அங்கிருந்த அவள் வீட்டினர் அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சியின் மலர்விருந்தது.
பழனியப்பன், தயாபரன் என வீட்டு ஆண்கள் கடைக்குச் செல்லாமல் வீட்டிலிருந்தனர்.
துர்கா இன்னமும் திகைப்பு மாறாமல் நின்றிருந்தாள்.
“துர்கா” என்று நாச்சம்மை மகளை உலுக்க, ‘ஶ்ரீகாந்த் வீட்டிலிருந்து வருகிறார்கள் என என்னிடம் சொல்லவில்லையே நீங்கள்’ என்ற ஆதங்கத்துடன் அம்மாவைப் பார்த்தாள் அவள்.
உண்ணாமலை அப்படியே அமர்ந்திருக்க, “வாம்மா, இப்படி வந்து உக்காரு” என்று சிதம்பரம்தான் இயல்பாக அவளை வரவேற்றார்.
“நான், துர்காகிட்ட டீ குடுத்து விடுறேன். நீங்க பேசிட்டு இருங்க” என மகளை உள்ளே அழைத்துச் சென்றார் நாச்சம்மை. அனைவருக்கும் பலகாரம் பரிமாறி இருந்தார்கள்.
துர்கா வர காத்திருந்து, இப்போது சூடாக அவள் கையால் தேநீர் கொடுத்தார்கள். அலமேலு தேநீர் தயாரிக்க, அதற்குள் முகம் திருத்தி, திருத்தமாக வந்திருந்தாள் துர்கா.
நான்கு வயது பிள்ளையை வைத்துக் கொண்டு முதல்முதலாய் பெண் பார்க்கும் படலம், அவளுக்குக் கால்களெல்லாம் பின்னியது. கைகள் பிசுபிசுத்துப் பிடித்திருந்த தட்டு நழுவும் போலிருந்தது. அவளுக்குத் துணையாகக் கூடவே நின்றாள் குறிஞ்சி.
“ட்ரே நான் பிடிச்சுக்கறேன். நீ டீய எடுத்துக் கொடு” என்று அவள் நிலை புரிந்து வாங்கிக் கொண்டாள்.
அவள் முதல் மரியாதையை வருங்கால மாமியாருக்குதான் செய்தாள். ஶ்ரீகாந்த்தை சரியாக நிமிர்ந்து கூடப் பார்த்திருக்கவில்லை அவள். ஆனால், உண்ணாமலை முகத்தை அடிக்கடி பதற்றத்துடன் பார்த்திருந்தாள். இந்தப் பெண் பார்க்கும் படலம் எப்படிச் சாத்தியமானது? இவர் எப்படிச் சம்மதித்தார் என்ற எண்ணமே அவள் மனத்தை வண்டாய் குடைந்து கொண்டிருந்தது.
அனைவருக்கும் தேநீர் கொடுத்து அம்மாவின் அருகில் சென்று நின்று கொண்டாள்.
பெரியவர்கள் ஏற்கனவே பேசி விட்டார்கள் போலும். இப்போது தட்டு மாற்றினார்கள். அவள் மனத்தில் மெல்லிய திடுக்கிடல். சட்டென்று நிமிர்ந்து ஶ்ரீகாந்த்தை பார்த்தாள். அதற்காகவே காத்திருந்தது போலப் பளிச்சென்று பற்கள் தெரிய புன்னகைத்தான் அவன்.
“இந்தப் புடைவையை மாத்திட்டு வாம்மா” உண்ணாமலை தட்டை நீட்ட தயக்கத்துடன் வாங்கிக் கொண்டாள்.
குறிஞ்சி அவளோடு வர, ஶ்ரீகாந்த்தின் அக்கா ஶ்ரீமதியும் எழுந்து நின்றாள்.
‘ஐயோ’ என்றானது அவளுக்கு. ஏனோ அவளையும் அறியாமல் கண்கள் மீண்டும் உண்ணாமலையின் மீது பதிந்து மீண்டன. தேநீரை தொடாமல் அமர்ந்திருந்தார் அவர்.
“நம்ம ரூமுக்கு கூட்டிட்டு போ” தயாபரன் மனைவியிடம் கண்களால் செய்தி பரிமாற, அவர்களின் அறையை நோக்கி துர்காவை நகர்த்தினாள் குறிஞ்சி. அவர்கள் உள்ளே செல்லவும், “உக்காரு” என்று கண்களால் மகளை அதட்டினார் உண்ணாமலை. அவர் பக்கத்தில் அமர்ந்து ஶ்ரீகாந்த்திடம் வாயடித்துக் கொண்டிருந்த ரோஜா எலி குட்டியை போல முன் பற்களால் வாழைக்காய் பஜ்ஜியை கொறித்துக் கொண்டிருந்தாள்.
