31.1 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல

அத்தியாயம் 31

 

 

டும் குளிர் நீங்கி பனி மெல்ல மெல்ல உருகவும் வெள்ளை சட்டையை நீக்கி, அதன் பச்சையில் வண்ணப் பூ போட்ட சட்டைக்கு பாஸ்டன் நகரம் மாறிக் கொண்டிருந்தது. 

பனியில்லை என்றாலும், சூரிய ஒளி இருந்தாலும், திறந்திருந்த கம்பியில்லா ஜன்னல் வழி தன்னை தீண்டிக் கொண்டிருந்த மிதமான குளிர் மனதிற்கு இதமாகத்தான் இருந்தது அலர்விழிக்கு. 

வந்து சில வாரங்களிலேயே ஈஸ்டர் வந்துவிட, “எனக்கு குட் ஃப்ரைடேக்கும், ஈஸ்டருக்கும் சர்ச் போகணும் விழி. மார்க் அவன் பேரண்ட்ஸ் வீட்டுக்குப் போறான். சேட்டர்டே நான் வந்து உன்ன கூட்டிட்டு பாஸ்டன் வந்திடவா?” என்றதற்கு, 

“நானே பஸ் பிடிச்சு வரேன். தேவ இல்லாம இங்கேயும் அங்கேயும் அலையாதீங்க.” என்றவள் வெள்ளி இரவே வந்து விட்டாள். 

என்ன கூறியும் சோஃபா தான் சரி வரும் என்று அவன் வெளியே படுத்துவிட, காலை எழுந்து காலைக் கடனை முடித்தவள் கவனத்தை இழுத்தது, ஜன்னலுக்கு வெளியே தெரிந்த நிறங்கள். 

தரை முழுவதும் வண்ண வண்ண டுலிப் மலர்கள். கண்களை மேலே உயர்த்த, நயனங்கள் இமைக்க மறந்தன.   

மரம் முழுவதும் பூவை மட்டும் தாங்கி நின்ற சாசர் மாக்னோலியாவை (Saucer Magnolia). இதழின் உள்ளே இளம் சிகப்பும், வெளியே அடர் சிகப்புமாக அந்தப் பெரிய பெரிய பூக்கள் தாங்கி நின்ற மரத்தில் இலைகள் என்று எதுவும் இல்லை. மணம் வீசும் மலர்கள் மட்டுமே. ஒற்றை மலரை ஏந்த இரண்டு கைகளும் போதாது, அதன் அழகை ரசிக்க இரண்டு கண்களும் போதாது. ‘அம்மாடி’ என்று பார்த்தவளால் கண் சிமிட்ட முடியவில்லை. 

மலரில் லயித்திருந்தவள் கவனம் அதில் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்த மூன்று பளீர் சிகப்புப் பறவைகள் மேல் விழுந்தது. கூகுள் அதை ஆண் ‘கார்டினல்’ பறவை என்றது. அது விளையாடவில்லை, தன் ஆண்மையைப் பறைசாற்றிக் கொள்ள சண்டையிட்டுக் கொண்டிருப்பதாய் கூகுள் விளக்கியது. 

வெற்றி பெற்ற ஒற்றைப் பறவை மரத்தில் அமர்ந்து இனிமையான ஒலியை எழுப்ப ஆரம்பித்தது. பெண் பறவையை ஈர்க்க அது பாடவேண்டிய பாட்டுகளில் ஒன்று இந்த இசை. ராகம் தாளம் பல்லவி என்று என்னவெல்லாம் உண்டோ எதுவும் பிசறாமல், பிழையில்லாமல் பாடிக் காட்ட வேண்டும். “கார்டினல் சாங்” என்பது நாம் அதற்குக் கொடுத்த பெயர். பிறந்த 60 நாட்களிலிருந்தே பாடல் கற்க ஆரம்பிக்குமாம்! ஒரு கோடி முறை பயிற்சி செய்தபின் தான் சரியான ஸ்ருதி வரும் போல.

தன் தொண்டை கிழிய இசைத்துக் கொண்டிருந்தது கார்டினல். பளிச்சென்ற சிகப்பு அலகும், பளீர் சிகப்பு இறக்கைகளும், கரு கருத் தாடி போன்ற அலகை சுற்றிய நிறமும் கூட அதி முக்கியம் அதன் உடல் ஆரோக்கியத்தைப் பெண் பறவை தெரிந்து கொள்ள. 

