நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 23 (2)

அவன் இரண்டு மணி நேரம் கழித்துக் கண் விழிக்க, குறிஞ்சி வீட்டில் இல்லை.

“எங்கம்மா அவள?” என்று அம்மாவிடம் விசாரித்தான்.

“ஏன் தம்பி, உடம்புக்கு முடியாம போனா அவளை இப்படியா போட்டு படுத்துவ? அவ உன்னைய சமாளிக்க முடியாம ஓடியே போய்ட்டா” என்றார் தீவிர முகப் பாவத்துடன்.

“எங்க போனா?”

“ம்ம் சென்னைக்குத்தேன்” என்று அவர் சொல்லவும் திகைத்து திருதிருத்தான்.

“இப்போ சென்னைக்கு எதுக்குப் போய் இருக்கா அவ?”

“டேய், தம்பி. நம்ம கடை வரைக்கும் போய் இருக்கா டா. இப்ப வந்துடுவா” என்றார் சிரிப்புடன்.

“கடைக்கு எதுக்குப் போனா?” என்று அடுத்தக் கேள்வியைக் கேட்டான்.

“உன் கேள்விக் கணையில இருந்து தப்பிக்கவா இருக்கும்” சிரித்துக் கொண்டே சொல்லி விட்டார்.

அவன் வெளியே போகப் பார்க்க, “மழை விழுது தம்பி. உன்னய வெளில விடக் கூடாதுன்னு சொல்லியிருக்கா குறிஞ்சி. நீ உள்ள போ மொத” என்று மகனை விரட்டினார்.

“அவ வரட்டும் இருக்கு” என்று கடுப்புடன் சொல்லி உள்ளே சென்றான். அவனுக்குக் காய்ச்சல் சரியானதும்தான் அவனைக் கடைக்குப் போகவே விட்டாள் குறிஞ்சி. ஐந்தாம் நாள் தையல் பிரித்துக் காயம் ஆறினதும் இயல்பாக இருக்க விட்டாள்.

“ஆனாலும் ரொம்பப் பண்ற டி நீயி” என்று அவன் முறுக்கி கொண்டாலும், அவளின் கவனிப்பு அவனை இதமாக உணர செய்திருந்தது. மனம் மையலாக அவள் மேல் படர்ந்திருந்தது. நேசம் கொண்ட நெஞ்சம் நிறைந்து தழும்பியது‌. அவர்களுக்குள் நெருக்கம் அதிகரித்திருந்தது.‌

அவனுக்கு முழுதாக உடல்நிலை சரியானதும் முன்பு போல அப்பாவுக்கு ஓய்வு கொடுத்து கல்யாண வேலைகளை இழுத்து போட்டுச் செய்து கொண்டிருந்தான்.

“நீ கவலைப்படாத தயா, கடையை நான் பார்த்துப்பேன். நான் இல்லன்னா மருமக பார்த்துக்கும்” என்று பழனியப்பன் சொல்ல, “மருமகளா?” என்று அதிர்ச்சியுடன் சந்தேகம் கேட்டான்.

“அப்புறம் குறிஞ்சி எனக்கு மருமக இல்லாம என்னவாம்?”

“இல்ல, அவ என்னைக்குக் கடைக்கு வந்தா?”

“ஒரு வாரமா குறிஞ்சி கடைக்கு வந்துட்டு தானேப்பா இருக்கு. பொறுப்பா கல்லால இருக்கே. அடுப்பு வேலைலாம் கூடப் பார்த்ததே. அவங்க அம்மா போலவே நல்ல கை பக்குவம் மருமகளுக்கு” என்று சிலாகித்துச் சொன்னார். அவன் உணவக பொறுப்பாளர் நடராஜனை அழைக்க, “ஆமா, தம்பி. தங்கச்சி ரொம்பப் பொறுப்பு. எல்லா வேலையும் இழுத்துப் போட்டு செய்யுது” என்று அவரும் பாராட்டுப் பத்திரம் வாசித்தார்.

உணவகத்தில் அவள் சமையல் வேலை செய்தாள் என்பதைதான் அவனால் நம்பவே முடியவில்லை.

அலமேலு அங்கு வேலை செய்வதே அவளுக்குப் பிடிக்காது. அப்படியிருக்கையில் அவள் சமையல் செய்தாளா? அவனால் இன்னுமே நம்ப முடியவில்லை.

அவள் மனம் மாறியிருக்கிறது என்பது புரிகிறது. ஆனால் என்று தடுமாறி நின்றான் அவன்.

அன்று அம்மாவுடன் சென்று கற்பகத்துக்குக் கல்யாண பத்திரிக்கை வைத்து விட்டு வந்தான்.

அவர் முகத்துக்கு நேராக, “எங்க அக்கா மாமியாருக்கு போன் பண்ணி பேசினதுக்கு ரொம்ப ரொம்பத் தேங்க்ஸ் அத்த. உங்களாலதான் இந்தக் கல்யாணம் சாத்தியமாகி இருக்கு” என்று அவருக்கு நன்றி சொன்னான்.

“அத்தைன்னு மரியாதை இல்லாம எப்படிப் பேசுறான் பாரு” என்று அவர் நொடிக்க, “நீங்க குடும்பத்தோட கல்யாணத்துக்குக் கண்டிப்பா வந்து எங்க அக்காவை ஆசீர்வாதம் பண்ணிட்டு, வயிறார சாப்பிட்டு போங்க அத்த. ஆனா வீட்டுப் பக்கம் வந்து நீங்களோ, உங்க மகனோ வாலாட்டலாம்னு நினைச்சீங்க.. போன முறை விரலோட விட்ட மாரி இல்லாம இந்த டைம் கையை உடைச்சு விட்ருவேன், கவனம்” என எச்சரித்து விட்டே வந்திருந்தான்.