“நல்லா கடிச்சு மென்னு சாப்பிடணும் பட்டு ரோஜா” ஶ்ரீகாந்த் சொல்ல, “ஓகே” என்று ராகம் போட்டுக் கையில் இருந்ததை அவனுக்கு நீட்டினாள். புன்னகையுடன் வாங்கிக் கொண்டான் அவன்.
அதைக் கண்டு, “ம்ம்ம்” என்று முகம் திருப்பினார் உண்ணாமலை. அதில் ரோஜாவின் கவனம் அவர் மேல் திரும்பியது. அவர் புறமாகச் சாய்ந்தாள்.
“ஆயா, நீங்க டீ குடிக்கலையா?”
என்று அவரிடம் கேட்டாள்.
“ம்ம்ம்” என்றார் அதற்கும்.
“ஆயா இல்ல பட்டு ரோஜா, அப்பத்தா சொல்லணும் அவங்கள”
“அப்டியா? சரி” என்றவள், “அப்பத்தா, என்னைய மாதிரி நீங்களும் டீ குடிக்கக் கூடாதா? அம்மா சொன்னாங்களா?” என்று அடுத்தக் கேள்வியைக் கேட்டாள்.
“நான் ஏன் குடிக்கக் கூடாது? நல்லா குடிக்கலாம்” என்றார் அவர்.
“அப்ப ஏன் டீ குடிக்கல நீங்க? பிடிக்காதா?”
“பிடிக்குமே.” என்றார் அவளை லேசாகத் திரும்பி பார்த்து.
“ஒரு நாளைக்கு நாலு டீ குடிப்பாங்க, உங்க அப்பத்தா” என்று அம்மாவை மகளிடம் போட்டுக் கொடுத்தான் ஶ்ரீகாந்த்.
உண்ணாமலை அவனை முறைக்க, “டீ சூடா இருக்கா அப்பத்தா?” என்று அடுத்தக் கேள்வியைக் கேட்டாள் குழந்தை.
“கை சுட்டுரும்னு பயப்படுறீங்களா?” இரட்டை ஜடையோடு, ஜிமிக்கிகள் அசைந்தாட தலையசைத்து கேட்டாள்.
“பயப்படாத, கை சுட்டா குறிஞ்சி அத்த மருந்து போட்டு விடுவா. ஊசி போட மாட்டா. ஊசி வலிக்கும்ல, அதான் வேணாம் சொல்லிட்டேன். குறிஞ்சி அத்த வலிக்காம ஊசி போடுறேன்னு சொல்லும். ஆனா ஊசி குத்துனா வலிக்கும். கை சுட்டா மருந்து போடலாம் டீ குடிங்க” என்று கையை ஆட்டி ஆட்டி பேசினாள். உண்ணாமலை அதிலேயே லேசாக உருகி விட்டார்.
“என்னைய போல டீ ஆறுனாதான் உங்களுக்குப் பிடிக்குமா?”
“ஐயோ எம்புட்டு பேச்சு பேசுற நீ?”
“தயா மாமாவ ஆத்தி தர சொல்லவா? மாமா டீ பெரு….சா ஆத்தும். மேல நொற நெறை…யா நிக்கும். ஆத்தி தர சொல்லவா?” என்று உரசிக் கொண்டே கேட்ட மழலையின் அழகில், அவளின் அன்பில் மனம் கனிந்திட அவளின் கன்னம் கிள்ளி கொஞ்சினார்.
“உனக்கென்னா இப்போ நான் டீ குடிக்கணும்? அம்புட்டுதானே. இந்தா குடிக்கறேன் பாரு” என்று தேநீர் கோப்பையைக் கையில் எடுத்தார்.
“பாத்தே. சுடும்” என்று அவசரமாகக் கையை உதறி எச்சரித்தது வாண்டு.
“தயா மாமா, ஆத்தி குடு” என்று மாமனையும் அழைத்தாள்.
“எனக்குச் சூடா குடிச்சாதான் பிடிக்கும். நான் என்னா உன்ன மாதிரி குட்டி பாப்பாவா? நான் சூடா குடிப்பேன், பாரு” என்று தேநீரை பருகினார். தேநீரை அவர் உதட்டுக்குக் கொண்டு போகையில், பக்கத்திலிருந்த ரோஜா உதடு குவித்து ஊதவும் அவருக்குச் சிரிப்பில் புரையேறி விட்டது.
“பார்த்தும்மா” மகன் பதற, எட்டி அவரின் தலையைத் தட்டியது பிஞ்சுக் கரம். உண்ணாமலையின் கண்கள் கலங்கி விட்டன. அது தேநீர் புரையேறியதினால் மட்டுமே அல்ல என்பது மட்டும் நிச்சயம்.