ஒற்றை, சாம்பலும் பழுப்பும் சிகப்பும் கலந்த சிகப்பு அலகைக் கொண்ட பெண் பறவைக்கு இதை சுமாராய் பிடித்துவிட்டது போலும்… இது இருந்த இடத்திற்கு வருகை தந்தது. அது கிளை விட்டுக் கிளை தாவ, இதுவும் பதின்ம வயதுப் பையன் போல் அதன் பின்னே தாவிக் கொண்டிருந்தது. அது பறக்க… இதுவும் பறந்தது. அது அமர, இதுவும் அமர்ந்தது. கூடவே ஆண் பறவை வருமா, இல்லை வேலை முடிந்ததும் பாதியில் கழட்டி விட்டுவிடுமா என்ற அடுத்த சோதனையிலும் அந்த சிகப்பு கார்டினல் வெற்றி பெற்றது. 

ஆக… ஒரு குட்டி ஆண் பறவைக்கு, இணை கிடைக்க வேண்டுமென்றால் இத்தனை பாடுபட வேண்டும். அதோடு நின்றால் பரவாயில்லை… ஆண் பறவை, அதன் இணையோடே இருந்து பெண் பறவையும் அதன் குஞ்சுகளையும் காத்து போஷிப்பிக்கும் என்று நிரூபிக்க, தானியங்களைக் கொண்டு வந்து பெண் பறவைக்கு ஊட்ட வேண்டும். இதில் வெற்றி பெற்றால் மணமாலை சூட்டிக் கொண்டு அதன் அதி முக்கிய வேலையான இனப்பெருக்க வேலையை ஆரம்பிக்கலாம். 

மரங்களில் பறவைகளுக்காகத் தொங்க விட்டிருந்த தானிய ஊட்டியிலிருந்து (bird/seed feeder) ஒரு விதையோடு ஆண் பறவை சாம்பல் பறவையை நெருங்க, பெண் பறவை அதன் முழு அலகையும் திறந்து காட்ட, ஆண் அலகு அதன் வாய்க்குள் நுழையப் போக… ‘ஆ’வென்று பார்த்துக் கொண்டிருந்தவள் பார்வை சட்டென்று மறைக்கப்பட்டது. 

பார்வையை வலிய கரம் மறைத்திருக்க, காது மடலில் மீசை முடி உரைய, “என்னது இது… காலையிலேயே ஷோ பார்த்துகிட்டு?” என்றவனை அங்கு எதிர்ப்பார்க்கவில்லை என்றது அவள் திகைப்பு.

மலரின் வாசம் பொதிந்த குளிர் காற்று தேகத்தை வருடும் சுகம் ஒரு பக்கம், மேசை மேலிருந்து வரும் சூடான காபியின் நறுமணம் ஒரு புறம்… வலிய உள்ளங்கையின் கதகதப்பு ஒரு புறம்… தொட்டும் தொடாமலும்… பட்டும் படாமலும் நின்றவன் தேகத் தீண்டல் ஒரு புறம் என்று பெண் தன்னை மறந்து மயங்கி நின்றாள்.     

ஜன்னலின் பக்கச் சுவரில் முதுகைச் சாய்த்துக் கொண்டு அவள் முகம் பார்த்து நின்றவனுக்கு தன் முகம் காட்ட வெட்கினாலும் அவன் கொண்டு வந்திருந்த காபியை அருந்திக் கொண்டே கண்கள் மீண்டும் பறவையைத் தான் தேடின. 

“அதுங்க போயிடுச்சு…” என்றவன் முகத்தில் மந்தகாசப் புன்னகை. 

“எல்லாம் உங்களால” அலுத்துக் கொண்டாளாம். 

“நான் துரத்தலையே… அதுக்கு பிரைவசி தேவைப் பட்டிருக்கும்! நீ இப்டி நின்னு பாத்துட்டிருந்தா?” காபியை விழுங்கிக் கொண்டிருந்தாலும் புன்முறுவல் நீண்டது. 

“ம்ம்கும்…” சிணுங்கலுக்குள் சிரிப்பை மறைக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தாள். 

