நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 22 (1)

ஶ்ரீகாந்த் துர்கா திருமணத்திற்குத் தேதி குறித்தாகி விட்டது. இரண்டு வீட்டினரின் தோது பார்த்து, துர்கா வீட்டினருடனும் ஆலோசித்துதான் முகூர்த்தநாள் குறித்திருந்தார்கள்.

ஒரே வாரத்தில் பத்திரிகை அடித்து வந்து விட்டது. அதன் பிறகு இரண்டு குடும்பத்தையும் பரபரப்புத் தொற்றிக் கொண்டது. பெரியவர்களுக்கு எப்போதும் கல்யாண வேலைகள் இருந்தன.

தயாபரன் பொறுப்பாக அவர்களுக்குத் தோள் கொடுத்தான். பெற்றார் பார்த்தே ஆக வேண்டிய வேலைகளை மட்டும் அவர்களைப் பார்க்க சொல்லி, அவன் கடையைக் கவனித்துக் கொண்டான்.

துர்கா இன்னமும் தன் வாழ்வில் ஏற்பட்ட மாற்றத்தை நம்ப இயலாதது போல நடமாடிக் கொண்டிருந்தாள். வீட்டினரின் சந்தோஷத்தைப் பார்க்கையில் ஏதோ சாபம் நீங்கிய உணர்வு அவளுக்கு.

அவள் காண்பது கனவல்ல, நிஜம் என நாளும் அவளுக்கு நிரூபித்துக் கொண்டிருந்தான் ஶ்ரீகாந்த். தினமும் அவளுடன் கைப்பேசியில் பேசினான், அடிக்கடி சந்திக்க வந்தான். இருவருக்கும் இடையே இருந்த மன இடைவெளி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே வந்தது.

ரோஜா இயல்பாக ஶ்ரீகாந்த்திடம் ஒட்டிக் கொண்டாள்.

துர்காவின் திருமண நிச்சயம் கற்பத்தின் காதுகளை எட்டி விட்டது. அவரால் தான் கேட்டதை நம்பவே முடியவில்லை.

“அந்தம்மாகிட்ட நான் சொன்ன கதைக்கு, அது அந்த வீட்டு பக்கமே போய் இருக்கக் கூடாதே?” என்று புரியாமல் புலம்பிக் கொண்டிருந்தார். அத்துடன் நில்லாமல் உண்ணாமலையை மீண்டும் தொடர்பு கொள்ள முயன்றார். இரண்டு முறை அவளின் அழைப்பை தவிர்த்தவர், பின்னர் அழைப்பை ஏற்று, “நாங்க வெளியூர் வந்திருக்கோம். என் புள்ள கல்யாண பத்திரிக்கை வைக்க, உங்ககிட்ட ஊருக்கு வந்து பேசறேன்” என்று சொல்லி அழைப்பை துண்டித்து விட்டார்.

“என்னாது, பத்திரிக்கை வைக்கிற அளவுக்குப் போயிடுச்சா? எப்படிங்கறேன். அவளுக்கு வந்த வாழ்வை பாரேன். எல்லாம் இவனைச் சொல்லணும், கெணத்து தண்ணிதானேன்னு கம்முன்னு கைய வச்சுட்டு இல்லாம அவ மேல கைய வச்சு எல்லாத்தையும் கெடுத்துக்கிட்டான். இனிமே இவனுக்கு எவன் பொண்ணு கொடுப்பான். இவன் கொணத்துக்கு எவ நம்ம வீட்டுக்கு வாழ வருவா. வந்தாலும் நம்மள செருப்பால அடிச்சுட்டு போவா..”

“உன் மருமக போன மாதிரிதானே?” என்று கேட்ட கணவரை கண்களால் எரித்தார். அட போம்மா என அசட்டையாகச் சாய்ந்து கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான் லக்ஷ்மணன்.

“என் தம்பி மவள கட்டியிருந்தா, இவனுக்கு ஒழுக்கமா ஒரு பொண்டாட்டி இருந்திருப்பா, எனக்குப் பொறந்த வீடு இருந்திருக்கும். என் தம்பி ஓட்டலு, வீடுன்னு நமக்கும் சொத்துச் சேர்ந்திருக்கும்” என்று நெஞ்சில் அடித்துக் கொண்டார்.

“இப்பவும் ஒன்னும் கெட்டு போகல..” என்றவரை, “உன் நெனப்புத் தெரிஞ்சா கொன்னு புதைச்சுடுவான் அந்தத் தயா பய, கவனமா இருந்துக்கோ. அம்புட்டுதான் சொல்லுவேன்” என்று எச்சரித்தார் கந்தசாமி. லக்ஷ்மணன் லேசாக வளைந்திருந்த தன் விரலை வருடி விட்டுக் கொண்டான்.

