என் ஜீவனில் உறைந்திடு – 11 (3)

நித்யாவின் கணவர் சசியும், மகன் மித்ரனும் காலை உணவை முடித்து விட்டுத் தொலைக்காட்சி முன்பு அமர்ந்திருந்தனர். ஜெரியை டாம் துரத்துவதைப் பார்த்தபடியே அங்கு வந்தனர் சகோதரிகள்.

ரோஜா மாமாவின் நலம் விசாரித்து, மித்ரனை கொஞ்சிய பின்பு அம்மாவை தேடினாள்.

அவர்கள் இருவருக்கும் காலை உணவை எடுத்து வைத்து விட்டு வேறு வேலை பார்க்கச் சென்றார் சித்ரா. ரோஜாவால் அக்கா நித்யாவிடம் எதையும் மறைக்க முடியாது. காலை உணவை மென்றபடி, முன் தின நிகழ்வுகளை அசைப் போட்டார்கள்.

அக்காவை பாதிக்காத வகையில் சிலது மறைத்து, சிலதை மறைமுகமாக விளக்கி, பலவற்றை வெளிப்படையாகப் பகிர்ந்துக் கொண்டாள் ரோஜா.

மொத்த கதையும் கேட்டு விட்டு, “ரெண்டு நாள் ஃப்ரீயா விடுவோம் ரோஜா. அப்புறம் அவங்களே நம்ம வழிக்கு வந்துடுவாங்க. அப்பாக்கு நம்ம சந்தோஷம்தான் பெருசு. அப்பா சரின்னு சொல்லிடுவார். அதுனால வெயிட் பண்ணுவோம்” என்றாள் நித்யா.

ரோஜா மனம் வாடியிருந்ததினால், அக்காவின் வார்த்தைகள் அவள் மனதை அடையவில்லை. வெறுமே, “ம்ம்” என்றாள் அவள்.

அந்தக் காலை வேளை முழுவதும் தங்கையின் கலகலப்புக் காணாமல் போனதை கவனித்த நித்யா முன்காலைப் பொழுதில் அம்மாவிடம் மதியத்திற்குச் சமைக்க வேண்டாம், வெளியில் சாப்பிட போகிறோம் என்று சொல்லி அனுமதி பெற்று தங்கையை அழைத்துக் கொண்டு வெளியில் சென்றாள். சித்ரா அவர்களைத் தடுக்கவில்லை.

நால்வரும் தயாராகிக் காரில் ஏறியதும், “நாம லஞ்ச் சாப்பிட.. இல்லையில்ல, செஃப்பை மீட் பண்ண வர்றோம்னு அவருக்கு இன்பார்ம் பண்ணிடு ரோசு. அப்படியே அவர் ரெஸ்டாரண்ட் போக உங்க மாமாக்கு வழி சொல்லு” என்றாள் நித்யா.

மித்ரனை தூக்கி மடியில் வைத்துக் கொண்டு, மாமாவிடம் வழி சொன்னாள் ரோஜா.

அலைபேசி எடுத்து இளமாறனுக்குச் செய்தி அனுப்பினாள்.

அந்நேரம் அவளது புகைப்படத்தைதான் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

அவனுக்கு முந்தின மாலை எடுத்த புகைப்படங்களை அனுப்பி இருந்தான் தம்பி.

ரோஜாவின் கைப் பிடித்திருந்த சுகந்தி, ரோஜாவின் தோளை தட்டிக் கொண்டிருந்த அப்பா, ரோஜாவிற்குப் பூ சூடிக் கொண்டிருந்த அம்மம்மா என வரிசையாகப் பல புகைப்படங்கள். இரவு முழுவதும் ஒவ்வொன்றையும் பல முறை பார்த்து விட்டான். ஆனாலும் போதவில்லை. மீண்டும் மீண்டும் பார்க்கச் சொல்லி தூண்டியது மனது.

பட்டுச் சேலை, நகை, பூ, அலங்காரம் என அதே தோற்றம். ஆனால், அவனைப் பார்க்கும் போது அவள் கண்களில் வரும் பாவனை எந்தப் புகைப்படத்திலும் இல்லை. அதை மட்டும் புகைப்படமாக எடுக்க முடிந்தால் பொக்கிஷமாகப் பாதுகாத்துக் கொள்வான் அவன்.

