மழைச் சாரல் பன்னீர் தூவலாய் அறை சாளரம் வழியே அவர்கள் மேல் பொழிந்து கொண்டிருந்தது.
“தயா, குளிருது. ஜன்னல் சாத்துங்க” என்று குறிஞ்சி கிசுகிசுக்க, “என்னைத் தவிர எல்லாத்தையும் பார்க்கறியே குறிஞ்சி ஆத்தா. கொஞ்சம் தயாக்கு மட்டும் தயவு காட்டுறது” என்று பதிலுக்கு அவள் காதில் கிசுகிசுத்தான். அந்தக் குரலுக்கு அவள் கிளுக்கி சிரிக்க, அவள் சிரிப்பை முத்தமிட்டு விழுங்கினான்.
பத்து நாள்கள் இவ்வளவு இனிமையாகக் கழியுமா? அவர்களுக்கே அவ்வளவு ஆச்சரியம். மிகவும் தாமதமாகக் கொஞ்சம் தடுமாறி தாம்பத்திய பாடம் படித்திருந்தாலும், இருவரும் இணையின் மேலிருந்த நேசத்தை நெருக்கத்தின் வழியே கடத்தினார்கள்.
தயாவின் கரம் அவளை முழுமையாய் ஆக்கிரமிக்க, “தயா..” என்று சிணுங்கி விட்டாள் குறிஞ்சி.
“ஷ்ஷ்ஷ், கத்தாத குறிஞ்சி” அவள் இதழில் முணுமுணுத்து இறுக மூடினான்.
“சத்தம் வெளில கேட்க போகுது”
“அதெல்லாம் கேட்காது தயா” மூச்சு வாங்க பதில் சொன்னாள். அவன் முகம் அந்தி சூரியனாய் சிவக்க, “மாடி ரூம் ரெடியானதும் நாம அங்க ஷிஃப்ட் ஆகிடலாம். அப்போ நீ எம்புட்டு கத்தினாலும் எனக்கு ஓகேதான்” என்று கண் சிமிட்டி அவளைக் களவாடினான்.
“உன்னை விட இதுதான் அதிகம் சிணுங்குது” என ஏற்கெனவே அவளின் கொலுசு, வளையல் என அனைத்தையும் அவர்களின் திருமண இரவில் செய்தது போலவே, முதல் வேலையாக அவற்றை உருவி மேஜையில் வைத்து விட்டிருந்தான்.
“தயா..”
“என்ன…” மோக மயக்க குரலில் வினவினான்.
“எல்லை தாண்டிட்டேன் குறிஞ்சி. இப்போ எட்டி நிக்கச் சொல்லாத”
“எட்டி நிக்கச் சொல்லல தயா” என்று அவனை மேலும் நெருக்கமாக இழுத்தாள். “உங்க மெட்டி என் காலை கீறுது” என்று சிணுங்கினாள்.
“நீதானே அதைக் கழட்ட விட மாட்டேங்குற, அப்புறம் இந்நேரத்துல கம்பிளென்ட் பண்ணா எப்படிக் குறிஞ்சியாத்தா?”
“நம்ம கல்யாணம் முடிஞ்சதும் நீங்க கழட்டி இருக்கணும். அப்போ கழட்டாம இருந்துட்டு இப்போ கீறுதுன்னு சொன்ன, என் மேல பழியைப் போடுறீங்க?” என்று சிலிர்த்துக் கொண்டு சொன்னாள்.
சிரிப்புடன், “என்ன, இப்போவே கழட்டிறவா?” என்று கண் சிமிட்டி கேட்டான்.
“வேணாம், உங்க விருப்பம் போலப் போட்டுக்கோங்க. ஆனா என் மேல உரசாம பார்த்துக்கோங்க”
“அடியே” என்று விளக்கம் சொல்ல போனவனுக்கு வெட்கமும், சிரிப்பும் சேர்ந்தே வந்தது.
“உன் மெட்டிதான் என்னை டேமேஜ் செய்யுமே தவிர என் மெட்டி உன்னை ஒன்னும் செய்யாது. செய்யாம பார்த்துக்கறேன். ம்ம்” என்று கூறி, குறும்பாகக் கண்ணடித்து அவளைத் தன்னோடு சேர்த்தணைத்தான்.