துர்காவுக்கு எப்படியும் நல்ல வாழ்க்கை அமையாது, மகனுக்குக் கட்டி வைத்திடலாம் என்று மனக் கணக்குப் போட்டிருந்த கற்பகத்திற்கு ஏமாற்றம் தாள முடியவில்லை. பொறாமையால் பொசுங்கி கொண்டிருந்தார்.

“எந்தம்பி கூட என்கிட்ட ஒத்த வார்த்த சொல்லல பார்த்தீங்களா?”

“உன் நல்ல மனசுக்கு சபையில உன்னய முன்னாடி கூப்ட்டு நிப்பாட்டுவாங்கன்னு நெனப்போ?” என்று நொடித்தார் கந்தசாமி. மனைவியை அவர்தான் கண்டித்து வைத்தார். காலை சுற்றிய பாம்பாக விஷம் கக்க காத்திருந்தார் கற்பகம்.

துர்கா, ரோஜா இருவரும் பள்ளிக்கு கிளம்பி விட்டார்கள். பழனியப்பன், நாச்சம்மை பத்திரிகை வைக்கத் தேவிபட்டினம் சென்றிருந்தார்கள்.

தயாபரன் அதிகாலையிலேயே கடைக்குச் சென்றிருந்தவன், குறிஞ்சி மருத்துவமனைக்குக் கிளம்பிய நேரம்தான் வீடு வந்தான்.

“அஞ்சு நிமிஷம் குடு, வந்துடறேன்” என்று உள்ளே ஓடினான். மழைக் காலம் தொடங்கியிருந்தது. முந்தின இரவு தொடங்கிக் காலை வரை நல்ல மழை. இப்போதுதான் வானம் சற்றே வெறித்திருந்தது.

“மழை வரும் போல இருக்கு தயா, சீக்கிரம் வாங்களேன்”

“வர்றாங்க இரு. பத்து நிமிஷத்துல போகப் போற எடத்துக்கு எதுக்குப் பறக்கற?” அறைக்குள்ளிருந்து கத்தினான்.

மழை நேரம் என்பதால் காலையில் கடையில் நல்ல கூட்டமிருந்தது. தேநீர் ஒரு பக்கம் தீவிரமாக விற்றுக் கொண்டிருந்தது, மழைக்காகவும், பசிக்காகவும் ஒதுங்கியவர்களால் உணவகம் நிரம்பியிருந்தது. அவன் ஓய்வாக அமர்வதற்கு நேரமும் இல்லை, இடமும் இல்லை.

உணவகத்தின் முன் பகுதியை ஏற்கனவே திட்டமிட்டு மழை நீர் உள்ளே நுழைந்திடாதவாறு அமைத்திருந்தார்கள். அங்கேயே மேஜை, இருக்கைகளைத் தற்காலிகமாக எடுத்து போடவும், ஈரத்தில் நனைந்திருந்த இரு சக்கர வாகன ஓட்டிகள் தஞ்சம் புகுந்தார்கள்.

அங்கே மேஜைகளை எடுத்து போட்டு, மழை நேரம் என்பதால் ஓய்வறையை அதிகம் பயன்படுத்துவார்கள், அது சுத்தமாக இருக்கிறதா என ஆராய்ந்து, அதற்கும் ஆளை ஏவினான். அங்கும் இங்கும் சுற்றியதில் நன்றாக நனைந்து விட்டான் தயாபரன்.

எப்போதும் வேட்டி சட்டை என்று இருப்பவன் இன்றைக்கு ஜீன்ஸ்தான் அணிந்து சென்றிருந்தான். அது மழையில் நனைந்து இன்னமும் அசௌகரியத்தைத் தரவும் உடை மாற்றிக் கொண்டிருந்தான்‌.

அவள் தலையை மட்டும் உள்ளே விட்டு, “டாக்டர் வர்றதுக்கு முன்னாடி போகணும்ங்க. டெய்லி இப்படி அவதி அவதியா கிளம்பி போறதுக்கு எனக்கொரு வண்டி வாங்கிக் கொடுத்தா நானே போய்ப்பேன்ல?” என்று கேட்டாள்.

இடையில் துண்டோடு காற்சட்டையில் கால் நுழைத்துக் கொண்டிருந்தவன், கடுப்புடன் அப்படியே திரும்பி விட்டான்.

“வண்டி எல்லாம் வாங்கித் தர முடியாது. ஏன் மேடத்துக்கு என் கூட வர்றதுக்கு வலிக்குதோ?” அவன் நிலை கண்டு கண் சுருக்கி, லேசாகத் திரும்பி நின்றவள், “என்கிட்ட இப்படியெல்லாம் பேசாதீங்க தயா. எனக்குப் பிடிக்கல” என்றாள்.

