நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 21 (1)

ஶ்ரீகாந்த் அவர்களுக்கு ஒரே மகன், அவன் திருமணத்தை அவர்கள் விமர்சையாக நடத்த விரும்புவார்கள் என்பது பழனியப்பனுக்குப் புரிந்தது.

“சரிங்க சம்மந்தி. நீங்க சொல்ற மாதிரியே செஞ்சுக்கலாம். நீங்களே தேதி முடிவு செஞ்சிட்டு சொல்லுங்க” என்றார். உண்ணாமலை முகத்தில் மெல்லிய மலர்வு.

“ம்ம், மூனு மாசம் இல்லன்னாலும் எங்களுக்கு ரெண்டு மாசமாவது டயம் வேணும். நீங்களும் இப்பத்தானே பையன் கல்யாணத்தை முடிச்சீங்க, உடனே பொண்ணுக்குக் கல்யாணம் வைக்கணும்னா உங்களுக்கும் சிரமம்ல? அதுக்காகத்தான் சொன்னேன்” என்றார்.

“நீங்க சொல்றது வாஸ்தவமான பேச்சு. நீங்க கல்யாண தேதி உங்க தோது பார்த்து சொல்லுங்க அண்ணி, ரெண்டு மாசம் டயம் இருந்தா எங்களுக்கும் கல்யாண வேலைகள பார்க்க சரியா இருக்கும்” என்று நாச்சம்மை சொல்ல, சரியென்றார் உண்ணாமலை. இம்முறை ஶ்ரீகாந்த் கூட ஒன்றும் சொல்லவில்லை. இந்தச் சிறிய இடைவெளி துர்காவின் மனத்தை வென்றிட அவனுக்குத் தேவையாக இருந்தது.

“ஏன்டா ஶ்ரீ, கட்டுனா துர்காவைதான் கட்டுவேன்னு எங்கழுத்துல கத்தி வச்சு என்னைய இங்க கூட்டிட்டு வந்த ஆனாக்க..” என்று மகன் காதை கடித்தார் உண்ணாமலை.

“ம்மா, நான் கட்டாயப்படுத்தி வர்ற ஆளாம்மா‌ நீயி? திடீர்னு நீயே மனசு மாறி வந்திருக்க, அத ஒத்துக்கோ” என்று பதிலுக்கு ரகசியம் பேசினான்.

“ஆமா, ஒதுக்கறாங்க போடா. நீ என்னன்னா துர்கா புராணம் பாடுற. அவ என்னன்னா உனக்குச் சம்மதமே சொல்லலங்கறா, நாம வந்து கல்யாணமே பேசி முடிச்சிட்டோம். நீ விரும்புறவ விருப்பத்த வாங்காமயா என்னைய இழுத்துட்டு வந்த?” என்று கேட்டு குழப்பமாய் மகன் முகம் பார்த்தார்.

“அவங்க ஏதோ கோபத்துல சொல்லியிருப்பாங்க”

“அவங்களா? சரியா போச்சுடா” என்று சலித்து, “அந்தப் புள்ள பொய் சொல்ற ஆளா தெரியல. அதுக்குச் சம்மதம் இல்லன்னா..” என்று அவர் இழுக்க, “எம்மா பேசாம இரும்மா, திரும்பத் தேரை இழுத்து தெருவுல வுட்ராத” என்று பதறினான்.

“சும்மா என்ன குத்தம் சொல்லாத, அந்தப் பொண்ணுக்கு..”

“இப்போ என்னம்மா உனக்குத் தெரியணும்? நீ அவங்ககிட்ட தனியா பேசின நேரத்துல பாதி நேரம் நான் பேசியிருந்தா கூட இந்நேரம் அவங்க முகத்துல ஆயிரம் வால்ட் பல்பு எரிய வச்சுருப்பேன்” என்று அவன் எரிந்து விழ, மகனை ஓர் கூர்பார்வை பார்த்தவர், அப்படியே திரும்பி நாச்சம்மையைப் பார்த்தார்.

“ஏங்க அத்தாச்சி, இம்புட்டு நேரம் நாமளே பேசி கடத்திட்டோம். என் பையன்.. ம்க்கும்..” என்று தொண்டையைச் செருமி, “பையனும், பொண்ணும் தனியா பேசிக்கட்டுமே” என்றார்.

நாச்சம்மை முகத்தில் ஆச்சரியம் என்றால் துர்கா அதிர்ச்சியுடன் அவரை ஏறிட்டாள்.

‘என் புள்ளய வேணாம்னு சொல்லுவியா நீயி’ என்றது அவர் பார்வை.

ஶ்ரீகாந்த் வேகமாக முன்னே வர, அனைவர் முகத்திலும் புன்சிரிப்பு.

