என் ஜீவனில் உறைந்திடு – 12 (2)

அவியலில் இருந்து ஒவ்வொரு காயாக எடுத்து மசித்து, பப்படம் உடைத்து அதன் மேல் வைத்து மித்ரனுக்கு ஊட்டி விட்டபடியே தானும் உண்டு கொண்டிருந்த இளமாறனை மெச்சுதலாகப் பார்த்து, தங்கையிடம் கண் காட்டினாள் நித்யா.

“இந்தக் குட்டி பிசாசு நான் ஊட்டும் போது சாப்பிட வாயை திறக்காம அழிச்சாட்டியம் பண்ணான். இப்போ எப்படிச் சாப்பிடுறான் பார்” முன்னே சரிந்து தங்கையின் காதைக் கடித்தாள்.

இளமாறன் அவர்களைத் திரும்பிப் பார்க்க, “ஏன் செஃப்?” என்று சூழலை எளிதாக்க கேள்வி கேட்டாள் நித்யா.

“செகண்ட் ஸ்டாண்டர்ட் படிக்கும் போது யாரோ சொல்லிக் கொடுத்து கலெக்டர் ஆகணும்னு ஆசைப்பட்டேன். அடுத்த வருஷம் ட்ரெயின் டிரைவர், அப்புறம் ஃபயர் என்ஜின் டிரைவர்னு நான் வளர வளர கோல் மாறிட்டே இருந்தது.”

அவன் தீவிரமாகச் சொல்ல, அதில் விரிந்த கற்பனையில் மற்றவர்கள் சத்தமாகச் சிரித்தார்கள்.

அங்கிருந்த அனைவருக்கும் கிட்டத்தட்ட அதே போலக் கதைகள் இருந்ததால் அவர்களால் தொடர்புப்படுத்திக் கொள்ள முடிந்தது.

“தாத்தாக்குக் கேட்டரிங் பிசினஸ். ஸ்கூல் விட்டு வந்தா அவர் கூடவே சுத்துவேன். சும்மா டிரை பண்ணி பார்க்கலாம்னுதான் சமைக்க ஆரம்பிச்சேன். அப்படியே தீவிரமா இறங்கிட்டேன்.” என்றான்.

அந்தத் தீவிரத்தின் பின்னே தீர்க்கமானதொரு காரணம் இருக்குமென்று ரோஜாவிற்குப் புரிந்தது.

அதன் பின்னர்ப் பேச்சு மாறியிருந்தது. வேலை, குடும்பம், உணவு என அனைத்தையும் பேசியவர்கள் மறந்தும் கூட அவர்களின் திருமணம் குறித்தோ, பெற்றோரின் கருத்து குறித்தோ பேசவில்லை.

அவர்கள் உணவு முடித்து இனிப்புக் கிண்ணங்களுடன் அமர, நித்யா ரோஜாவுக்கு இனிப்பு ஊட்டி, கண்ணை மூடித் திறந்து, தன் சம்மதத்தைச் சொன்னாள்.

சசிகுமாரும், “அப்போ மாமாவோட கேன்டீனை நீங்க பார்த்துப்பீங்க தானே? நான் இனி டென்ஷன் இல்லாம இருப்பேன். நமக்குப் பிசினஸ் எல்லாம் செட்டாகாது மாறன்.” என்று இளமாறனை நேரடியாகக் கேட்டு, தன் மனதை மறைமுகமாகத் தெரிவிக்க, “கேன்டீன் எப்பவும் மாமா பொறுப்புதான். ரோஜாவும், அவங்க அக்காவும் சேர்ந்து அதை மேனேஜ் பண்ணட்டும்.” என்று புன்னகைத்துப் பதில் சொன்னான் இளமாறன்

“ரைட்டு.” என்றான் சசிகுமார்.

அச்சமயம் நித்யாவின் அலைபேசிக்கு சித்ரா அழைக்க, இளமாறனிடம் உணவுக்கு நன்றி சொல்லி, அவனைச் சந்தித்ததில் சந்தோஷம் என்று விடை பெற்றுக் கொண்டனர்.

ரோஜா காரில் ஏறும் முன் யார் கண்ணையும் உறுத்தாத வகையில் அவள் கையில் ரோஜா நிற கடிதத்தாளை திணித்தான் இளமாறன்.

என்னவென்று காணும் ஆர்வத்துடன் அவள் அதைப் பிரிக்க, உள்ளே அவளின் பிரியமான பிரபல பாடகியின் ஆட்டோகிராப் இருந்தது.

அதிலும் ரோஜாவின் பெயரை ‘கோலாப்’ என்று பெங்காலியில் அவர் எழுதியிருக்க, புன்னகையில் அவள் உதடுகள் பிரிய கன்னங்கள் இரண்டும் உப்பி ரோஜாவாக மின்னியது.

