இருக்கட்டும். இந்தக் குட்டி அங்கிட்டு இங்கிட்டு ஓடும், உன்னால ஓட முடியாது. நீ போய்த் துர்காவோட இரு. போ” என்று அவளை விரட்டினார்.

“சரிங்க பெரியம்மா” என்று மேடைக்குச் சென்று விட்டாள் அவள்.

இங்கே, “அந்தப் பொண்ணு உன் சம்மந்தி கடையில வேலைப் பார்க்கற அலமேலு மகதானே?” என்று உறவுக்கார பெண்மணி உண்ணாமலையிடம் விசாரித்தார். அவர் கேட்ட தொனியிலேயே இளக்காரம் தெறித்தது. அந்நேரம் அவரின் மகள் ஶ்ரீமதி வர அவளுடன் ரோஜாவை அனுப்பி வைத்தார்.

“ஆமா, அவங்க மகதேன். இப்போ என் சம்மந்தி மருமக. இங்கனதேன் பிரைவேட் ஹாஸ்பிடல்ல நர்ஸா இருக்கா” என்றார்.

“உனக்கு இருக்க வசதிக்கு போயும் போயும் இவங்க வீட்ல பொண்ணு எடுக்கற.. அதுவும் இந்தப் பொண்ண போய்.. நாங்க கொண்டு வந்த வரனையெல்லாம் வேணாம்னுட்டு இவங்க வீட்ல போய்..” என்று அவர் சொல்லி முடிக்கும் முன் இடையிட்டு, “எங்க வந்து என்ன பேசுறீங்க அத்தாச்சி? என் மருமக கிட்ட என்னா குறையக் கண்டுட்டீங்க நீங்க?” என்று அவரின் முகத்துக்கு நேராகக் கேட்டார் உண்ணாமலை.

“இல்லத்தா, பொம்பளை பிள்ளையோட இருக்கவளை போய்..” என்று அவர் இழுக்க, உண்ணாமலை கோபத்தில் பல்லைக் கடித்தார். அவர்கள் ஓரமாக நின்றுதான் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் ஆயிரம் பேர் இருக்கும் கல்யாண மண்டபத்தில் அவர்களின் பேச்சு நாலு பேர் காதில் விழுவதைத் தவிர்க்க முடியாதுதானே?

“உங்க மகளுக்குப் போன வருஷம்தானே ரெண்டாவது கல்யாணம் பண்ணி வச்சீங்க அத்தாச்சி? நீங்க இந்தக் கேள்வியைக் கேட்கலாமா?” என்று அவரின் முகத்துக்கு நேராகக் கடுமையாக உண்ணாமலை கேட்க, “அது வந்து..” என்று திணறி வாய் மூடினார் அந்தப் பெண்மணி.

“நம்ம வீட்டு பொண்ணுக்கு மட்டுமில்ல, அடுத்த வீட்டு பொண்ணுக்கும் அதே வாய்ப்பு கொடுக்கணும் நாம, அவங்களுக்கும் தயவு காட்டணும். எல்லாரும் வாழணும்னு நினைங்க அத்தாச்சி. மனுஷனா பொறந்த எல்லோர்கிட்டயும்தான் குறை இருக்கு. அதையே பார்த்து பெருசு பண்ணிட்டு இருந்தா யாரும் இங்கன வாழவே முடியாது.” என்று தன் மனத்தில் இருந்ததைக் கொட்டி விட்டு அவர் திரும்ப அங்கே தோரணையாக நின்றிருந்தார் கற்பகம்.

“அடுத்து இந்தக் கொசு தொல்லையா?” என்று அவரை அசட்டை செய்து முன்னே மண்டபம் நோக்கி நடந்து விட்டார் அவர்.

கற்பகம் அப்படியெல்லாம் அசருபவரா என்ன? அவரைப் பின் தொடர்ந்து சென்று மேடைக்குச் செல்லும் வழியில் ஒதுக்குப் புறமாக அவரைத் தடுத்து பிடித்து விட்டார்.

“நான் அம்புட்டு எடுத்து சொல்லியும் கேட்காம துர்காவை போய்..” என்று கற்பகம் கசப்புடன் சொல்ல, “இதே துர்காவை தானே உங்க உத்தம ரத்தின புத்திரனுக்கு முடிக்கணும்னு இருந்தீங்க? அதுக்குதானே உங்க தம்பி வீட்டுக்கு நடையா நடந்தீங்க? ஏன் அப்ப தெரியலையா என் மருமக குணம் உங்களுக்கு? அப்போ மட்டும் காசு கண்ணுக்கு தெரிஞ்சுதோ?” என்று கடுமையாகக் கேட்டு விட்டார்.

“முன்னாடி எப்படியோ இனிமே என் மருமக இருக்கப் பக்கம் வந்தீங்க ஆத்தாளும் மவனும், அம்புட்டுதேன் ஆள் அட்ரஸ் இல்லாம பண்ணிடுவேன் உங்களை. பார்த்துக்கோங்க” என்று குரலை உயர்த்தாமல் மிரட்டினார்.

“என்னா மிரட்டுறீங்க இதுக்கெல்லாம் பயப்படுற ஆளு நான் இல்ல” என்று கற்பகம் திமிராகச் சொல்ல, “அதான் தெரியுமே. ஆனா நீங்க எப்படி என்னைய தூண்டி விடப் பார்த்தீங்களோ அதே போல நான் உங்க முன்னாள் மருமகளைத் தூண்டி விட்டுருவேன். எப்படி வசதி? அப்புறம் அவ கம்ப்ளைண்ட் கொடுத்தா உங்க புள்ளை கம்பி எண்ண வேண்டியிருக்கும். என்ன செய்யவா? நான் உங்க அளவுக்குத் தரம் இறங்க மாட்டேன். ஆனா என் பிள்ளைங்களுக்கு ஒன்னுன்னா எதுவும் பண்ண துணிவேன்.” என்று தீர்க்கமாக எச்சரித்தார்.