பல்வேறு வேலைக்கு நடுவிலும் அவளையே நினைத்திருக்க அவளிடம் இருந்து குறுஞ்செய்தி வந்து விழுந்தது.

“அப்பா கால் பண்ணார். உங்க வீட்ல நடந்ததைச் சொன்னார். உன்னை இப்படி ஒரு நிலையில் நிறுத்தினதுக்கு ஐ ஆம் வெரி சாரி ரோஜா. எனக்கு விளக்கம் கொடுக்க ஒரு வாய்ப்பு கொடு. இப்போ கோபமோ, வருத்தமோ இல்லாம நல்லா தூங்கி எழுந்திரு. நாளைக்குப் பேசலாம். சீக்கிரம் மீட் பண்ணலாம்” என்று மட்டுமே செய்தி அனுப்பியிருந்தான் அவன்.

இப்போது அவளே நேரில் வருவது அவனுக்கு அத்தனை நிம்மதியை தந்தது.

அவளுக்காக அதிக நேரம் காத்திருக்க வைக்காமல் அரை மணி நேரத்தில் வந்து விட்டாள் ரோஜா.

அவனுக்கு அக்கா குடும்பத்தை அறிமுகப்படுத்தினாள். இளமாறனை ஒற்றைக் கைக் குலுக்களில் எடைப் போட்டுக் கொண்டிருந்த சசிக்குமாரை முறைத்து, “போதும் மாமா” என்று ரோஜா சொல்ல, சட்டெனச் சிரித்து விட்டனர் அனைவரும்.

“ஹாய் சார்” என்று மித்ரனிடம் கை நீட்டி, அவன் கைப் பிடிக்கவும் அப்படியே கையில் அள்ளிக் கொண்ட இளமாறனை பார்த்த ரோஜாவின் கண்களில் ரோஜாக்கள் மலர்ந்திருந்தது. அவன் எதிர்பார்த்த பார்வை, இமைக்காமல் அவளையே பார்த்திருந்தான் அவன்.

“உள்ள போகலாமா?” என்று நித்யா கேட்கவும், சுதாரித்துக் கண்களை விலக்கினார்கள்.

அவனது உணவகத்திற்கு வந்திருந்தார்கள். ஏப்ரன், தலைப்பில் தொப்பி என முழுச் செஃப் உடையில் இருந்தான் இளமாறன். உணவகம் முழுவதும் தேங்காய் எண்ணெயின் நறுமணம் சூழ்ந்திருந்தது.

அவர்களை அழைத்துச் சென்று தனிமையான ஒரு மேஜையைத் தேர்ந்தெடுத்து அமரச் செய்தான். அடுத்தப் பத்து நிமிடங்களில் இஞ்சி, பச்சை மிளகாய்ச் சேர்க்கப்பட்ட கேரளத்தின் மோரான சம்பாரத்தை அவர்களுக்குக் குடிக்கக் கொடுத்தான்.

“லஞ்ச் ரெடியாகிட்டு இருக்கு. பத்து நிமிஷத்துல சாப்பிடலாம். நீங்க பேசிட்டு இருங்க. நான் சீக்கிரம் ஜாயின் பண்ணிக்கறேன்” இளமாறன் சொல்ல, “அச்சோ உங்க வேலையை டிஸ்டர்ப் பண்றோமா?” என்று சங்கடத்துடன் கேட்டாள் நித்யா.

“இல்லயில்ல. அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. ஒரு இருபத்தைந்து பேருக்கு லஞ்ச் புக்காகி இருக்கு. மெயின் டிஷ் எல்லாம் ரெடி. டெஸர்ட் குக் பண்ணிட்டு இருக்காங்க. நான் கிட்சென்ல நின்னா வேலை வேகமா, சரியா நடக்கும். அதான்” என்று விளக்கம் கொடுத்தான்.

“ஓகே” என்று நித்யா சொல்ல, ரோஜா எழுந்து இளமாறனுடன் நடந்தாள்.

அவள் கைகள் கழுவி, ஏப்ரன் அணிந்து அவனோடு சமையல் அறைக்குள் நுழைந்தாள்.

இருவருக்கும் இடையில் வார்த்தைகள் தேவைப்படாத ஓர் அமைதி நிலவியது. அவன் செய்யத் தொடங்கிய வேலைகளை அவனோடு சேர்ந்து செய்து முடித்தாள் ரோஜா.

