நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 25 (1)

துர்காவின் திருமணத்திற்கு முழுதாக இன்னும் ஒரு வாரமே இருந்தது. அவள் வீடு அத்தனை பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. அவர்களின் உணவகத்தைப் பெரும்பாலும் பெண்களே பார்க்க, ஆண்கள் கல்யாண வேலைகளைக் கவனித்தார்கள்.

அலமேலுவின் வீட்டில், அவரின் மேற்பார்வையில் ஆள் வைத்து கல்யாண சீர் பலகாரம் தயார் செய்யும் வேலை நடந்து கொண்டிருந்தது. துர்காவுக்குக் கொடுக்க வேண்டிய நகை, சீர் பொருள்கள் என அனைத்தும் வாங்கியாகி விட்டது.

“அவங்க எதுவும் கேட்கலைன்னாலும் நாம நம்ம விருப்பத்துக்குச் செஞ்சுடலாம்ப்பா. நம்ம கிட்ட இருக்கறது எல்லாம் அக்காக்கும், ரோஜாக்கும்தானே? அதுனால இப்பவே நகை, இடம் எல்லாம் அக்காக்கு கொடுத்துடலாம்ப்பா” என்று அப்பாவிடம் தெளிவாகச் சொல்லி விட்டான் தயாபரன்.

பழனியப்பன் நியாயவாதி. மொத்தத்தையும் மகளுக்குக் கொடுக்காமல் மகன், மருமகள் நாளை அவர்களின் பிள்ளைகள் என யோசித்து அவர்களுக்கும் கொடுக்க வேண்டிய பங்கை நியாயமாக எடுத்து வைத்தார். துர்காவை மட்டுமல்ல, ரோஜாவையும் மனத்தில் வைத்தே அவளுக்கு நகையை அதிகமாகவே போட்டார்கள்.

துர்கா ஆசிரியர் வேலையை விட வேண்டாம் என்று கல்யாண பேச்சு ஆரம்பித்ததும் அவளிடம் சொல்லி விட்டான் ஶ்ரீகாந்த். “அதெல்லாம் உங்க விருப்பம்ங்க. நான் அதுல தலையிட மாட்டேன்” என்று அவன் சொல்ல, உண்ணாமலை அதற்கும் மேலே சென்று, “படிச்ச புள்ள வேலைக்குப் போறத விட்டுட்டு வீட்ல உக்கார்ந்து என்னா பண்ண போறாளாம்?” என்று கேட்டு விட, ஶ்ரீகாந்த் சிரித்து விட்டான்.

அவன் ஆரம்பத்தில் அம்மாவுக்கு அத்தனை பயந்தான். ஏனென்றால் அவனுக்குப் பார்த்த பெண்களுக்கு அத்தனை கெடுபிடிகள் விதித்தார் அவர். இப்போது அவரின் மாற்றமே அவனுக்கு அவ்வளவு மகிழ்ச்சியை அளித்தது.

நாச்சம்மை ஒருபக்கம் பெண்ணுக்கு தேவையானதை வாங்கிக் குவித்துக் கொண்டிருந்தார். யாரும் சபையில் வைத்து ஒரு வார்த்தை குறையாகச் சொல்லிட கூடாது என்ற அவரின் பயத்தை மீறிய பாசம் அதில் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.

குறிஞ்சிக்கு அன்று காலை ஷிஃப்ட். அப்போதுதான் வீடு வந்திருந்தாள்.

நாச்சம்மை உணவகத்தில் இருக்க, வீட்டில் யாருமே இல்லை. அவளும் சற்று நேரத்தில் அங்குச் செல்ல வேண்டும். ஆனால், சோர்வு அவளை ஆளை அமுக்குவது போலப் போட்டு அமுக்கியது. அறைக்கு நேராகச் சென்று படுத்து விட்டாள் அவள்.

தயாபரனும், பழனியப்பனும் வெளியில் சென்றிருந்தவர்கள் அப்போதுதான் வீடு வந்தார்கள்.

தயா மழையில் நனைந்து வீடு வந்தவன், “குறிஞ்சி டவல் குடு” என்று மனைவியிடம் கேட்டான்.

“நீங்களே எடுத்துக்கோங்க தயா. எனக்குத் தூக்கமா வருது” என்று சுருண்டு படுத்தாள்.