“உங்கனாலதேன் இந்தக் கல்யாணத்துக்கே நான் சம்மதிச்சேன். அதுனாலதேன் உங்களை ரொம்பப் பேசாம விடணும்னு பார்க்கறேன். அது உங்களுக்குப் புரிய மாட்டேங்குது” என்று அவர் சொல்லவும், “என்னால இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிச்சீங்களா?” என்று நம்ப இயலாத அதிர்ச்சியுடன் கேட்டார் கற்பகம்.

“அப்புறம்? அம்புட்டு நாளும் நான் துர்காவ பத்தி ஊர் உலகம் சொல்றத எல்லாம் நம்பிட்டு இருந்தேன். ஆனா நீங்க உண்மையைச் சொன்னதுக்கு அப்புறம்தேன் அவ ஏமாந்து வந்திருக்கான்னே எனக்குத் தெரிஞ்சது. வாழ்க்கையில ஏற்கெனவே அடிப்பட்டு ஏமாந்து வந்தவள நானும் ஏமாத்த விரும்பல. அவ நினைச்சிருந்தா அப்பவே பிள்ளையை அழிச்சிட்டு அழகா சத்தமில்லாம யாருக்கும் தெரியாம, ஊர் உலகத்துக்கு மறைச்சு அவளுக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைச்சுட்டு போய் இருக்கலாம். ஆனா, அவ அதைச் செய்யல பாருங்க. என்னமோ அப்பவே அவ மேல ஒரு நல்லெண்ணம் வந்திருச்சு எனக்கு. எம் பிள்ளைங்க நல்லா இருக்கணும். நல்லா இருப்பாங்க. நீங்க எல்லாம் இந்தக் கல்யாணத்துக்கு வந்ததும் நல்லதா போச்சு. என் பிள்ளைங்களுக்குத் திருஷ்டி கழிஞ்சு போகும்” என்று அவர் சொல்லவும், பதிலுக்கு முணுமுணுத்து கழுத்தை ஒடித்துத் திருப்பிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தார் கற்பகம்.

பழனியப்பன் அக்காவை மரியாதையாக வரவேற்று பேசினார். என்றாலும் அதில் பாசம் துளியும் இல்லை என்பதைக் கண்டு கொண்டார் கற்பகம்.

அன்றிரவு நிச்சயதார்த்தம் முடிந்ததும் குடும்பத்துடன் வெளியேறி விட்டார். கல்யாணத்துக்கு நிற்கவில்லை.

“நல்லதா போச்சு” என்று பெருமூச்சு விட்டார் நாச்சம்மை. தன் மக்களை நாலு நல்ல மனங்கள் வாழ்த்தினால் போதும் என்றிருந்தது அவருக்கு.

மறுநாள் பொழுது அனைவருக்கும் அத்தனை அழகாகப் புலர்ந்தது.

ஶ்ரீகாந்த் – துர்கா திருமணம் சிறப்பாக நடந்து முடிந்திருந்தது.

மகளை மணக்கோலத்தில் காணும் ஏக்கம் நிறைவேறியதில் அவளைப் பெற்றவர்கள் மனம் நிறைய, கண்கள் கலங்க மனதார அவர்களை ஆசீர்வதித்தார்கள்.

“மச்சான்” மனம் நெகிழ ஶ்ரீகாந்த்தின் கைப் பிடித்துக் கொண்டான் தயா.

அவன் கையை ஆறுதலாக அழுத்தி கொடுத்தான் ஶ்ரீகாந்த்.

துர்காவை பிரிவதை விட ரோஜாவை பிரிவதுதான் அவன் வீட்டினருக்கு பெரும் கொடுமையாக இருந்தது.

“ரோஜா குட்டி நம்ம வீட்ல இருக்கட்டும்” என்று நாச்சம்மை தயங்கி தயங்கி சொல்ல, “என்னாத்துக்கு அம்மாவையும் பிள்ளையையும் பிரிக்கறீங்க அத்தாச்சி? இந்தக் குட்டி என் கூட இருக்கட்டும். நான் பார்த்துக்கறேன் இவளை” என்று திட்டவட்டமாகச் சொல்லி விட்டார் உண்ணாமலை.

குறிஞ்சியும், தயாவும் ரோஜாவையே கண்ணெடுக்காமல் பார்த்திருந்தனர். அவர்கள் திருமணத்தின் முதல் முடிச்சே ரோஜாவில் இருந்து தானே தொடங்கியது. அவளை வளர்க்கத்தானே அவர்கள் திருமணத்துக்கே சம்மதித்தார்கள்.

“ரோசு அத்த கூட வரியா? நம்ம வீட்டுக்கு போகலாம்?” என்று ஆசைக் காட்டி அழைத்த மனைவியை முறைத்தான் தயாபரன்.

“இல்ல தயா. துர்கா கொஞ்ச நாளைக்கு ஃப்ரீயா இருக்கட்டும்னு” என்று அவள் தயக்கத்துடன் இழுக்க, “அத அக்கா முடிவு பண்ணட்டும்” என்று விட்டான் அவன்.

“குறிஞ்சி, தயா மாமா, ஐயா” என்று அவர்கள் அனைவரையும் அழைத்து, “டாட்டா” என்று அவர்களுக்குச் சந்தோஷமாக ஶ்ரீகாந்த்தின் கைப் பிடித்து விடை கொடுத்தது குட்டி வாண்டு.

“பை ரோசு” என்று குறிஞ்சிதான் அவர்களுக்குச் சோகமாகக் கையசைத்தாள்.

error: Content is protected !!
Scroll to Top