அவர்களதில் திருமணத்தின் போது மணமகனுக்கும் காலில் மெட்டி அணிவது வழக்கம். அவரவர் குடும்பப் பழக்கபடி திருமணம் முடிந்ததும் நாள் பார்த்து அதைக் கழற்றி விடுவார்கள். ஆனால் தயாபரன் அதை அணிந்தே இருக்கவும் அவளுக்கு ஆச்சர்யமாகப் போனது. நெடுநாள்கள் அது குறித்து அவனிடம் அவள் கேள்வி கேட்டதே கிடையாது. திருமணமான ஆரம்ப நாள்களில் அவர்கள் முட்டிக் கொண்டுதானே திரிந்தார்கள்.
சமீபமாக அவனுக்கு உடல் நலமில்லாமல் போன போதுதான் அவனிடம் காரணம் கேட்டிருந்தாள்.
“ஏன் மெட்டியை கழட்டாம கால்லயே போட்டிருக்கீங்க தயா?”
“உனக்குத் தாலி போலதானே எனக்கு மெட்டி?”
“நான் என்ன கேட்டா..”
“ஏய் நிஜமாதான் குறிஞ்சி ஆத்தா. அந்தக் கால நடைமுறை இதெல்லாம். ஆம்பளை தலை நிமிந்து நடப்பான், அதுனால பொண்ணுங்க கழுத்துல கல்யாணமானதுக்கு அடையாளமா தாலி இருக்கும். பொண்ணுங்க தலை குனிஞ்சு நடப்பாங்க, அதுனால ஆம்பளைங்க கால்ல கல்யாணமானதுக்கு அடையாளமா மெட்டி இருக்கட்டும்னு. பிறன் மனை நோக்க கூடாதுன்னு ஏற்பாடு” என்று அவளுக்கு விளக்கம் அளித்தான். இது அவளுக்கும் தெரிந்த சங்கதிதான்.
“இப்போ நீங்க எதுக்கு சார் மெட்டி போட்டு இருக்கீங்க? அதைச் சொல்லுங்க முதல்ல”
“என்ன கேள்வி இது குறிஞ்சி. எனக்குக் கல்யாணமாகிடுச்சுன்னு ஊருக்கு மட்டுமில்ல எனக்கு நானே சொல்லிக்கிடதான் மெட்டி போட்டிருக்கேன்” என்று அவன் சொன்ன விதமே அவள் முகத்தில் முறுவலை வரவழைத்தது.
இப்போதும் அதே முறுவலுடன் கணவனின் முகம் பார்க்க அவளை மோகத்துடன் முழுமையாகக் களவாடி கொண்டான் தயாபரன்.
அவன் கை வளைவில் ஓய்ந்து கண் மூடியிருந்தவள், “உங்க மேல சிகரெட் வாசம்” என்று மூக்கை சுருக்கினாள்.
“வாசமா? ஹாஹாஹா, இவ்வளவு நேரம் என் கூட இழைஞ்சப்போ வாசம் வரலையோ உனக்கு?” என்று தலையை உயர்த்தி அவன் நாக்கை மடித்து மிரட்டலாக வினவ, “அப்போ சத்தியமா வரல தயா” என்று அடித்துச் சத்தியம் செய்யாத குறையாகச் சொன்னாள். அவன் மீசையைப் பிடித்து அவள் இழுக்க, வலித்தாலும் சுகமாக இழுபட்டவன், “உனக்கு மனபிராந்தி குறிஞ்சியாத்தா. நான் சிகரெட் கம்ப்ளீட்டா விட்டு பத்து நாளைக்கு மேலாச்சு” என்று சரியாக நாள் கணக்கை சொன்னான். அவள் முகமே சிவந்து விட்டது.
“நிஜமாவா தயா”
“எனக்குப் பொய் சொல்லி பழக்கம் இல்ல குறிஞ்சியாத்தா” என்று அப்போதும் அவளை முறைத்தவனை, மீசையைப் பிடித்திழுத்து அவன் இதழ்களில் ஆழமாய் முத்தமிட்டாள்.
“இந்தப் போதைக்கு முன்னாடி சிகரெட் என்ன, எந்தப் போதை மருந்தும் ஈடாகாது” என்று உளறியவனைச் சிரிப்புடன் சேர்த்தணைத்துக் கொண்டாள்.
