நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 23 (1)

“பிடிச்சிருக்குன்னு எப்போ சொல்லியிருக்கீங்க தயா?” என்று அவள் கேட்கவும், தூக்க கலக்கத்துடன் தலையை உலுக்கி கண்ணை மூடித் திறந்தான்.

“பல முறை சொன்ன ஞாபகம். நான் பிடிக்காம உன் கையைப் பிடிக்கலன்னு.. அழுத்தமா உன் கை பிடிச்சு சொன்ன ஞாபகம்” என்றான் குழறலாக. அந்தக் குரலே அவளை வசீகரித்தது.

படுக்கையில் அவனை நெருங்கி அமர்ந்தாள்.

“சொன்னீங்கதான், இல்லங்கள. ‍ஆனா, துர்காக்காகதான் இந்தக் கல்யாணம், வேற வழியில்லாம என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறீங்கன்னு என்னை நம்ப வச்சீங்களா இல்லையா? அதைச் சொல்லுங்க?”

“நீயா எதையாவது கற்பனை பண்ணிட்டு பேசினா அதுக்கு நானா பொறுப்பு?” முன்னர் அவள் சொன்ன வார்த்தைகளையே இப்போது அவளுக்குத் திருப்பிப் படித்தான் அவன்.

“தயா”

“ஏய், தூர போடி. மனுஷனுக்கு முடியாத நேரம் வந்து தயா தயான்னு தவ்விட்டு கெடக்கா.”

“என்னைப் பிடிக்கும்னு நேரடியா என்கிட்ட சொல்றதுக்கு என்ன?”

“ஹான் நேரடியா நொட்டுறாங்க போடி. உன்னைப் பிடிச்சதுனாலதான் இப்படிப் பக்கத்துல படுத்துக் கெடக்கேன். பிடிக்காதவள போய்க் கட்டிக்க முடியுமா? அதுக்கு என்ன வேலிட் ரீசன் இருந்தாலும், மனசுக்கு பிடிக்கலன்னா நோ தான் குறிஞ்சி ஆத்தா”

“அப்போ தயாவுக்குக் குறிஞ்சியைப் பிடிக்கும்?” அவனை நெருங்கி கேள்வி கேட்டாள்.

அவனுக்கு வலி நிவாரணி மற்றும் உறக்கத்திற்கு மருந்து கொடுத்திருந்தார்கள். அரை உறக்க, மயக்க நிலையில் இருந்தான் அவன். பேச்சில் தெளிவில்லை. ஆனால் அவளுக்குத் தெளிவாக விளங்கியது.

“தயா, குறிஞ்சியைப் பிடிக்குமா?” அவன் கன்னத்தில் கைப் பதித்துக் கேட்டாள்.

அவள் கையைக் கழுத்தோடு அழுத்தி, “சில்லுன்னு இருக்கு” என்றான்.

“குறிஞ்சியை ரொம்பப் பிடிக்கும். எப்பவும் என்னை முறைச்சுட்டு போற அந்தப் பொண்ணை எனக்கு எப்படிப் பிடிச்சதுன்னே தெரியல. ஏ…ன் பிடிச்ச…துன்னும் தெ..ரியல.. குறிஞ்சியைப் பிடிக்கும். தயாவின் தேவதை அவ” என்றான் உள்ளார்ந்து. அப்படியே அவன் மேல் சாய்ந்து அணைத்து கொண்டாள்.

“ஏய்…”

“பேசாம தூங்குங்க”

“நீ தூங்கு.. குறிஞ்சிக்கு என்னைப் பி…டிக்காது” என்று உளறி அவன் நம்பிய உண்மையைச் சொன்னவன், ஆழ்ந்த உறக்கத்தில் அமிழ்ந்திருந்தான்.

“இல்ல, அவளுக்கு உங்களைப் பிடிக்கும்” என்று அவள் சொன்னது அவனுக்குக் கேட்டிருக்க வாய்ப்பில்லை.

அவனிடம் இருந்து மெல்ல விலகி, அவனை நேராக வசதியாகப் படுக்க வைத்து போர்த்தி விட்டு அவளும் படுத்து விட்டாள்.

மறுநாள் அவனது வழக்கமாக அதிகாலையில் எழுந்து விட்டான் தயா. அவனை ஒட்டிப் படுத்திருந்த குறிஞ்சி, அவனது அரவம் உணர்ந்து விழித்து விட்டாள்.

“தயா, என்ன வேணும்? ஏன் எழுந்துட்டீங்க? படுங்க” என்றாள்.