“என்ன இந்நேரம் தூக்கம் வருதுன்னு சொல்ற? உடம்புக்கு முடியலையா?” எட்டி அவளின் நெற்றி தொட்டுப் பார்த்தான்.

“நான் நர்ஸ் தயா” அவள் குறுஞ்சிரிப்புடன் சொல்ல, “நர்ஸ்னா? டாக்டர்ஸ்தான் மோசமான நோயாளியா இருப்பாங்களாம் தெரியுமா?” என்று கேட்டான்.

“என்ன பண்ணுது குறிஞ்சி, சாப்பிட்டியா இல்லையா?” துவாலையை எடுத்து தலை துவட்டிபடியே அவன் கேட்க, அவளோ பதிலாக மண்டையை மறுப்பாக ஆட்டிக் கொண்டிருந்தாள்.

தயா ஈர உடையை மாற்றி வெளியில் சென்றான்.

“நான் கடைக்குப் போயிட்டு அம்மாவை வீட்டுக்கு அனுப்பி விடறேன் தம்பி. நீயி நைட்டுக்கு கடைக்கு வா, போதும்” என்று அவனிடம் சொல்லி விட்டு கடைக்குச் சென்றார் பழனியப்பன்.

அவன் சமையலறை சென்று ஆராய, மதிய உணவு இருந்தது.

சோறு, வெந்தயக் குழம்பு, முட்டைகோஸ் துவட்டல் இருக்க, அதைத் தட்டில் பரிமாறி எடுத்து வந்தான்.

“இந்தா குறிஞ்சி, எந்திரிச்சி சாப்பிட்டு படு” என்று மனைவியை அதட்டினான்.

“வேணா தயா, நீங்க சாப்பிடுங்க” தலையணையில் ஆழ முகம் புதைத்தாள்.

“ஏய், என்ன உன்னைய கொஞ்சிட்டே இருப்பேன்னு நினைச்சியா? எந்திரிச்சி சாப்பிடுடி. மனுஷன் அலஞ்சு திரிஞ்சுட்டு வந்தா இவ வேற..” என்று அவன் கோபமாக அலுத்துக் கொள்ள, “இப்போ யாரு உங்களைக் கொஞ்ச சொன்னா? போங்க அங்கிட்டு” என்று பதிலுக்கு எரிந்து விழுந்தாள்.

“கொழுப்பு கூடிப் போச்சு உனக்கு.. இப்போ எந்திரிக்கப் போறியா இல்லையா?” என்று அவன் கத்த, “முடியாது. தூக்கம் தூக்கமா வருது தயா. எல்லாம் உங்களாலதான்” என்று லேசாகத் தலையைத் திருப்பி அவனை முறைத்தாள்.

“என்னாலயா? நான் என்னா பண்ணேன் குறிஞ்சியாத்தா?” என்று புரியாமல் கேட்டவனுக்கு அவளின் முறைப்பு விஷயத்தைப் புரிய வைத்து விட்டது.

“எனக்கு இப்போ ஒரு சிகரெட் இழுக்கணும் போல இருக்கு” என்று அவன் சொல்ல, “எனக்கு உங்க கன்னத்தை இழுக்கணும் போல இருக்கு. எப்படி வசதி தயாபரன்?” என்று கன்னத்தில் அறைய போவது போல அவள் கை ஓங்க, “கைய ஓங்குற ராஸ்கல், அத அப்படியே முறிச்சு நம்ம ஹோட்டல்ல அடுப்பெரிக்கப் போட்ருவேன் பார்த்துக்கோ” என்று ஒற்றை விரலை நீட்டி மிரட்டினான்.

“இந்தாங்க, கைய முறிங்க பார்ப்போம்” என்று அவள் கையை நீட்ட, “செய்ய மாட்டேன்னு நினைச்சியா.. உன்ன..” என்று வேகமாக அவள் கைப் பிடித்து விரல்களை மென்மையாக நெறித்து, “பயமே இல்லல்ல? குளிர் விட்டு போச்சுடி உனக்கு” என்று நாக்கை மடித்துக் கண்ணை உருட்டினான்.

“இந்த அய்யனார் லுக் எல்லாம் இனிமே என்கிட்ட வேலைக்கு ஆகாது தயா” என்று அவள் கண் சிமிட்ட, அவனுக்குச் சிரிப்பு வந்தது.

