ரோஜா தன் அலைபேசி எண்ணை எடுத்துச் சென்ற இளமாறன், ஏன் தன்னை அழைக்கவோ, குறுஞ்செய்தி அனுப்பவோ இல்லை என்ற குறுகுறுப்புடன் கேன்டீனில் வேலைகளைப் பார்த்துக் கொண்டே சுற்றிக் கொண்டிருந்த பொழுது, அவளது அலைபேசிக்கு அழைத்தான் இளமாறன்.
குரலை தழைத்து, “ஹலோ செஃப்” என்றாள் ரோஜா.
“ஹாய் ரோஜா, பிஸியா? பேசலாமா?” என்று கேட்டான்.
“பிஸியாதான் இருக்கேன். ஆனா, பேசிட்டே வேலை பார்க்கிற அளவுக்குப் பிஸி. சோ, பேசலாம். சொல்லுங்க” என்ற பதிலைக் கேட்டதும் சிரித்தான் அவன்.
அந்தச் சிரிப்புக் குரலில் இருந்து மறையாமல், “நான் எங்க வீட்ல பேசிட்டேன் ரோஜா. அம்மம்மா, தாத்தா சீக்கிரம் உங்க வீட்ல வந்து பேசுவாங்க” என்றான்.
“ஓ, வாவ். இந்த வேகம் நான் எதிர்பார்க்கல”
“எந்த வேகம்?”
“இப்படிக் கேட்டா என்ன பதில் சொல்ல? எனக்கு ஏற்கனவே எல்லாம் ரொம்ப வேகமா போற ஃபீல். இன்னும் நாமளே சரியா பேசிக்கல. அதுக்குள்ள உங்க வீட்ல இருந்து பேச வர்றாங்கன்னா..”
“ஹேய் ரோஜா, நீ எப்போ சரின்னு சொல்றியோ, அப்போதான் வருவாங்க. ஓகே? நான் பேசி முடிக்கிறதுக்கு முன்னாடி நீயே ஒரு முடிவுக்கு வந்ததுட்டா எப்படி?”
“அதில்லை செஃப். நாளைக்குதான் நித்யாக்கா வீட்டுக்கு வர்றா.”
“எஸ் நேத்து சொன்னியே. உங்கக்கா ஊருக்கு வரணும். நீ அவங்ககிட்ட பேசணும். அப்புறம் நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து உங்க அப்பாகிட்ட பேசணும். லாங் பிராசஸ்” என்றான் பெருமூச்சுடன்.
“எனக்கு எல்லாமே ரொம்ப வேகமா நடக்கிற ஃபீல் செஃப்.”
“இந்த வேகம் கூட இல்லனா என் நிலைமை கஷ்டம் ரோஜா. எனக்கு இப்போ 29 வயசு. எனக்கு நாப்பதில் பத்து வயசு பிள்ளைங்க இருக்கணும்னு ஆசைப்படுறேன். தப்பில்லையே?”
“ஆ, செஃப்.” கூச்சமும், அதிர்ச்சியும் கலந்த அவளின் குரலில் இருந்த வெட்கத்தை நேரில் கண்டது போலச் சத்தமாகச் சிரித்தான் இளமாறன்.
“ஹோட்டல் போகலையா நீங்க?” சட்டென்று பேச்சை மாற்றினாள் ரோஜா.
“ஹோட்டல்லதான் இருக்கேன். ஃபேமஸ் பெங்காலி சிங்கர் ஒரு அவார்ட் ஃபங்ஷனுக்காகச் சென்னை வந்தவங்க, நம்ம ஹோட்டல்லதான் தங்கியிருக்காங்க. ஈவ்னிங் அவங்களைப் பாராட்டி இசையமைப்பாளர் சார்பா சின்னதா ஒரு பார்ட்டி இருக்கு. அவங்களுக்காக ஸ்பெஷல் ஸ்வீட்ஸ் ரெடியாகிட்டு இருக்கு. அதைப் பார்த்திட்டு இருக்கேன் நான்”
“வாவ். அவங்க குரலே தித்திப்பாதான் இருக்கும். அவங்களுக்கு இனிப்பா? செம்ம.”
