என் ஜீவனில் உறைந்திடு – 13 (2)

மறுநாள் மாலையே இளமாறன் குடும்பத்தினர் ரோஜா வீடு வந்து, பேசி, தட்டு மாற்றி, அடுத்த வாரம் நிச்சயம் என முடிவு செய்தனர்.

ரோஜா சிறு தயக்கத்துடன் ரகுவரனுக்குக் குறுஞ்செய்தி அனுப்பினாள். மற்றவர்கள் மூலமாக அவனுக்குத் தகவல் செல்லும் முன் தானே சொல்லி விடுவது நல்லது என நினைத்தாள் அவள்.

அவள் அனுப்பிய செய்திக்கு, உடைந்த இதயங்களைப் பதிலாக அனுப்பி வைத்தான் அவன்.

“கேவலமா நடிக்காத ரகு” என்று அவள் பதிலனுப்ப, “வாழ்த்துகள் ரோஜா.” என்ற செய்தியுடன் பூங்கொத்தையும் சேர்த்து அனுப்பினான். நன்றி சொல்லி முடித்துக் கொண்டாள் ரோஜா.

நித்யா தங்கையின் நிச்சயம் வரை அம்மா வீட்டிலேயே இருக்கப் பிரியப்பட, மனைவியின் கோரிக்கையை மறுக்கவில்லை சசிகுமார்.

அந்த வார வெள்ளிக்கிழமை எப்போதும் போல இளமாறன் விடுமுறையில் இருக்க, பெற்றோரிடம் சொல்லிக் கொண்டு அவனது உணவகம் சென்றாள் ரோஜா.

அவள் காரில் இருந்து இறங்க உணவகத்தின் கதவைத் திறந்து கொண்டு வெளியில் வந்து கொண்டிருந்தான் ரகுவரன்.

“ஹாய் ரகு, என்ன இந்தப் பக்கம்?” ரோஜா கேட்க,

“உன்னைப் பார்க்க வரல” என்றான் அசட்டையாக, “செஃப் பார்க்க வந்தேன்” என்றான் அவளை முறைத்து.

ரோஜா காரில் சாய்ந்து கைக் கட்டி நிற்க, “ஆக்சிடென்ட் நடந்த அன்னைக்கு அப்படியே கிடன்னு விட்டுட்டு வந்திருக்கணும் உன் ஆளை” என்றான் அவன்.

“என்ன.. என்ன.. என்ன சொன்னீங்க?” என்று கத்திய ரோஜா,

“நீயா ரகு இப்படிப் பேசுற?” கோபம் குறையாமல் எட்டி அவன் தோளில் ஓங்கி அடித்தாள்.

“நான் ரகுவரன் மா. படு பயங்கரமான வில்லன். தெரியுமில்ல?” அவன் புருவம் உயர்த்திக் கேட்க, ஒற்றைப் பார்வையில் அவனை உதாசீனம் செய்து விட்டு உணவகத்திற்குள் நுழைந்தாள் அவள்.

“ரோஜா, ரோஜா.. சாரி, சாரி” பின்னோடு கத்தியபடி சென்றான் ரகுவரன்.

“நில்லு ரோஜா” என்று எட்டி அவளின் கைப் பிடிக்கப் போகையில் ரோஜா அவனைத் திரும்பி முறைக்க, ரகுவரன் பார்வை அவளுக்குப் பின்னால் சென்றது. அங்கே சமையல் அறையில் வரிசையாகப் பல விதமான நீள அகல கத்திகளைக் கூர் தீட்டியபடி நின்றிருந்தான் இளமாறன்.

“இங்க பாரு ரோஜா. நான் ஏதோ தெரியாம பேசிட்டேன். உன் ஆள்கிட்ட சொல்லி வை” என்று பயந்தது போல அவன் சொல்ல, பக்கென்று சிரித்து விட்டாள் ரோஜா.

“இளமாறன். நான் இதை எதிர்பார்த்தேன் ரோஜா. என்கிட்ட அதிகம் பேசாத நீ எப்பவும் இளமாறன்கிட்ட சிரிச்சு பேசின. அவரைப் பார்த்ததும் உன் முகத்தில் ஒரு ஒளி வட்டம் வந்தது. ஆனா, உங்க கல்யாணம் இவ்வளவு சீக்கிரம் எதிர்பார்க்கல. பட் ஐ ஆம் ஹேப்பி ஃபார் யூ கைஸ்” என்றான் அவளின் கைப் பிடித்துக் குலுக்கி, “தேங்க்ஸ்” என்றாள் ரோஜா.