“கடைக்குப் போகணும். நீ தூங்கு”

“உங்களுக்கு உடம்பு முடியல. இதோட கடைக்குப் போவீங்களா? பேசாம படுங்க சொல்லிட்டேன். காய்ச்சல் குறையற வரைக்கும் வீட்ல இருந்து ரெஸ்ட் எடுக்கறீங்க. புரிஞ்சுதா?”

“நான் கடைக்குப் போகலைன்னா, வேற யார் போவா? நீயா போய்ப் பார்க்க போற?”

“ஏன் நானேதான் போகணுமா? எங்கம்மாவும், என் மாமனாரும் பார்ப்பாங்க”

“உனக்கு இந்த வாய் மட்டும் இல்லன்னு வச்சுக்கோ..”

“உங்ககிட்ட பொழைக்க முடியாது” என்று உதடு சுழித்துச் சொன்னாள். ஒற்றை விரலால் அவள் உதட்டை சுண்டி விட்டான். ஆவென்று கத்தி அவன் கையைப் பிடித்தாள். அவன் கை தீயாகச் சுட்டது. சட்டென எழுந்து அமர்ந்து அவன் நெற்றியில் கை வைத்து சோதித்தாள்.

“லேசா சுடுது, அவ்ளோதான். விடு, குறிஞ்சி”

“சுடுதா? கொதிக்குது. இந்தக் காய்ச்சலோட எங்கேயும் போகக் கூடாது நீங்க சொல்லிட்டேன். ஒழுங்கா ரெஸ்ட் எடுங்க”

“ரெஸ்ட் எடுக்க நான் என்ன..”

“தயா..” என்று கடுப்புடன் குரல் உயர்த்தி அவனை முறைத்தாள். அந்நேரமும், “கண்ணை நோண்டிருவேன்” என்று மிரட்டினான்.

அவன் கை பிடித்து இழுத்து மீண்டும் படுக்கையில் அமர்த்தினாள்.

“படுங்க. நான் போய் உங்களுக்குக் குடிக்க ஏதாவது கொண்டு வர்றேன். பீவர் செக் பண்ணிட்டு பாராசிட்டமால் போடணும்” என்று அவள் சொல்ல, அவள் பேச்சை அலட்சியம் செய்து எழுந்து நின்றான் தயா.

“என்ன பண்றீங்க தயா? உங்களுக்கு நல்ல காய்ச்சல், கால்ல தையல் வேற போட்டிருக்கு, நான் சொன்னா கேட்க கூடாதுன்னே இருக்கீங்களா?”

“பாத்ரூம் போகணும்டி.” என்றான் பல்லைக் கடித்து.

“போங்க. அதுக்குக் கூடப் பெர்மிஷன் வேணுமா உங்களுக்கு?” என்று புருவம் சுருக்கி கேட்டவளை எட்டி இழுத்தான்.

“ஹெல்ப் பண்ணவா தயா?”

“நீ பேசாம இரு குறிஞ்சியாத்தா. அதுவே பெரிய ஹெல்ப்தான். நான் பாத்ரூம் போக என்ன ஹெல்ப் பண்ணிடுவ நீ?” என்று அவன் கேட்க, “பாத்ரூம் வரைக்கும் கொண்டு போய் விடறேன், வாங்க” என்றாள் சாதாரணமாக. அவன் பேச்சினால், முகம் மாறாமல் காப்பதுதான் பெரும்பாடாக இருந்தது அவளுக்கு.

அவனே எழுந்து ஓய்வறை செல்ல, வேகமாகக் கீசரை போட்டு விட்டாள்.

“இப்ப குளிக்காதீங்க தயா. ட்ரெஸ் சேஞ்ச் மட்டும் பண்ணிக்கோங்க” என்று சொல்லி, அவனுக்காக மாற்றுடையைப் படுக்கையில் வைத்தாள்.

கதவை திறந்து வீட்டின் பின்னால் இருந்த ஓய்வறை சென்று வந்தவள், சமையல் அறைக்குள் நுழைந்து பாலை காய்ச்சினாள். ரோஜாவுக்கென வீட்டில் எப்போதும் இருக்கும் பால் ரஸ்க்கை எடுத்து சிறிய தட்டில் அடுக்கினாள். சத்தம் எழுப்பாமல் வேலை செய்து கொண்டிருந்தாள். ஆனால் அடுப்படியில் விளக்கெரியவும் விழித்து விட்டார் நாச்சம்மை.

“குறிஞ்சி தூங்கலையா நீ? இந்நேரம் இங்க என்ன பண்ற? பசிக்குதா? சாப்பிட ஏதாவது செஞ்சி தரவா?” என்று கேட்டார்.

