அவள் குளித்துச் சமையலில் மாமியாருக்கு உதவி, பூஜைக்கு அனைத்தையும் எடுத்து வைக்க, அந்நேரம் கடையில் இருந்து திரும்பி வந்தார்கள் அப்பாவும், மகனும்.
துர்கா, “எங்களுக்கு ஸ்கூலுக்கு டைம் ஆகுதும்மா” என்று பரபரக்க, எட்டரை மணி போல அலமேலுவும் அங்கு வந்து விட, அனைவரும் ஒன்றாக நின்று சாமி கும்பிட்டார்கள். வீட்டுப் பெரியவர்கள் மூவரும் குறிஞ்சி, தயாவை ஆசீர்வதித்துத் திருநீறு பூசி விட இது எப்போதும் நடப்பதுதானே என இயல்பாக நின்றிருந்தாள் குறிஞ்சி.
“ஆட்டோ வர சொல்லிட்டியா தயா?” நாச்சம்மை கேட்க, “சொல்லிட்டேன்ம்மா. பாஸ் இப்போ வந்துடுவான்” என்றான் தயா.
குறிஞ்சி சோஃபாவில் சாய்ந்து அமர, “குறிஞ்சி எந்திருச்சி போய் ஹேண்ட்பாக் எடுத்துட்டு வா” என்று மகளை விரட்டினார் அலமேலு. கணவனைக் கண்களால் தேடி அவனுக்குக் கண் காட்டி விட்டு அறைக்குள் சென்றாள் அவள்.
அவளின் பார்வையைப் புரிந்து பின் தொடர்ந்தான் தயா.
“என்னடி லுக் அது?” அறைக் கதவை மூடி அவன் கேட்க, அவன் மார்பில் சாய்ந்து, “எங்க போறோம்?” என்று கேட்டாள்.
“இந்தக் கேள்வியெல்லாம் கேட்கக் கூடாதுன்னு தெரியாதா உனக்கு?” அவளின் இடையில் வலிக்காமல் கிள்ளி கேட்டான்.
“எனக்கு எதுவும் தெரியாது. ஆமா, குடும்பம் மொத்தமும் கிளம்பி நிக்கறோமே எங்க போறோம், சொல்லுங்க?” என்று கேட்டாள். அவனோ கள்ளச் சிரிப்புடன் அவளையே பார்த்து நின்றான்.
“அதை உன் மாமியார்கிட்ட கேட்க வேண்டியதுதானே?”
“அபசகுணமா கேட்காதன்னு திட்டுவாங்க. நீங்க சொல்லுங்க” என்று சலுகையாக அவனிடம் கெஞ்ச, “கோவிலுக்குன்னு பேசிக்கிட்டாங்க” என்றான்.
“அப்போ உங்களுக்கும் தெரியாதா? பொய் சொல்லாதீங்க” என்று சந்தேகமாக அவனைப் பார்க்க, சத்தமாகச் சிரித்து விட்டான் அவன்.
அப்போது, “தயா, ஆட்டோ வந்தாச்சு” என்று பழனியப்பன் அழைக்கவும், “வா, போகலாம்” என்று மனைவியின் கேள்விக்குப் பதில் சொல்லாமல், அவளை வெளியே அழைத்துச் சென்றான்.
பெரியவர்கள் மூவரும் ஆட்டோவில் வர, அவர்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் சென்றார்கள்.
மழை நனைத்த சாலையில் வண்டி சீரான வேகத்தில் விரைய, “தயா” என்று அவன் தோளை சுரண்டினாள்.
“அஞ்சே நிமிஷத்துல உனக்கே தெரிய போகுது. பொறுமை குறிஞ்சியாத்தா” என்றான் கிண்டலாக. அவன் சொன்னது போலவே அடுத்த ஐந்தாம் நிமிடம் அவர்கள் சென்று இறங்கிய இடம் சார் பதிவாளர் அலுவலகம்.