“லஞ்ச் சாப்பிட்டுப் போகலாம் இல்ல ரகு?” அவள் சொல்ல,

“இல்ல வேணாம் ரோஜா. எனக்கு ஏதாவது சிம்ப்ள் புட் வேணும். உன் ஆளு சமைக்கிற இட்டாலியன், சைனீஸ், டர்கிஷ் சாப்பிடுற மூடில் நான் இல்ல.” என்றான் சலிப்பாக.

“அன்னைக்கு என்னமோ அரைச்சு விட்ட சாம்பாரை குறை சொன்னீங்க? இப்போ புரியுதா அதோட அருமை?” என்று அவள் நக்கலாகக் கேட்க, “ஆளை விடு தாயே” என்றான் சிரிப்புடன்.

“ரோஜா” என்று அழைத்தபடி அங்கு வந்தான் இளமாறன்.

“உள்ள வா. நீங்களும் வாங்க ரகுவரன்” இருவரையும் அவன் அழைக்க, “எனக்கு டைமாச்சு” என்ற ரகுவரன், “ஓகே. ஒரு பத்து நிமிஷம் இருந்துட்டு கிளம்பறேன்” என்று அவர்களோடு நடந்தான்.

மூவரும் சமையல் அறைக்குள் நுழைந்தனர்.

“லஞ்ச் ரகு?” இளமாறன் கேட்க, ரோஜாவை அர்த்தமாய்ப் பார்த்து, “பசியில்ல மாறன்” என்றான் அவன்.

ரகுவரன் பார்வை அங்குத் தயாராகிக் கொண்டிருந்த உணவுகளை வட்டமடித்தது.

ரோஜாவின் கையில் குளிர்பானத்தைத் திணித்தான் இளமாறன்.

இஞ்சி சேர்க்கப்பட்ட எலுமிச்சை சாறை அவள் அருந்த தொடங்க, “பேசிட்டு இருங்க. இப்போ வந்துடுறேன்” என்று நகர்ந்தான் இளமாறன்.

“ஆமா. கேட்க மறந்துட்டேன். நீங்க எங்க இங்க?” ரோஜா கண்ணைச் சுருக்கி சந்தேகமாகக் கேட்க, “பிசினஸ் பேச வந்தேன்” என்றான் ரகுவரன்.

“அமிர்தா பவனுக்கு, த புஃட் அபேஃர்ஸில் என்ன பிசினஸ்?” என்றாள் கேலியாக.

“அமிர்தா பவனில் அசைவம் இல்லங்கறதுதான் பிசினஸ்” என்றான்.

“ஓஹோ. ரைட்டு.” என்றதற்கு மேல் கேள்வி கேட்கவில்லை ரோஜா.

“அப்புறம் உங்க எங்கேஜ்மெண்ட் பத்தி என்கிட்ட இளமாறன் முன்னாடியே சொல்லிட்டார். நீ தான் லேட்” என்று புகார் வாசித்தான்.

ரோஜா அமைதியாக நிற்க, “என் உடைஞ்ச மனசை ஒன்னும் பண்ண முடியாது. விடு” என்றான் சோகம் போல.

“பக்கா வில்லன் மாதிரி பேசாதீங்க ரகு. நேத்துதான் நித்யாக்கா உங்க ஸ்கூல், காலேஜ் லவ்ஸ் பத்தியெல்லாம் சொல்லிட்டு இருந்தா” எனச் சொல்ல, “அதெல்லாம் ஆண்களின் வாழ்க்கையில் சகஜம் ரோஜா” என்றவனை அவள் முறைக்க, “என் தலை தப்பித்தது” என்றான் அவன்.

அவனை முறைத்துக் கொண்ட ஒரே மடக்கில் ரோஜா பானத்தை அருந்த, கையில் உணவு நிரம்பிய தட்டுடன் பணியாளர் ஒருவர் வர, அவரைத் தொடர்ந்து வந்தான் இளமாறன்.