“அம்மணிக்கு காலைலேயே நல்ல கிளுகிளுப்பா படம் பாத்த எஃபக்ட் போல…” அவன் கேசம் கோதி சிரித்தான். 

பொங்கி வந்த சிரிப்பைக் கடைசி மிடறோடு விழுங்கினாள். “அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல. அது டெஸ்ட்ல பாஸ் ஆச்சான்னு பார்த்தேன்

டெஸ்ட் என்றதும் படிப்பாளிக்கு ஆர்வம் கூடியிருக்க வேண்டும்! “என்ன டெஸ்ட்?” என்றான் குரலில் அந்த ஆர்வத்தைக் காட்டி. அவன் ஆர்வம் பிடித்துப் போக, தான் கூகிளில் பார்த்ததை பகிர்ந்து கொண்டாள்.

 “கார்டினல்? ம்ம்ம்…. வெரி இன்ட்ரெஸ்டிங்!

“அத விட இன்ட்ரெஸ்டிங் ஒண்ணு இருக்கு. இந்தப் பறவை நாம இருக்கற இடம் கிட்ட வந்து, அத நாம பார்த்தா, நம்ம மனசுக்கு நெருக்கமானவங்க நம்மளத் தேடி பார்க்க வந்திருக்காங்கன்னு அர்த்தமாம்” 

‘ஏன் டி?’ என்பது போல் பார்த்தான். “உனக்கே இது கொஞ்சம் ஓவரா இல்ல?” 

“இல்ல! சின்ன சின்ன நம்பிக்கை இதெல்லாம். காக்கா வந்து சாப்பிட்டா நம்ம முன்னோர் வர மாதிரி நினைச்சுக்கிறோம் இல்லையா அது மாதிரி” 

“எனக்கு காக்கா… காக்கா மட்டும் தான்! அதே மாதிரி கார்டினலும் கார்டினல் தான்! இந்தக் கதை நம்ப மாட்டேன். முன்ன சொன்னீயே அத வேணும்ன்னா நம்பறேன்.”

“ஆமா ஆமா அறிவாளி அறிவுப் பூர்வமா சொன்னா மட்டும் தான் நம்புவார்! சின்னப் பறவைங்க, அதுல கூட ஒரு பெண் பறவைக்கு எவ்வளவு அறிவு. பின்னாடியே சுத்தறான் காதலிப்போம்ன்னு போகாம, அது அழகா இருக்கா, ஆரோக்கியமா இருக்கா, அது இணைக்காக அது வளர்த்துக்க வேண்டிய திறமைய சரி வர, பிழை இல்லாம பாடுபட்டு, விடா முயற்சியோட கத்துகிச்சா…? வேலை முடிஞ்சதும் ஓடிப் போயிடாம, கூடவே இருக்குமா? முட்டைய அடைகாக்கும் போது தனக்கும், குஞ்சு பொரிச்ச பிறகு குஞ்சுகளுக்கும் சாப்பாடு குடுக்குமான்னு பாத்து, கவனிச்சு அதோட துணைய தேர்ந்தெடுக்குது. ஆனா இவ்வளவு அறிவிருந்தும் மனுஷங்க தான் தேர்ந்தெடுக்க வேண்டிய வயசுல, வயசுக் கோளாறுல கோட்டை விட்டுடறாங்க.” 

“மேடம் எப்பிடி? டெஸ்ட் வச்சு தேடினிங்களாக்கும்?” புன்னகை மீண்டும் இதழில் ஒட்டிக் கொண்டது. 

அதத்தான் சொன்னேனே, சிலர் வயசுக் கோளாறுல, எதையாவது பாத்து மயங்கி கோட்டை விட்டுடுறாங்கன்னு…” வாய் மூடி சிரித்தாள். 

மயக்கும் குரலில், “எதப் பார்த்து மயங்கினிங்களாம்? சொல்லுங்க மேடம்.” சுவரோடு சாய்ந்து நின்றவன் எதிரில் நின்றவளை இழுத்து தன் மேல் போட்டு, இடையை கட்டிக் கொள்ள, “ம்ப்ச்… என்ன இது? நமக்கு இன்னும் கல்யாணம் ஆகல மனோ…” அவனுக்குத் தெரிந்ததை நினைவு படுத்தினாள். 

