மறுநாள் மாலை துர்காவை மாடிக்கு அழைத்துப் போய் விஷயத்தைப் பகிர்ந்து, “உனக்கு எப்படி வேணும்னு சொல்லுக்கா. நாளைக்கு என்ஜினியர் வரச் சொல்லியிருக்கேன், அவர்கிட்ட சொல்லிடலாம்” என்றான்.
“என்ன தம்பி, என்கிட்ட கேட்கிற?”
“பின்ன ரூம் உனக்குதானே கா? உன் விருப்பம் போலத்தானே இருக்கணும்”
“இப்போ எதுக்குடா தயா?”
“இப்போதான் நேரம் வந்திருக்குன்னு நினைச்சுக்கோக்கா” என்றான். அப்போதும் துர்கா தயங்க, “எல்லாத்துக்கும் இம்புட்டு யோசிக்காதக்கா. அதது அந்தந்த நேரத்துல நடக்கும், விடு” என்றான்.
“கார் வாங்கலாம்னு பிளான் பண்ணேன் கா. நீ டிரைவிங் கத்துக்கறியா? பக்கத்துல இருக்க டிரைவிங் இன்ஸ்டிடியூட்ல சேர்த்து விடவா?” அவள் மேலான நம்பிக்கையின் அளவு கூடியதன் விளைவா? நேசம் கூடியதன் அத்தாட்சியா? அவளுக்கு விளங்கவில்லை. ஆனாலும் அவள் தம்பி எப்போதும் தனிதான்.
“ம்ம், எந்த டைம்ல கிளாஸ் இருக்கும்னு கேட்டு சொல்லுடா” என்றாள்.
“சரிக்கா” என்றவன், சற்றே தயங்கினான்.
“என்ன தயா?”
“ஶ்ரீகாந்த் வருவாருக்கா”
“இப்பவும் வந்துட்டுதான் இருக்கார் தயா. ஸ்கூல் வாசல்ல அடிக்கடி பாக்கறேன். அன்னைக்கு ரோஜா கூடக் கடைக்குப் போனப்போ கூடப் பார்த்தேன், பேசினார்.”
“அவங்க வீட்ல.. கேட்டாங்க போலக்கா. அதுனால வேற வழியில இல்லாம ஶ்ரீகாந்த் கேட்கவும், அவனைப் பத்தின டீட்டெயில்ஸ் கொடுத்துட்டேன்”
சரேலென்று திரும்பினாள்.
“ஶ்ரீகாந்த்துக்கு விவரம் தெரியும்க்கா. இப்போ யாரு என்னன்னு சொல்லி, அவன்கிட்ட போலீஸ் ஸ்டேஷன்ல வச்சு எழுதி வாங்கினதையும் காட்டினேன். அவங்களுக்கு ஆதாரம் தேவைப்படும்ல?”
“ம்ம்ம்”
“ஶ்ரீகாந்த் அவங்கம்மாவ மீறி வந்தா நல்லாருக்காதுக்கா. உங்க வாழ்க்கதான் போராட்டமா போகும்”
“அவன் எங்க இருக்கான்னு அவங்களுக்கு எப்படித் தெரியும் தயா? எப்படிக் கண்டுபிடுச்சி விசாரிப்பாங்க?”
“எனக்குத் தெரியும் கா. அவங்களுக்கு, நான் சொல்லியிருக்கேன். என்னக்கா ஆச்சரியமா பார்க்கற? அவனையெல்லாம் அப்படியே விட முடியுமா? நாளைக்கு என்ன பண்ணுவான் அந்த நாய்னு நம்ப முடியாதுல்ல. அதுனால அவனை ஃபாலோ பண்ணிட்டேதான் இருக்கேன். அவனுக்குக் கல்யாணமான இத்தன வருஷத்துல பிள்ளை இல்லாம ஹாஸ்பிட்டல் ஹாஸ்பிட்டல்லா ஏறியிறங்கிட்டு இருக்கான். ஆண்டவன் அப்பப்போ அடிச்சுடுறான்க்கா. நாளைக்கே அவன் ரோஜாவ கேட்டு வந்தா..”
