“மேகம் திறந்து கொண்டு மண்ணில் இறங்கி வந்து..
மார்பில் ஒளிந்து கொள்ள வா வா.. மார்பில் ஒளிந்து கொண்டால் மாறன் அம்பு வரும்…” ஒரு பக்கம் பாடல் ஒலித்துக் கொண்டிருக்க, அதனோடு சேர்ந்து சத்தமாகப் பாடிக் கொண்டிருந்தாள் ரோஜா.
“மாறன் அம்பு வரும்” என்று உச்சரிக்கையில் அவள் உதட்டில் காதலும், இளநகையும் வந்து ஒட்டிக் கொண்டது.
“கூந்தலில் ஒளிந்து கொள்ள வரவா?” என்று ரோஜா தொடர்ந்து பாட, தங்கையை இடித்துக் கொண்டு வந்தமர்ந்த நித்யா,
“ஆஹான், கூந்தலில் ஒளிந்து கொள்ள, இன்னும் ரெண்டு வாரம் இருக்கு ரோஸ் குட்டி” என்று கேலி பேச,
“ச்சீ, அக்கா மாதிரி பேசு நித்திக்கா” என்று ரோஜா முகம் சுருக்கினாள்.
அவளின் கன்னங்கள் இரண்டையும் பிடித்துச் செல்லமாகக் கிள்ளி, “நடுவீட்ல உட்கார்ந்து பாட்டு போட்டு, கூடவே பாடிட்டு இருக்கறது யாராம்? அதுவும் எல்லாம் லவ் சாங்ஸ்” என்று கிண்டலாகக் கேட்டாள் நித்யா.
“பாட்டு கேட்டது ஒரு குத்தமா?” என்று முறைத்தாள் ரோஜா. அவளின் முன்னே திருமண அழைப்பிதழ்கள் இருக்க, அதில் முகவரி எழுதிக் கொண்டிருந்தாள் அவள். இப்போது நித்யாவும் அந்த வேலையைப் பகிர்ந்து செய்யத் தொடங்கினாள்.
இருவருக்கும் குளிர்பானம் எடுத்துக் கொண்டு வந்த சித்ராவின் முகத்தில் அதைப் பார்த்ததும் தானாகப் புன்னகை அரும்பியது.
சின்ன மகளின் திருமணத்தை முன்னிட்டு, அதைக் காரணம் காண்பித்து, பெரிய மகளை இங்கேயே பிடித்து வைத்துக் கொண்டார் அவர். ரோஜாவின் நிச்சயத்திற்கு வந்த நித்யாவின் புகுந்த வீட்டினரிடம் சித்ரா அனுமதி போலக் கேட்க, அவர்களும் மறுக்கவில்லை.
சசிகுமார் வார விடுமுறைகளில் மனைவி, மகனை காண சென்னை வந்து விடுகிறான். அத்தோடு மாமனார் குடும்பத்திற்குத் திருமண ஏற்பாடுகளில் தன்னால் ஆன உதவிகளையும் செய்து கொண்டிருந்தான் அவன்.
“இந்த ஜுஸை குடிச்சுட்டு வேலையைப் பாருங்க பசங்களா” மகள்கள் முன்னே பானத்தை நீட்டி அவர் சொல்ல, “தேங்க்ஸ்ம்மா” என்று எடுத்துக் கொண்டனர்.
அப்போது, “நித்யா, உங்க மாமா வீட்டுக்கு போகணும் சொன்னேன் இல்ல? நாளைக்குப் போய்ட்டு வந்துடுவோமா?” என்று கேட்டபடி வீட்டிற்குள் வந்தார் சிவஹரி.
“ம்ம், போகலாம்ப்பா” நித்யா பதில் சொல்ல,
“ஊர் உலகத்துல தாய் மாமனுக்கு முதல்ல சொல்லிட்டுதான் பொண்ணுக்கு கல்யாணமே பண்ணுவாங்க. இங்க என் தம்பிக்குதான் கடைசியா பத்திரிக்கை வைக்கப் போறோம். அவன் என்ன நினைப்பான்?” என்று கணவரிடம் கோபத்துடன் சித்ரா கேட்க,
“என்னம்மா நீ, அதான் நிச்சயத்துக்குச் சொன்னோம் இல்ல? அவனைச் சபையில் முன்னாடி வச்சு தானே ரோஜாக்கு நிச்சயமே பண்ணோம். அப்பவே கல்யாண தேதி சொல்லி கூப்பிட்டாச்சு இல்ல? இப்போ என்ன புதுசா ஆரம்பிக்கிற நீ?” மனைவிக்கு நெருக்கமாகச் சென்று சமாதான குரலில் அவர் பேச, மகள்கள் நமுட்டு சிரிப்புடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.