கண்ணிமைகள் படபடக்க அவனைக் கண்ணோடு கண் பார்த்து, “தேங்க்ஸ்” என்ற பெண்ணை மொத்தமாய் அவனுக்குப் பிடித்தது.

சிவஹரி அன்றிரவு விரைவாக வீடு வந்து விட்டார். அவரைப் பொறுத்தவரை எட்டு மணி என்பது பரபரப்பான நேரம். ஆனால், இன்று மகள்களுக்காக, பேரனுக்காக, மனைவியின் வார்த்தைகள் தந்த குற்ற உணர்வில் நேரம் ஒதுக்கி, வேலைகளைப் பொறுப்பான கைகளில் ஒப்படைத்து விட்டு வீடு திரும்பியிருந்தார்.

மூத்த மகள், மருகனிடம் நலம் விசாரித்துப் பேசிக் கொண்டிருந்தார். நடுநடுவே பேரனுடன் விளையாட்டு. அவன் கேட்ட கேள்விகளுக்குச் சமாளிப்பாய் பதில் எனப் புன்னகை முகமாக அமர்ந்திருந்தார் மனிதர்.

“இளமாறன் பத்தி ஏஜென்சில விசாரிக்கச் சொல்லியிருக்கேன் மாமா. நம்ம கம்பனி புது ஸ்டாப் ஜாயின் பண்ணும் போது அவங்ககிட்ட இருந்துதான் ரிப்போர்ட் வாங்குவாங்க. பொதுவா ஒரு வாரம் டைம் எடுப்பாங்க. நமக்கு நாளைக்குச் சொல்றேன் சொல்லியிருக்காங்க” என்று சசிகுமார் குரலை குறைத்துச் சிவஹரியிடம் சொல்ல, “எனக்கு ரொம்ப நல்லா தெரிஞ்ச குடும்பம்தான் மாப்பிள்ளை. ஆனாலும், நாலு பேர்கிட்ட விசாரிக்கறது நல்லது தானே?” என்றார்.

“கண்டிப்பா மாமா”

என்று சசிகுமார் சொல்ல, அங்கே வந்து நின்றாள் ரோஜா.

அவளுக்குப் பின்னேயே சித்ராவும் வர, “உட்காரு மா” என்று இருவரையும் பார்த்துச் சொன்னார் சிவஹரி.

அவருக்கு எதிரில் இருந்த சோஃபாவில் மூன்று பெண்களும் அமர்ந்திருந்தனர்.

“அப்பா” தயக்கத்துடன் அழைத்தாள் ரோஜா.

“என்னம்மா ரோஜா?”

“செஃப் இளமாறன், நம்ம கேன்டீன் எதுக்கு வந்தார் கேட்டீங்க இல்ல?”

“ம்ம்” யோசனையில் புருவங்கள் நெரிய மகளைப் பார்த்தார்.

“என்கிட்ட கல்யாணம்.. பத்தி பேசினார். நான்.. நான்தான் வீட்ல பேசச் சொன்னேன்.” தயங்கி, திக்கியபடி சொன்ன மகளைப் பெற்றோர் இருவரும் அதிர்ச்சியுடன் பார்க்க, “ரோஜாவோட விருப்பத்தைக் கேட்டிருக்கார்ப்பா. இவ உங்ககிட்ட பேச சொல்லியிருக்கா, அவங்க வீட்ல இவ்ளோ சீக்கிரம் கல்யாணம் பேச வருவாங்கன்னு அவளுக்குத் தெரியாதுப்பா” தங்கைக்காகப் பரிந்து பேசினாள் நித்யா.

“ம்ம். அப்பா முதல்ல அமிர்தா பவன்லதான் வேலை பார்த்தேன். உங்களுக்கு ஞாபகம் இருக்கில்ல? அங்க சமையல் பண்றதுல இருந்து டேபிள் துடைக்குறது வரை செஞ்சுருக்கேன்” அவர் யதார்த்தமாக அந்த நாட்களைப் பற்றிப் பகிர, “ரோஜாப்பா” என்று கண்கள் கலங்க கணவரை தடுக்க முயன்றார் சித்ரா.

“இரு சித்ரா” என்றவர், “என் ரெண்டு பொண்ணுங்களும் எப்பவும் சிரிச்சு, சந்தோஷமா இருக்கணும். அவங்க ஆசைப்பட்டதை எல்லாம் நான் செஞ்சு கொடுக்கணும். நான் இருக்க வரைக்கும் அவங்களுக்கு எந்தக் குறையும் வரக் கூடாது. அப்பாக்கு எப்பவும் இந்த ஒரு ஆசை மட்டும்தான் பசங்களா.” மகள்கள் இருவரையும் பார்த்துச் சொன்னவரின் கண்களில் அத்தனை பாசம்.

