துர்காவோடு ஒன்றாக அலுவலகத்தில் பணிபுரிந்தவன் அவன். வேலையிடத்தில் அவளுக்குச் சீனியர். அவன்தான் அவளுக்குப் பணி கற்றுத் தந்தான். அப்போது அவன் மேல் ஏற்பட்ட ஈர்ப்பை, கொஞ்ச காலம் கழிந்திருந்தால், “கிரஷ்” என்று சாதாரணமாக அவள் கடந்திருப்பாளாக இருக்கும். ஆனால் அவனும் அவள் மேல் ஆர்வம் காட்டினான். அலுவலகத் தேநீர், உணவு நேரங்களில் அவளோடு நேரம் செலவிட்டான்.
“டீம் அவுட்டிங்” என்று குழுவாக வெளியே செல்லும் போது அக்கறை காட்டினான். நிரம்ப, நெருக்கமாகப் பேசினான், சிரித்தான், அவளைச் சிரிக்க வைத்தான். அந்தச் சிரிப்பில் ஐக்கியமானவள் சிந்திக்க மறந்து போனாள்.
சில, பல மாதங்களில் காதலெனும் கண்ணாமூச்சி ஆட்டத்தை அடைந்திருந்தார்கள்.
அச்சமயம் “ஹே துர்கா, அவனுக்கு ஊர்ல ஆள் இருக்கு. ஆல்ரெடி எங்கேஜ்ட்டு அவன்” என்று அவள் குழுவில் இருந்த பெண் சொல்லும் வரை கண்ணை இறுக்கமாக மூடி கொண்டுதான் திரிந்தாள்.
அவனிடம் கேட்ட போது, “அது வீட்ல ஃபோர்ஸ் பண்ணாங்க. சும்மா அவங்களுக்காக. எனக்கு அவளைப் பிடிக்காது. நான் இந்தக் கல்யாணத்தை நிறுத்திடுவேன்” என்று திரும்பத் திரும்ப வேறு வார்த்தையைக் கொண்டு வாக்குக் கொடுத்தான். கண்ணை மறைத்த காதல் அவனை நம்பச் சொன்னது. உடன் பணிபுரிந்தவர்கள் எச்சரிக்க, அவர்களை எரிச்சலுடன் ஒதுக்கினாள்.
ஊருக்கு அதிகம் வரவில்லை. வீட்டுக்கு அதிகம் பேசவில்லை. காதல் எல்லாக் களவாணித்தனங்களையும் செய்ய வைத்தது.
நெஞ்சாலையில் கடை வைத்திருந்ததால் மிகுந்த கண்டிப்பு அவள் வீட்டில். அப்பா, தம்பி தவிர யாரிடமும் அதிகமாகப் பேசியதில்லை. திடீரென்று ஒருவன் வந்து, “கண்ணே மணியே” எனவும் மயங்கி விட்டாள். மூளையும் மழுங்கி விட்டது. அவன் வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயமானவன் என்று தெரிந்த பின்னரும் பழக்கத்தை விடவில்லை.
“அவன்.. என் கண்ணு முன்னாடியே.. எங்க ஆஃபீஸ் வாசல்ல வச்சு அந்தப் பொண்ணு கூடச் சண்டை போட்டான். எல்லாரும் பாக்கும் போதே சண்டை போட்டான்.”
“கட்டிக்கப் போறதுங்க, காரணமே இல்லாம முட்டிங்குங்க. நீயி அதைப் பார்த்திட்டு அவன் சொன்னதை நம்பிட்ட இல்ல?”
“ம்ம்” என்றாள் உதடு துடிக்க. அவர்கள் விஷயம் தெரிந்துதான் வந்து சண்டை போட்டிருக்கிறாள் என்பதையே பின்னர்தான் புரிந்து கொண்டாள். உண்ணாமலையின் பார்வையும் அதைத்தான் சொன்னது. நேற்றுதான் தவறு செய்தது போலக் குற்றம் சாட்டினார். அவளும் தலை குனிந்து நின்றாள். காலத்துக்கும் இந்த நிலை வந்து விடக் கூடாதென மனதார வேண்டிக் கொண்டாள்.
அன்றோ, இப்படியா ஒருத்தி அலுவலகம் வந்து சண்டை போடுவாள். இவளிடம் இருந்து உன்னைக் காக்கிறேன் எனக் காதலில் ஆழமாக, களத்தில் குதித்தாள்.
அவனும், “வாட்ஸ்அப் சண்டை, வீட்டினரிடம் கல்யாணம் வேண்டாம்” எனக் கூறியது என அத்தனை ஆதாரங்கள் அவளிடம் காட்டினான்.