“ம்ம். பெங்காலி ஸ்வீட்ஸ்” என்று அவன் சொல்ல, இங்கே முகத்தைச் சுருக்கி அமைதியாக நின்றாள் ரோஜா.
“நீ என்ன நினைக்கிறன்னு என்னால கெஸ் பண்ண முடியுது.” என்றான் சிரிப்புடன்.
“பெங்காலி ஸ்வீட்ஸ், மிஸ்டி தோய், ரசகுல்லா, சம் சம், சந்தேஷ், மால்புவா. இந்தப் பேரெல்லாம் சொல்லும் போதே இனிப்பு சொட்டுற ஃபீல். என்னால அவ்வளவு இனிப்பு சாப்பிட முடியாது செஃப். அதுவும் இல்லாம பாலும், சீனிப் பாகும் திகட்டிடும். ஆனா, மால்புவா மட்டும் சூடா சாப்பிட பிடிக்கும். மைனஸ் த சீனிப் பாகு.” என்றாள்.
“என் கொல்கத்தா கெஸ்ட் நீ பேசுறதை கேட்டா அவ்வளவுதான். உலகமே ரசகுல்லா, ரசமலாய்க்கு அடிமையா இருக்கு. நீ என்னன்னா..”
“ஆனா, நீங்களும், நானும் இல்லையே” என்று அவள் நிதர்சனத்தை உரைத்ததில் மௌனமானான்.
“நோ அஃபன்ஸ் செஃப். பெங்காலிஸ் விதவிதமா செய்யற போர்த்தாஸ் (Bhorta) எனக்கு ரொம்பப் பிடிக்கும். காய்ஞ்ச மிளகாய், பூண்டு, வெங்காயம் வறுத்து, சும்மா கையிலேயே மசிச்சு தருவாங்க பாருங்க. இந்தக் கை மணம் என்கிற வார்த்தையே அதுக்குதான் சரியா இருக்கும்”
“என் ஜூனியர்ஸை உன்கிட்ட கிளாசுக்கு அனுப்பணும் போலவே”
“நீங்க வாங்க முதல்ல” என்றாள் கேலியாக, “எங்க? அதான் வெயிட் பண்ணுங்க சொல்லி தடா போட்டுட்டியே” என்று அங்கலாய்த்தான் அவன்.
தங்கள் பேச்சின் திசை மாறிப் போவதை உணர்ந்த இருவரும் ஒன்றாகத் தொண்டையைச் செருமி கொண்டனர்.
“ரோஜா, நாளைக்கு எனக்கு ஆஃப்தான். உங்க அக்கா விருப்பப்பட்டா நாம மீட் பண்ணலாம்.”
என்று இளமாறன் சொல்ல, சரியென்று சொல்லி, பேச்சை முடித்துக் கொண்டனர்.
இளையவர்கள் இருவரும் ஏதேதோ திட்டங்களைத் தீட்டி கொண்டிருக்க, பெரியவர்கள் களத்தில் குதித்திருந்தனர். முன் தின இரவில் இருந்து கஸ்தூரியின் மனதில் ஒரு பரபரப்பு. பேரனின் வாழ்க்கையை அவன் விரும்பியபடி அமைத்து கொடுத்து விடும் வேகம் அவரிடம் அபரிமிதமாக இருந்தது.
அன்று காலை அவர்கள் இருவரும், அவர்களுக்கு நெருக்கமான வாடிக்கையாளர் மகளின் திருமணத்திற்குச் செல்வதாக இருந்தது. ஆனால், கணவரை மட்டும் அனுப்பி விட்டு மகளின் இல்லம் செல்ல விரும்பினார் கஸ்தூரி.
சுவாமிநாதன் பெரிதாக யோசிக்காமல் மனைவியை மகள் வீட்டில் விட்டுவிட்டுத் திருமணத்திற்குச் சென்று விட்டார். அப்படியே மதியம் அவரின் பால்ய நண்பனின் வீடு செல்லும் எண்ணமும் அவருக்கிருந்தது. அதையும் மனைவியிடம் தெரியப்படுத்தி விட்டு சென்றார் அவர்.