“எனக்கு அப்புறமும் நீங்க நல்லா இருக்கணும். அதான் அதுக்கேத்த வசதி, வாய்ப்பு, குணங்கள் இருக்க இடமா உங்களுக்குப் பார்த்தேன்.” என்றவர், “உங்கக்காக்கு நான் ஆசைப்பட்டபடி நல்ல குடும்பத்தில் தங்கமான பையனுக்குக் கட்டிக் கொடுத்துட்டேன். ஆனா, இளமாறன் வேலை, தொழில்னு அப்பாக்கு என்னமோ இடருது. அவரோட தொழில்ல நஷ்டம், சில மாசத்துக்கு முன்னாடி ஹோட்டலை விக்க இருந்தார்னு கேள்விப்பட்டப்போ ரொம்ப வருத்தமா போச்சு. நான் என்ன பண்ணட்டும், நீயே சொல்லு” நீண்டதாகப் பேசி, முடிவை மகளிடம் தள்ளினார்.

“நீங்க என்ன சொன்னீங்க? மாப்பிள்ளை ஸ்டார் ஹோட்டல்ல செஃப் தானே? அவருக்குச் சொந்தமா ஹோட்டல் வேற இருக்கா?” பயமும், கவலையும், மிரட்சியுமாகக் கேட்டார் சித்ரா.

“அவர் ஸ்டார் ஹோட்டல்ல வேலை பார்க்கிறார் சித்ரா. ஆனா, சொந்தமா அவருக்கு ஒரு ரெஸ்டாரன்ட்டும் இருக்கு” என்றார் சிவஹரி.

“இதை ஏன் நேத்து நீங்க சொல்லல?” மருமகன் அங்கிருப்பதை உணர்ந்து அமைதியாகக் கேட்டார்.

சிவஹரி மௌனமாக அமர்ந்திருக்க, திரும்பி மகளை முறைத்தார் சித்ரா.

“நான் சொன்னேன் மா. நீங்க மறந்துட்டீங்க போல” முணுமுணுத்தாள் ரோஜா.

இளமாறன் ஹோட்டல் என்று மகள் சொன்ன போதெல்லாம் ஸ்டார் ஹோட்டல் என்றே புரிந்து கொண்ட தன் மடத்தனத்தை எண்ணி இப்போது மனதிற்குள் குமைந்தார் அவர்.

தன்னைப் போல் தனிமையில் வாடாமல் தன் மக்கள் கணவன், குழந்தைகள் என மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது அவரது ஆசை.

சொந்த தொழில் செய்பவனைக் காட்டிலும், வேலைக்குச் செல்பவன் குடும்பத்தோடு அதிக நேரம் செலவிடுவான், குறைந்த பட்சம் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை என்றாவது வீட்டில் ஒன்றாக இருப்பார்கள், வெளியில் செல்வார்கள், பண்டிகை நாட்களில் குடும்பமாகக் கொண்டாடுவார்கள் எனத் தான் தொலைத்த தருணங்களை மகள்களுக்கும் நேர விடக் கூடாது என்றிருந்தவருக்கு நிச்சயம் இந்தச் செய்தி அதிர்ச்சிதான்.

“சித்ரா” சிவஹரி அழைக்க, “நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன். நேரமாச்சுச் சாப்பிடலாம். நீங்களும் வாங்க, மாப்பிள்ளை” என்று அனைவரையும் உணவருந்த அழைத்தபடி எழுந்து கொண்டார் அவர்.

அக்கா, தங்கை இருவரும் கவலையுடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

அந்த இரவு இளமாறனின் உணவகம் முழு வீச்சில் முழுக்க நிறைந்த விருந்தினர்களுடன் இயங்கிக் கொண்டிருந்தது.

பணியாளர்கள் அனைவரும் பம்பரமாகச் சுழன்று வேலை செய்ய, தானும் அவர்களோடு இணைந்து கொண்டான் அவன். அந்நேரம் அவனைத் தேடி அங்கு வந்தார் சங்கரன்.

“அப்பா, வாங்கப்பா” ஆச்சரியமும், அதிர்ச்சியும் மிக வரவேற்றான்.

“மாறா நீ ரொம்பப் பிஸியா இருக்கேன்னு தெரியுது. இந்நேரம் உன்னை டிஸ்டர்ப் பண்ண விரும்பல. அப்பா நாளைக்கு ஹோட்டல்ல வந்து மீட் பண்ணவா?” சமையல் அறை பரபரப்பை பார்த்தபடியே கேட்டார்.

“இருங்கப்பா வர்றேன்” சிறிய கிண்ணங்களில் நிரம்பியிருந்த உணவுகளைச் சரி பார்த்து அனுப்பி விட்டு அப்பாவிடம் வந்தான்.

மேஜைகள் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்க, அந்தச் சமையல் கூடத்தின் ஸ்டோரேஜ் பகுதிக்கு வந்தனர்.