“தயா, இங்க எதுக்கு வந்திருக்கோம்? நம்ம மேரேஜ் தான் எப்பவோ ரெஜிஸ்டர் பண்ணியாச்சே?”
“கேள்வியின் நாயகியே குறிஞ்சியாத்தா, பேசாம வாடி” என்று அவளின் கைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றான். பெரியவர்கள் மூவரும் உள்ளே காத்திருந்தார்கள்.
“ம்மா” என்று அலமேலுவை பிடித்துக் கொண்டாள் இப்போது.
“உன் பேர்ல எடம் வாங்குறோம் பாப்பா” என்று உண்மையைச் சொல்லி விட்டார் அவர்.
“என்னம்மா சொல்ற எடமா? அவ்ளோ காசு ஏதும்மா நம்மகிட்ட?” என்று சந்தேகமாகக் கேட்டவள், அதே சந்தேகக் கண்களுடன் திரும்பி கணவனைப் பார்த்தாள்.
“குறிஞ்சி, வா வந்து இதுல சைன் போடு” என்று வேலையில் இறங்கினான் அவன். அவன் நீட்டிய பத்திரத்தை வாங்கிப் படித்தவள் அதிர்ச்சியுடன் அவனை நோக்கினாள்.
“எப்படித் தயா?”
“காசு நீதானே குடுத்த?” என்று அவளின் கேள்விக்கு எதிர்கேள்வி கேட்டான் அவன். ஒரு மாதத்துக்கு முன் அவளிடம், “உன் பேங்க்ல சேவிங்ஸ் எவ்வளோ இருக்கு குறிஞ்சி?” என்று கேட்டு அவளிடம் இருந்து சில லட்சங்களை வாங்கியிருந்தான். அது துர்காவின் கல்யாண தேவைக்கு போல என்றே நினைத்திருந்தாள் அவள்.
“அது.. அந்த அமௌன்ட் வச்சா இவ்ளோ பெரிய இடத்தை முடிச்சீங்க? இதுல அமௌன்ட் இன்னும் அதிகமா போட்டு இருக்கே” என்று சுட்டிக் காட்டி அவள் கேட்க, “மிச்ச பணத்தை அத்த கொடுத்தாங்க” என்று அவளின் அம்மாவை கண் காட்டினான்.
“உங்கம்மாக்கு வீடு வாங்கிக் கொடுக்கணும்னு ஆசைப்பட்ட இல்ல? இப்போ உன் பணத்துலேயே வாங்கியாச்சு போதுமா?” என்று கேட்டான். அவள் விழிகள் மெல்ல விரிந்து அவனை ஏறிட்டன. அதில் மகிழ்ச்சி மின்ன, “என்ன?” என்று புருவம் உயர்த்தினான்.
“தேங்க்ஸ்” என்றாள், அவன் கைக் கோர்த்து.
“ஏய், எல்லோரும் பார்க்கறாங்க. கைய விடு குறிஞ்சி” என்று அவன் கிசுகிசுக்க, “பார்க்கட்டும் போங்க” என்றாள் அலட்டிக் கொள்ளாமல்.
“அடுத்து நம்மதான்பா தயா” என்று பழனியப்பன் அழைக்க, இருவரும் முன்னே சென்றார்கள்.
“நீ கூட என்கிட்ட சொல்லலம்மா?” என்று சலுகையாக அம்மாவிடம் செல்லக் கோபம் காண்பித்தாள்.
“அம்மா எதிர்பார்க்கவே இல்லடா. என்னமோ சட்டுன்னு இந்த இடம் அமைஞ்சிருச்சு. என் பொண்ணு ஆசைப்பட்டது நடந்தா போதும்னு உடனே பேசி முடிக்கச் சொல்லிட்டேன் தயா தம்பிய” என்றார்.
அக்கணம் அவளின் கனவெல்லாம் நிஜமான மகிழ்வு அவள் முகத்தில் முறுவலை வரவழைத்தது.