“சரி, எந்திருச்சி சாப்பிட்டு படு” என்றான்.

“அத அதட்டாம சொல்ல மாட்டீங்களா?”

“என் குரலே அப்படித்தான்டி குறிஞ்சியாத்தா” என்று அவளின் கைப் பிடித்து இழுத்து எழுப்பி விட்டான்.

“ஐயோ, உங்க குரலு எப்போ எப்படி இருக்கும்னு எனக்குத் தெரியாதாக்கும்? நைட்டு குறிஞ்சின்னு வாங்க பேசிக்கறேன்” என்று அவள் உதடு சுழிக்க, “அடிய்யேய்” என்று அவளின் உதட்டை சுண்டி விட்டான்.

“இந்தா சாப்பிடு” என அவளை வற்புறுத்தி சாப்பிட வைத்தான். அவர்களின் திருமணத்துக்கு முன் அவன் சென்னைக்கு வந்து அவளை அழைக்க வந்தது அவளுக்கு நினைவு வந்தது. அப்போது அவள் மேல் அதீத கோபத்தில் இருந்தான். ஆனாலும் அவளுக்குப் பிடிக்குமென்று, அவள் சாப்பிடாமல் இருப்பாள் என்று தெரிந்து தின்பண்டங்கள் வாங்கி வந்திருந்தானே. அதுவும் அவளுக்குப் பிடித்ததாகப் பார்த்து பார்த்து அல்லவா வாங்கி வந்திருந்தான்.

அவனது அந்தச் செயல் அப்போது இல்லையென்றாலும் இப்போது அவள் மனத்தை நெகிழ்த்தியது.

“தயா”

“ம்ம்ம்”

“நீங்க சாப்பிட்டீங்களா?”

“இனிமேதான்.”

“இந்தாங்க, நீங்களும் சாப்பிடுங்க”

“நீ சாப்பிடு. நான் அப்புறமா சாப்பிடறேன்” என்றான் கைப்பேசியில் கவனமாக.

“ஏன்? வீட்ல சோறு கம்மியா இருக்கா? உங்களுக்குப் பத்தாதா?”

“அடியேய்” என்று பல்லைக் கடித்தான். பின்னே, அவன் கோபமாக, சோகமாக, மகிழ்ச்சியாக இருந்தால் அளவில்லாமல் உண்பான்தானே? அதைக் கொண்டே கேட்டிருந்தாள்.

அவள் நமுட்டுச் சிரிப்பு சிரிக்க, அவனோ முறைத்து வைத்தான்.

அவள் உண்டு முடித்து அவனுக்கும் பரிமாறினாள்.

அவன் உண்ணத் தொடங்கவும், “தயா” என்றழைத்தாள்.

“ம்ம்ம், நாளைக்கு லீவ் போட்டுட்டியா?”

“நாளையில இருந்து ஒரு வாரத்துக்கு நான் லீவ்தான். துர்கா கல்யாண லீவ்” என்றாள்.

“ஒரேடியா பத்து நாள் லீவ் போட்டு இருக்கலாம் இல்ல?”

“எதுக்குப் பத்து நாளு?”

“நாம ஹனிமூன் போக” என்று கண்ணடித்தான்.

“தயா” என்று தயங்கி அழைத்தாள்.

“எங்க போகலாம்னு சொல்லு. உனக்கு ஏதாவது ஆசை, கனவு இருக்குமே?” என்று அவன் கேட்க, “சாரி” என்றாள் அழுத்தமாக.

“எதுக்குடி?” என்று புருவம் சுருக்கினான்.

“அது நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி..”

“திரும்ப அதையே ஆரம்பிக்காத குறிஞ்சியாத்தா”

“இல்ல, எனக்குச் சாரி சொல்லணும்னு ரொம்ப நாளா மனசுல தோனிட்டே இருந்தது. உங்ககிட்ட மன்னிப்பு கேட்கலன்னா அந்த உறுத்தல் என் மனசுல இருந்துட்டே இருக்கும் தயா” என்று சன்ன குரலில் குற்ற உணர்ச்சி ததும்பச் சொன்னவளின் கைப் பிடித்துத் தன் பக்கத்தில் அமர்த்தினான் அவன்.

“என்ன சொன்ன?”