“மேல போகலாம்” பொதுவாக அவன் சொல்ல, மூவரும் முதல் தளத்தின் திறந்த வெளி உணவகத்திற்குச் சென்றனர்.

“சாப்பிடுங்க ரகு” என்று இளமாறன் நகர்த்தி வைத்த டிரேவில் சோறு, பருப்பு, பூண்டு குழம்பு, மிளகு ரசம், மிளகாய் துவையல், வெண்டைக்காய் பொரியல், கருணைக்கிழங்கு மசியல், அப்பளம், மோர் எனச் சிறு சிறு கிண்ணங்களில் இருக்க, தான் பசியில்லை என்று சொன்னதை மறந்து, “ஓ, எனக்கா?” என்றபடி உணவை ரசித்து உள்ளே தள்ளினான் ரகுவரன்.

“இதுக்குப் பேர்தான் கம்பர்ட் புஃட்” என்றான் பாராட்டாக.

ரோஜா திரும்பி கேள்வியாக இளமாறனை பார்க்க, புன்னகைத்தான் அவன்.

சைவ, அசைவ உணவகங்கள் அதன் போட்டி, தொழில் நிலைமை, தற்போது பிரபலமாகி இருக்கும் உணவு சுற்றுலா, உணவு விமர்சகர்கள் என அவர்களின் பேச்சு அவர்களுக்குப் பொதுவானவை பற்றியே சுழல, அரை மணி நேரம் கழித்து, உண்டு முடித்திருந்த ரகுவரன் அங்கிருந்து கிளம்பினான்.

இப்போது இளமாறன், ரோஜா மட்டுமே அங்கிருந்தார்கள்.

இளமாறன் இமைக்காமல் அவளையே பார்க்க, “செஃப்” என்ற ரோஜாவின் குரலில் நிச்சயம் வெட்கம் இருந்தது.

“என்ன சாப்பிடுற ரோஜா?”

“இல்ல. நான் சமைக்கிறேன், பிளீஸ்” என்றாள்.

மெல்ல எழுந்து நின்று இடைவரை குனிந்து, கையை வீசி, “ஓகே. மை கிட்சென் இஸ் யுவர்ஸ் மேடம்வேசேல்” என்று அவன் சொல்ல, ரோஜா சிரித்தபடி அவன் கைப் பிடித்தாள்.

“உங்களுக்கு என்ன பிடிக்கும்? உங்க கம்பர்ட் புஃட் என்ன?” என்று அவள் கேட்க, “அப்படியெல்லாம் எதுவும் இல்ல. உனக்குப் பிடிச்சது செஞ்சுக் கொடு” என்றான் அவள் கைப் பிடித்து.

“அதெப்படி? ஒன்னுமே இல்லாம இருக்கும். நீங்க செஃப். உங்களுக்குப் பிடிச்ச புட் லிஸ்ட் பெருசா இருக்கும் இல்ல?” அவனிடம் இருந்து கையை உருவி இடுப்பில் கை வைத்தபடி அவள் கேட்க,

“நீ சொல்லு, உனக்கு எது கம்பர்ட் புஃட்?” பதிலாகக் கேள்வியைக் கேட்டான்.

“ம்ம். பூண்டு ரசம் வச்சு அதுக்குத் தொட்டுக்கப் பச்சை துவரையில மஞ்சள், சீரகம் அரைச்சு விட்ட கூட்டு வைப்பாங்க அம்மா. அது ரொம்பப் பிடிக்கும்.”

“ம்ம்”

“மிளகு ரசம், அப்பளம், பிரண்டை துவையல், தயிர் சாதம், உருளைக்கிழங்கு வறுவல், அப்புறம் காய்ச்சல் அப்போ அப்பா வைக்கிற வெந்தயப் பூண்டு கஞ்சி, பருப்பு துவையல்” என்று அடுக்கிக் கொண்டே போனவள், “ப்ச், என் லிஸ்ட் ரொம்பப் பெருசா போகுது. ஆனாலும் அம்மா கையால என்ன செஞ்சு கொடுத்தாலும் சாப்பிடுவேன் நான். அம்மா சமையலுக்குத் தனி ருசி தானே?” என்று பேச்சுவாக்கில் கேள்வி கேட்டவள், அவன் பதில் சொல்லாமல் மௌனமாய் நிற்பதை பார்த்ததும்தான் அவன் நிலையை உணர்ந்தாள். ஐயோ என்றானது அவளுக்கு.