அம்மாவை இங்கிருந்து அழைத்துப் போக வேண்டும். தங்களுக்கு எனத் தனியாக ஒரு வீடு வேண்டும் என்று அவளுக்கு எத்தனையோ கனவுகள் இருந்தன. இப்போது அவள் கண் முன்னிருந்த இந்த நிஜம் இன்னுமே அழகாக இருந்தது.
பத்திர பதிவு நல்லபடியாக நடந்து முடிந்து வெளியில் வந்தார்கள். வீட்டினர் அனைவரும் ஏற்கனவே இடத்தைப் பார்த்திருந்தார்கள். குறிஞ்சி மட்டுமே பார்த்திருக்கவில்லை. இப்போது அவளோடு அனைவரையும் அங்கு அழைத்துச் சென்றான் தயாபரன்.
அமராவதி புதூரில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது, நெடுஞ்சாலையை ஒட்டிய அந்தச் சிற்றூர். நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்த கிளைச்சாலையில் ஐந்து நிமிடம் பயணித்தால், அவர்களின் முன்னே இருந்தது சிறிய தோட்டப் பகுதி, அதன் மையப் பகுதியில் ஒற்றைப் படுக்கையறை கொண்ட பெரிய வீடு அழகாகக் கண் முன்னால் காட்சி தந்தது.
அந்த வீட்டை சுற்றிலும் மா, வாழை, தென்னை மரங்கள் இருக்க, ஒரு பக்கம் காய்கறி தோட்டம் அமைத்திருந்தார்கள். அந்த இடம் பார்க்கவே அத்தனை பசுமையாக இருந்தது.
“ம்மா, நீ இந்த வீட்டுக்கு வர போறியாம்மா?” ஆச்சரியம் விலகாமல் குறிஞ்சி கேட்க, “அப்போ நம்ம வீட்டுக்கு நீ வரலையா பாப்பா?” என்ற கேள்வியால் மகளுக்குக் கிடுக்கு பிடி போட்டார் அலமேலு.
“ம்மா” எனத் தடுமாறியவள் திரும்பி கணவனைப் பார்க்க, “என்னை எதுக்குப் பார்க்கற? அத்த கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லு நீ” என்றான் கண்ணால் சிரித்து.
“இதற்குதானே ஆசைப்பட்டாய் குறிஞ்சி?” என்று அவன் கண்கள் கேலியாகக் கேட்க, “அம்மா மட்டும் எப்படி இங்க தனியா இருப்பாங்க?” என்று கவலைப்பட்டாள் அவள்.
“என்னைக் கேட்டா? நீதானே வீடு வாங்கித் தரணும்னு ஆசைப்பட்ட? நீ சொன்னதை நான் செஞ்சுட்டேன். இனிமே..” உன் பாடு எனச் சொல்லாமல் சொல்லி தோள் குலுக்கினான்.
அம்மாவையும் கணவனையும் அப்பாவியாகப் பார்த்து நின்றாள் அவள்.
“நம்ம கடைக்கு மசாலா, இடியாப்ப, இட்லி மாவு அரைக்க இங்கன மெசின் போட போறோம் பாப்பா. வீட்ட இப்போதைக்கு வாடகைக்கு விட்டுட்டு நாள பின்ன நானு இங்கிட்டு வந்துடலாம்னு இருக்கேன்” என்று அவர் சொல்ல, சரியெனத் தலையைத்தாள். இன்னமும் அவளால் நடப்பதை நம்பவே முடியவில்லை. அவளின் பல வருடத்தைய கனவு அது. ஒரே நாளில் நிஜமாகி இருக்க, அம்மாவின் கைப் பிடித்து அந்த வீட்டையே சுற்றி வந்தாள்.
“நீயாம்மா காசு குடுத்த?” என்று அவள் சந்தேகமாகக் கேட்க, “ஆமா பாப்பா. அம்மா இம்புட்டு வருஷமா சேர்த்து வச்சது. உன் கல்யாண செலவு போகப் பேங்க்ல இருந்த பணம் பாப்பா. இம்புட்டு வருஷமா சீட்டு அது இதுன்னு போட்டுச் சேர்த்தது. நீயும் பெரிய தொகை கொடுத்ததா மாப்ள சொன்னாரே” என்று அலமேலு சொல்ல, “மொத்தமா நானே உனக்கு வாங்கிக் கொடுக்கணும்னு நினைச்சேன்ம்மா” என்றாள்.
