நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 22 (2)

அவளை இறுகிய முகத்துடன் இறக்கி விட்டவன், திரும்பியும் பாராமல் விரைந்து மறைந்திருந்தான்.

மதியம் வேலை முடித்து வெளியே வந்தவளுக்காக எப்போதும் போலக் காத்திருந்தான். அவள் வண்டியில் ஏறியதும், வீட்டை நோக்கி செலுத்தினான்.

“நான் கடைக்கு வர்றேன்”

“எதுக்கு?”

“எதுக்குன்னு சொல்லிட்டுதான் வரணுமா?”

“உங்கம்மா பத்திரமா இருக்காங்களான்னு பார்க்கவா?”

“இப்படியே பேசினீங்கன்னா வண்டியில இருந்து குதிச்சுடுவேன்.”

“குதிங்கறேன். அப்படியாவது கொழுப்பு கொறையுதான்னு பார்ப்போம்” என்று வண்டியை முறுக்கினான். வண்டி உணவக வழியில் திரும்பியது.

குறிஞ்சியைக் கண்டதும், “இந்த மழையில வீட்டுக்கு போகாம இங்க எதுக்குப் பாப்பா நனைஞ்சுட்டு வந்த?” என்று படபடத்தார் அலமேலு. புடைவை தலைப்பால் அவளின் தலையைத் துவட்டி விட்டார்.

“உங்கள பாக்கத்தான் வந்தா அத்த” சாவகாசமாகப் போட்டு கொடுத்து விட்டுச் சென்றிருந்தான் தயா.

“அப்படியா பாப்பா, என்னா சங்கதி?” என்று பரபரத்தார்.

“ஒன்னும் இல்லம்மா, சும்மா பார்க்கணும் போல இருந்துச்சு. வீட்ல யாரும் இல்லையா, தனியா நான் மட்டும் என்னா பண்ணுவேன்னு இங்கிட்டு வந்துட்டேன்”

“சரிதான். சாப்பிட்டியா நீயி? வீட்ல ஒன்னும் இருக்காது இல்ல?” என்று கேட்டவர், “வா, வந்து சாப்பிடு” என்றழைத்தார்.

“நான் அவரோட சாப்பிட்டுக்கறேன்மா” என்று கணவனைக் கண்ணால் தேடினாள்.

“தம்பி சாப்பிட நேரமாகும். நீ வா”

“நான் அவரோடவே சாப்பிடுறேன்ம்மா. ஆமா, நீ சாப்பிட்டியா? காலையில எப்படிம்மா கடைக்கு வந்த?”

“நான் நேரத்துக்குச் சாப்பிட்டேன்டா பாப்பா. இல்லனா தயா தம்பி வைய்யும்.”

“காலையில மழையில கடைக்கு எப்படிம்மா வந்த? நடந்தா?”

“எப்படிடா நடந்து வர முடியும்? ஆட்டோல வந்தேன். அந்தப் பாசு தம்பி கூட்டிட்டு வந்துச்சு” என்றார். குறிஞ்சி திரும்பி கல்லாவை பார்க்க, தயாபரனின் கண்கள் அவள்மேல் தானிருந்தன. ஒன்றையும் வெளிக்காட்டாத பார்வை. ஆனால் அவளை ஊடுருவியது அது. அவனருகே சென்று, “சாப்பிட வாங்க” என்றழைத்தாள்.

“நீ போய்ச் சாப்பிடு. நான் கல்லால இருக்கணும்”

“இம்புட்டு நேரம் யார் இருந்தா? அவங்களைப் பார்க்க சொல்லுங்க”

“உங்கம்மா இருந்தாங்க.” என்று அவன் சொன்னதும் வாயடைத்து போய் அவனைப் பார்த்திருந்தாள். அம்மாவை முதலாளி ஸ்தானத்தில் வைத்திருக்கிறான். நான் என்னவென்றால்.. ஐயோ என்றானது அவளுக்கு.

அவன் திரும்பி பின்னால் பார்க்க, அலமேலு வந்து அவளைச் சாப்பிட அழைத்துப் போனார்.

அந்நேரம் உணவகத்தில் மீண்டும் மக்கள் வரவு அதிகமாகத் தொடங்கியது. அவனை வற்புறுத்தாமல் அவள் மட்டும் சாப்பிடச் சென்றாள்.