விடைபெற எழுந்து நின்றிருந்தவர்கள் மீண்டும் இருக்கைகளை ஆக்கிரமித்தார்கள்.

“போய்ப் பேசிட்டு வாங்கப்பா” என்று சிதம்பரம் சொல்ல, ஶ்ரீகாந்த்தை கைக் காட்டி, “தம்பியை உள்ள கூட்டிட்டுப் போப்பா தயா” என்றார் பழனியப்பன். ஆனால், துர்கா மாடிக்கு நடக்க, அவளைப் பின் தொடர்ந்தான் ஶ்ரீகாந்த். அவனை வால் பிடித்து ரோஜாவும் செல்ல, “நீ எங்க போற? உக்காரு இப்படி” என்று அவளைப் பிடித்து வைத்துக் கொண்டார் உண்ணாமலை.

இருவரும் மாடியேற ரம்மியமான மாலைப் பொழுது அவர்களை வரவேற்றது. மாடியின் ஒரு புறத்தை நிறைத்திருந்த மல்லிகை பந்தலுக்குப் பக்கம் சென்று நின்றான் ஶ்ரீகாந்த்.

துர்கா தயங்கி கொஞ்சம் தள்ளியே நின்றாள்.

“பொண்ணுக்கு மாப்ளயா பிடிச்சுருக்கான்னு யாரும் கேட்கவேயில்லேயே. நீங்களாவது கேட்டு சொல்லுங்களேன்” என்று அவள் புறம் சரிந்து அவன் கேட்க, ஆழ மூச்செடுத்து இடைவெளியை அதிகப்படுத்தினாள் அவள்.

“இந்த இடைவெளிய நீங்க இம்ம்னு சொல்றதுக்கு முன்னால குறைக்க இப்போ எனக்கு எல்லா உரிமையும் இருக்குங்க.” என்று அவன் சீண்ட, சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“இப்பவாவது எனக்கொரு நல்ல பதிலை சொல்லலாம் இல்லங்க. என்ன பார்த்தா பாவமா இல்லையா?”

“பாவமா? அது நான்..”

“ப்ச், திரும்பத் திரும்ப ஏன் பழசையே பேசிட்டு இருக்கீங்க. நமக்கு நிச்சயமாகிடுச்சு. இன்னையில இருந்து நீங்க ஶ்ரீகாந்த் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு. அத மட்டும் மனசுல வச்சுட்டு பேசுங்க” என்றான் கடின குரலில், கண்டிப்பாக.

அவள் தொண்டை குழி ஏறியிறங்க, “நான் தப்பு பண்ணவ ஶ்ரீகாந்த். உங்களால எப்படி என்னை நேசிக்க முடியுது?” என்று மீண்டும் புரியாத புதிருடன் கேட்டாள்.

“உங்க கடந்த காலம் தெரிஞ்சுதாங்க உங்களை விரும்பினேன். இதுக்கு மேல உங்களுக்கு என்ன பதில் சொல்ல? சரி, நீங்க பண்ணது தப்புதான். அதுக்கு இன்னும் எத்தனை காலம் தண்டனை அனுபவிக்கப் போறீங்க?”

“எனக்குத் தெரியலங்க. அவன் கல்யாணம் நிச்சயமானவன்னு தெரிஞ்சே அவனை நான் விரும்பினேன். அவன்.. கூட இருந்தேன். எந்தவொரு நல்ல பொண்ணாவது கல்யாணத்துக்கு முன்னாடி.. வேறொரு பொண்ணோட கல்யாணம் நிச்சயமானவன் கூட.. உண்மை தெரிஞ்சா நீங்க என்னை வெறுத்துடுவீங்கன்னு நினைச்சேன்.”

அவளால் பேசவே முடியவில்லை. குற்ற உணர்ச்சி, மன்னிக்க முடியாத தவறு செய்த மனநிலை இன்னமும் அவளைக் குற்றவாளி கூண்டிலேயே நிறுத்தியிருந்தது. நினைவுகளால் தன்னைத்தானே நிந்தித்துக் கொண்டாள்.

“நாணயத்துக்கு ரெண்டு பக்கம் இருக்குங்க துர்கா” என்று மட்டுமே சொன்னான் அவன்.

“நீங்க அவனை நம்பினதுதான் தப்புன்னு நான் சொல்லுவேன். இப்போவரைக்கும் என்னால உங்களை வெறுக்க முடியல. வெறுக்கக் காரணமும் இல்ல. இனிமேலும் அதுக்கு வாய்ப்பு வரும்னு எனக்குத் தோனலங்க”

என்றான் அழுத்தமாக.

error: Content is protected !!
Scroll to Top