கஸ்தூரி சென்ற நேரத்தில் சுகந்தி வீட்டில் இல்லை. மருமகன், பேரன், பேத்தி என அனைவரும் அவரவர் பணிக்காக மருத்துவமனை சென்றிருந்தனர்.
அங்கிருந்தே மகளை அழைத்தார் அவர். சுகந்தியும் அந்நேரம் வீட்டுக்கு வந்து கொண்டிருப்பதாகச் சொல்லவும் அங்கேயே காத்திருக்கத் தொடங்கினார்.
ஒன்றரை மணி நேரம் கழித்துக் கணவர் மற்றும் மகன் வினோத்துடன் வீடு வந்தார் சுகந்தி.
“சாரிமா. லேட் பண்ணிட்டேன்” என்றார் அம்மாவிடம்.
“பரவாயில்ல மா. டாக்டர் நீ, உன்னைப் பார்க்க பத்து பேர் இருந்துட்டேதான் இருப்பாங்க. அதை விடு, நீ எவ்வளவு நேரம் வீட்ல இருப்ப? மதியம் ஹாஸ்பிடல் போகணுமா?” என்று கஸ்தூரி விசாரிக்க,
“இல்லம்மா. இன்னைக்கு டெலிவரி கேஸ் எதுவுமில்ல. மத்த பேஷன்ட்ஸ் பார்க்க டாக்டர்ஸ் இருக்காங்கம்மா. நம்ம வெண்பாவும் இருக்கா. அதான், நான் இன்னைக்குக் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம் நினைச்சேன். என் கூடவே அப்பாவும், பையனும் வந்துட்டாங்க” சிரித்துக் கொண்டே பதில் கூறினார் சுகந்தி.
“ரொம்ப நல்லதா போச்சு” என்று மெல்ல சொன்னார் கஸ்தூரி. மகளிடம் உடனேதான் வந்த காரியத்தை ஒப்பிக்கவில்லை அவர். அவர்கள் மதிய உணவு உண்ணும் வரை காத்திருந்தார். மதிய உணவு முடித்து மேலும் ஒரு மணி நேரம் சென்ற பின் மருமகனும், பேரனும் அவரவர் அறைக்குச் செல்லவும், மகளிடம் தனியாகப் பேச அவருக்கு நேரம் வாய்த்தது.
முன்தினம் இளமாறன் வீடு வந்ததை, அவன் பேசியதை, அவன் ரோஜாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதை ஒன்று விடாமல் சொல்லி முடித்தார் அவர்.
அவ்வளவுதான். சுகந்தி, தன் அம்மாவை விட அதிவேகமாகச் செயல்படத் தொடங்கினார்.
அன்றே சென்று சிவஹரி வீட்டில் பேசி விடலாம் என்றார் அவர். கஸ்தூரி தடுத்துப் பார்க்க, ரோஜாவின் குடும்பம் அவருக்கு மிக நன்றாகத் தெரிந்த குடும்பம், அவர்களிடம் சென்று பெண் கேட்க தங்களுக்குத் தடையேதும் இல்லை என்றார் சுகந்தி.
மேலும், திருமணமே வேண்டாம் என்ற மகனின் சம்மதம் மட்டுமல்ல, அவனே ஆசைப்பட்டுக் கேட்ட பெண்ணை உடனே பேசி முடித்து விடும் வேகம் அவரிடத்தில் அதிகமாக இருந்தது.
சிறு வயதில் இருந்தே மகனின் எந்தவொரு முடிவிலும் அவர் இருந்ததில்லை. எல்லாம் அவன் விருப்பமே. பள்ளி, கல்லூரி, படிப்பு, வேலை என எல்லா முடிவுகளையும் அவனே எடுத்திருந்தான். தற்போதும் முடிவு அவனதுதான். குறைந்தப்பட்சமாக அதை நிறைவேற்றும் கடமையும், உரிமையும், ஆசையும் ஒரு அம்மாவாக அவருக்கிருக்க, மகனிடம் கலந்தாலோசிக்காமல் அவரே முடிவு செய்து காரியத்தில் இறங்கினார்.
அவன் விருப்பத்தை நிறைவேற்றினால் மனம் மகிழ்ந்து தன்னிடம் பேசிடுவான் என்று எதிர்பார்த்தார் அவர்.