“உனக்குப் பிடிக்குதோ இல்லையோ, நீ என் கூடத்தான் வந்தாகணும். என் கூடத்தான் வாழ்ந்தாகணும்” என்றான் தயை காட்டாமல், தாடை இறுக.

“இப்போ நான் உங்க கூட வர மாட்டேன்னு சொன்னேனா? இல்ல வாழ மாட்டேன்னு சொன்னேனா?”

“நீ வாழ வந்த வேகத்தைதான் நான் கல்யாணத்துக்கு முன்னாடியே பார்த்தேனே”

“இப்படியே காலத்துக்கும் குத்தி குத்தி பேசிட்டே இருக்கப் போறீங்களா தயா?” கோபமாகக் கேட்டு விட்டாள். அவனும் தான் விட்ட வார்த்தைகளுக்காக வருந்தி மௌனமாக நின்றான்.

“மனுஷன் அம்புட்டு வேலைக்கு நடுவுல தினம் உனக்காக ஓடி வந்தா.. வேணாம்ங்கற மாதிரி பேசுவியா நீயி? எல்லா விதத்திலும் என்னைய பிடிக்கல பிடிக்கலன்னு சொல்லிட்டே இருக்கணுமா உனக்கு?”

“நான் எப்போ பிடிக்கலன்னு சொன்னேன்?”

“இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்ன மசுத்துக்கு வண்டி வாங்கித் தர சொல்லி கேட்ட நீ?”

“ம்ம், டெய்லி ஹோட்டல் அடுப்புல வெந்துட்டு, அதுக்குமேல வேகாத வெயில்லயும் மழையிலயும் நீங்க வாடி வதங்கி வந்தா, எனக்கு மட்டும் குளுகுளுன்னு இருக்குமா? அந்த நேரம் எனக்காக அலையாம வீட்டுக்கு வந்து ரெஸ்ட் எடுப்பீங்களேன்னு ஃபீல் பண்ணி சொன்னா..”

என்று அவள் சொல்லவும், அப்படியே நின்று விட்டான். ஆனால் முகத்தில் ஒன்றையும் காட்டவில்லை.

“ரெஸ்ட்லாம் எடுக்க எனக்குத் தெரியும். இப்போ உனக்கு லேட்டாகலையா? வெளில நட.”

“தயா”

“என்னடி இப்போ? நான் வர்றதுல உனக்கு என்னா பிரச்சினைன்னு சொல்லு. நான் வரல”

“பொண்டாட்டி மேல இருக்க லவ்வை நீங்க வெளிப்படையா காட்டலாம் தயாபரன், அதான் என் பிரச்சனை. அது உங்களுக்குப் புரியாது சோ வாங்க போகலாம்” என்று முன்னே நடந்து விட்டாள். அவள் சொன்னதைக் கேட்டவனுக்கு மெலிதான அதிர்வு.

“காலையிலேயே கனவு கண்டுட்டுத் திரியறா போல” வேண்டுமென்றே அவளுக்குக் கேட்கும் விதமாகச் சத்தமாக முணுமுணுத்து அறைக் கதவை மூடி முன்னே நடந்தான். அவனுக்காகக் கூடத்தில் காத்திருந்தவள், அவன் பக்கத்தில் வரவும் சட்டென அவன் முன்னே வந்து நின்றாள்.

“ஏய்..”

“ஸ்மோக் பண்ணீங்களா?”

“ஆமான்னா என்ன பண்ண போற?”

“ம்ம், நானும் பிடிச்சு பார்க்க போறேன்னு சொல்லி உங்கள கோபப்படுத்த ஆசைதான். ஆனா செய்ய மாட்டேன்” என்று தோள் குலுக்கியவள், தன் துப்பட்டாவை சுருட்டி எட்டி அவன் தலைத் துடைத்து விட்டாள்.

“ஏய்..” என்று எகிறியவன் அவள் பார்வையில் அடங்கி விட்டான்.

ஆனால் அவன் பார்வையில் அப்பட்டமான கோபம் வெளிப்பட, கையை விலக்கிக் கொண்டாள் குறிஞ்சி.

அவர்களின் நேரம் இப்போது மழை மெலிதாகத் துறத் தொடங்கியிருந்தது.

“ஆட்டோ சொல்றேன், இரு”

“ஏன்? வண்டியிலயே போகலாம். லேசாதானே தூறுது. நான் ஒன்னும் கரைஞ்சிட மாட்டேன்”

என்று அவள் சொன்னதைப் பொருட்படுத்தாமல் ஆட்டோ ஓட்டுநருக்கு அழைப்பு விடுத்தான்.