தேநீர் அவர் புடைவையில் லேசாகச் சிந்தி விட்டது.
“உடனே கழுவினா கரை படாதும்மா. வாங்க” என்று ஶ்ரீமதி அழைக்க, எழுந்து நின்றார் அவர்.
“நீ வழி காட்டுறியா?” என்று ரோஜாவிடம் கேட்டார்.
“எங்க போணும்?” என்று பதில் கேள்வி கேட்டது வாண்டு.
“எம் மேல டீ சிந்திடுச்சுல்ல, பட்டு சேல பாழா போயிடும். அதான் பாத்ரூம் போய்க் கழுவ போறேன். வா, வந்து வழி காட்டு” என்றார்.
சோஃபாவில் இருந்து இறங்கி அவரின் கையைப் பிடித்து, முன்னே நடந்தாள்.
“பாத்ரூம் பின்னால இருக்குதுங்க” என்று நாச்சம்மை அவர்களைப் பின் தொடர, அதற்குள் தயாவின் அறையைத் தட்டி விட்டது வாண்டு.
“தயா மாமா ரூம்ல பாத்ரூம் இருக்கு.” என்று சொல்லி, “அம்மா, குறிஞ்சி அத்த. கதவத் தொற. அப்பத்தா பாத்ரூம் போகணுமாம்” என்று கதவை மீண்டும் தட்டினாள்.
“நாம பின்னால போகலாம்” என்று அவர் சொல்வதற்குள், குறிஞ்சி கதவை திறந்து விட்டாள்.
“உள்ள வாங்க, பெரிம்மா” என்று இம்முறை தயக்கமின்றி உறவுமுறை வைத்தே அழைத்தாள்.
“அவங்க சேலைல டீ சிந்திருச்சு குறிஞ்சி” நாச்சம்மை சொல்ல, “ஷாம்பு லேசா போட்டுக் கழுவினா கரை பிடிக்காது பெரியம்மா” என்று அவரை ஓய்வறை அழைத்துச் சென்றாள் குறிஞ்சி. ரோஜாவும் வால் பிடித்து அவரின் பின்னாலேயே செல்ல, “விட்டா வாய் பேசியே அவங்களை வழியனுப்பி வச்சுடுவ நீ. வா இப்படி” என்று பேத்தியை தடுத்து பிடித்தார் நாச்சம்மை.
துர்கா புதுப் புடைவை கட்டி நிற்க, “ம்மா, அழகா இருக்கம்மா” என்று ராகம் போட்டாள். துர்காவின் இதழ்கள் தானாகப் புன்னகைத்தன.
“நீ தலையைச் சீவு. அவங்க வெளில வந்தா நாலு வார்த்த பேசு. என்னா?” என்று பேத்தியோடு வெளியேறி விட்டார்.
இப்போது ஶ்ரீமதி ரோஜாவை பிடித்துக் கொண்டாள்.
“எங்க வீட்டுக்கு வர்றியா நீ? எங்க வீட்ல அண்ணா, அக்காலாம் இருக்காங்க. அவங்க கூட நீ விளையாடலாம்” என்று ஆசை காட்டினாள்.
“சைக்கிள் இருக்கா? எங்கிட்ட சைக்கிள் இருக்கு. எல்சா சைக்கிள். குறிஞ்சி அத்த வாங்கி கொடுத்தா”
“அப்டியா? எங்க வீட்ல பெரிய சைக்கிள் இருக்கே, பட்டர்ஃப்ளை போட்ட சைக்கிள்” என்று கையை விரித்துச் சொன்ன ஶ்ரீமதி, “நானும் உனக்கு அத்தைதான். என்னை அத்தைன்னு கூப்பிடணும் நீ. ஓகே?” என்று அவள் கன்னத்தை மென்மையாய் முத்தமிட்டு கேட்டாள்.
அனிச்சையாய் கன்னம் துடைத்து, “பட்டர்ஃப்ளை எப்டி இருக்கும்? பெருசாவா?” ஆர்வமும், ஆசையும் போட்டி போட கண்கள் மின்ன கேட்டவளை மீண்டும் முத்தமிட ஆசை வந்தது அத்தைக்கு. ஆனால் துடைத்து விடுவாளே.
“ஆமா, தங்கம். பெருசா இருக்கும். அப்புச்சி உனக்கு வாங்கித் தரேன், நாம கடைக்குப் போவோம். என்னா?” என்று சிதம்பரம் சொல்ல, அவளின் கவனம் அவர்மேல் திரும்பியது. அவரின் சட்டைப் பையில் இருந்த பேனாவை பார்த்து, புருவங்களைச் சுளித்தாள்.
