என் ஜீவனில் உறைந்திடு – 16 (2)

ரோஜா ஆறிய காஃபியுடன் அறைக் கதவை மூடி விட்டு திரும்ப, வாசலில் கார் சத்தம் கேட்டது. சமையல் அறை சென்று காஃபி கோப்பையை வைத்து விட்டு ஹால் வர, சுகந்தியின் குரல் கேட்டது.

“வாவ், வெர்னா அழகா இருக்கே” என்று வியந்து கொண்டிருந்தார் அவர்.

“நீங்க வாங்கினதா நித்யா?” அவரின் கேள்விக்கு, “ஆமாங்க அத்த” என்ற நித்யாவின் பதிலை கேட்டபடியே வாசலை நோக்கி நடந்தாள் ரோஜா.

அங்கே புத்தம் புது வெள்ளி நிற வெர்னா கார் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு நிறுத்தப்பட்டிருந்தது.

அவளின் வளையல் சத்தத்தில் திரும்பி, “ரோஜா, வாம்மா.” என்றார் சுகந்தி.

“வாங்க அத்தை. வாங்க மாமா” மலர்ச்சியுடன் வரவேற்றாள் ரோஜா.

“நான் போய்க் காஃபி போடுறேன்” என அவள் உள்ளே செல்லப் போக, “நாங்க வீட்ல காஃபி குடிச்சுட்டுதான் வந்தோம். நீ முதல்ல இங்க வா” என்று அவளின் கைப் பிடித்து அருகில் இழுத்து நிறுத்திக் கொண்டார் சுகந்தி.

“கார் அழகா இருக்கும்மா” சங்கரன் சொல்ல, “தேங்க்ஸ் மாமா” என்றாள் நித்யா.

சங்கரன், சசிகுமார் அந்தக் காரை பற்றி அலசத் தொடங்க, சுகந்தி மருமகளின் முகம் பார்த்து, “சாரி உங்க சர்ப்ரைஸை ஸ்பாயில் பண்ணிட்டேன் நான். நீங்க சிஸ்டர்ஸ் பேசுங்க. நான் போய் டிஃபன் வேலையைப் பார்க்கறேன்” என்றார்.

“அப்படியெல்லாம் இல்லத்த. இருங்க. உங்க கூட நானும் வர்றேன்” நித்யா சொல்ல, “நீங்க பேசுங்க சொன்னேன்” ஆளுமையுடன் சொல்லி, ரோஜாவின் தோளில் தட்டி விட்டு உள்ளே சென்றார் அவர்.

“ரோஸ் குட்டி உனக்காகத்தான் வாங்கினேன். பிடிச்சுருக்கா சொல்லு?” நித்யா கேட்க,

“எதுக்குக்கா இவ்வளவு காஸ்ட்லி கிஃப்ட்?” என்று பதில் கேள்வி கேட்டாள் ரோஜா.

“என்ன காஸ்ட்லி? காஸ்ட்லி, காசு இல்லாதது எல்லாம் பார்க்காத. அக்காவோட பாசத்தை மட்டும் பாரு” என்ற நித்யா, “இன்னும் எத்தனை நாளைக்கு அப்பாவோட பழைய காரையே நீயும் ஓட்டுவ? அது அப்பாக்கு வேணும் இல்ல? அதான் உனக்குப் புதுசு வாங்கினேன். பிடிச்சிருக்கா சொல்லு, போதும்” என்ற நித்யா, வேறு பேச இடம் கொடுக்கவில்லை.

“ம்ம். நீ வாங்கிக் கொடுத்து பிடிக்காம போகுமா நித்திக்கா. ரொம்பப் பிடிச்சுருக்கு. அவரோட ஒரு டெஸ்ட் டிரைவ் போகணும் ஃபர்ஸ்ட்” என்ற ரோஜாவின் பதிலில் நித்யாவின் முகம் மலர்ந்தது.

“கார் முன்னாடியே புக் பண்ணிட்டோம் ரோஜா. ஸ்பெஷல் ரெக்வஸ்ட் கொடுத்து காரை இந்நேரத்துக்கு இந்த அட்ரஸ்ல டெலிவரி கொடுக்கச் சொன்னோம்.”