அலமேலு அவளுக்கு மேஜையில் உணவு பரிமாற, “நான் உள்ள வந்து சாப்பிடுறேன்மா” என்று சமையல் அறையைக் கண் காட்டி கொஞ்சினாள்.

“நின்னுட்டுச் சாப்பிட்டா தம்பி வைய்யும். உக்காரு இப்படி” அவளைப் பிடித்து நாற்காலியில் அமர்த்தினார். தயாபரன் கண் காட்ட நடராஜன் ஓடி வந்து, அவளுக்காகக் காற்றாடியை ஓட விட்டுச் சென்றார்.

வாழை இலை விரித்து, சூடாகச் சோறு போட்டு, சுடசுட சாம்பார், கருணைக் கிழங்கு வறுவல் பரிமாறினார். அந்த மழைக்கு அவ்வுணவு அமுதமாக இருந்தது.

அலமேலு வாடிக்கையாளரை கவனிக்கச் சென்ற நொடி நேரத்தில் தயா வேகமாக வந்து அவளுக்குச் சோறு வைத்து, மிளகு ரசம், மல்லித் துவையல், அப்போது சூடாகப் போட்டிருந்த அவளுக்குப் பிடித்த மசாலா வடை வைத்துச் சென்றான்.

சென்னை வந்த போதும், அவளுக்குப் பிடித்த உணவு பண்டமாக அவன் வாங்கி வந்தது அவளுக்கு நினைவு வந்தது.

“நீங்களும் சாப்பிடுங்க தயா” என்று மெல்ல அவன் கரம் பற்றினாள்.

“நான் சாப்பிட உக்காந்தா, அப்புறம் சாப்பிட வர்ற ஆளுங்கள யாரு பாக்குறது? நீ சாப்பிட்டு எந்திரி” என்றான். அவள் கரம் அப்படியே விழுந்து விட்டது. மனமும்தான். இதையெல்லாம் எத்தனையோ முறை யோசித்திருக்கிறாள், பலரின் பசியைப் போக்குபவர்கள் பல நேரம் பசியில் வாடத்தான் வேண்டியிருக்கிறது. என்ன செய்ய? அதற்கு மேல் அவளால் உண்ண முடியவில்லை. இலையை மூடி எழுந்து கொள்ளப் போனாள், கல்லாவில் இருந்தவன் வேக நடையுடன் அவளிடம் வந்து, “இலையில இருக்கத சாப்பிட்டு எந்திரி” என்று அதட்டி அவளைச் சாப்பிட வைத்தான்.

அவளுக்கு என்னமோ மனமே சரியில்லை. அதே மனநிலையுடன் அம்மாவின் பின்னே சுற்றினாள்.

“இரவுக்கு என்ன சட்னி செய்ய வேண்டும்? இட்லி எத்தனை அடுக்கு ஊற்ற? என்ன சட்னி செய்ய? சாம்பாருக்குப் பருப்பு அளவு எம்புட்டு? அதில் என்ன காய் போட?” என அனைத்து கேள்விகளும் அலமேலுவிடம்தான் கேட்கப்பட்டன. ஆனால், அவரெந்த வேலைகளும் செய்யவில்லை. எல்லாம் மேற்பார்வை மட்டுமே. மற்ற வேலைகளை நடராஜன் பார்த்துக் கொண்டார்.

அம்மா அடுப்படியில் அல்லல் படவில்லை என ஆசுவாசம் கொண்டாள் அவள்.

“இங்க எல்லாமே நீயே சமைப்பன்னு நினைச்சேன்ம்மா.” என்று அம்மாவிடமே சொல்லி விட்டாள்.

“அதெல்லாம் அப்போ பாப்பா. மூனு நாளு வருஷமா நான் மேப்பார்வ மட்டும்தான். தினம் என்ன சமைக்கணும்னு சொல்லிட்டு, கூடவே நின்னு பாக்கறது மட்டும்தேன் இப்போ என் வேல” என்றவரை ஆனந்த அதிர்ச்சியுடன் பார்த்திருந்தாள்.

“தயா தம்பி எப்பவோ எங்களுக்கு ரெஸ்ட் கொடுத்திருச்சு” என்று அவனது பெற்றோரையும் சேர்த்துச் சொன்னார்.