“நான் என்ன செய்யச் செஃப்?” அவனை நெருங்கி நின்று மெதுவாகக் கேட்டாள்.

“ஏற்கனவே நிறையச் செய்யற” என்றான் அவள் கண்களைப் பார்த்து, ரோஜாவின் விழிகள் அதிர்ச்சியில் விரிய, சிரித்தான் அவன்.

“சிரிச்சுட்டீங்க” முணுமுணுத்து அவன் முகத்தை அகத்திற்குள் அள்ளிக் கொள்ளும் முன் அவன் சிரிப்புக் காணாமல் போய் இருக்க, மனதிற்குள் சிணுங்கினாள் ரோஜா.

“கஞ்சப்பிசுநாரி” அவள் புலம்ப, அவன் கீழிறங்கிச் சென்றான்.

இருவரும் எளிமையாக மதிய உணவை முடித்து விட்டு, கடலைப் பார்த்த குடிலில் சென்று நின்றனர்.

“ரோஜா, நான் அதிகம் பேச மாட்டேன். ரொம்ப அழுத்தம்னு எங்க அம்மம்மா அடிக்கடி கம்பிளைண்ட் பண்ணுவாங்க. நமக்கு நிச்சயம் வரை வந்தாச்சு. நீ யோசிச்சுக்கோ” திடீரென்று அவளின் கைப் பிடித்துச் சொன்னவனைக் குழப்பமாகப் பார்த்தாள் ரோஜா.

“என் குடும்பம், என் உறவுகள் எல்லாம் ரொம்ப ரொம்பச் சிக்கலானது. அதுக்குள்ள உன்னையும் இழுக்கறேன் நான். நீ எப்படி…” அவனை முடிக்க விடாமல் இடையிட்டு, “நீங்க இழுக்கல. நானேதான் வந்தேன்” என்றவளின் கையைச் சட்டென இழுத்தான். அவன் மேல் மொத்தமாக மோதி நின்றாள் ரோஜா.

“இப்போ சொல்லு அந்தப் பதிலை..” அவள் கண்களைப் பார்த்துக் கேட்டான்.

“ரோஜா இனி இளமாறனின் ரோஜா. இளமாறன் காதலி. இதை நீங்கதான் சொன்னீங்க. இப்போ மாத்தி பேசாதீங்க.” அவன் விழிகளை ஊடுருவியது அவள் விழிகள்.

அந்தப் பதிலில் அவன் கண்களில் வந்து போன உணர்ச்சிகளை அவள் கருவிழிகள் மட்டும் உருண்டு ஆராய, “உனக்கு டைம் இருக்கு ரோஜா. பொறுமையா யோசி. என் கூட வாழ்றது ரொம்பக் கஷ்டம். அது மட்டும் நான் உறுதியா சொல்வேன்” என்றவனின் மார்பில் அவள் முகம் புதைக்க, அவன் பேச்சு நின்று போனது.

“இப்படியே பேசிட்டு இருந்தீங்கன்னா, அடுத்த வாரமே கல்யாணத்தை வைக்கச் சொல்லிடுவேன். நானும் அதை உறுதியா சொல்றேன். அவ்ளோதான்” என்றாள் மிரட்டலாக.

“மறுஜென்மம் நம்பிக்கை எல்லாம் எனக்கு இல்ல இளா. அதுனால இந்த ஜென்மத்துக்கு எனக்கு நீங்கதான்” அவன் மார்பில் இருந்து முகம் உயர்த்திச் சொன்னாள்.

அவன் முகத்தில் முழுதான புன்னகை உதித்தது.

இரண்டு குடும்பங்களுக்கும் நெருங்கிய உறவுகள் சூழ, எளிமையாகக் குறித்த நாளில் அவர்களின் நிச்சயதார்த்தம் சிறப்பாக நடந்து முடிந்திருந்தது.

சரியாக ஒரு மாதம் கழித்துத் திருமணத்திற்குத் தேதி குறித்திருந்தார்கள்.

error: Content is protected !!
Scroll to Top