“தேங்க்ஸ் நித்திக்கா” ரோஜா சொல்ல, “அச்சோ பெரிய மனுஷி. அதை நீயே வச்சுக்கோ. வா, உள்ளப் போகலாம்” என்றாள் நித்யா.

இருவரும் உள்ளே செல்ல, சுகந்தி சமையல் அறையில் இருந்தார். அலைபேசியில் யாருடனோ கோபமாகப் பேசிக் கொண்டிருந்தார்.

ரோஜா, நித்யா இருவரும் உள்ளே செல்ல, “வேலைக்கு ஆள் சொல்லியிருந்தேன் ரோஜா. இன்னும் வரல. பொறுப்பே இல்லாம இருக்காங்க.” மருமகளிடம் புலம்பினார் சுகந்தி.

“என்ன செய்யனும் சொல்லுங்க அத்த. நான் ஹெல்ப் பண்றேன்” நித்யா சொல்ல, “காலை சாப்பாடு வேலைதான் மா” என்றவர், அங்கிருந்த குளிர்சாதனப் பெட்டியை திறந்து தேவையான பொருட்களை வெளியில் எடுத்தார்.

“அம்மா, சித்தி” என்று மழலையில் கத்தியபடி அவர்களிடம் ஓடி வந்தான் மித்ரன்.

“ஹேய் செல்லக் குட்டி” குழந்தையைக் கையில் அள்ளிக் கொண்டாள் ரோஜா.

மித்ரன் ஏதேதோ கேள்விகள் கேட்க, ரோஜா பொறுமையாகப் பதில் சொல்ல, சுகந்தியின் கவனம் முழுவதும் அவர்கள் இருவரை சுற்றியே இருந்தது.

“ரோஜா…” என்றழைத்தபடி சித்ராவும் அங்கு வந்தார்.

மகளை வெளியூரில் திருமணம் செய்து கொடுத்து பல நாட்கள் பிரிந்திருந்தது போல ஓர் இரவின் பிரிவில் வாடி, அவளின் நலம் விசாரித்தார் சித்ரா.

சிவஹரி ஹாலில் நின்றபடி மகளையே பார்க்க, அவரிடம் சென்றார்கள் பெண்கள். மகளிடம் அந்த வீடு, கார் எனப் பொதுவாகப் பேசி விட்டு, “அப்பாக்கு காஃபி குடு ரோஜா” என்று கேட்டார் அவர்.

“காலையில வீட்ல காஃபி குடிச்சீங்க தானே?” சித்ரா ஆரம்பிக்க, சகோதரிகள் சிரித்துக் கொண்டார்கள்.

“அப்பாக்கு நான் கொடுக்கறேன். நீ அவருக்கு எடுத்துட்டுப் போய்க் குடுத்து, அவரை எழுப்பி விடு. பெரியவங்க வந்துட்டாங்க சொல்லு” என்று தங்கையிடம் சொன்னாள் நித்யா.

“ஓகேக்கா” என்ற ரோஜா இரண்டாம் நிமிடம் காஃபியுடன் அறையை நோக்கி நடந்தாள்.

இம்முறையும், “ரோஜா…” என்று அவளை அள்ளிப் பருகவே தவித்தான் இளமாறன்.

“அத்த, மாமா வந்துட்டாங்க. எல்லாம் வெளில வெயிட் பண்றாங்க. எழுந்திருங்க இளா, பிளீஸ்”

“உங்க அத்தையை நானா வர சொன்னேன்? போடி, நீ போய் அவங்ககிட்ட செல்லம் கொஞ்சு. என்னைத் தூங்க விடு” வேண்டுமென்று புரண்டு படுத்துக் கண்களை இறுக மூடினான்.

“உங்க அத்த, மாமாவும் வந்திருக்காங்க” என்று அவள் சொல்லவும் அடித்துப் பிடித்து எழுந்தவனை முறைத்தாள் ரோஜா.