“நீ கோபப்படுவன்னுதான் அம்மா எதுவும் உன்கிட்ட சொல்றது இல்ல பாப்பா. நீயே பார்க்கறியே,

நீ நினைக்கிற மாதிரி அம்புட்டு ஒன்னும் கஷ்டமான வேலை இல்லடா” என்றார்.

“என் அம்மா இவர்களிடம் வேலை செய்கிறார்” என்ற எண்ணமே எப்போதும் அவளுக்கு இருந்திருக்கிறது. அந்தக் கண்ணோட்டத்தில்தான் எல்லாவற்றையும் பார்த்திருக்கிறாள். அவள் சென்னைக்குப் படிக்கச் சென்று, பின்னர் அங்கேயே வேலையிலும் சேர்ந்திருக்க, உண்மையில் இங்கிருந்த உண்மை நிலவரம் அவளுக்குத் தெரிய வரவில்லை.

கல்லூரி படிப்பு, வேலை எனச் சென்னையில் விடுதியில் இருந்தவள், விடுமுறைக்கு இங்கு வரும் போதெல்லாம் அலமேலுவும் விடுமுறை எடுத்திடுவார். தயாபரன் குடும்பத்தைப் பற்றிப் பேசினாலும், உணவக பேச்சு உள்ளே வந்ததில்லை.

பின்னர்த் துர்கா, ரோஜா என்று அவளின் முழுக் கவனமும் அவர்கள் மேல் திரும்பியிருந்தது. தயாபரனை பார்த்திருக்கிறாள், பேசியிருக்கிறாள். ஆனால், அதில் வேறெந்த நோக்கமும் இருந்ததில்லை. காதல் கத்திரிக்காய் எல்லாம் துர்காவின் அனுபவத்தின் பின்னே அவளுக்கு எங்கே வரப் போகிறது. ஆக, துர்காவைத் தொட்டே அவளின் திருமணம் முடிவானது.

அதன் பிறகாவது சூழலை கிரகித்து இருக்கலாம் என்று தன்னைத்தானே நொந்து கொண்டாள் அவள்.

உணவு மேஜையிலேயே அவள் அமர்ந்திருக்க, அவளிடம் வந்த தயா, “அக்காவும், ரோஜாவும் வர்ற நேரமாச்சு. அத்த வீட்டுக்கு கிளம்புறாங்க, நீயும் அவங்களோட வீட்டுக்கு போயிடு” என்றான்.

“இல்ல, நான் உங்களோட..”

“ஆட்டோ வெளில நிக்குது குறிஞ்சி கிளம்பு. இங்க இருந்து என்ன பண்ண போற?” என்று கேட்டு அவளை அனுப்பி விட்டான். அம்மாவுடன் வீட்டுக்கு வந்தவள் நெஞ்சத்தில் அவனே நிறைந்திருந்தான்.

இரவு உணவை உணவகத்தில் இருந்தே கொடுத்து விட்டிருந்தான். ஆக அவளுக்கு வேலை எதுவும் இல்லை.

துர்கா, ரோஜா யாரின் பேச்சும் அவள் செவியில் ஏறவில்லை. அறைக்குள் அடைந்து ஜன்னல் வழியாகச் சாரலாய் பொழியும் மழையை வெறித்திருந்தாள்.

பத்திரிக்கை வைக்கச் சென்றிருந்த பழனியப்பன், நாச்சம்மையும் வீடு வந்து விட்டார்கள்.

அந்தச் சத்தம் கேட்டு எழுந்துச் சென்றாள். அவர்கள் உண்டதும், அசதியில் உறங்கிட, அவர்களோடு ரோஜாவும் உறங்கி விட்டாள்.

துர்கா மட்டும் ஏதோ பள்ளி வேலை செய்து கொண்டிருந்தாள். அவளும் பத்து மணிக்கு படுத்திட, தயாபரன் வருகைக்காகக் காத்திருந்தாள் குறிஞ்சி. அவன் தாமதமாகத்தான் வந்தான்.

மிகவும் சோர்ந்து, முகமெல்லாம் வாடி தெரிந்தான்.

கதவு திறந்தவன், அவனுக்காகக் காத்திருந்த மனைவியைக் கண்டதும், திகைத்துப் புருவங்களைக் கேள்வியாக உயர்த்தினான்.