“இந்த மழையில அம்மா எப்படிக் கடைக்குப் போனாங்கன்னு நான் கவனிக்கவே இல்லையே. அத்த, மாமாவ கார்ல அனுப்பிட்டு அம்மாவ கவனிக்காம விட்டுட்டேன்” என்று அவள் சொன்னதும் கடுப்பாகி விட்டான்.

கூடத்து இருக்கையைக் காலால் எட்டி உதைத்தான்.

அந்தச் சத்தத்தில், “என்னாச்சு?” என்று அவள் பதறி கேட்கவும், “ஆட்டோ வரும். அதுல ஹாஸ்பிடல் போய்ச் சேரு. போன்.. இல்ல வேணாம். எனக்கு மெசேஜ் போடு. நான் கடைக்குக் கிளம்பறேன்” என்று கோபத்தை அடக்கிய குரலில் சொன்னவன், அவசரமாக வெளியேறினான்.

“ப்ச், தயா. இப்போ எதுக்குக் கோபமா போறீங்க? நான் என்ன சொல்லிட்டேன்னு..” எட்டி அவன் கைப் பிடித்தாள், அதை வேகமாக உதறி, “நீ ஒன்னும் சொல்லல குறிஞ்சியாத்தா. உனக்கு உன் வேலை முக்கியம்ல? கெளம்பு” என்று அடிக்குரலில் சீறினான். அவளுக்கு உண்மையில் என்ன தவறாகச் சொல்லி விட்டோம் என்றே புரியவில்லை.

“பிளீஸ், நான் என்ன சொன்னேன்னு சத்தியமா தெரியல”

“தெரியாதுடி உனக்கு. தெரியாது. உன்னைப் பொறுத்தவரைக்கும் நாங்க கொடுமக்காரங்கதானே? உங்கம்மாவ வேலைக்கு வச்சு, வேலை வாங்கிக் கொடுமப்படுத்துறோம் இல்ல? நீ பேச மாட்ட பின்ன”

அவளுக்கு அப்போதுதான் விஷயமே விளங்கியது.

“அச்சோ, இல்ல தயா. அம்மா எப்பவும் கடைக்கு நடந்துதானே போவாங்க. அதான்..”

“மழைன்னு அம்மாப்பாவ வாடக கார்ல அனுப்பினவன், அத்தய மட்டும் நனைஞ்சிட்டு நடக்கட்டும்ன்னு விட்ருவேனோ? என்னைய பத்தி அம்புட்டு நல்லவிதமா நெனச்சிருக்க நீ இல்ல?” அவனது கேள்வியை விட அவனது முகம் வெளிப்படுத்திய உணர்வு அவளை மிரள செய்தது.

“தயா, நான்..”

“எதுவும் பேசாத. ஆட்டோ வரும், வீட்டை பூட்டிட்டுக் கிளம்பு” என்று முன்னே நகர்ந்தான். அவன் கையைப் பிடிக்கப் போனாள். அவன் பார்வையே அவளைத் தூர நிறுத்தியது.

வண்டி வரை சென்று விட்டான். அவன் கிக்கரை உதைத்த வேகத்தில் அவனது கோபத்தின் அளவை அளவிட முடிந்தது. அந்நேரம் அவனது கைப்பேசிக்கு அழைப்பு வரவும் அப்படியே நின்று அழைப்பை ஏற்றான்.

“என்ன பாசு? ஓ, சரி, சரி” என்று சொல்லி வைத்தவன், திரும்பி அவளை முறைத்துப் பார்த்தான்.

“வான்னு சொன்னா வாய் வலிச்சுடும் போல” முனகிக் கொண்டே வண்டியில் ஏறினாள்.

“ஷாலை தலையில போடு”

“நீங்க மட்டும் நனையறீங்க”

“ம்ம், பத்து நிமிஷத்துல கடைக்குப் போய் அடுப்புல வெந்து தானா காஞ்சுடுவேன்.” என்று கடுப்படித்து, வண்டியை நகர்த்தினான். சாலையின் ஈரம் வண்டியை வழுக்கி விடும் என்பதால் நிதானமாகத்தான் செலுத்தினான். மெலிதான தூறலில் நனைந்தபடி கணவனோடு நெருக்கமான இந்தப் பயணத்தை மற்ற நேரமாக இருந்திருந்தால் நிச்சயம் ரசித்திருப்பாள். இன்றைக்கு மனத்தில் மெலிதாய் மழையின் நசநசப்பு. ஆனாலும் அவனை நெருங்கியே அமர்ந்தாள்.

error: Content is protected !!
Scroll to Top