திருமண விருந்தை பொறுத்தவரை சுவையாக நாலு பேர் பாராட்டும் வகையில் இருக்க வேண்டும். திருமணத்திற்கு வந்தவர்கள் வயிறார உண்டு, வாயார வாழ்த்த வேண்டும்.
மாறாகத் தங்களின் பகட்டை காட்ட, இலை நிறைத்து உணவை வைத்து, அதில் பாதியை கூட விருந்தினர் உண்ண முடியாது வீணாக்குவது அவனுக்கு மிகுந்த மனவருத்தத்தைத் தரும்.
அன்னப்பூரணியை அவமதிப்பது அவனால் ஏற்றுக் கொள்ள முடியாதது.
ஒரு விருந்தை சமைக்க எத்தனை நேரமெடுக்கும், எவ்வளவு உழைப்பு போட வேண்டும் என்பதை நன்கு அறிந்தவன் அவன். ஆகையால், தன் திருமண விருந்து வாய் பிளக்க வைக்காமல், வயிறையும், மனத்தையும் நிறைக்க வேண்டும் என நினைத்தான் அவன்.
பெரியவரின் கொள்கையும் அதுதான். உணவு வீணாவதை பார்த்தாலே பொங்கி விடும் மனிதர் அவர். அவன் சொன்னதைக் கேட்டு மகிழ்ந்து போனார். அவனது வேண்டுகோளை மகிழ்வுடன் ஏற்று நடத்திக் கொடுத்தார்.
முன் தின இரவு, அன்று காலை உணவு இரண்டும் இட்லி, தோசை, இடியாப்பம், பணியாரம், பூரி அதற்கான தொடு உணவுகள், வடை, கேசரி என அளவான, சுவையான சிற்றுண்டியாக அளிக்கப்பட்டது.
இப்பொழுது விருந்தினர் கூட்டம் குறைந்திருக்க மணமக்களை மதிய உணவுண்ண அழைத்துச் சென்றார்கள்.
பொன்னி அரிசி சோறு, வத்தக் குழம்பு, சின்ன வெங்காயம், முருங்கை சாம்பார், அவரைக்காய் பொரியல், கேரட் பீன்ஸ் பொரியல், உருளைக் கிழங்கு காரக் கறி, வாழைக்காய் வறுவல், புடலங்காய் கூட்டு, பரங்கிக்காய் கூட்டு, தக்காளி ரசம், பச்சை மாங்காய் ஊறுகாய், தக்காளி ஊறுகாய், மோர், தயிர், தயிர் சாதம், மோர் மிளகாய், அப்பளம், வடை, அசோகா அல்வா, காசி ஹல்வா, பால் பாயாசம் எனத் தலை வாழை இலை போட்டுப் பரிமாறினார்கள்.
திருமண விருந்துக்கான மெனு அதுதான்.
அமிர்தா பவன் மிகச் சிரத்தை எடுத்து சுவையான உணவை மிக நேர்த்தியாகப் பரிமாறினார்கள்.
பந்தி முறையில் ஆங்காங்கே பணியாளர்கள் நிறுத்தி, இலையை நிரப்பாமல் அளவாய் உணவு பரிமாறி, அடுத்து கேட்கும் முன் வேண்டியதை கேட்டு பரிமாறி விருந்தினர்களின் வயிறையும் மனதையும் நிறைத்துப் பாராட்டைப் பெற்றார்கள்.
நீண்ட நாட்களுக்குப் பின் திருமண விருந்தை ரசித்து உண்டாள் நித்யா.
“25, 45 அயிட்டம்னு இலைல வச்சு நம்ம மூஞ்சில அடிக்காம, இப்படிச் சாப்பிடதான் நல்லாருக்குப்பா” என்றாள் அப்பாவிடம்.
“எங்க காலத்துல இதான் மா கல்யாண விருந்து. இப்போதான் நூடுல்ஸ் எல்லாம் விருந்துல போடுறாங்க” என்று புலம்பினார் அவர்.
மணமக்கள் மதிய உணவை உண்டு முடித்துப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இளமாறன் வீடு கிளம்பத் தயாராக நின்ற பெரியவரை சந்தித்து உணவிற்காக மனதார நன்றி சொன்னான்.
“ரொம்பச் சந்தோஷம் தம்பி” என்று அவன் தோளில் தட்டினார் பெரியவர்.
ஒருவாறு மண்டபத்தில் கூட்டம் குறைய, வீட்டுக்குக் கிளம்பலாம் என்றார் கஸ்தூரி.