“அவருக்குக் காய்ச்சல்த்தே. அதான் பால் காய்ச்சி குடுக்கலாம்னு..”

“தயாக்கு காய்ச்சலா? அவனுக்கு அம்புட்டுச் சீக்கிரம் மேலுக்கு முடியாம போகாதேம்மா” என்று அவர் சொல்லவும், முன்தினம் உணவகம் முன்பு நடந்த விபத்து, அவனுக்குக் காலில் ஏற்பட்ட காயம், அதில் ஆறு தையல்கள் போட்டிருக்கிறது, அதன் விளைவால் காய்ச்சல் வந்திருக்கும் என அனைத்தையும் விளக்கமாகச் சொல்லி விட்டாள்.

“அச்சச்சோ”

“காய்ச்சலோட கடைக்குப் போறேன்னு பிடிவாதமா நிக்குறார்த்தே.‌”

“இல்ல, இல்ல வேணாம். நான் உங்க மாமாவ கடைக்கு அனுப்பறேன். நீ அவனைப் பாரு” என்றார் நாச்சம்மை.

சரியெனத் தலையசைத்து, பாலும், ரஸ்க்கும் எடுத்துக் கொண்டு அறைக்குச் சென்றாள்.

உடை மாற்றிப் படுக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தான் அவன்.

“பால குடிச்சுட்டு இந்த ரஸ்க்க சாப்பிடுங்க. மாத்திர போடணும்” என்று நீட்டினாள்.

“என்னடி பால கொண்டு வந்து நீட்டுறியேன்னு நினைச்சா, பச்ச புள்ளைக்குக் குடுக்கற மாதிரி கூடவே ரஸ்க்கும் கொடுக்கற?” என்று விவகாரமாகக் கேள்வி கேட்டு, முகத்தைச் சுழித்தான்.

பால் குவளையை அவன் உதட்டில் வைத்து அழுத்தினாள். மெல்ல பருகினான். ரஸ்க்கை பாலில் நனைத்து ஊட்டியும் விட்டாள்.

“இதுக்காகக் காலக் கூட உடைச்சுக்கலாம் போலயே” என்றான் நக்கலாக. அவனை முறைத்தாலும் அவளுக்குச் சிரிப்பு வந்தது.

“போதும் குறிஞ்சி. ரஸ்க் வேணாம்” என்றவனை உறுத்து விழித்து, விழியால் மிரட்டியே உண்ண வைத்திருந்தாள். மாத்திரை போட்ட சற்று நேரத்தில் அசதியில் உறங்கி விட்டான் அவன்.

பழனியப்பன் அவளிடம் மகன் குறித்து விசாரித்து, அவரே கடைக்குச் சென்றிருந்தார்.

இட்லி, பாசிப்பருப்பு சாம்பார் வைத்து, அவனைப் போராடி உண்ண வைத்து, மாத்திரை போட செய்த பிறகே மருத்துவமனை கிளம்பினாள் அவள்.

“மாமாக்கு பீவர். பக்கத்துல போகாத உனக்கும் ஒட்டிக்கும்” என்று ரோஜாவை மிரட்டியிருந்தாள்.

“மாமாவ எட்டி மட்டும் பாத்துட்டு போறேன்” என்று அறைக்குள் கோழிக் குஞ்சு போலத் தலையை நீட்டி பார்த்த ரோஜா, “மாமாக்கு காய்ச்ச சரியா போவும் குறிஞ்சி” என்று சொல்லி பள்ளி கிளம்பினாள்.

“நான் லீவ் போடவா குறிஞ்சி?” துர்கா கேட்க, “உன் கல்யாணத்துக்கு லீவ் வேணும்னுதான் நான் லீவ் போடல. இப்போ நீ லீவ் போட்டா கல்யாணத்தப்போ என்ன செய்வ?” என்று அவள் கேட்கவும், “அதெல்லாம் பார்த்துக்கலாம்” என்றாள் துர்கா.

அவள் தம்பியை இப்படி உடல் நலமில்லாமல் அதிகம் பார்த்ததே கிடையாது. எப்போதும் சுறுசுறுப்பாகவே சுற்றி கொண்டிருப்பான்.

“இல்ல, நான் லீவ் போடுறேன்”

“நீங்க ரெண்டு பேரும் வேலைக்குக் கிளம்புங்க. அவனை நான் பார்த்துக்கறேன்” என்றிருந்தார் நாச்சம்மை‌.

குறிஞ்சி அப்போதும் அவனுக்கு மதிய உணவாகப் பூண்டு, வெந்தயம், தேங்காய் பால் சேர்த்த கஞ்சியைத் தயாரித்து வைத்து விட்டே வேலைக்குச் சென்றாள்.