“இந்தக் கல்யாணத்த நிறுத்திட்டு உங்க வீட்ல வந்து பேசுறேன்” என்று வாக்கு கொடுத்தவன், அந்தக் கல்யாணத்தை நிறுத்தவில்லை, அவள் வீட்டுக்கு வரவில்லை. ஆனால் அலுவகத்தில் இருந்து குழுவாகப் பாண்டிச்சேரி சென்ற போது, போதையில், “என் பொண்டாட்டி நீதான்டி” என்று உளறி அவளை உருகச் செய்திருந்தான். அந்த இணைவில் இருவருக்குமே பங்கிருந்தது.
அதன் பிறகு அவனிடம் தீவிரமாகக் கல்யாண நிறுத்தம் பற்றித் துர்கா பேசினாள். அதுவரை அவளுக்கு இல்லாத பயம் அப்போதுதான் வந்தது. வீட்டை நினைத்து குற்ற உணர்ச்சி கொண்டாள். துணிந்து செய்து விட்ட காரியத்திற்குத் துக்கம் கொண்டு அழுது கரைந்தாள்.
“பிளீஸ், உங்க வீட்ல பேசிட்டு வந்து எங்க வீட்ல பேசுங்க” என்று கோபமாக, கெஞ்சலாக, பயம், மிரட்சி எனப் பல்வேறு உணர்வுகளுடன் அவனிடம் மன்றாடினாள்.
அவனும், “என்னைக்கு இருந்தாலும் என் பொண்டாட்டி நீதான்டி” என்று விடாமல் வாக்குறுதி கொடுத்தான். அவன் வாக்கில் இருந்த உறுதி விரைவில் அவனிடம் இல்லாமல் போனது.
தொடர்ந்து அவன் இரண்டு நாள்கள் விடுமுறை எடுத்திருந்தான். அவளிடம், “உடம்பு முடியலடி” என்றிருந்தான். ஆனால், இரண்டாம் நாள் இறுதியில், “ஹே அவனோட ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் போட்டோஸ் பாருங்க. எஃப்பில போட்டிருக்கான், செம்மையா இருக்குல்ல?” என்று அவனும், அவனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணுமாக இணைந்து எடுத்திருந்த புகைப்படங்களைக் கண்ட கணம் அவளின் கண் கட்டு அவிழ்ந்தது.
அந்த வார இறுதியில் அவனைக் கேள்வி கேட்டு நிறுத்தினாள். முதலில் மன்னிப்பு கேட்டான், அவளைக் கைவிட மாட்டேன் என்றான்.
பின்னர், “ஹே இப்ப என்னாச்சுன்னு இப்படிக் கத்திட்டு இருக்க, லவ் பண்ணோம். ஒன்னா இருந்தோம். ஜஸ்ட் மூவ் ஆன் துர்கா, இதுக்குப் போய் இவ்வளவு அலட்டிக்கற?” என்று அலட்டி கொள்ளாமல் அசால்ட்டாக அவளை ஒதுக்கிச் சென்றான். அவளைக் கை விட்டுக் குறித்த தேதியில், கல்யாணம் செய்து கொண்டான். அவளுக்கும் அழைப்பிதழ் கொடுத்திருந்தான். அன்றே அவனுடன் போராட மனமில்லாமல் வீடு வந்து விட்டாள்.
அவர்கள் எல்லை மீறினாலும் எச்சரிக்கையுடன்தான் இருந்திருந்தார்கள். ஆனால் இயற்கை அவளைக் கை விட்டிருந்தது.
சென்னையில் தனியாக இருந்து வேலை செய்யப் பிடிக்கவில்லை என்று வீடு வந்த மகளை, “அதுக்கென்ன இங்கேயே இரு” என வீடு அரவணைத்துக் கொண்டது. இரண்டாம் மாதம் மாதவிடாய் தவறி, அவள் விரைவில் அம்மாவாகப் போகிறாள் என்று தெரிய வரும் வரைக்கும் அவள் மட்டுமே சோகமாக இருந்தாள். அதன் பிறகு அந்த வீட்டினருக்குக் கோபம், ஆத்திரம், துக்கம் எனக் கலவையான உணர்வுகள்.
பழனியப்பன், அவனைச் சந்திக்கத் தயாபரனுடன் சென்னை சென்றார்.
அவன் புது மாப்பிள்ளையாக இருந்தான். தன் ஆத்திரம் தீர தயாபரன் அவனைப் பொளந்து கட்டி விட்டாள்.
