நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 19 (3)

ஒரு வாரம் கழிந்திருக்க அவளைச் சாலையில் காரோட்ட வைத்தார் பயிற்சியாளர். ஓரமாக, பாதுகாப்பாக, கவனமாகக் காரை செலுத்தினாள். அந்நேரம் எதிர்ப்புறம் ஶ்ரீகாந்த்தின் கார் கடக்க அவளின் கவனம் சிதறியது.

“ரோட பாருங்கம்மா”

உடனடியாக, “சாரி சார்” என்றாள். ஆனால் அன்றைக்கு மட்டுமல்ல அதற்குப் பின் வந்த நாள்களிலும் அவள் ஶ்ரீகாந்த்தை காண நேரிடவில்லை. ஆனால், அவளின் கவனம் சிதறிக் கொண்டே தானிருந்தது.

வீட்டு மாடியில் அறை எடுக்கும் வேலைகள் ஆரம்பமாகி இருந்தன. அவளிடம் கேட்டுதான் திட்ட வரைப்படம் முடிவு செய்யப்பட்டது.

“புதிய அறை எதற்காக?” என்ற புதிய கேள்வி அவளைக் குடைந்து குழப்பியது. நான் எதற்கும் தகுதி இல்லாதவள், எனக்கு எதுவும் வேண்டாம் என மீண்டும் தன்னை நத்தையாக ஓட்டுக்குள் சுருக்கினாள்.

அந்நிலையில், “அக்கா, இன்னைக்கு ஈவ்னிங் சீக்கிரம் வீட்டுக்கு வர்றியா? உனக்குப் பெர்மிஷன் கிடைக்குமா?” என்று அவளிடம் கேட்டான் தயா.

“ம்ம், கேட்டா குடுப்பாங்க. ஆனா என்னான்னு சொல்லி கேட்க?”

அதற்கு நாச்சம்மை பதில் சொல்லும் முன், “பெர்மிஷன் போட்டு வாயேன் துர்கா. காரணம் சொன்னாதான் வருவியா?” என்று கேட்டாள் குறிஞ்சி.

“இல்ல, ஸ்கூல்ல கேட்டா காரணம் சொல்லணும்ல?”

“அப்பா வரவாம்மா?” பழனியப்பன் கேட்க, “ப்பா, நான் டீச்சர்ப்பா, ஸ்டூடெண்ட் இல்ல” என்றாள் குறுநகையுடன்.

“ஆமா, அம்மா டீச்சர்” என்றது ரோஜா குட்டி.

“அப்புறம் எதுக்குத் தயங்கற பெர்மிஷன் போட்டு வா” என்று ஒரே போடாகப் போட்டார் நாச்சம்மை.

“என்னன்னு கேட்டா சொல்ல மாட்டீங்களே” என்று புலம்பிக் கொண்டே பள்ளிக்கு போனாள். முன்மாலை வேளையில் வந்தால் போதும் என்றிருந்தான் தயா. அவ்வாறே வீடு வந்தாள்.

குடும்பமாக எங்கோ சொல்கிறோம் போல, ஒருவேளை புதுக் கார் வாங்கவோ? வெள்ளிக்கிழமை என்பதால் நகைக் கடைக்கா? அங்கிருந்து கோவிலுக்கா? இதிலென்ன ரகசியம் வேண்டி கிடக்கிறது? அவளிடம் காரணத்தைச் சொன்னால்தான் என்ன? என்று தீவிரமாகச் சிந்தித்தபடியே இரு சக்கர வாகனத்தை வீட்டின் முன் நிறுத்தினாள். அங்கே புதிய பெரிய காரொன்று நின்றிருந்தது. வீட்டில் இருந்து கலவையான குரல்கள் வாசல் வரை கேட்டது.

அவள் உள்ளே செல்ல குறிஞ்சியுடன் பேசியபடியே எதிர்ப்பட்ட பெண்ணின் முகம் மிகவும் பரிச்சயமானதாகத் தோன்றியது.

“துர்கா வந்தாச்சு” என்றாள் அந்தப் பெண்.

“வா துர்கா” குறிஞ்சி முன்னே வந்து வரவேற்க முன்னேறினாள். வீட்டில் காலடி வைத்துக் கூடத்தில் கண் பதித்ததும் உடல் அப்பட்டமாக அதிர அப்படியே சிலையென உறைந்திட்டாள்.

அங்கே புன்னகையுடன் ஶ்ரீகாந்த் அமர்ந்திருந்தான். அவனுடன் அவனது பெற்றோர் இருந்தனர். கூடவே அக்கா, அவரின் கணவரும் வந்திருந்தார்கள். அந்தப் பெண் அவனின் அக்கா, ஶ்ரீமதி.

அவர்களுக்கு முன்னே ஜமுக்காளம் விரித்து அதில் வரிசையாகத் தட்டுகள் அடுக்கியிருந்தார்கள்.

பூ, பழம், வெற்றிலை, பாக்கு, பட்டு புடைவை, பொன் நகை எனப் பார்க்க பார்க்க அவளுக்குக் கண்ணை இருட்டியது.

அங்கே சோஃபாவில் உண்ணாமலை, ஶ்ரீகாந்த் இருவருக்கும் நடுவே சட்டமாகச் சாய்ந்து அமர்ந்திருந்தது பட்டு ரோஜா. அம்மாவை கண்டதும், “ம்மா” என்றழைத்து, ஶ்ரீகாந்த்தின் தோளை தொட்டு, “ஶ்ரீக்கா” என்று ஆர்ப்பரித்தாள். அவளைத் தூக்கி மடியில் அமர்த்திக் கொண்டான் ஶ்ரீகாந்த்.

அப்படியே அதிர்ந்து நின்றவளின் அருகில் வந்து, “வாங்கன்னு கேளு” என்று மகளை அதட்டினார் நாச்சம்மை. அப்போதுதான் உயிர் வந்தது போல உறை நிலை மாறி, கை குவித்து, “வாங்க” என்றாள் துர்கா.

error: Content is protected !!
Scroll to Top