“இப்பவும் உன் ஆசைக்காகதான்டா மாப்ள இந்த இடம் விலைக்கு வருதுன்னு என்கிட்ட சொன்னார். உன்னாலதேன் இந்த இடம் இப்போ நம்மளுக்குச் சொந்தமாகியிருக்கு” என்று அவளின் கன்னம் வழித்து முத்தமிட்டார்.
“அப்பா இருந்தா ரொம்பச் சந்தோஷப்பட்டிருப்பாங்க பாப்பா. எம் மக வாங்கிக் கொடுத்ததுன்னு ஊரெல்லாம் பெருமை பேசியிருப்பார்” என்றார் நெகிழ்ச்சியுடன்.
“ஆமா, அண்ணே ரொம்பச் சந்தோஷப்பட்டிருப்பாரு” என்றார் அவர்களின் பேச்சைக் கேட்டபடியே வந்த நாச்சம்மை.
“அத்த” என்ற குறிஞ்சிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவளை வாஞ்சையுடன் பார்த்து, “உங்க மாமா மாத்திர போடணும். கிளம்புவோமா குறிஞ்சி” என்று கேட்டார்.
“துர்கா கல்யாணம் முடிஞ்சதும் நிதானமா ஒரு நாள் வந்து இங்கன இருந்துட்டு போவோம் என்னா?” என்று அவர் கேட்க, சரியெனத் தலையசைத்தாள். நாச்சம்மை என்பதால் அவளுக்கு இத்தனை சலுகை. இதுவே அவள் வேறு வீட்டிற்கு மருமகளாகச் சென்றிருந்தால் இப்படியெல்லாம் அம்மா வீட்டுக்குச் செலவு செய்ய விடுவார்களா என்ன? அந்த வகையில் அவள் நிரம்பக் கொடுத்து வைத்தவள்தான் என மலர்ந்த முகத்துடன் அவரைப் பார்த்திருந்தாள்.
“கடைக்குப் போகணும்ப்பா” என்று பழனியப்பன் சொல்லவும், அங்கிருந்து கிளம்பினர். அப்போதே மழை தூறலாகத் தொடங்கி விட்டது.
“தயா, ஓரமா நிப்பாட்டுங்க” என்று கத்தினாள்.
“ஃபைவ் மினிட்ஸ் குறிஞ்சி போயிடலாம்” என்று லேசாக அவள் புறமாகத் தலையைத் திருப்பிக் கத்தினான். தன் புடைவை தலைப்பை அவனுக்கும் சேர்த்தே போர்த்தினாள்.
இருவரும் நேராக வீட்டுக்குச் சென்றார்கள். நாச்சம்மை பத்திரத்தை வாங்கிப் பூஜை அறையில் வைத்து வணங்க, அம்மாவுடன் சேர்ந்து நின்றாள் குறிஞ்சி.
தயா கடையில் இருந்து உணவை வரவழைத்தது விட்டான்.
மதிய உணவு உண்டதும், “என்னைய காலையில சீக்கிரமா எழுப்பி விட்டுட்டீங்க. எனக்குத் தூக்கமா வருது. வாங்க நம்ம வீட்டுக்கு போவோம்” என்று கணவனின் கைப் பிடித்து இழுத்தாள் குறிஞ்சி.
“இங்கேயே உன் ரூம்ல படு பாப்பா” என்று அலமேலு சொல்ல, “இல்லம்மா, எங்க வீட்டுக்கு போகவா? ட்ரெஸ் மாத்தணும்” என்றாள், பட்டு புடைவையைச் சுட்டிக் காட்டி.
“உன் நைட்டி இங்க இருக்கேடா, மாத்திக்கோ” என்றார். அதற்கு மேல் மறுக்க விரும்பாமல், அறைக்குள் சென்றாள்.