“சாரி, நான் அம்மாவ, உங்கள பத்தியெல்லாம் யோசிக்காம அப்படியே வேற பிஜி போகப் பிளான் பண்ணியிருக்கக் கூடாது. நம்ம கல்யாணம் முடிஞ்சதும் நான் மட்டும் தனியா சென்னை போய்டலாம்னு நினைச்சது இப்போ அபத்தமா படுது தயா” என்று அவள் சொல்ல,

“ச்சே ச்சே குறிஞ்சி. அதை அபத்தம்னுலாம் சொல்லக் கூடாது. உன்னோட ஆசை, கனவு எல்லாத்தையும் எனக்காக விட்டுட்டு வந்திருக்க. உண்மையைச் சொல்ல போனா நான்தான் சாரி சொல்லணும்.” என்றான்.

“அதான் சாரிக்கு பதிலா நான் ஆசைப்பட்டது எல்லாத்தையும் எனக்காக இங்கேயே செஞ்சு குடுத்துட்டீங்களே. அது போக எப்பவும் எங்கம்மா கூடவே இருக்கேன். இதை விட என்ன வேணும் எனக்கு?”

“நான் வேணாமா?”

“நீங்களும்தான்” என்று அவனை உரசிச் சொன்னாள். அவள் இடையில் கரம் கோர்த்து இழுத்து முத்தமிட்டான்.

“ஆ காரம்” என்று அவன் நெஞ்சில் அடித்தாள்.

“கிஸ் ஸ்பைசியா இருக்கலாம் குறிஞ்சி தப்பில்ல.” என்று கண்ணடித்து மீண்டும் முத்தமிட்டான்.

அன்று மாலை சோர்வுடன் படுத்தவள், இரவு உணவுண்ண கூட எழுந்திருக்கவில்லை.

“தூங்கட்டும் விடுப்பா” என்று நாச்சம்மை சொல்லி விட, தயா அவளை அப்படியே உறங்க விட்டிருந்தான்.

மறுநாள் அதிகாலையில் அவன் எழுப்பவும், “எப்போ பாரு, தூங்கும் போது எழுப்பாதீங்க தயா” என்று சத்தமாகச் சிணுங்கி, அவன் கழுத்தில் கைப் போட்டு இழுத்தாள். அறைக் கதவு லேசாகத் திறந்திருக்க நிச்சயமாகச் சத்தம் வெளியே கேட்டிருக்கும்.

“குறிஞ்சி, எழுந்துக்கோ” என்று கிசுகிசுத்தான்.

“போங்க, தூக்கமா வருது. நைட்டு எழுப்பி இருக்கலாம் இல்ல?” என்று அவள் கோபமாகக் கேட்ட நேரம் சன்ன சிரிப்புடன் அவர்களின் அறை கதவு வெளியில் இருந்து மூடப்பட்டது.

“ஐயோ அக்கா” என்று அவன் கூச்சத்துடன் சொல்ல, “என்னது துர்காவா?” என்று அதிர்ச்சியுடன் கேட்டு படக்கென்று கண் திறந்தாள் குறிஞ்சி.

“ஏன் குறிஞ்சி இப்படிக் கத்தி மானத்தை வாங்குற?”

“என்னாச்சு?” என்று கண்ணைச் சுருக்கி பாவமாகக் கேட்டவள், “உங்களை யாரு கதவை திறந்து வச்சிட்டு வந்து என்னை எழுப்ப சொன்னது?” என்று அவனைக் கடிந்து கொண்டாள்.

“நான் ஒன்னும் உன் மேல பாய எழுப்பலடி, வீட்ல சாமி கும்பிடுறாங்க. அதுக்குச் சீக்கிரம் குளிச்சி ரெடியாகுன்னு சொல்ல எழுப்பி விட்டேன்” என்றான்.

“ஓ?”

“ம்ம், எழுந்துக்கோ” என்றான். மெல்ல நகர்ந்து அவன் மேல் சாய்ந்து அமர்ந்தாள்.

“எதுக்கு இந்நேரம் சாமி கும்பிடுறாங்க?”

“அக்கா கல்யாணத்துக்கு வேண்டுதல் போல” என்றவனை முறைத்து எழுந்துக் கொண்டாள்.

அவளை எழுப்பி விட்டவன், அவளுக்கு முன்னே தயாராகிக் கடைக்குச் சென்றிருந்தான்.

error: Content is protected !!
Scroll to Top