“எங்க வீட்டு ஆளுங்கன்னா எப்பவும் உங்களுக்கு இளக்காரம்தான்” சித்ரா புலம்ப, “ஆமாடி. இளக்காரம்தான். அதான் 28 வருஷமா அவங்க வீட்டுக்கு உன்னை அனுப்பாம, உன் பின்னாடியே சுத்திட்டு இருக்கேன் நான். பைத்தியக்காரன்” என்றார் சிவஹரி.
“உன் தம்பி குடும்பத்தைப் பார்க்க நீ போய்ட்டா, நான் என்னடி பண்ணுவேன்?”
“என்ன பேசுறீங்க?” சித்ரா எரிச்சலுடன் கேட்க, அம்மா, அப்பா இருவரையும் ஓரக் கண்ணில் பார்த்து, நித்யா தங்கையின் உள்ளங்கையில் சுரண்டினாள்.
“நித்திக்கா..” அவள் சிணுங்க, “எழுந்து வா” என்று கிசுகிசுத்தாள் நித்யா.
இருவரும் மெல்ல சத்தம் போடாமல் அங்கிருந்து நழுவி தரைத் தளத்தில் இருந்த நித்யாவின் அறைக்குள் நுழைந்தனர்.
கதவை அடைத்ததும் நித்யா சிரிக்கத் தொடங்க, “ஏன் கா, அதுக்குப் பேரு சண்டையா? இல்லை தானே? அப்பாக்கு இவ்ளோ அன்பா பேச தெரியுமா?” ஆச்சரியத்துடன் வினவினாள் ரோஜா.
“அது அன்பு இல்லடி மக்கு. ரொமான்ஸ்” நித்யாவின் சிரிப்பு அடங்கேயில்லை.
“ச்சே அப்படியெல்லாம் ஒன்னுமில்ல.” என்று விட்டு, “அப்படியா?” என்று சந்தேகமாக ரோஜா கேட்க,
“ரியல் லைஃப் ரொமான்ஸ் இப்படித்தான் இருக்கும் ரோசு. இந்தாடி, சும்மா உங்கம்மா வீட்டுக்கு பொட்டி கட்டாதன்னு சொல்றதுக்குப் பின்னாடி, என்ன இருக்கு தெரியுமா? நீயில்லாம என்னால இருக்க முடியாது. அவ்ளோதான். அது புரியாமதான் பல பேர் அடிச்சுட்டு கிடக்காங்க”
“அப்போ இத்தனை வருஷம் அம்மா, அப்பா போட்ட சண்டை எல்லாம்?” ரோஜா யோசிக்க,
“அதுல நிறைய நிஜ சண்டையும் இருக்கு. அம்மா இடத்தில இருந்து பார்க்கும் போது அவங்க தொடர்ந்து ஒரு விஷயம் கேட்டு அப்பா மறுக்கும் கோபம்தான் அவங்களைக் கத்த வைக்குது”
“அவங்களுக்கான ஒரு ஃஸ்பேஸ் வேணும் இல்லக்கா?”
“கண்டிப்பா ரோஜா. அம்மாக்கு எல்லோரும் வேணும். பிறந்த வீடு, புகுந்த வீடு, தன் குடும்பம் எல்லாமே. ஆனா, அப்பாக்கு அம்மா இருந்தா போதும். காலையில் எழுந்ததும் அம்மாவை பார்க்கணும், ராத்திரி தூங்க போறதுக்கு முன்னாடி அம்மாவை பார்க்கணும். இல்லனா அவர் டென்ஷன் ஆகிடுவார். அப்பாவை பொறுத்தவரை இவளுக்கு நான் எல்லாமே செய்யறேன். இங்க என்ன குறைன்னு அம்மா வீட்டுக்கு போகணும்னு குதிக்கறான்னுதான் யோசிப்பார்.”
“ஆனா, அம்மாக்கு பிறந்த வீடுங்கறது தாய் மடி. அது அவங்களுக்குச் சரணாலயம். தன் மகாராணி கிரீடத்தை எடுத்து வச்சுட்டு இளவரசியா சுதந்திரமா உலா வர அவங்களை அனுமதிக்கிற இடம். எத்தனை வயசானாலும் அவங்களை மகளா, அக்காவா, தங்கையா மட்டுமே பார்க்கிற இடம். அம்மா, மனைவி, மருமக இந்த அடையாளங்கள் தர்ற பொறுப்புகள் இல்லாம அவளா இருக்க முடியற இடமும் அதுதான்.”
நித்யா சுவரில் இருந்த அவளின் திருமணப் புகைப்படத்தைக் கண்களால் வருடியபடி நீண்ட உரையை நிகழ்த்த,
“அனுபவம் பேசுது போல நித்திக்கா” நாக்கை துருத்தி நக்கல் பேசினாள் ரோஜா.