“நீ படு, எனக்குக் கொஞ்சம் வெளில வேலை இருக்கு. நான் இப்போ வந்துடுறேன்” என்று சொல்லி வெளியேறினான் தயாபரன்.
குறிஞ்சி பட்டுச் சேலையுடன் படுத்து விட்டாள். முன்தினம் போலவே அவளைச் சோர்வு போட்டு அழுத்தியது. இத்தனைக்கும் இன்று வேலைக்குக் கூடச் செல்லவில்லை. மிகவும் மகிழ்ச்சியாகதான் இருக்கிறாள். ஆனால், காரணமின்றி உடலில் ஒருவித சோர்வு அப்பியிருந்தது.
“குறிஞ்சி” தூறலில் நனைந்த ஈரத்துடன் வந்து அவளை எழுப்பினான் தயா.
“தயா..” என்று சிணுங்கி தூக்கத்திலேயே முகம் சுழிக்க, “குறிஞ்சி பிளீஸ் எழுந்துக்கோ” என்று கெஞ்சினான்.
“என்ன நீங்க, எப்போ பாரு..” என்று சினந்து சீற போனவளின் வாயை மென்மையாக மூடினான்.
“கண்ண தொற குறிஞ்சியாத்தா” அந்தக் குரலுக்குக் கட்டுப்பட்டுக் கோடாகக் கண்ணைத் திறந்தாள்.
“இந்தா போய் டெஸ்ட் பண்ணிட்டு வா” என்று அவள் கையில் மருந்தகத்தில் இருந்து வாங்கி வந்திருந்ததை வைத்து அழுத்தினான். அவள் முகத்தில் சட்டெனப் பரவியது குழப்ப ரேகைகள்.
“தயா, இது..” எதுக்கு? என்ற கேள்வியை முடிக்காமல் அவனையே பார்த்திருந்தாள்.
அவள் கண்கள் கேட்ட கேள்விக்கு, “அதுக்குத்தான் குறிஞ்சியாத்தா” என்றான் குறுநகையுடன். அவனது முகமே வசீகரமாகி விட, அவனையே ஆவென்று பார்த்திருந்தாள். அவளின் தோளில் கைக் கொடுத்து தூக்கி விட்டான்.
“லேட் பண்ணாம போய்ச் செக் பண்ணிட்டு வா”
“இப்பவும் அதட்டறீங்க”
“அப்புறமா செல்லம் கொஞ்சுறேன்டி. இப்போ எழுந்து போய் இதைச் செக் பண்ணிட்டு வா” என்று சொன்னதோடு நிற்காமல் அவளை அலேக்காகத் தூக்கி கொண்டு போய் ஓய்வறையில் விட்டான்.
அவன் வேட்டியை மடித்துக் கட்டவும், கண்ணை விரித்து அவனைப் பார்த்து, மேற்கொண்டு என்ன செய்வானோ என்று மிரண்டு, அவனை வெளியே தள்ளி கதவை தாழிட்டாள்.
“குறிஞ்சி”
“பொறுமையே கிடையாதா உங்களுக்கு?”
“உன் விஷயத்துல எப்பவும் நான் பொறுமைதான். ஆனா, நம்ம விஷயத்துல என்னால அதைக் கடைபிடிக்க முடியாது. கதவை தொற..” என்று கதவை தட்டினான்.
“தயாபரனுக்குத் தயவு காட்ட வேண்டிய இடத்துல காலம் என்னைய கொண்டு வந்து நிப்பாட்டிடுச்சு பார்த்தீங்களா..” என்று நக்கலாகச் சொல்லி அவள் கதவை திறக்க, பட்டென அவளை இழுத்து தன் கை வளைவில் நிறுத்தினான்.
அவள் கையில் இருந்த பரிசோதனை கருவி அவன் கைக்கு மாறியிருந்தது.