நேரம் காலை ஒன்பதை நெருங்கிக் கொண்டிருக்க, நேராகக் குளியல் அறை சென்றான். அவனைத் தடுத்து காஃபியை நீட்டினாள் ரோஜா.

“ஒன் மினிட்” என்றவன், முகம் கழுவி, பல் தேய்த்து வந்து காஃபியை குடித்து விட்டுக் குளிக்கச் சென்றான்.

ரோஜா அவனுக்காகக் காத்திருக்காமல் வெளியில் சென்றாள். அரை மணி நேரம் கழித்து இளமாறன் குளித்து, வேட்டி, சட்டை அணிந்து வந்து ரோஜாவின் பெற்றோரிடம் பேசினான்.

ரோஜா கண்ணால் அழைக்க, அவளிடம் வந்தான். அதைப் பார்த்தபடியே வந்த சங்கரன் முகத்தில் புன்னகை பளிச்சிட்டது.

“ஹாய்ப்பா, எப்போ வந்தீங்க?” அவன் அப்பாவிடம் பேசவும் ரோஜா சுகந்தியைத் தேடி சென்றாள்.

சுகந்தி, சித்ரா, நித்யா மற்றும் உதவிக்கு இரு பெண்கள் எனக் காலை சமையல் அங்கே மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.

சிறிது நேரத்தில் இலை போட்டு காலை உணவாக இட்லி, கல் தோசை, மட்டன் குழம்பு, மட்டன் சுக்கா, சக்கரை பொங்கல் எனப் பரிமாறினார்கள்.

இளமாறன் அமைதியாய் உண்ண ரோஜா இலையில் இருந்து மட்டன் மித்ரன் இலைக்கு மாற, அவன் இலையில் இருந்து நித்யா, சசிகுமார் என ஆட்டுக்கறி நகர்வதை எதிரில் அமர்ந்திருந்த சித்ரா முறைத்துப் பார்த்தார்.

“ரோஜா..” என்று அவர் மென்மையாய் அதட்ட, சரியாய் அந்நேரம் இளமாறன் இலையில் இருந்த உணவு ரோஜாவின் இலைக்கு மாறவும் முழித்தார் அவர்.

இளமாறன் அவரை நிமிர்ந்துப் பார்க்க, “சா.. சாப்பிடுங்க, மாப்பிள்ளை” என்று சமாளித்தார் அவர்.

ரோஜா சிரிப்புடன் தலை குனிந்து உணவில் கவனம் செலுத்த, நித்யா, சசிகுமார் இருவரும் சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டார்கள்.

காலை உணவு முடித்து ஹாலில் அமர்ந்து அனைவரும் பேசிக் கொண்டிருக்க, சிவஹரி மனைவி மக்களிடம் சொல்லிக் கொண்டு மருத்துவமனை கிளம்பினார்.

“நான் நம்ம கேன்டீன் வரைக்கும் போய்ட்டு இவெனிங் வர்றேன் மாப்பிள்ளை. உங்க அத்தை இங்கதான் இருப்பா” என்று மருமகனிடம் சொன்னவர், மகளிடம் திரும்பி, “அப்பா மதிய சாப்பாட்டுக்கு வரப் பார்க்கறேன் ரோஜா.” என்று சொல்ல சித்ராதான் அவரைப் பார்வையாலே எரித்துக் கொண்டிருந்தார்.

இளமாறன், சசிகுமாருடன் வெளியே செல்ல, “நீங்க போய்ட்டு வாங்கப்பா” என்று அப்பாவிடம் சொன்னாள் ரோஜா. சிவஹரி தலையசைத்து வாசலை நோக்கி நடக்க, அவரைப் பிடித்துக் கொண்டார் சித்ரா.