“தூங்கல நீ?” பின்னே பொதுவாக இந்நேரத்துக்கு அவள் படுக்கைக்குச் சென்றிருப்பாளே.

“தூக்கம் வரல”

“கண்ணை மூடி படுத்தா தூக்கம் தானா வரப் போகுது” என்றவன், அப்படியே ஓய்வறைக்குள் நுழைந்திருந்தான். அவன் கதவை மூடும் முன், அவன் காலை தாங்கி தாங்கி நடப்பதை பார்த்து விட்டாள் அவள்.

“காலுக்கு என்னாச்சு தயா?”

“ஒன்னுமில்ல, தூங்கு”

“ஒன்னுமில்லன்னா எதுக்குக் கால ஒழுங்கா ஊனாம..”

“என்னடி உன் பிரச்சினை? காலையில இருந்து நொச்சு நொச்சுன்னு போட்டு பிடுங்கி எடுக்கற? பேசாம படுத்து தூங்கு சொல்லிட்டேன்” என்று எரிந்து விழுந்தான். அதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல், எழுந்து அவனருகில் சென்றாள்.

அவன் கதவை வேகமாக மூடப் போக, சட்டென்று கையை உள்ளே நீட்டி விட்டாள்.

“ப்ச் பைத்தியமே. உன் விரல் நசுங்கியிருக்கும் இப்போ.‌ ஆறிவிருக்கா ‍இல்லையா?” அவன் அதட்டலை புறக்கணித்து அவனது காலடியில் மண்டியிட்டு அமர்ந்து, அவன் காலை ஆராய்ந்தாள்.

அவன் பின்னங்கால் பகுதியில் ரத்தம் காற்சட்டைக்கு மேலாக உறைந்திருந்தது. காற்சட்டையை அவள் உயர்த்த, “ப்ச்” என்றான்.

“இது உங்களுக்கு ஒன்னுமில்லயா? எப்படி அடிபட்டுச்சு? எப்போ அடிபட்டுச்சு? இம்புட்டு நேரம் எப்படிக் கவனிக்காம இருந்தீங்க? மழை நேரம் இப்படித்தான் வூண்டை ஓப்பனா விடுவீங்களா? இன்பெக்ஷன் ஆகும்னு தெரியாதா? எனக்குப் போன் பண்ணி சொல்லணும்னு உங்களுக்குத் தோனலையா?” அவள் கரம் அவன் காயத்தை ஆராய, வாய் வெளுத்து வாங்கியது.

“சின்னக் கீறல்தானே சரியா போயிடும்” அவன் அலட்டிக் கொள்ளாமல் சொல்ல, “இது உங்களுக்குச் சின்னக் கீறலா?” எனக் கொந்தளித்து விட்டாள்.

அவள் விரல் அவன் காயத்தை அழுத்தி பார்க்கவும் வலியில், ஆவென்று கத்தி முகம் சுளித்து விட்டான். அவனை வலுக்கட்டாயமாக இழுத்துப் போய்ப் படுக்கையில் அமர்த்தினாள்.

“விடு குறிஞ்சி, நான் குளிக்கப் போறேன்”

“பேசாம உக்காருங்க சொல்லிட்டேன்” ஒற்றை விரலை அவன் முன் நீட்டி மிரட்டினாள். ஏற்கெனவே ஓய்ந்து போய் இருந்தவன், சாய்ந்து அமர்ந்து விட்டான்.

கைப்பேசியில் டார்ச் லைட் போட்டு அவனது காயத்தைக் கூர்ந்தவள், “ஸ்டிச் போடணும் போலத் தயா” என்றாள் கவலையுடன். விரல் நீள வெட்டுக் காயம், ரத்தம் உறைந்து போய் இருந்தது.

“காயம் ரொம்ப ஆழமா இருக்கு. எப்படி இம்புட்டு நேரமா கவனிக்காம விட்டீங்க. எம்புட்டு ப்ளட் லாஸ் ஆகியிருக்கும்” என்று அவள் படபடக்க, “நீ ரொம்பப் பண்ற குறிஞ்சி. தள்ளு எனக்குத் தூக்கம் வருது. நான் குளிச்சுட்டு படுக்கறேன்” என்று ஒற்றைக் கையால் அவளை விலக்கினான்.