வீட்டு மனிதனாக வினோத், சசிகுமார் அங்கேயே நிற்க, அவர்களுடன் சுகந்தி ஏற்பாடு செய்திருந்த ஆட்களும் மண்டபத்தில் மிச்ச வேலைகளையும், பொறுப்புகளையும் பார்த்துக் கொண்டனர். மற்றவர்கள் அனைவரும் மணமக்களோடு வீடு திரும்பினார்கள்.
இளமாறன் ரோஜாவுடன் காரில் ஏறும் முன் அப்பாவை பார்க்க, “முதல்ல நம்ம வீட்டுக்குப் போய்டலாம்” என்றார் சங்கரன்.
இளமாறன் ஒருவனுக்காக அங்கே அனைத்து விதிகளும் தளர்த்தப்பட்டது.
சிவஹரி எதுவும் மறுத்துப் பேசவில்லை. மகளின் மகிழ்ச்சி மட்டுமே அவருக்குப் பெரிதாகத் தெரிய, மாப்பிள்ளை வீட்டினரிடம் இணக்கமான உறவை பேணினார்.
சுகந்தி முதலில் சென்று மருமகளை வரவேற்க தயாராக நின்றார்.
இளமாறன் இறுக்கமாக இருந்தான். ரோஜா அவன் கைப் பிடித்து இளக வைத்தாள். அவனோடு வலது கால் எடுத்து வைத்து உள்ளே சென்று பெரியவர்கள் சொன்ன சடங்குகள் அனைத்தையும் செய்து முடித்தாள்.
பூஜை அறையில் விளக்கேற்றி, வணங்கி, பெரியவர்களின் பாதம் பணிந்து, பால் பழம் உண்டு அங்கிருந்து கிளம்பி கஸ்தூரி வீடு சென்றார்கள்.
அங்கும் அதே சடங்கு சம்பிரதாயங்கள் தொடர்ந்தன.
“உனக்கு மாமியார் வீடு இல்லைனு அப்பா புலம்பினார். இப்போ பாரு ஒன்னுக்கு ரெண்டு வீடு கிடைச்சிருக்கு” என்று அவர்கள் வீடு திரும்பும் வழியில் கேலி செய்தாள் நித்யா.
அதிகாலை எழுந்து திருமணம், அதைத் தொடர்ந்த சடங்குகள், உடை மாற்றி வரவேற்பு எனப் பல மணி நேரங்கள் நின்றது, இப்போதும் மாமியார் வீட்டுச் சடங்குகள், அடுத்துச் செய்யக் காத்திருக்கும் தன் வீட்டுச் சடங்குகள் என அன்றைய நாளின் பரபரப்பு ரோஜாவை சோர்வுற செய்ய, கண்ணை மூடினாள் அவள். அவளுக்குத் தன் தோள் தந்தான் இளமாறன்.
மீண்டும் பட்டு வேட்டி சட்டைக்கு மாறி இருந்தவனை மையலாகப் பார்த்து அவன் தோளில் தலை சாய்த்துக் கண் மூடினாள் ரோஜா.
இருபது நிமிடங்களில் அவளது வீடு வந்து விட்டது.
அடுத்த ஒரு மணி நேரத்தில் அங்கும் சடங்குகள் முடிந்து அனைவரும் ஓய்வாக அமர, பெரியவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.
மண்டபத்தில் பொறுப்புகள் அனைத்தையும் முடித்து விட்டு நேராக ரோஜா வீடு வந்தனர் வினோத் மற்றும் சசிகுமார்.
சசிகுமார் நேராகச் சிவஹரியிடம் சென்று, “மாப்பிள்ளை அவர் வீட்டுக்கு போகணும் சொல்றார்” என்றான் நேரடியாக.
சங்கரன் தொண்டையைச் செருமி கொண்டு மகன் சார்பில் பேச, சுகந்தி, சித்ரா, கஸ்தூரி எனப் பெண்கள் கூட்டணிக்கு அவனின் முடிவில் சம்மதம் இல்லையென்றாலும் அமைதியாக நின்றார்கள்.
எல்லாம் ஏற்கனவே அறிந்ததுதான். மீண்டும் ஒரு முறை கலந்து பேசி, பெரியவர்கள் சம்மதம் சொல்ல, நித்யா, சசிகுமார் உடன் வர, புதுமணத் தம்பதிகள் இளமாறன் வீடு சென்றார்கள்.
புத்தம் புது வீடு போலச் சுத்தமாக இருந்த இளமாறனின் வீட்டை மீண்டும் ஒரு முறை ஆள் வைத்துச் சுத்தம் செய்து வைத்திருந்தார் சுகந்தி.