“என்னைக் கோபப்படுத்தவே இப்படி ஏதாவது செய்வீங்களா? நேத்துதான் உங்க பொண்ணுக்கு கல்யாணமாகி இருக்கு. நீங்க அதுக்குள்ள கேன்டீன் கிளம்பறீங்க. நாளைக்கு அவங்களை நம்ம வீட்டுக்கு கூப்பிடணும் வேற. என்னை இப்படித் தனியா சமாளிக்க விட்டுப் போறீங்க. சம்மந்தி வீடு என்ன நினைப்பாங்க?” அவர் படபடவெனப் பொரிய,

“அவங்க ஒன்னும் நினைக்க மாட்டாங்க சித்ரா. அது அவங்க ஹாஸ்பிடல் கேன்டீன் தானே? அங்க வர்ற நோயாளிகளுக்குச் சரியான சாப்பாடு கிடைக்காட்டிதான் தப்பா நினைப்பாங்க” என்று சொன்னவரை எதுவும் செய்ய இயலா கோபத்துடன் முறைத்தார் சித்ரா.

அவர்களைப் பார்த்து, “ஸ்டார்ட் பண்ணிட்டாங்க” என்று ரோஜா முணுமுணுக்க, நித்யா சிரித்தாள்.

சிவஹரி, சங்கரனை தேடினார். இளமாறன், சசிகுமார் உடன் நின்று புதுக் காரை பார்த்துக் கொண்டிருந்தார் அவர்.

“மருமகளைக் கூட்டிட்டு ஒரு டிரைவ் போய்ட்டு வா மாறா” என்று அவர் சொல்ல, “ஈவ்னிங் போறேன் ப்பா” என்றான் அவன்.

“ஓகே.” என்றவர் அருகில் சென்ற சிவஹரி, “நான் ஹாஸ்பிடல் வரைக்கும் போய்ட்டு வர்றேன் டாக்டர். எனக்குக் கேன்டீன்ல கொஞ்சம் வேலையிருக்கு” என்று சங்கடத்துடன் சொல்ல, “தாராளமா போய்ட்டு வாங்க. இங்க நாங்க பார்த்துக்கறோம் சம்மந்தி” என்றார் சங்கரன்.

சிவஹரி திரும்பி மனைவியைப் பார்க்க, அவரின் சூழ்நிலை புரிந்து பேசினார் சங்கரன்.

“நாங்களும் ஒரு வாரமா ஹாஸ்பிடல் சரியா போகல. எங்களுக்குப் பதிலா வேற விசிட்டிங் டாக்டர்ஸ் பார்க்கறாங்க. அது போகச் சுகந்திக்குப் பதிலா பேஷண்ட்ஸ் பார்க்க நம்ம வெண்பா இருக்காளே. அப்புறம் மேனேஜ்மென்ட் வினோத் பார்த்துக்கறான். இல்லனா, நாங்களும் உங்களை மாதிரிதான் ஓடணும். நீங்க போய் வேலையை முடிச்சுட்டு வாங்க சம்மந்தி.” சங்கரன் சொல்ல, சித்ரா சற்றே சாந்தமானார்.

சிவஹரி கேன்டீன் கிளம்பினார்.

அங்கே பேச்சு, சிரிப்பு, மதிய விருந்து எனப் பொழுது விரைந்தோடியது.

இளமாறன் இயல்பாக ரோஜாவின் அருகிலேயே இருந்தான். ஆனால், ரோஜா அடிக்கடி சுகந்தியிடம் ஒட்டிக் கொண்டு திரிய, முறைத்த இளமாறன் அப்பாவிடம் போனான்.

“பாட்டி, தாத்தா வரலையா அத்த?” மாலை தேநீர் அருந்தியபடி ரோஜா கேட்க, அவளுக்கு வடையை நீட்டியபடி, “இல்ல ரோஜா. வரணும்னு சொன்னாங்க. அப்புறம் எங்களை மட்டும் அனுப்பிட்டு அவங்க வீட்டுக்கு போய்ட்டாங்க” என்றார் சுகந்தி.

“ஓ, சரிங்கத்த” என்ற ரோஜா அதற்கு மேல் விசாரிக்கவில்லை.

சற்று நேரத்தில் கணவனின் அலைபேசியில் இருந்து அழைக்கச் சொல்லி பெரியவர்களிடம் பேசினாள்.

“நான் மார்னிங் கால் பண்ணேன் ரோஜா. ஏன் வரல கேட்டேன். என்னமோ அவங்க குரலே சரியில்லை” என்றான் இளமாறன்.