அடுத்தடுத்த ஆயத்தங்கள் அவசரமாக நடந்தது. அப்போதுதான் ஓய்வாகப் படுக்கச் சென்ற கணவனையும், மகனையும் சென்று எழுப்பி, விஷயத்தைப் பகிர்ந்து கொண்டார் அவர்.
சங்கரனுக்கு மனைவியின் திட்டத்தில் ஒப்புதலில்லை. ஆனாலும், சுபகாரியம் குறித்துப் பேசுகையில் தடைச் சொல்லக் கூடாது என்ற மனைவியின் வார்த்தையை மதித்து அமைதியாக இருந்தார் அவர். அவர்களின் போக்குக்குச் சம்மதத்துடனே உடன்பட்டார். இத்தனை வருடங்கள் திருமணத்தை மறுத்த மகனின் விருப்பமும் அவரை மேற்கொண்டு கேள்வி கேட்க விடவில்லை. அவருக்கிருந்த மகனின் வாழ்க்கை குறித்த பயமும் மற்றொரு காரணம்.
மாலை நெருங்கும் சமயத்தில் அவர்கள் அனைவரும் தயாராகிப் பூ, பழம், இனிப்புகள் வாங்கிக் கொண்டு, சுவாமிநாதனுக்கு அழைத்தனர். நண்பர் குடும்பத்துடன் பழங்கதைகள் அசைப் போட்டுக் கொண்டிருந்த மனிதரை காரில் அள்ளிப் போட்டுக் கொண்டு நேராக ரோஜா வீடு சென்றனர்.
வெண்பா தவிர்த்து மொத்த குடும்பமும் அங்கிருக்க, அவர்களை ஆச்சரியத்துடன் பார்த்தார் அவர். அவர்களின் உடையும், ஒப்பனையும் பார்த்து, “என்னம்மா எல்லாரும் தடபுடலா ட்ரெஸ் பண்ணி இருக்கறதை பார்த்தா கல்யாணத்துக்குப் போறது போல இருக்கு.” என்று கேட்டார். கஸ்தூரி கணவரை முறைக்க, “எங்க கோவிலுக்கா? இல்ல நம்ம ஹாஸ்பிடல்ல எதுவும் ஃபங்ஷனா?” என்று அடுத்தக் கேள்வியைக் கேட்டவர், “வினோத்துக்குப் பொண்ணு பார்க்கப் போறோமா?” என்று தனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த பேரனின் தோளில் கைப் போட்டுக் கேலியாக வினவினார்.
சுகந்தி முன் இருக்கையில் இருந்து அவரைத் திரும்பிப் பார்க்க, “பொண்ணு பார்க்கதான் போறோம். ஆனா, எனக்கு இல்ல தாத்தா. மாறா அண்ணாக்கு” என்றான் வினோத்.
அவன் புன்னகைத்துச் சொல்ல, பெரியவரின் முகத்தில் இருந்த புன்னகை தொலைந்து போனது.
இந்த விஷயம் பேரனுக்குத் தெரியுமா என்றுதான் முதலில் கேட்டார் அவர். சுகந்தி மறுப்பாகத் தலையசைக்க, மனிதர் கடுப்பானார்.
அவர் சத்தம் போட தொடங்கவும், கஸ்தூரி கணவரை சமாளிக்கும் வேலையில் இறங்கினார்.
“அவன் என்ன சொல்லிட்டுப் போனான்? நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க? அந்தப் பொண்ணைப் பிடிச்சிருக்குச் சொன்னான்தான். ஆனா, இன்னைக்கே போய் அவங்க வீட்ல பேச சொல்லல. ஏதோ காரணம் இருக்கப் போய்த் தானே நம்மளை வெயிட் பண்ண சொன்னான். அதை மதிக்காம இப்படிப் பொண்ணு வீட்ல போய் நாம நின்னா, மாறன் கோபப்படப் போறான்.” என்று கத்தியவர்,
“என்னம்மா சுகந்தி நீ? உங்கம்மா சொன்னதும் செஞ்சுடணுமா உனக்கு? உன் பையனை பத்தி யோசிக்க வேண்டாமா?” என்று மகளிடம் ஆதங்கத்துடன் கேட்டார்.