“தெரியும் டி, அதனால் தான் இதோட நிறுத்தறேன். ஓவரா நெளிஞ்சா, அப்புறம் ஏதாவது செஞ்சிடப் போறேன்.” 

“போதும், போங்க அந்தப் பக்கம். தனியா இருக்கோம். எப்போவும் ஒரே மாதிரி இருக்காது. கல்யாணம் வரைக்கும் தள்ளியே நில்லுங்க. இன்னைக்கு எங்க போறோம்?”

“மாக்னோலியா பிடிச்சுதா?”

“சான்சே இல்ல மனோ! ஒரு மரம் பூரா பூ. நிஜமா இல்ல கனவான்னு இருக்கு.”

“ஒரு மரத்துக்கே அசந்தா எப்டி?” என்று கேட்டவன் அவளை அசரடிக்கும் முடிவில் இருந்தான். 

வசந்த காலத்தின் அழகைப் பருகிக் கொள் என்று கூட்டிச் சென்ற தோட்டம் முழுவதும் பூத்துக் குலுங்கிய மாக்னோலியாவில் மெய் மறந்தாள். “மனோ…” என்றாள் கண்கள் விரிய! பல மரங்கள், பல வகை மாக்னோலியா, பல வர்ணங்களில்!

 அவள் அளவிற்கு அவன் அதில் லயித்துப் போகவில்லை என்றாலும் கூட்டிக் கொண்டு ஒவ்வோரு இடமாகச் சுற்றினான். அவனைப் பார்த்த அவளுக்கு தான் எப்படியோ போலானது. அவன் நேரத்தை வீணடிக்கிறோமோ… என்ற எண்ணம் வலுக்கவும், “ஏன் மனோ ரொம்ப போர் அடிக்குதா? உங்களுக்கு போதும்ன்னா வீட்டுக்குப் போகலாம் மனோ” என்றாள். 

அவனும் பாவம் எவ்வளவு நேரம் தான் மரத்தையும் மலரையும் பார்ப்பான். பத்து முறை கொட்டாவியும் விட்டு விட்டானே! 

“உனக்கு சுத்திப் பார்க்க பிடிச்சிருக்கு தானே?”

“ம்ம்ம்… ரொம்ப! ஆனா வீட்டுல இருந்தா ஏதாவது உருப்படியா படிப்பீங்க. உங்க டைம் வேஸ்ட்.”

“பிடிச்சிருக்கில்ல… அப்போ ஆச தீர சுத்திப் பாரு! செடியில இன்ட்ரெஸ்ட் இல்ல, எனக்கு எல்லாம் ஒரே மாதிரி தான் தெரியுது, என்ன பண்ண? இதுவே எலக்ட்ரானிக்ஸ் கடைன்னா எனக்கு ஜாலியாப் போகும்! ஆனா, இது உனக்கான நேரம். நீ என்ஜாய் பண்ணு. செடில தான் எனக்கு இஷ்டமில்லை, ஆனா உன் கூட இருக்க நேரம் எனக்கு ஸ்பெஷல் தான். அது வேஸ்ட் எல்லாம் இல்ல, நம்ம மெம்மொரில காலம் பூரா இருக்கப் போற கோல்டன் மொமெண்ட்ஸ் இதெல்லாம். சோ, எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல. நிம்மதியா கில்ட் இல்லாம வேடிக்கை பாரு.”

பதில் பேச வரவில்லை. இனம் தெரியாத புது உணர்வு வந்து ஒட்டிக் கொள்ள, கோர்த்திருந்த விரல்களை இறுக்கிக் கொண்டாள்.

“என்ன டி?”

“ம்ப்ச்” முகம் பார்த்தவளுக்கு மனோ மிகவும் அழகாகத் தெரிந்தான். மனம் முழுவதையும் நிறைத்தான்.

“இங்க நீ எமோஷனல் ஆகிறனால எனக்கு ஒரு புண்ணியமும் இல்ல… கைய விட்டுட்டு வேடிக்க பாரு. வீட்டுல போய் இத அப்பிடியே கன்டினியூ பண்ணுவியாம்…” அவன் சிரிக்க, அவன் பொல்லாத சிரிப்பின் அர்த்தம் புரிய, “நீங்க இருக்கீங்களே…” என்று புஜத்தில் பட்டென்று இரண்டு போட்டவளுக்கும் அடக்க முடியா சிரிப்பு தான்.