“நாளைக்கு உங்க வீட்டுக்கு போயிட்டு, அங்க ரெண்டு, மூனு நாள் இருந்துட்டு அப்புறம் அவங்களைப் பார்க்கப் போவோம்” என்று அவன் சொல்ல, தலையசைத்தாள் ரோஜா.

மாலை சிவஹரி வீடு வர, சிறிது நேரத்திலேயே இரண்டு குடும்பங்களும் அவர்களை மீண்டும் நித்யா, சசிகுமார் உடன் விட்டுவிட்டு அவரவர் வீடு சென்றார்கள்.

மறுநாள் நித்யா பரிசு கொடுத்த காரில் ரோஜா வீடு சென்றார்கள் புதுமணத் தம்பதிகள். அங்கும் விருந்து, கவனிப்பு என ஏற்பாடுகள் தடபுடல் பட்டது. அடுத்த இரண்டு நாட்கள் விரைவாக நகர்ந்திருந்தது.

மாலை சூரியன் மெல்ல இறங்கிக் கொண்டிருக்க, ரோஜாவின் அறை பால்கனியில் நின்று வீட்டின் பின்புறம் இருந்த தோட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான் இளமாறன்.

“என்ன செஃப்? வாட்ஸ் குக்கிங் இன் யுவர் மைண்ட்?” அவனுக்குப் பக்கவாட்டில் வந்து நின்று கேட்ட மனைவியைக் கை நீட்டி அருகில் இழுத்து, தோளோடு சேர்த்தணைத்துக் கொண்டான்.

“என்ன யோசிக்கறீங்க?”

“ஒன்னுமில்ல ரோஜா. சும்மா ரிலாக்ஸ்டா நின்னேன். ஆனா, நீ கேட்டதுக்கு அப்புறம் யோசிச்சு பார்த்தா, இப்படி எந்த யோசனையும் இல்லாம நான் நின்னு கூடப் பல வருஷம் ஆகுதுன்னு இப்பதான் ரியலைஸ் ஆகுது” மனம் திறந்து சொன்னான். முகம் உயர்த்தி அவனைப் பார்த்த ரோஜா, அவன் மார்பில் கரம் பதித்து, தாடையில் அழுந்த முத்தமிட்டாள்.

“இப்படியே இருங்க இளா. நீங்க யோசிச்சு, குழம்பி, வொர்ரி பண்றதால எதுவும் மாறப் போறதில்லை” என்றவள், “உங்க ஹெல்த்தை தவிர” என்றாள் தீர்க்கமாக. “டென்ஷன், ஸ்ட்ரெஸ் உங்க உடல்நிலை, மனநிலையைதான் பாதிக்கும்” என்று முடித்தாள்.

“ம்ம் புரியுது.” என்றவனின் கண் பார்த்து, “உங்க பாட்டி, தாத்தா போய்ப் பார்த்திட்டு வரலாமா?” என்று கேட்டாள் ரோஜா.

“ம்ம். நாளைக்குப் போகலாமா?”

“இல்ல. இப்போவே போகலாம் இளா. இருபது நிமிஷ ட்ரைவ் தானே?”

என்று அவள் சொல்லவும், சிறிது யோசனைக்குப் பின் சரியென்றான் இளமாறன்.

ரோஜாவின் பெற்றோரிடம் சொல்லி விட்டு இளமாறன் தாத்தா வீடு சென்றார்கள் இருவரும்.

அங்குப் போன பின்புதான் கஸ்தூரிக்கு உடல் நலமில்லை என்பதே தெரிந்தது. கல்யாண அலைச்சலில் சோர்ந்து உடம்பு முடியாமல் முழு ஓய்வில் இருந்தார் அவர்.

“உங்களுக்கு உடம்பு முடியலைன்னா என்கிட்ட சொல்ல மாட்டீங்களா? நான் எத்தனை முறை போன் பண்ணேன். ஒன்னுமே சொல்லல நீங்க?” அம்மம்மாவிடம் கோபத்துடன் பாசத்தைக் காட்டிக் கொண்டிருந்தான் இளமாறன்.