அவர்கள் வீட்டிற்குள் நுழைந்ததும் ஓடிச் சென்று சோஃபாவில் பொத்தென்று விழுந்தாள் ரோஜா.
“அப்பாடா..” என்றாள் சத்தமாக. இளமாறன் அவளருகில் வந்து அமர, நித்யா இரு கைகளிலும் பையுடன் அங்கு வந்து தங்கையை முறைத்தாள்.
“என் கூட வா” என்று மிரட்டலாக அழைத்தாள்.
“த்ரீ மினிட்ஸ் நித்திக்கா, பிளீஸ்” கெஞ்சினாள் ரோஜா.
இளமாறன் அவளின் கைப் பிடித்து அழுத்திக் கொடுக்க, முறைத்தாள் நித்யா. பதிலுக்கு அவளை முறைத்துக் கொண்டு, எழுந்து சென்றாள் ரோஜா.
இடப் பக்க அறைக்கு அவளை அழைத்துச் சென்று, “போய்க் குளிச்சுட்டு வா. நான் உனக்கு டிரஸ் எடுத்து வைக்கிறேன்” என்றாள் நித்யா.
“நம்ம வீட்லயே…”
“ஷ்ஷ்ஷ், பேசாம சொன்னதைச் செய்” என்று குளியல் அறைக்குள் தங்கையைத் தள்ளி விட்டாள். குளித்து வந்து உடை மாற்ற பையில் இருந்து ரோஜா சேலையை எடுக்க, அதைப் பிடுங்கி கொண்டு, வேறொரு உடையை நீட்டினாள் நித்யா.
“ச்சீ என்னது இது? நீயெல்லாம் அக்காவா?” என்று முகம் சுளித்த தங்கையின் மண்டையில் கொட்டி தன் தலையில் அடித்துக் கொண்டாள் நித்யா.
“இப்ப போட சொல்லல ரோஸ் குட்டி. அப்புறமா..” என்றவளை முறைத்து நின்றாள் தங்கை. அத்தனை கவர்ச்சியான உடையை அணிய என்ன காணவே வெட்கமாக வந்து தொலைத்தது. கூச்சத்துடன் அதை வாங்க மறுத்தாள்.
“உனக்கெல்லாம் நம்ம தாய் மாமா பொண்டாட்டிதான் சரி. எனக்கு அட்வைஸ்ங்கிற பேர்ல அவங்க பண்ணது எல்லாம்..”
“அச்சோ, சென்சார் போடு நித்திக்கா.” கத்தி, அக்காவின் வாயை கைக் கொண்டு மூடினாள் ரோஜா.
“நான் ஒன்னும் பண்ணல. ஆல்ரெடி நீ பதட்டமா இருப்ப. இதுல நான் வேற லூசு மாதிரி பண்றேன்” என்றவள் தங்கையைத் தொல்லை செய்யாமல் அவள் போக்கில் விட்டாள்.
“நான் தூங்க போறேன் ரோஸ். ஆல் த பெஸ்ட்” என்று விட்டு அங்கிருந்த கட்டிலில் விழுந்தாள் நித்யா.
இரண்டே நிமிடங்களில் அவள் உறங்கியது போலத் தெரிய வெளியே சென்றாள் ரோஜா. எதிரே வலப் புற அறையின் கதவு லேசாகத் திறந்திருக்க அதை நோக்கி நடந்தாள் அவள்.
அவளுக்காகவே காத்திருந்தது போல வாயிலில் கால் வைத்ததும் அவள் முன்னே வந்து நின்றான் இளமாறன். அவனோடு அறைக்குள் நுழைந்தவள், அதன் அலங்காரத்தைப் பார்த்து ஒரு நொடி தயங்கி நின்றாள். அறையெங்கும் பன்னீர் ரோஜா அலங்கரித்திருந்தது. படுக்கை, சுவர், ஜன்னல், மேற்கூரை என ஒரு இடத்தையும் விட்டு வைக்கவில்லை அவர்கள்.
ரோஜா அறையை நோட்டமிட, இளமாறன் கண்கள் மனைவியைத் தயக்கமின்றி ரசித்தது, தன்னை மீறி வெட்கப்பட்டாள் ரோஜா.
கடந்த ஒரு மாதமாக இரவு, பகல் என நேரம் காலம் பார்க்காமல் மணி கணக்கில் காதல் பேசியவர்களுக்கு, தனிமைக்கு ஏங்கியவர்களுக்கு, உறவும், உரிமையும், தனிமையும் கிடைத்த அந்த இரவில் பேச்சே வரவில்லை.
“ரோஜா..” மென்மையான காலடித் தடத்துடன் அவளை நெருங்கி அனுமதி வேண்டி நின்றான் இளமாறன்.