சுவரில் சாய்ந்து நின்று மகன் கொடுத்த டீயை ருசித்துக் கொண்டிருந்தவரின் கண்கள் அந்தச் சூழலை, மகனின் வேலையை, தொழிலை பெருமையாய் பார்த்துப் பூரித்தது.

“நாளைக்கு ரோஜா அப்பாகிட்ட நான் பேசுறேன் மாறா. சிவஹரி நல்ல மனுஷன். அவங்களுக்கு என்ன தயக்கம்னு தெரியல. அப்பா பேசறேன்.”

“இல்லப்பா..”

“நீ எதுவும் சொல்லாத. நான் போய்ப் பேசுறேன். அவ்ளோதான். உன் கல்யாண தேதியை முடிவு பண்ணிட்டுதான் வருவேன்” உறுதியாக மகனுக்கு உத்திரவாதம் அளித்தார் சங்கரன்.

அவரைச் சந்திக்கும் முன்னமே சம்மதித்து விட்டார் சிவஹரி. மாப்பிள்ளை சசிகுமார் விசாரித்துக் கொடுத்த இளமாறன் பற்றிய தகவல்களில் மனிதர் கொஞ்சம் இளகினார்.

“பிஸினஸ்ல லாஸ் வர்றது சகஜம்னு நீங்க தானேப்பா சொல்வீங்க. இளமாறன் ஹைதராபாத்ல வேலை பார்த்திட்டு இருந்திருக்கார். பிஸினஸை அப்போ ப்ரெண்ட்டை நம்பி விட்டிருக்கார்ப்பா. நீங்க ரிப்போர்ட் படிச்சீங்க தானே? இப்போ ஓரளவு நல்லா போகுதுனு அவங்க சொல்லி இருக்காங்க இல்லப்பா? சீக்கிரம் நல்ல நிலைக்கு வந்திடுவாங்கப்பா. இத்தனை வருஷமா ரெண்டு கேன்டீன் வச்சு நடத்துற உங்களுக்குத் தெரியாதது இல்ல.” நித்யா பேசி பேசியே அப்பாவின் மனதை கரைத்தாள். மூத்த மகளும், மாப்பிள்ளையும் அவரை ஒரு வழியாகச் சரி கட்டி சம்மதிக்க வைத்திருந்தனர்.

மறுநாள் மாலை, சங்கரனும் வந்து மகனுக்காகப் பேச, மனிதர் விட்டால் அங்கேயே மண்டையை ஆட்டி இருப்பார். அவருக்கு மனைவி இன்னும் மலை இறங்காதது நினைவில் இருக்க, அவரால் சங்கரனுக்குச் சாதகமான பதில் சொல்ல முடியவில்லை.

சசிகுமாருக்குப் பணியிடத்தில் இருந்து அவசர அழைப்பு வர, விடுமுறையை நீட்டிக்க முடியாமல் நித்யா, மித்ரனை இங்கே விட்டுவிட்டு ஊருக்கு சென்று விட்டான் அவன்.

ரோஜா மதிய உணவிற்குப் பின் கேன்டீன் செல்லவில்லை. வீட்டில் இருந்து அக்கா மகனுடன் அவள் விளையாடிக் கொண்டிருக்க, அவளைப் பார்த்துக் கொண்டே அங்கும் இங்குமாக வேலை பார்க்கும் சாக்கில் சுற்றிக் கொண்டிருந்த சித்ரா, ஒரு கட்டத்திற்கு மேல் நேராக மகளிடம் வந்து அமர்ந்து விட்டார்.

“ரோஜா”

“சொல்லுங்கம்மா” மித்ரன் வரைந்த சூப்பர் ஹீரோவுக்கு வண்ணம் தீட்டிக் கொண்டிருந்தார்கள். அதே கவனத்துடன் அவள் பேச, “உனக்கு இளமாறனை, மாப்பிள்ளையைப் பிடிச்சிருக்கா ரோஜா?” மகளின் முகத்தை நிமிர்த்திக் கேட்டார் சித்ரா.

“ம்ம்” என்று சொல்லி முடிக்கவில்லை ரோஜா. அதற்குள், “அப்பாவை சுகந்தி டாக்டர் வீட்ல பேச சொல்றேன்” என்று மகளின் தலைக்கோதி சொன்னார்.

“அம்மாவுக்கு ஆயிரம் கவலை. ஆனா, உன் விருப்பத்துக்கு முன்னாடி எனக்கு எதுவுமே முக்கியமில்ல” அம்மாவின் வார்த்தைகளில் அவள் கையில் இருந்த வண்ணமெல்லாம் நொடியில் அவள் வாழ்க்கையில் இடம் பெயர்ந்திருந்தது.

error: Content is protected !!
Scroll to Top