“ஒரு மாதிரி பேசறீங்க? குரலே சரியில்ல. உடம்புக்கு என்னனு கேட்டேன் இல்ல?”

“தாத்தா நீங்களும் சொல்லல இல்ல? என்கிட்ட மறைச்சுட்டீங்க” அவன் கத்த,

“அவ சும்மா ரெஸ்ட்ல இருக்கா மாறா. அன்னைக்கே உங்கம்மா வந்து பார்த்து ஒன்னுமில்ல சொல்லிட்டா. இன்னைக்குக் காலைல கூட வெண்பா வந்து பார்த்திட்டு போனா..” சுவாமிநாதன் பேரனை சமாதானம் செய்ய, அவர்களை முறைத்தபடி அமர்ந்திருந்தான் இளமாறன்.

வீட்டின் உதவியாளர் அவர்களுக்குக் குடிக்கப் பானம் எடுத்து வர ரோஜா எழுந்து அதை வாங்கினாள்.

தேநீரை எடுத்து பாட்டிக்கு அவள் கொடுக்க, “இருடா. எனக்கு ஒன்னுமில்ல. நான் எழுந்துக்கறேன்” என்றவர், அவளின் கைப் பிடித்து எழுந்து குளியல் அறை சென்று முகம் கழுவி வந்தார்.

ரோஜாவின் சேலையைக் கவனித்து விட்டுப் பெரிதாகப் புன்னகைத்தார்.

“இந்தப் புடவை உனக்கு ரொம்ப அழகாருக்கு ரோஜா.” அவளின் கன்னம் வழித்து நெட்டி முறித்தார். அவர் பரிசாகத் தந்த பட்டுப் புடவையை அணிந்திருந்தாள் ரோஜா. அதைப் பார்த்ததும் மகிழ்ந்து போனார் கஸ்தூரி.

“இங்க நின்னா உன் புருஷன் கத்துவான். நீ வா, உனக்கு நான் அவனோட ஃபோட்டோ காட்டுறேன்” என்று அவளைத் தனியாக அழைத்துக் கொண்டு போனார் கஸ்தூரி.

இளமாறன் அவரை முறைக்க, “போடா” என்றார் பொய் கோபத்துடன்.

“மாறன் சின்ன வயசில் இருந்தே ரொம்ப அமைதி. அதிகம் பேச மாட்டான். யார்கிட்டயும் சீக்கிரம் ஒட்ட மாட்டான். ஆனா, நல்லா பழகி ஒருத்தரை பிடிச்சுட்டா, ரொம்ப ரொம்ப அன்பா இருப்பான். அவங்களுக்காக என்ன வேணாலும் செய்வான்” அவர் சொல்லிக் கொண்டே அறைக்குள் நுழைய, அவரைப் பின் தொடர்ந்தாள் ரோஜா.

அங்கிருந்த பழைய மர அலமாரியை திறந்து எதையோ மிகத் தீவிரமாகத் தேடினார். தேடலின் முடிவில்,

“ரொம்பப் பொறுமையானவன். ஆனா, கோபம் வந்தா அவ்வளவுதான். அப்படியே பேசாம ஒதுங்கிடுவான்” என்று சொல்லி அவள் கையில் பெரிய துணிப் பையைக் கொடுத்தார் கஸ்தூரி.

மெல்ல மெல்ல அவர் சொன்னதை உள்வாங்கிக் கொண்டவள், அவர் கொடுத்த பையை வாங்கிப் பிரித்தாள்.

ஐந்திற்கும் மேற்பட்ட அந்தக் காலப் புகைப்பட ஆல்பங்கள் அதில் இருந்தது.

சட்டென உதித்த உற்சாகத்துடன், அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து, ஆல்பத்தை மடியில் வைத்து ஆர்வமாகப் பிரித்தாள் ரோஜா.

அதில் ஐந்து வயது இளமாறன் அதே வீட்டின் பின்புற வாசலில் தனியாக நின்றிருந்தான்.

error: Content is protected !!
Scroll to Top