“எனக்கு எல்லாம் தெரியும், உங்க அக்காவை போய் அடக்கி வைங்க” என்று அவர்களை அசிங்கப்படுத்தி அனுப்பினாள் அவன் மனைவி.
தயா சட்டத்தின் உதவியை நாடினான். துர்கா கர்ப்பம் என்ற விவரத்தை அவனிடம் சொல்லவேயில்லை. ஆனால் காவல்துறை, வழக்கறிஞர் இருவரிடமும் உண்மையைச் சொல்லியே, அவனை மிரட்டி எழுதி வாங்கினான்.
அந்த அறிவாளி விஷயத்தை எளிதாகக் கணித்திருக்கலாம். ஆனால், அவனோ கேள்விகளே கேட்கவில்லை. தன் திருமணம் நிலைக்க, அவர்கள் சொன்ன இடத்தில், நீட்டிய காகிதங்களில் கையெழுத்திட்டு வெளியேறினான்.
துர்காவை எங்க வகையிலும் அவன் நெருங்க கூடாது, தொல்லை செய்யக் கூடாது, மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எழுதி வாங்கியிருந்தார்கள். அதனால் அவன் பக்கமிருந்து எந்தவித தொல்லையும் அவளுக்கு இல்லை.
அவனை மறந்து, வெறுத்து, வாழ்க்கையை வெறுத்து போய், மன அழுத்தம், தற்கொலை எண்ணம் என்று வாழ்வின் எல்லையில் நின்றவளை கரை சேர்த்தது ரோஜாதான். ரோஜாவோடு அவளும் புதிதாகப் பிறந்தாள்.
தன் நினைவுகளில் மூழ்கி போய் இருந்தவளை, “நீ பண்ணதெல்லாம் ஐயோ பாவம்னு பார்த்து, உன்னய மருமகளா ஏத்துக்கற பெரிய மனசுலாம் எனக்கு இல்ல தாயே.” என்ற உண்ணாமலையின் கோப குரல் சொடுக்கி நிகழ் காலத்துக்கு இழுத்து வந்தது.
“என் புள்ள ஆசைப்பட்டான்னுலாம் நா ஒத்துக்கல. என்னைய மிரட்டி இங்க கூட்டிட்டு வந்திருக்கான் அவன். எங்க வீட்டுக்கு உன்னய மருமகளா கொண்டு வர எனக்கு விருப்பமே கிடையாது. ஆனா, என் மவன் உன்னையதான் கட்டுவேன்னு பிடிவாதமா நிக்கிறான். திருட்டுக் கல்யாணம் பண்ணிட்டு வந்து நிப்பேன்னு மெரட்டுறியான். யோசிச்சு பாரு, ஊருக்குள்ள என்னா பேசுவானுங்கன்னு.. புள்ளையோட இருக்கவள இழுத்துட்டு வந்துட்டான்னு.. அவளுக்குத் திருட்டு தாலி கட்டி கூட்டிட்டு வந்துட்டான்னு பேசுவாங்க. கேட்க உங்களுக்கு நல்லா இருக்கும், சாதனயா இருக்கும். பெத்த எங்களுக்கு இல்ல அவமானம். எங்க மானம்ல போகும். அதுக்குப் பேசாம நாங்களே கட்டி வச்சுட்டா கவுரதையா இருக்கும்ல?” என்று கேட்டார்.
“எப்படியும் ஊர் வாய்ல விழாம இருக்க முடியாது. பேசுறவன் பேசத்தான் செய்வான். பிள்ளைக்குப் பிடிச்சவள கட்டி வச்சுட்டாங்கன்னு நல்லவிதமா பேசிட்டு போகட்டும்.” என்று அவள் முகம் பாராமல் பேசினார்.
“உனக்கென்னா மா, சொந்தக்காரன் எல்லாவனுக்கும் நான்தானே பதில் சொல்லணும்?”
“அப்புறம் ஏன் சம்மதிச்சீங்க?”
“கேட்குறா பாரு கேள்வி, ஒத்த புள்ளைய வச்சுட்டு அவன் ஒத்த கொரங்கா சுத்தட்டும்னு விடச் சொல்றியா? என் பிள்ளைக்காகதேன் நான் சரின்னு இங்க வந்தேன். இங்க வர்ற வரைக்கும் கூட நான் சம்மதம் சொல்லல, என்னைய கட்டாயப்படுத்தி, மிரட்டி கூட்டிட்டு வந்தாங்க அப்பாவும், பிள்ளையும்.. நான் சம்மதிக்காம..”