மறுவாரம் மொட்டை மாடியில் எழுப்பிய ஒற்றை அறை தயாராகவும் எளிமையாகச் சாமி கும்பிட்டு பால் காய்ச்சினார்கள். பெரிதாக அக்கம் பக்கம் என யாரையும் அழைக்கவில்லை.
அது துர்காவை மனத்தில் வைத்து கட்டிய அறை என்பதால், ஶ்ரீகாந்த் வீட்டினரை மட்டும் அழைத்திருந்தார்கள்.
உண்ணாமலை சிதம்பரம் தம்பதிகள் ஶ்ரீகாந்த்துடன் வந்திருந்தார்கள்.
“அப்பத்தா” என இம்முறை அவரைச் சரியாக முறை வைத்து அழைத்த ரோஜா, “பால் குடிங்க ஃபர்ஸ்ட்டு. சூடா இருக்கு. தயா மாமாவ ஆத்தி தர சொல்லவா?” என்று உண்ணாமலையை உபசரித்தாள். அவர் முகம் நொடியில் புன்னகை பூசிக் கொண்டது.
“பால் எடுத்துக்கோங்க” என்று நீட்டிய துர்காவை முறைத்தாலும், ரோஜா சொன்னதும் ஒரு குவளையைக் கையில் எடுத்தார்.
“குழந்தை அழகா முறை சொல்லி கூப்பிடுது. ஆத்தா வாயிலதேன் இன்னமும் முறையா அழைப்பு வர மாட்டேங்குது” என்று துர்காவை ஓரக் கண்ணால் நொடித்தவர், “நீ சொல்லு ராசாத்தி” என்று ரோஜாவை தூக்கி மடியில் அமர்த்தினார்.
“எங்கம்மாவ திட்டுறீங்களா?” அவர் மடியில் சட்டமாக அமர்ந்து கொண்டு அவரையே கேள்வி கேட்டது பட்டு ரோஜா.
அவரோ சிரிப்புடன், “இல்லையே தங்கம்” என்று சமாளிக்க, “அம்மாகிட்ட பேசும் போது உங்க மூஞ்சி ஆங்கிரியா இருந்துச்சு” என்று அவள் ஆதாரத்துடன் கேட்கவும் அவரால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
“அப்படியா இருந்துச்சு? அது சும்மா ராசாத்தி. இந்தா பாரு, இப்போ உங்கிட்ட சிரிச்சுட்டேன் இல்ல?”
“ஆமா, சிரிச்சுட்டீங்க” என்று மலர்ந்து சிரித்தாள் பட்டு ரோஜா.
உண்ணாமலை அவளையே பார்த்திருக்க, “பட்டு ரோஜா மாடியில புதுசா கட்டியிருக்க ரூம் எனக்குக் காட்டுறியா?” என்று அவளை அழைத்தான் ஶ்ரீகாந்த்.
“இதோ.. ஶ்ரீக்கா, வந்துட்டேன்” என்று பட்டு பாவாடையை ஒரு கையில் பிடித்துக் கொண்டு அவனிடம் ஓடினாள்.
“அம்மா, நீயும் வாம்மா. மாடிக்குப் போலாம்” என்று அங்கு ஓரமாக நின்றிருந்த அம்மாவையும் கூட்டுச் சேர்த்தது வாண்டு.
இருவரின் குடும்பமும் அங்கிருக்கத் தயங்கி நின்றாள் துர்கா.
“நானும் வர்றேன், வாக்கா” என்று குறிஞ்சியையும் தன்னோடு சேர்த்துக் கொண்டு அக்காவின் கைப் பிடித்து மாறி ஏறினான் தயா.
இவர்களைக் கண்டதும் வாடிய ஶ்ரீகாந்த் முகத்தைப் பார்த்த தயா மீசைக்கடியில் புன்னகையை ஒளித்தான்.
“ஶ்ரீ மச்சா, வாங்க எல்லாரும் சேர்ந்து ஒரு போட்டோ எடுத்துப்போம்” என்று ஶ்ரீகாந்த்தை அழைத்தவன் மனைவி, அக்காவுடன் இணைந்து நின்றான். ஶ்ரீகாந்த் கையில் ரோஜாவுடன் வேகமாக அங்கே வரவும் துர்கா ஒதுங்கி நின்றாள்.