“இளா.. பேசலாமே” என்றாள் பதட்டத்துடன்.
“ம்ம்” என்றவனுக்குப் பேச்சும் வேண்டும், அதைப் பேசப் போகும் பாவையும் வேண்டும் எனப் பேராவல் எழ, மனைவியின் ஒற்றை விரலை பற்றினான்.
தாமரை வண்ண மென்பட்டு அணிந்திருந்தாள். காதில் ஆடிய குடை ஜமிக்கி ஊஞ்சலாடி அவன் கவனத்தை ஈர்த்தது. அதை உரசிய ஜாதி மல்லி சரத்தின் வாசம், மனைவியின் வாசம் அறிய சொன்னது.
“பேசணுமா?” மனைவியின் கண் பார்த்துக் கண்களில் குறும்பு மின்ன கேட்டான்.
“ஆமா..”
“சரி, பேசு” என்று அவளை இழுத்து அணைத்துக் கொண்டான். அவளுக்கு எங்கே பேச்சு வந்தது?
“இளா” என்று சிணுங்கிய இதழ்கள் அவன் வசமாகியிருந்தது.
“பேசு ரோஜா” அவன் இதழ் ஒற்றிக் கொண்டே இருக்கையில் பேசும் இடைவெளி அவளுக்கு எங்கே கிடைத்தது?
இதழ்கள் இடம் மாறி, தடம் மாறி, உடைகள் தளர்ந்து, உடல்கள் சேர, உள்ளங்கள் இரண்டும் ஒன்றாகியது.
முத்தத்தால் மோகம் வளர்த்து,
தேகத்தில் தீ மூட்டினான்.
வெட்கம் களைந்து, வேட்கை சமைத்து, முத்தம் பரிமாறி, காமம் பருகி, காதலில் கட்டுண்டு இளைப்பாறினார்கள்.
“இளா…” என்று இழைந்து பிதற்றிய குரலும், அவன் கழுத்தில் பதிந்த பற்தடமும், உடலெங்கும் பதிந்த மென் நகக் கீறல்களும், ஆசுவாச முத்தங்களும், இறுகிய அணைப்பும் தராத நிறைவை மனைவியின் கண்கள் அவனுக்குத் தந்தது.
அந்தக் கண்களில் அவனுக்கான இரக்கம், பரிவு, காதலை பலமுறை கண்டிருக்கிறான். ஆனால், இந்தக் கணம் மையலும், மோகமும், தாபமும் விழி நிறைய ஏந்தி, “இளா” என்று மனைவி உளறியது அவன் உயிரில் நிறைந்தது.
“ரோஜா, பேசணும்னு சொன்ன? பேசவேயில்ல?” ரோஜா இதழ்கள் அவர்களைச் சுற்றிச் சிதறியிருக்க, தன் ரோஜாவை அள்ளி மார்பில் போட்டுக் கொண்டான்.
“பேசினேன். நிறைய. உங்களுக்குப் புரியலையா?” சந்தேகம் கேட்டாள் ரோஜா.
அவள் வார்த்தைகள் அவன் மார்பில் புதைய, இதழ்கள் மார்பில் உரசி சிலிர்க்க வைத்தது.
“புரியலையே” என்று கள்ளம் படித்தவன், மீண்டும் காதல் படித்தான்.
எப்போது உறங்கினார்கள் என்று அவர்களுக்குத் தெரியாது. ஆனால், மறுநாள் அதிகாலையில் அவன் கண் விழிக்கையில் குளித்து, சேலையை ஒற்றையாய் சுற்றிக் கொண்டு, ஈரக் கூந்தல் ஒரு பக்கமாய் வழிய, அவனிடம் நடந்து வந்த மனைவி அவனை மொத்தமாய் வசீகரித்தாள்.
இளமாறனுக்கு மகிழ்ச்சி, சந்தோஷம், உவகை, ஆனந்தம் இந்த வார்த்தைகளுக்கு எல்லாம் அர்த்தம் அவள் தந்தாள். அதையெல்லாம் தாண்டி, பல வருடங்கள் கழித்து நிறைவாக, முழுமையாக உணர்ந்தான். இவள் என் ரோஜா, என் மனைவி, என் ஜீவனை நிறைத்தவள் என்ற நிறைவும் நிம்மதியும் உணர்வும் நெஞ்சத்தை நெகிழ செய்ய, மெல்ல எழுந்து, மனைவியை இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டான்.
மீண்டும் முத்தத்தில் தொடங்கி மொத்தமாய் அவள் ஜீவனில் உறைந்தான்.