அவன் தள்ளிய வேகத்தில் கீழே சரிந்தவள், “உங்கள..” என்று கத்தி, அவன் கைப் பிடித்து எழுந்து நின்றாள். அவள் உள்ளங்கைகளுக்குள் சூடு பரவ, மறுக்கரத்தை அவன் நெற்றியில் வைத்தாள், சுட்டது.

“காய்ச்சல் அடிக்குது தயா, இதுல கால்ல அடி வேற. பீவர் அதுனால கூட வந்திருக்கும். எழுந்திருங்க, ஹாஸ்பிடல் போய்ட்டு வந்திடலாம்” அவள் சொன்ன எதையும் அவன் கேட்பதாக இல்லையே. ஆனால் அவளும் விடுவதாக இல்லை.

துர்காவின் வண்டிச் சாவியை எடுத்து அவனைப் பின்னால் அமர்த்தி மருத்துவமனை அழைத்துச் சென்றிருந்தாள்.

அவளிடம் எதுவும் சொல்லாதவன் மருத்துவர் கேட்கவும் பதில் சொன்னான். அவர்களின் உணவகம் தேசிய நெடுஞ்சாலையில் அல்லவா இருக்கிறது. மழையினால் அங்கே ஒரு விபத்து. அதற்கு உதவி செய்யச் சென்றவனுக்குக் காலில் இடிபாடுகள் கீறியிருக்க, கவனிக்காமல் விட்டு விட்டான்.

“ஆறு தையல் போடுற அளவுக்கு ஆழமா கீறியிருக்கு. எப்படிக் கவனிக்காம விட்டீங்க? ரத்தம் வர்றது கூடவா தெரியல?” என்று சத்தம் போட்டார் மருத்துவர். அந்த ரத்த வெள்ளத்தில் அது தன் ரத்தமெனவே தான் உணரவில்லை என்று எப்படிச் சொல்வான் அவன்? வீடு வரும் வழியில்தான் வண்டியோட்டும் போது வலிக்கவும் கவனித்து, சின்ன அடி சரியாகப் போய் விடும் என்று அசட்டையாக விட்டு விட்டான்.

இதில் உன் மனைவி செவிலி வேறு என்று திரும்பி அவளையும் முறைத்தார் மருத்துவர்.

அவர்களின் அவசரத்திற்கு நல்லவேளையாக அந்நேரம் அறுவை சிகிச்சை நிபுணர்தான் அங்கிருந்தார். அதனால் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது.

காயம், காய்ச்சல் இரண்டும் சரியாக மருந்துகள் எழுதி கொடுத்தார்.

“டிடி இன்ஜெக்ஷன் போடணும். இடுப்ப காட்டுங்க, பேன்ட்டை லூஸ் பண்ணுங்க” என அந்நேரமும் அவனைச் சோதித்து, அவன் கரத்தில் வலிக்காமல் ஊசி ஏற்றினாள் அவள். ஒரு மணி நேரம் கழித்து வீடு வந்தவன், அசந்து படுத்து விட்டான்.

அவன் உடையோடு படுக்கவும், அவள் சட்டையைக் கழற்ற போக, பாதி உறக்கத்தில் இருந்தவன், “ப்ச்” என அவள் கையைத் தட்டி விட்டான்.

“அதென்ன என்மேல அப்படிக் கோபம் வருது உங்களுக்கு? என்னை ரொம்பப் பிடிச்சுதானே கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க? அப்புறம் நான் தொட்டா ஏன் தட்டி விடுறீங்க? என்கிட்ட பொய் சொல்லி யாரை ஏமாத்துறீங்க, என்னையா? உங்களையா?” என்று கோபமாகக் கேட்டிருந்தாள். வலி நிவாரணி மருந்தின் உபயத்தால் உறக்கம் அவன் விழிகளை உள்ளிழுக்க, மனைவியின் வார்த்தைகள் அவனைச் சொடக்கி விழித்திட செய்தது.

“என்ன சொன்ன நீ இப்போ?” என்று குழறலாகக் கேட்டான்.

“என்ன பொய் சொன்னேன்? உன்னைப் பிடிக்காதுன்னு எப்போ சொன்னேன்?” கரகரத்த குரலில் அவள் கண் பார்த்து கேட்டான்.

error: Content is protected !!
Scroll to Top