இருவரும் ஒன்றாக நின்று, ஒன்று போல வேலை செய்வதை வேவு பார்த்து விட்டு நித்யா செல்ல, இளமாறனின் பணியாளர்கள் அனைவரின் பார்வையும் அவர்கள் மேல்தான் இருந்தது.

“செஃப், ரெண்டு நாள் முன்னாடி நீங்க கேன்டீன் வந்து என்னைப் பார்த்தது பத்தி அப்பா கேட்டாங்க” திடீரென்று சொன்னாள் ரோஜா. திடுக்கிட்டுத் திரும்பியதில் சக்க பிரதமன் செய்யப் பலாப் பழம் நறுக்கிக் கொண்டிருந்தவனின் கையில் இருந்த கத்தி பிடி நழுவி கீழே விழுந்தது. ரோஜாவின் காலில் விழுந்து காயம் பட்டு விடக் கூடாதென்று பதறி கீழே குனிந்தவன் கத்திக்குப் பதில் அவளின் காலைப் பிடித்திருந்தான்.

“செஃப்” சிரிப்புடன் குனிந்து கத்தியை கையில் எடுத்தாள் ரோஜா.

“நீ எதிர்பார்த்தது தானே? என்ன பதில் சொன்ன?” என்று அவன் கேட்க, “நான் பதில் சொல்லும் முன்னாடி பேச்சு மாறிடுச்சு” என்றாள் சிரிப்புடன்.

“ரோஜா” சமையல் அறைக்குள் தலையை நீட்டி நித்யா அழைக்க, “நீ போ. நான் இப்ப வந்துடுறேன்” என்று அவளை அனுப்பினான் இளமாறன்.

ஏற்கனவே தயாராகி இருந்த உன்னியப்பம், பாலடா பிரதமன் இரண்டையும் மித்ரனுக்காகக் கொடுத்து விட்டான்.

குழந்தை உண்ணத் தொடங்க, நித்யாவின் கவனம் ரோஜாவின் மேல் பதிந்தது.

“எனக்கு ஒரு சந்தேகம், அதைத் தீர்த்து வைங்க” என்று நித்யா கணவனிடம் கேட்க, அலைபேசியை ஓரமாக வைத்து விட்டு, “என்ன டவுட், கேளு நித்தி” என்றான் அவன்.

“நம்ம ரோஜா கல்யாணத்துக்கு முன்னாடி குழந்தை பெத்துக்கிட்டா..” நித்யா கேள்வியைத் தொடங்க, “அக்கா” என்று அதிர்ந்து கத்தினாள் ரோஜா.

“இல்லயில்ல. கல்யாணத்துக்கு முன்னாடி கர்ப்பமானா என்ன பண்ணுவீங்க?” மனைவியின் கேள்வியில் அதிர்ச்சியுடன் மச்சினியை பார்த்தான் சசிகுமார்.

அவ்வளவு நேரமும் ரோஜா, இளமாறனை பற்றிதான் பேசிக் கொண்டிருந்தார்கள் அவர்கள். இப்போது மனைவி இப்படியொரு கேள்வி கேட்கவும், தானாகவே தொடர்புப்படுத்திக் கொண்டான் கணவன்.

“நம்ம ரோஜாவா? நீ என்ன சொல்ற நித்யா? இவளும் இளமாறனும் லவ் பண்றாங்கன்னு நீ சொல்லியே ஒரு வாரம் தானே…” ரோஜா அக்காவை முறைத்தாள். மாமாவின் முன் பேச விரும்பாமல் எழுந்து கொள்ள முயன்றாள். அவளின் கைப் பிடித்து நித்யா அமர வைக்க, “சாரி” என்ற சசிகுமார், “மாமாக்கு…” என்று ஆரம்பிக்க, “அவரோட பேரன்ட்ஸை ஜட்ஜ் பண்ண நாம யார் நித்திக்கா?” என்று கத்தினாள் ரோஜா.

“ஓ? அப்போ இளமாறன்..” என்று சசிகுமார் கேள்வி கேட்க, “ஐ டோண்ட் வான்ட் டு டிஸ்கஸ் திஸ் நித்யாக்கா” என்று அழுத்தமாகச் சொன்னாள் ரோஜா.

இருவரையும் பார்த்து, “அப்புறம் அதுல இளமாறன் தப்பு எதுவும் இல்ல” என்றாள் தீர்க்கமாக.

error: Content is protected !!
Scroll to Top