“நீங்க சும்மா இருங்கப்பா. இத்தனை வருஷமா கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டு இருந்தவன், இப்பத்தான் சரின்னு சொல்லி, அவனே ஒரு பொண்ணையும் கைக் காட்டி இருக்கான். அதுவும் எனக்கு நல்லா தெரிஞ்ச பொண்ணு அந்த ரோஜா. உடனே நான் போய்ப் பேசி அவங்க கல்யாணத்தை முடிவு பண்ணலன்னா எனக்கு வேலையே ஓடாது” என்றார் சுகந்தி.
“நாம அங்க போறதை பத்தி மாறனுக்குச் சொல்லிடுறது நல்லதுன்னு எனக்குப்படுது. அப்புறம் அங்க போய் ஏதாவது ஆச்சுன்னா..”
“அபசகுணமா பேசாதீங்கப்பா. எல்லாம் நல்லபடியா நடக்கணும்னு நான் பதறிட்டு இருக்கேன்” சுகந்தி சொல்ல, கஸ்தூரி மீண்டும் கணவரை முறைத்து, “பேசாம வாங்க பெருசு” என்று பல்லைக் கடிக்க, வாயை மூடிக் கொண்டார் அவர். ஆனால், மனது கேட்கவில்லை.
மெதுவாகப் பேரன் வினோத்திடம் நாட்டு நடப்பு குறித்து விவாதித்துக் கொண்டு வந்தார். அதனூடே தனது கோரிக்கையையும் வைத்து விட்டார். பெரியவர்களின் பேச்சை, வாக்குவாதங்களைக் கேட்டுக் கொண்டே வந்த அவனுக்கும், அவர்களின் போக்கை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதற்கென்று காத்திருந்தது போல அண்ணனுக்குக் குறுஞ்செய்தி அனுப்பினான் அவன்.
“உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்ண்ணா. நாங்க அண்ணி வீட்டுக்கு போய்ட்டு இருக்கோம். அவங்களை உங்களுக்காகப் பொண்ணு கேட்கப் போறோம். அவங்க சரி சொன்னா அண்ணியைக் கையோட கூட்டிட்டு வந்துடுவாங்க அம்மா” என்று செய்தி அனுப்பினான்.
முக்கிய வேலையாக இருந்த இளமாறன், பத்து நிமிடங்கள் கழித்துதான் அந்தச் செய்தியை பார்த்தான். அதைப் படித்ததும் இளமாறனிடம் நம்ப இயலா பாவனை. பின் அது அம்மம்மாவின் வேலையாக இருக்கும் என்பது புரிந்த அதிர்ச்சி. தன் வார்த்தைக்கு மரியாதை கொடுக்காத ஏமாற்றம், வருத்தம், கோபம் என உணர்வு கலவையாக நின்றான் அவன். அன்று அவனுக்கு மிக முக்கியமான வேலையிருந்தது. அவனால் தலை போகும் அவசரம் என்றால் மட்டுமே அங்கிருந்து நகர முடியும். இப்போது அவன் ரோஜா வீடு சென்றாலும் அது வீண் என்று மனதில் தோன்ற, உடனே அவளை அழைத்து விட்டான். ஆனால், அவனை முந்திக் கொண்டு சிவஹரியிடம் பேசியிருந்தார் சுகந்தி.
உங்கள் வீட்டிற்குச் சம்பந்தம் பேச வருகிறோம் என்று அவர் சொல்ல, சிவஹரியால் நம்பவே முடியவில்லை.
“என்ன சொல்றீங்க டாக்டர்?” என்றார்தான் கேட்டதை உறுதிப்படுத்திக் கொள்ளும் தொனியில், “உங்க வீட்டுக்குத்தான் வந்துட்டு இருக்கோம். நீங்களும் வாங்க. நாம உட்கார்ந்து பேசலாம். அப்படியே வரும் போது நம்ம ரோஜாவையும் உங்களோட கூட்டிட்டு வாங்க” என்ற சுகந்தியின் வார்த்தைகள், மேலே அவரைக் கேள்விக் கேட்க விடவில்லை.
வீடு சென்று நேராகப் பேசிக் கொள்ளலாம் என்று மகளைத் தேடினார் அவர்.