அவர்கள் வாடகை காரில் சென்றிருந்தாலும் அங்கங்கே நிறுத்தி பத்திரிக்கை வைத்ததில் நனைந்து, காய்ந்து என ஒரு வழியாகி இருந்தார்கள்.

வீடு வந்ததும் சோர்ந்து அமர்ந்து விட்டார் நாச்சம்மை.

“இனிமே நீங்க வீட்ல இருங்கம்மா. நானும் அப்பாவும் பார்த்துக்கறோம். இல்லன்னா குறிஞ்சிய கூப்பிட்டுக்கறேன்” என்றான் தயா.

அவர் மறுத்து சொல்ல, அவன் கேட்பதாக இல்லை.

அந்த மழை நாளில் துர்கா, ஶ்ரீகாந்த்தின் காதல் பயிர் புரிதலுடன் துளிர்க்க தொடங்கிருந்தது.

அலைபேசியில் ஶ்ரீகாந்த்திடம் பேசிக் கொண்டிருந்த துர்கா முகத்தில் அப்படியொரு பொலிவு, புன்னகை.

அதைக் கண்ட தயாபரன் முகத்திலும் புன்னகை படர்ந்தது. குறிஞ்சி அவனை விசித்திரமாகப் பார்த்து உணவு பரிமாறினாள்.

அவள் கையில் சிணுங்கிய வளையலை கூர்ந்து நோக்கினான் அவன்.

“நர்ஸ் வளையல் போட கூடாதுதானே?” என்று அவன் கேட்க, “வீட்ல போடலாம்” என்றாள் அவள்.

உணவு முடித்து மறுநாள் போட எடுத்து வைத்த சட்டையைத் தேய்த்து வைக்க எடுத்தான் அவன்.

மழை நேரம் அடிக்கடி மின்தடை ஏற்படும் என்பதால் இப்போதே அந்த வேலையை முடித்திடலாம் என்று இறங்கினான்.

குறிஞ்சி இரவு உடைக்கு மாறி படுக்கையில் இருந்தாள். தூக்கம் வராததால் அலைபேசிக்கு தலையைக் கொடுத்திருந்தாள்.

“ஆஆ.. அ…ம்மா” தயாபரன் கையை உதறி அலற, “என்னாச்சு தயா?” பதறி எழுந்து அவனிடம் ஓடினாள்.

அவன் மேல் மின்சாரம் பாய்ந்திருந்தது.

“ஷாக் அடிச்சுருச்சா தயா? அப்படியென்ன கவனம் இல்லாம வேலை செய்வீங்க” அவன் மேல் பாய்ந்து அவனை ஆராய்ந்தாள்.

“லேசான ஷாக்தான். ஒன்னுமில்ல விடு” அவன் குரல் அவள் காதிலேயே விழவில்லை. அவனை இழுத்துப் படுக்கையில் அமர வைத்து, திரும்பி வேகமாக மின் இணைப்பை அணைத்து, இஸ்திரி பெட்டியை பிடுங்கி போட்டாள்.

“எங்க கைய காட்டுங்க?” என்று அவன் கையைப் பிடித்திழுத்து பரிசோதித்தாள். அவள் விழிகள் சிறகடித்துத் துடித்து அவன் மேனியெங்கும் அலைந்தன. கைகள் பதற்றத்துடன், நடுக்கத்துடன் அவன் கையை வருடி ஆராய்ந்தன.

“என்ன பண்ணுதுன்னு சொல்லுங்க தயா” அவள் குரலில் இருந்த கலக்கம் அவனுக்கே அவனுக்கானது என்பது புரிய, மின்சாரம் பாய்ந்தது போல அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.

“தயா..” அவள் தவிக்க,

“எனக்கு ஒன்னுமில்ல குறிஞ்சி. ரிலாக்ஸ்” என்று அவள் காதில் சொன்னான். அது மெதுவாக அவள் மனத்தைச் சென்றடைந்தது.

“நான் என்னன்னு பார்க்கறேன் தயா”

“இந்தா பார்த்துக்கோ” என்று தன்னை முழுமையாக அவளிடம் ஒப்படைத்தான். அவன் பார்வையே அவளுக்குச் செய்தி சொல்லிட, “நீங்க கத்தவும் பயந்துட்டேன் தயா” என்றாள் தயக்கத்துடன்.

அவன் கரம் மெல்ல உயர்ந்து அவளின் முக வடிவை அளந்தது.

“எனக்கு ஒன்னுன்னா குறிஞ்சிக்கு வலிக்குமா?”

“வலிக்காது, இனிக்கும்” என்றாள் கோபமாக. அந்தக் கோபம் கூட அவனுக்குக் குளுகுளுவென்றிருந்தது.

“இனிக்குதான்னு பார்ப்போம்” என்று அவளின் இதழை அணைத்திருந்தான். அவனுக்கு இணங்கி, இசைந்து, இன்பத்துடன் இணைந்தாள் குறிஞ்சி. இதழின் இனிமை இரவின் நீளத்தை நீட்டித்திருந்தது.

வெளியே மழை வேகம் கூடி வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது. ஜன்னல் வழி சாரல் உள்ளே தெறித்து அவர்களை நனைக்க, காதல் மழையில் நனைந்து கொண்டிருந்தார்கள் இருவரும்.

இப்போது பிடித்தம் இருவருக்கும் பொதுவாகி இருந்ததை இருவருமே உணர்ந்திருந்தனர். அது இன்னுமே அவர்களின் பிரியத்தைக் கூட்டி பிடித்து வைத்தது.

error: Content is protected !!
Scroll to Top