தயாவின் ஒரு பக்கம் குறிஞ்சி, மறுபக்கம் ஶ்ரீகாந்த் நின்றிருந்தார்கள். ஶ்ரீகாந்த் தோளில் ரோஜா மலர்ந்திருக்க, அவனையொட்டி துர்கா கண்ணசைவில் கெஞ்சி நிற்க வைத்தான் அவன். குறிஞ்சி புகைப்படம் எடுப்பதற்காக அலைபேசியை மேல் நோக்கி கையை உயர்த்த, தயாவின் முகத்தில் நேசம் நிறைந்த புன்னகை நிறைந்திருந்தது. அக்காவை இப்படிப் பார்ப்பதில் அப்படியொரு ஆனந்தம் அவனுக்கு. அவனது எத்தனை வருட ஏக்கம் அது.
குறிஞ்சி நான்கைந்து புகைப்படங்கள் எடுத்ததும், “நான் கடைக்குப் போகணும், நேரமாகுது, நான் கிளம்பறேன். நீங்க ரூமை பொறுமையாகப் பார்த்துட்டு கீழ வாங்க மச்சா.” என்று ஶ்ரீகாந்த்திடம் சொன்னவன், “குறிஞ்சி, நேத்து நைட்டு உங்கிட்ட ஒரு ஃபைல் கொடுத்தேனே? அதை எங்க வச்ச, வந்து எடுத்துக் கொடு, வா” என்று மனைவியின் கை பிடித்துக் கீழே இறங்கி விட்டான் தயா. தம்பியின் பின்னேயே செல்லப் போன துர்காவின் கையை அழுத்தமாகத் தடுத்துப் பிடித்தான் ஶ்ரீகாந்த்.
“இல்லங்க, வீட்ல.. கீழ எல்லாரும் இருக்காங்க” என்று அவள் தத்தி தடுமாற, “இருக்கட்டும்ங்க. என்ன இப்போ? அவங்க முன்னாடிதானே நாம மேல வந்தோம்? யாரும் நம்மைத் தடுக்கலயே? சும்மா எல்லாத்துக்கும் பதறாம நார்மலா இருங்க” என்றான்.
“பட்டு ரோஜா, இந்த வீடு யாருக்குனு சொன்ன?” இப்போது அவன் கவனம் குழந்தையின் பக்கம் திரும்பியது.
“நமக்கு..” என்று இருவரையும் ஒற்றை விரலால் சுட்டி ராகம் போட்டது வாண்டு.
பால் பற்கள் தெரிய புன்னகைத்து, “நீங்க, நானு, அம்மா எல்லாம் இங்க இருக்கப் போறோம்” என்றாள்.
“அப்படியா பட்டு ரோஜா? எனக்குத் தெரியாதே”
“தெதியாதா? இந்த ரூம் நமக்கு, என்கிட்ட நாச்சியா ஆயா சொன்னாங்க. அப்புறம் தயா மாமா கூடச் சொன்னாங்க. நீங்க வேணா அம்மா கிட்ட கேளுங்க. இல்லம்மா?” என்று மழலையில் அவனுக்கு விளக்கம் சொல்லி, அம்மாவையே அவனுக்குப் பதில் சொல்ல வைக்க முயன்றாள்.
ஶ்ரீகாந்த்தின் பார்வை நமுட்டு சிரிப்புடன் துர்காவின் மேல் பதிந்தது.
அவன் பக்கமே திரும்பாமல் மிகவும் பொறுப்பாகப் பக்கத்தில் இருந்த மல்லிகை பந்தலை பார்த்திருந்தாள் அவள்.
மெதுவாக அவள் புறம் சாய்ந்து எட்டி அங்கே மலர்ந்திருந்த மல்லியை கை நிறைய நிதானமாக நேரம் எடுத்து பறித்து அவளிடம் நீட்டினான். மென்மையாய் இருவரின் மேனியும் உரசிட மூச்சை ஆழ உள்ளிழுத்தாள் அவள்.
அப்பொழுது, “ஶ்ரீக்கா தண்ணி வேணும்” என்று ரோஜா கேட்க, “ரூம்ல இருக்கும், வா எடுத்து தர்றேன்” என்று அவளோடு நடந்தவன், திரும்பி துர்காவை பார்த்தான். மெலிதான தயக்கத்துடன் அப்படியே அசையாமல் நின்றவள், அவனது கெஞ்சலான கண்ணசைவில் அவனைப் பின் தொடர்ந்தாள்.