“இது பென் டா தங்கம்”
“எதுக்கு? எழுதவா?” என்று அடுத்தச் சுற்று கேள்வியை அவரிடம் ஆரம்பித்து விட்டாள். ஶ்ரீகாந்த்தின் முகம் புன்னகையில் மலர்ந்திருந்தது. மழலையின் இனிமைக்கு முன் வேறெதுவும் போட்டியாக வர முடியுமா என்ன?
அங்கே ஓய்வறையில் இருந்து உண்ணாமலை வெளியே வர, “இந்தாங்க” என்று அவரிடம் பூந்துவாலையை நீட்டினாள் துர்கா. ஒன்றும் சொல்லாமல் அதை வாங்கிக் கொண்டார்.
அப்போது, “நான் போய்ப் பூ எடுத்துட்டு வர்றேன்” என்று அங்கிருந்து மெல்ல நழுவி விட்டாள் குறிஞ்சி.
“புள்ளய நல்லா வளர்த்துருக்க” என்றார் உண்ணாமலை. தன்னால் தன் அம்மாவுக்குக் கிடைக்காத பாராட்டுத் தனக்குக் கிடைத்திருக்க, புன்னகைத்தாள். ரோஜாவை வளர்த்தது நாச்சம்மைதான். அந்தப் பெருமை அவரையே சேரும். ஆக, “அம்மாதான்..” என்று அவள் ஆரம்பிக்க, அவளைப் பேச விடாமல், “நீயும் அம்மா பேச்சு கேட்டு அடக்கமா இருந்திருக்கலாம்” என்று விட்டார். துர்கா திகைத்து நிற்க, “ஆம்பளைங்க அப்படித்தான் இருப்பானுங்க, எப்படா வாய்ப்பு கிடைக்கும், ஏமாற எவடா கிடைப்பான்னு. நாமளே போய் அவங்க வலையில விழலாமா?” என்று கேட்டிருந்தார்.
“நான்..”
“வேற ஒருத்தி கூடக் கல்யாணம் நிச்சயமானவன எப்படி நம்பலாம் நீயி? அவன் ஆயிரம் சொல்லுவான். அந்தக் கதையெல்லாம் இந்தக் காதுல வாங்கி அந்தக் காதுல விட்டிருக்கணும்.”
“இல்ல..”
“எனக்கு எல்லாம் தெரியும். நான் விசாரிச்சுட்டேன். நீ ஒன்னும் சொல்ல வேணாம்” என்றவரை அதிர்ச்சியுடன் ஏறிட்டாள்.
“எனக்கு அவள கொஞ்சம் கூடப் பிடிக்காது. வீட்ல கட்டாயப்படுத்திக் கட்டி வைக்கிறாங்கன்னு சொன்னதும் அப்படியே கண்ணை மூடிட்டு நம்பிடுவியா கொஞ்சமாவது புத்திய பயன்படுத்தி யோசிக்க வேணாம்? பொம்பள புள்ள நெருப்பா இருக்க வேணாமா?”
“நான்.. அவன விரும்பினேன்..” திக்கி திணறி சொல்லி விட்டாள்.
“அதேன் தப்புங்கறேன், இந்தக் கல்யாணம் பண்ணிட்டு கள்ள காதல் பண்றவனுங்க கூட என்னா சொல்லி ஆரம்பிப்பானுங்க தெரியுமா? என் பொண்டாட்டி சரி கிடையாது. அவ என்னைய நல்லா பார்த்துக்க மாட்டா. எனக்கு அவள பிடிக்காது. என் வாழ்க்கையே அவளால நாசமா போச்சு. இதுவே உன்னய மாதிரி ஒருத்திய கட்டியிருந்தேன்னா எப்படியிருந்திருப்பேன் தெரியுமா? உன்னய மொதவே பார்க்காம போய்ட்டேனேன்னு நெஞ்சை உருக்கற மாதிரி பேசுவானுங்க. நீங்களும் அதை நம்பி விட்டில் பூச்சி கணக்கா போய் விழுந்து.. வாழ்க்கையைக் கெடுத்துக்கறீங்க..” என்று படபடத்தார்.
“இப்போவும் உனக்கு ஒன்னும் கெட்டு போகல, விடு” என்றார், அவரே ஆறுதலாக. துர்காவிற்கு மனத்தினுள் அமிழ்த்தி வைத்திருந்த பழைய நினைவுகள் எல்லாம் மேலெழ கண்கள் கலங்கின. அவர் முன் அழுது விடாமல் மிகுந்த சிரமப்பட்டாள்.
அவள் தோளில் கை வைத்து, “விடுங்கறேன்ல” என்று அவர் அதட்டவும் அழுதே விட்டாள். மடையைத் திறந்து விட்டது போலக் கண்ணீர் வேகமாக வெளியேறியது.