“நானும் சம்மதிக்கல..”
“என்னது? நீயி சம்மதிக்கலயா? ஏன் என் பிள்ளைக்கு என்னா குறைன்னு அவனை வேணாம்னு சொல்லுவ நீயி?” என்று அவளிடம் எகிறினார்.
“வேணாங்கறவ என்னத்துக்கு நாங்க வாங்கிட்டு வந்த புடைவையைக் கட்டிட்டு நிக்கற..”
“அது…” தடுமாறினாள். எப்படிச் சமாளிக்க என்றே தெரியவில்லை.
“பெரிம்மா, துர்கா..” கதவை லேசாகத் தட்டி விட்டு குறிஞ்சி அழைக்க, தப்பித்தோம் என்ற பெருமூச்சுடன் அவரைப் பார்த்து விட்டு, “உள்ள வா, குறிஞ்சி” என்றாள்.
“இங்க பாரு துர்கா, நா சும்மா பேச்சுக்கு சொல்லல. என் பிள்ளை தங்கம். ஒழுங்கா அவன் கூட நல்லபடியா வாழுற வழியைப் பாரு. உனக்காக, நாங்க ஊரெல்லாம் பேச்சு வாங்க போறோம். நீ என் புள்ளைய பேசுவியா? நான் இப்படித்தான் கடுசான மாமியாராதேன் இருப்பேன். என்கிட்ட எதுவும் எதிர்பார்க்காத. ஆனா, என் பிள்ளை சந்தோஷமா இருந்தா, நாம எல்லோரும் சந்தோஷமா இருக்கலாம். பார்த்துக்கோ” என்றார். அவரை எந்த வகையில் சேர்ப்பது என்று தெரியாமல் குழம்பி நின்றாள் துர்கா.
அதே குழப்பத்துடன் அவர் பேச்சுக்கு ஒப்புதலாகத் தலையசைத்தாள்.
குறிஞ்சி, ‘இம்புட்டு நேரமா என்னா பேசினீங்க?’ என்ற கேள்வி கண்ணில் தொக்கி நிற்க துர்காவை பார்த்தாள்.
“போய் மூஞ்சியைக் கழுவிட்டு வா” என்று துர்காவை அதட்டி விட்டு வெளியேறினார் உண்ணாமலை.
“ம்மா வல்ல?” என்று அவரை விசாரித்தது பட்டு ரோஜா.
“நான், உங்கம்மாவ சீக்கிரமா வரச் சொல்லி மிரட்டிட்டு வந்திருக்கேன், வர்றாங்க இரு”
“அம்மாவ மிரட்ட கூடாது, தப்பு” குழந்தை வேகமாகச் சொல்ல, அனைவரும் சிரித்து விட்டார்கள்.
ஐந்தாம் நிமிடம் பச்சை பட்டில் துர்கா பளிச்சென்று வெளியே வர, அவளின் பின்னலை நிறைத்து பூ வைத்து விட்டார் உண்ணாமலை.
மூன்று பவுனில் நெக்லஸ், இரண்டு பவுனில் அதற்குப் பொருத்தமான தோடும் வாங்கி வந்திருந்தனர். ஶ்ரீமதி அதைத் துர்காவுக்குக் கொடுத்தாள். நெக்லஸை அப்போதே அணிவித்து விட்டாள்.
ஶ்ரீகாந்த், துர்கா இணைந்து நிற்க, நாச்சம்மை, அலமேலு இருவரும் அழுகையை அடக்கி நின்றிருந்தார்கள்.
இருவரின் பெற்றோரும் அவர்களை மனதார ஆசீர்வதித்து, அவர்களின் திருமணத்தை உறுதி செய்தார்கள்.
தயாபரன் நெகிழ்ந்த மனத்துடன் நண்பனை தோளோடு சேர்த்தணைத்து விடுவித்தான். ஶ்ரீகாந்த்தின் தோளில் ரோஜா மலர்ந்திருக்க, குறிஞ்சி அவர்களைப் புன்னகையுடன் புகைப்படமாகப் பொக்கிஷ தருணமாகச் சேமித்து வைத்தாள்.
“கல்யாணத்தைச் சீக்கிரமே வச்சுடலாம்ல? அடுத்த மாசமே?” பழனியப்பன் கேட்க, “அதெப்படி உடனே வைக்க முடியும்? எங்களுக்கு மூனு மாசமாவது டைம் வேணும்” என்று முட்டுக்கட்டை போட்டார் உண்ணாமலை.
“ம்மா..” என்று அவரை முறைத்தான் ஶ்ரீகாந்த்.