முதலில் நுழைந்ததும் சிறிய கூடம், அதன் ஒரு ஓரத்தில் சிறியதாகச் சமையல் மேடை மறுபக்கம் பெரிய படுக்கையறை அதனுடன் ஒய்வறையும் இணைக்கப்பட்டிருந்தது. ஒற்றை அறை எனப் பெயருக்கு சொன்னாலும் அதைக் காண சிறிய வீடு போலக் காட்சியளித்தது.
அந்தச் சமையல் மேடையில் ரோஜாவை அமர்த்தி அவளுக்குக் குடிக்கத் தண்ணீர் எடுத்துக் கொடுத்தான் ஶ்ரீகாந்த். மகளின் மறுபக்கம் வந்து நின்றாள் துர்கா.
தண்ணீரை குடித்து முடித்ததும், “பால் இங்கதான் காய்ச்சினோம் ஶ்ரீக்கா” என்று அவன் தாடையைப் பற்றித் திருப்பி, அங்கிருந்த சிறிய அடுப்பை கை காட்டினாள் குழந்தை.
“நானும்தானே உங்க கூட இருந்தேன் பட்டு ரோஜா?”
“ஆமால்ல?” என்று கண்ணைச் சுருக்கி, பற்கள் தெரிய சிரிக்க, “ஆமாதான்” என்று அழுத்தமாகச் சொல்லி அவள் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டான். அப்பாவின் அன்புக்கு ஏங்கிய குழந்தை அவள். மலர்ந்து கிளுக்கி சிரித்தாள்.
பள்ளியில் அவள் பார்க்கும் அனைவருக்கும் அப்பா இருக்கிறார். தனக்கு மட்டும் இல்லையே என்ற ஏக்கம் அந்தப் பிஞ்சு மனத்தில் ஆழமாய்ப் பதிந்திருந்தது.
“உனக்கு அப்பா இல்லையா? உங்க அப்பா எங்க? உங்கப்பா வரலையா?” என்ற எல்லாக் கேள்விகளுக்கும் விடையாக ஶ்ரீகாந்த் அவள் கண்களுக்குத் தெரிய, அவனை இறுக பற்றிக் கொண்டாள் குழந்தை. அன்பு அனைத்தும் செய்ய வல்லதுதானே!
“ஏய் இங்க பாரு, எனக்கும் அப்பா இருக்காங்க” என்கிட்டயும் நீ வச்சிருக்கப் பொம்மை இருக்கே எனும் குழந்தைகளுக்கே உரிய மனநிலை.
ஶ்ரீகாந்த் முத்தமிடவும் பதிலுக்கு எக்கி அவன் கன்னத்தில் முத்தம் பதித்தாள் குழந்தை. ஶ்ரீகாந்த் அதை எதிர்பார்த்திருக்கவில்லை, அவன் கன்னம் உணர்ந்த ஈரத்தில் அவன் கண்கள் மெதுவாக மூட, உதடுகள் பிரிந்து புன்னகைத்தன.
“தேங்க்யூ பட்டு ரோஜா” வாரி அணைத்து அவள் முகமெங்கும் முத்த மழை பொழிந்தான். துர்கா அவர்களையே புன்னகையுடன் பார்த்திருக்க, மெல்ல நெருங்கி தயக்கத்தை உதறி அவள் கன்னத்திலும் மென்மையாய் இதழ் ஒற்றி விலகினான்.
மறுநொடி துர்கா சிலையென உறைந்து நின்று விட்டிருந்தாள்.
அந்நேரம், “ரோஜா.. ரோசு.. இங்க வா” என்று குறிஞ்சி கீழிருந்து கத்தி அழைக்கவும், “குறிஞ்சி அத்த என்னைய கூப்பிடுறா” என்று அவன் கைகளில் இருந்து நழுவி இறங்கி கீழே ஓடி விட்டது குட்டி ரோஜா.
துர்காவும் அப்படியே மகளின் பின்னே நழுவ பார்க்க, “என்னைப் பார்த்தா பூச்சாண்டி மாதிரியா இருக்கு உங்களுக்கு? எங்க ஓடுறீங்க?” என்று அவளின் கைப் பிடித்துத் தடுத்து நிறுத்தினான் ஶ்ரீகாந்த்.