எத்தனை நிமிடங்கள் என்ற கணக்கெல்லாம் அவர்கள் கணக்கிடவில்லை. இருவரின் இதயத் துடிப்பும் எகிறிய நொடியில் இரட்டை கோடுகள் விழுந்து அவர்கள் பெற்றோர் எனப் பதவி உயர்வு பெற போகிறார்கள் என்றது.
தயா மனைவியை இறுக அணைத்து உச்சி முகர்ந்தான்.
“என்னடி நர்ஸ் நீயெல்லாம்? உன் உடம்புல என்ன நடக்குதுன்னே உனக்குத் தெரியல”
“அதான் உங்களுக்குத் தெரிஞ்சுருக்கே” என்று அவன் கண் பார்த்து, அவள் கிசுகிசுக்க, அவள் முகத்தை நிமிர்த்தி இதழ்களில் முத்தமிட்டான்.
“துர்கா கல்யாணம் முடிஞ்சதும் வீட்ல சொல்லிக்கலாம் தயா. இப்போ இந்த விஷயத்தைச் சொன்னா எல்லாரோட கவனமும் நம்ம மேலதான் திரும்பும். அதுனால..” என்று அவள் இழுக்க, “நீ இப்படி யோசிக்கறதே தப்பு குறிஞ்சி. அப்பாம்மா மட்டுமில்ல அத்தைக்கும் இது டபிள் சந்தோஷமாதான் இருக்கும். அதுனால இப்பவே சொல்லிடுவோம்” என்றான் தீர்க்கமாக.
“இல்ல தயா..”
“நாலு வருஷமா இப்படியொரு நாளு எங்க வாழ்க்கையில வராமயே போயிடும்னு எங்கம்மாப்பா பயந்திருக்காங்க குறிஞ்சி. அவங்க வாய் விட்டு வெளில சொல்லலன்னாலும் இந்த ஏக்கம்லாம் எங்க வீட்ல ரொம்பவே உண்டுடி. உங்கம்மாக்கும் அப்படித்தானே இருக்கும்? பிளீஸ், இப்பவே சொல்லிடுவோம். அவங்க ரொம்பச் சந்தோசப்படுவாங்க” என்று முதன்முறையாக மனைவியிடம் கெஞ்சினான். அவனது மிரட்டலுக்கு எப்போதும் முரண்டுபவள், கெஞ்சலுக்கு அடிபணிந்து விட்டாள்.
உடனடியாக வீட்டினருக்கு விஷயத்தைச் சொல்ல, அலமேலு மகளை உச்சி முகர்ந்து கண் கலங்க, நாச்சம்மை வாய் விட்டு அழுதே விட்டார்.
அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக அமைந்தது அந்த நாள்.
கல்யாண பலகாரமாக மனகோலம் செய்திருக்க, அந்த இனிப்பை இப்போதே அனைவருக்கும் ஊட்டி, அந்தச் செய்தியை இனிப்புடன் கொண்டாடினார்கள்.
மாலை பள்ளி முடித்து வந்த துர்கா செய்தி கேட்டதும், குறிஞ்சியின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்.
“குறிஞ்சி அத்த” அவளைப் பூனைக் குட்டியாய் உரசி நின்று அழைத்தாள் ரோஜா.
“நம்ம வீட்டுக்குப் புதுசா பாப்பா வர போகுதா?” கோலி குண்டு கண்கள் ஆவலுடன் மின்ன குழந்தை கேட்க, “ஆமா ரோஸ் குட்டி. உன்னைப் போலக் குட்டி பாப்பா வரப் போகுது. உனக்கு ரோஜான்னு அத்தைதானே பேர் வச்சேன். என் பாப்பாக்கு நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து பேர் வைப்போம். என்ன?” என்று அவள் கேட்க, “அய்யா நான் பாப்பாக்கு பேர் வைப்பேனே” என்று கைத் தட்டி ஆர்ப்பரித்தாள் ரோஜா.
மழை தூறலாகப் பொழிந்து கொண்டிருக்க, அவ்வீட்டில் மகிழ்ச்சி பொங்கி பெருகி கொண்டிருந்தது.