ஜப்பானியரால் பரிசாகக் கொடுக்கப்பட்ட ச்செரி ப்ளாசம் நிறைந்த தோட்டத்திற்கு அழைத்துச் சென்றான். “கண் எட்டுற தூரம் வரைக்கும் சிகப்பும் வெள்ளையும் பூ இருக்கும்” என்று கூறி தான் கூட்டி வந்தான். ஆனால் கண்டிப்பாக இதை அவள் எதிர்பார்க்கவில்லை. 

இலையில்லா மரங்கள் இடத்தை ஆக்கிரமித்திருக்க… மரத்தை முற்றிலுமாக நிரப்பியிருந்தது கொத்துக் கொத்தாய் இளஞ்சிவப்பு வண்ண மலர்களும், வெள்ளை மலர்களும். அடர் பூக்களுக்கிடையே நீல வானம் திட்டுத் திட்டாய் ஆங்காங்கே தெரிந்தது.

“எப்படி?” என்றவனை ஆசை ததும்பப் பார்த்தவள், எம்பி கன்னத்தில் முத்திரை பதித்தாள்.

“வாவ்…” என்றான் பட்டு இதழ் தடம் பதித்த கன்னம் வருடி.  

“தேங்க்ஸ் மனோ…” என்றவளுக்குள் துள்ளல். மேனியைத் தழுவிய குளிர் தென்றலை அனுபவித்துக் கொண்டே இளம் காதலன் கை கோர்த்து பூந்தோட்டத்தில் நடக்கப் பிடித்தது.

“இதெல்லாம் ரொம்ப புது அனுபவம் மனோ எனக்கு. எங்க வீட்டுப் பக்க ஆம்பிளைங்க எல்லாருமே வைஃப்புக்கு மதிப்பு கொடுக்கிறவங்க தான். ஆனாலும் இப்படி ஒருத்தரும் பொண்டாட்டிக்கு இது பிடிக்கும், வாங்கித் தருவோம்… இது அவளுக்கு நல்லா இருக்கும், போட்டுக்க விடுவோம், நாலு இடம் கூட்டிட்டுப் போவோம்ன்னு நினைக்கக் கூட மாட்டாங்க. ஏன் எங்க அப்பாவே அம்மாக்கு ஆசையா ஒரு புடவை எடுத்துக் கொடுத்து நான் பார்த்தது இல்ல. அம்மா அவங்க எதிர்ப்ப தெரிவிக்கலாம், அப்பா வாய் திறக்காத வரை! ஆனா நீங்க…?”

“ஓய்… என்ன டி நீ? வந்த வேலையப் பாரு. அங்க நில்லு ஃபோட்டோ எடுக்கறேன்.”

“நீங்க எனக்கு கிடைச்ச பெரிய பொக்கிஷம் மனோ.”

“ப்ச் விழி! தேவை இல்லாம எமோஷனல் ஆகிட்டு இருக்க நீ”

“வீட்டுல ஒத்துப்பாங்க தானே மனோ?”

“ஒத்துக்காம இருக்க காரணம் இல்லியே விழி!”

மெல்ல சிரித்தாள். “ஜாதி! மதம்! இருக்கே மனோ…” கூறியவளுக்கு உள்ளுக்குள் நடுங்கியது. “அம்மா அப்பாக்கு தெரியாம நான் ஒரு பென்சில் கூட வாங்கினது இல்ல மனோ. எங்க விருப்பத்துக்கு அவங்க தடை போட்டது இல்லன்னாலும் அவங்களுக்கு பிடிக்காத ஒண்ண நாங்க ஆச பட்டது கூடக் கிடையாது. ஆனா இப்போ? வீட்டுல சண்டை போடணும் நம்ம கல்யாணம் பண்ணிக்க! பயமா இருக்கு மனோ.”

“அப்போ சண்டை போடுவோம்! சம்மதத்தோட கல்யாணம் பண்ணிப்போம். சரியா?”

“சண்டை போட்டும் முடியாதுன்னு சொல்லிட்டா…?”

அவன் சிரித்தான். “யோசிச்சது போதும்! சியர் அப் விழி… அங்க பாரு குட்டீஸ் எல்லாம் ஓடி விளையாடுறத”

error: Content is protected !!
Scroll to Top