“ஆமா. நித்யாவின் திருமண வாழ்வின் குறிப்புகளில் இருந்து…” என்று செய்தி வாசிப்பாளர் போலச் சத்தமாக நித்யா அறிவிக்க, ரோஜா சத்தம் போடாமல் பற்கள் தெரிய சிரித்தாள்.
“உன் முகத்தில் கல்யாண களை வந்திடுச்சு ரோஸ் குட்டி” அவளின் கன்னம் கிள்ளி கொஞ்சினாள் நித்யா.
“ப்ச், நித்திக்கா” என்ற ரோஜாவின் சலிப்பில் வெட்கம் கொட்டிக் கிடந்தது.
“ஒரு கல்யாணம் முரணான, முன் பின் அதிகம் சேர்ந்திராத ரெண்டு பேரை காலம் முழுக்கச் சேர்ந்திருக்க வைக்கும் பந்தம். அதைத் தக்க வைக்க நிறைய நிறைய அன்பும் புரிதலும் இருக்கணும்”
“எப்படி? நம்ம அம்மாப்பா மாதிரியா?” இம்முறை ரோஜாவின் கேள்வியில் கேலி மட்டுமல்ல துளி கோபமும் இருந்தது.
“ஐயோ ரோஸ் குட்டி. அவங்க அப்படித்தான். அவங்களுக்கு ஒருத்தரோட ஒருத்தர் சண்டை போட்டுட்டே இருக்கணும். ஆனா, ஒருத்தர் இல்லாம இன்னொருத்தர் இருக்கவும் மாட்டாங்க. அம்மாவுக்கு என்ன கோபம்னாலும் அப்பாவை விட்டு போனதில்லை தானே?” தங்கையின் கண் பார்த்து அவள் கேட்க,
“ம்ம். ஆனாலும், அவங்க ரெண்டு பேரும் அவங்களுக்குள்ள பேசி, சரி பண்ணி இருக்கலாம். அவங்களைச் சிரிச்சு பேசி ஹாப்பியா பார்க்கணும் கா, எனக்கு” மெய்யான ஏக்கத்துடன் சொன்னாள் ரோஜா.
“ரோஜா, இப்பவே ஓரளவு சரியாகிட்டாங்க தானே?” நித்யா கேட்க, மெல்ல தலையசைத்தாள்.
தங்கள் பெற்றோரின் உறவை பிரித்துப் போட்டு ஆராய்ந்து அலச விரும்பவில்லை நித்யா. திருமணம் அவளது பார்வையின் கோணத்தை மாற்றியிருந்தது.
அப்பா மற்றும் கணவன் என்ற இரண்டு உறவுகளின் வேற்றுமையையும் கண் கூடாக அவளுக்குக் கணவன் சசிகுமார் காண்பிக்கையில்தான் அவளால் அம்மாவின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிந்தது. அதில் அவள் கற்றுக் கொண்ட பாடங்கள் ஏராளம். நாளை ரோஜாவும் புரிந்துக் கொள்வாள்.
“உன் மாறன் பேரன்ட்ஸை மட்டுமில்ல. நம்ம அம்மாப்பாவையும் நாம ஜட்ஜ் பண்ணக் கூடாது ரோஜா.”
“நான் ஜட்ஜ் பண்ணல நித்திக்கா. அப்பாவும், அம்மாவும் எப்படி இருந்தாலும், எனக்குப் பிடிக்கும். ஏன்னா, அவங்க நம்ம அப்பாம்மா” பளிச்செனப் புன்னகைத்து, உதடு குவித்து அக்காவிற்குக் காற்றில் முத்தம் கொடுத்தாள் ரோஜா.
“ஹா.. ரோஜா..” நித்யா ஏடாகூடமாக ஏதோ சொல்ல வரும் முன்பு அவளின் வாயை பட்டெனத் தன் கைக் கொண்டு மூடினாள் ரோஜா.
ஒரு வேகத்துடன் தங்கையின் கையைப் பிரித்து விட்டு, “அப்போ இளமாறன்?” என்று கேட்டாள் நித்யா.
“அதை உன்கிட்ட சொல்ல முடியாது போ”
“நீ ஒன்னும் சொல்ல வேணாம் போ” சிறுமிகள் போல அடித்துக் கொண்டனர்.
தங்கையை இடுப்பில் கை வைத்து முறைத்து விட்டு நித்யா வெளியில் செல்ல, ரோஜா அவளைப் பின் தொடர்ந்தாள்.
ஹாலை கடந்து சமையல் அறை செல்ல, இடைப்பட்ட பகுதியில் இருந்த உணவருந்தும் மேஜையில், அவர்களின் பெற்றோர் இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டே மதிய உணவை உண்டு கொண்டிருந்தார்கள்.