இன்றும் மழை தொடர்ந்து கொண்டிருந்தது.

அவள் வேலை முடித்து வீடு வர, தயாபரன் படுக்கையில்தான் இருந்தான்.

“மதியம் ஒன்னும் சாப்பிடலையா நீங்க? கஞ்சி வச்சுட்டு போனேன் தானே? அது பிடிக்கலைன்னா, அத்தையை ஏதாவது செஞ்சு தர சொல்லி இருக்கலாம் இல்ல?”

“போடி, வாய்க்கு எதுவும் வெளங்கல” என்றான் சோர்வாக.

“முதல்ல எந்திரிச்சி உக்காருங்க” வலுக்கட்டாயமாக அவன் கை பிடித்து எழுப்பி விட்டாள். அவனுக்குக் காய்ச்சல் இன்னும் விட்ட பாடில்லை.

அவனது போர்வையை விலக்கி, “ஏய்” என்று அவன் கத்தியதை பொருட்படுத்தாமல், வேட்டியை விலக்கி தையல் போட்டிருந்த இடத்தைப் பரிசோதித்தாள்.

“குளிக்கணும் குறிஞ்சி. கசகசன்னு இருக்கு”

“தையல்ல தண்ணி படக் கூடாது தயா. நான் உடம்பு துடைச்சு விடவா?”

“உடம்பு துடைச்சு விடுறியா? நீயா? வேணாம் வேணாம்” என்று வேகமாகப் போர்வையை இழுத்து மூடினான். அவள் நமுட்டு சிரிப்புடன், “சின்னப் பிள்ளை மாதிரி பிஹேவ் பண்ணாதீங்க” என்றாள்.

“நீ போய் உன் வேலையைப் பாரு” என்று அவளை விரட்டினான்.

“என் வேலையைதான் நான் பார்க்கறேன்”

“சரிங்க நர்ஸம்மா. அத என்கிட்ட பார்க்காதீங்க” என்றான் நக்கலாக. அலமாரியை திறந்து அழுத்தமான டர்க்கி துவாலையைத் தேடி எடுத்து, தையல் போட்டிருந்த இடத்தைச் சுற்றி கட்டினாள்.

“என்னடி பண்ற?” அவன் கேள்விக்குப் பதிலே சொல்லவில்லை அவள்.

அவன் குளிப்பதற்குத் தேவையான பொருட்களை எடுத்து வைத்தாள். குளியல் அறையில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி வைத்து, அவன் அமரவும், காலுக்கும் தோதாகவும் இரண்டு முக்காலியை எடுத்து போட்டாள்.

அவன் மறுத்தும் கேளாமல் அவனது அடிப்பட்ட காலை மட்டும் அவளே தண்ணீர் படாமல் சுத்தம் செய்து விட்டு, “நீங்க குளிச்சுட்டு வாங்க” என்று வெளியேறினாள்.

தயா குளித்து வந்ததும் சற்றே தெளிவாக உணர்ந்தான்.

“சாப்பிடுங்க” பூண்டு கஞ்சி, பருப்பு துவையல் எடுத்து வந்தாள்.

“சோறு இல்லையா? இதைப் பார்த்தாலே சாப்பிட தோனல குறிஞ்சி” என்று முகத்தைச் சுருக்கினான். சிறிய கரண்டியால் எடுத்து அவனுக்கு ஊட்டி விட்டாள்.

“குடு, நானே குடிக்கிறேன்” என்று வாங்கிக் கொண்டான். காய்ச்சலுக்குக் கஞ்சி நல்ல சுவையாகவே இருக்க, முரண்டினாலும் முழுதையும் குடித்து முடித்திருந்தான்.

உடலில் கொஞ்சம் தெம்பு வந்ததும், “ஹோட்டல் வரைக்கும் போயிட்டு வர்றேன்” என்று எழுந்தான். அவனை அப்படியே அமுக்கி, “பேசாம படுங்க சொல்லிட்டேன்” என்று மிரட்டினாள்.

“ரூமுக்குள்ளயே எம்புட்டு நேரம்டி இருக்க?”

“வெளில மழை பெய்யுது. நனைஞ்சா நாலு நாளைக்குக் காய்ச்சல் விடாது. உங்களுக்கு எப்படி வசதி?” என்று கேட்டிருந்தாள்.

“உன்கூடப் போராடுறதுக்கு இந்தக் காய்ச்சல் கூடவே மல்லுக் கட்டிப்பேன் போ” என்று கடுப்படித்தாலும் கண்ணை மூடி படுத்து விட்டான்.

error: Content is protected !!
Scroll to Top