“பிளீஸ் பேச்சுக்கு கூட அப்படிச் சொல்லாத தயா”
“வர மாட்டான் கா. எந்த மூஞ்சியை வச்சுட்டு வருவாங்கற? வந்தா திரும்பவும் நல்லா என்கிட்ட வாங்கிக் கட்டிட்டு போவான்” என்றான் கோபமாக.
“ஶ்ரீகாந்த் வீடு விசாரிச்சுட்டு வரட்டும்..”
“நான் இப்படியே இருந்துடுறேன் தயா. எதுக்கு இப்படி அல்லாடுற நீ?”
“இப்படியே காலத்துக்கும் இருந்துடுறதுலாம் சாத்தியம் இல்லக்கா. காலத்துக்குத் தக்கன நாமளும் மாறிட்டேதான் இருக்கணும். சரி, சொல்லு. கார் ஓட்ட கத்துக்கறியா?”
“நீ கார் வாங்க நான் டிரைவிங் கத்துக்கணுமாடா?”
“பின்ன, உன் பிள்ளய வச்சு நான் ஓட்டுறேன்ல..”
“அடப்பாவி, உன் பிள்ளைங்களுக்குக் கார் ஓட்ட.. டேய் தயா, அப்டியா சொல்ற? நிஜமாவா?”
“ஐயோ அக்கா, நான் விளையாட்டுக்கு சொன்னேன். ஆளை விடு” என்று சிரிப்புடன் நழுவி விட்டான்.
தயா விளையாட்டாகச் சொன்னாலும் துர்காவின் பார்வை குறிஞ்சியை ஆராய்ச்சியாகத் தொடர்ந்தது. அவள் மருத்துவத் துறையில் இருக்கிறாள். அவளுக்குத் தெரியாமல் இருக்குமா? நாமளே கேட்டு விடுவோமா? இப்படி நல்ல செய்திக்காக எல்லா வழியிலும் காத்திருப்பது கொடுமையாக இருந்தது அவளுக்கு.
அந்த வார விடுமுறை தினத்தில், “குறிஞ்சி வா, சைக்கிள்ல ரவுண்டு போவோம்” என்று பட்டு ரோஜா அத்தையை ஆசைக் காட்டி அழைக்க, “இரு, ரோசு, மாமா கடைக்குக் கூப்பிடுறாங்க. அத்தை சேலை மாத்திட்டு வந்துடுறேன்” என்று சொல்லி உள்ளே சென்றாள்.
“நீ வா, ராசாத்தி. அப்பத்தா உனக்குச் சைக்கிள் பிடிக்கறேன்” என்று அலமேலு சொல்ல, அவருடன் சென்றாள் ரோஜா.
குறிஞ்சி வேகமாக அறையை நோக்கி செல்ல, அவளைப் பின் தொடர்ந்தான் தயா.
“ப்ச், வெளில இருங்க. நான் வேகமா சேலை கட்டணும்” என்று அவள் அவனுக்குத் தடைப் போடவும், தேங்கி நின்று, திரும்பி கூடத்துக்கு வந்து விட்டான். குறிஞ்சி அறைக் கதவை மூடி விட்டாள்.
துர்காவின் பார்வையில் அது பட அவள் திகைப்பும், குழப்பமுமாகத் தம்பியின் முகத்தைத் திரும்பி பார்க்க முடியாமல் அமர்ந்திருந்தாள். அவனோ இயல்பாகவே இருந்தான்.
பதினைந்து நிமிடங்களில் குறிஞ்சி வெளியே வர, தயா உடை மாற்ற அறைக்குச் சென்றான்.
அதற்குள் குறிஞ்சியை வீட்டின் பின் பக்கத்திற்கு அழைத்துச் சென்றிருந்தாள் அவள்.
“என்ன துர்கா? ஏதாவது சீக்ரெட் சொல்லணுமா?”
“ஆமா, சீக்ரெட்தான். உங்க லைஃப் சீக்ரெட் என்னனு எனக்குத் தெரிஞ்சுக்கணும்” என்றாள் கோபமாக.
“யாரோட லைஃப் சீக்ரெட்?”
“ம்ம், என் கோபத்தைக் கிளறாம ஒழுங்கா என் கேள்விக்குப் பதில் சொல்லு குறிஞ்சி”
“நீ புதிர் போடாம கேள்வியைக் கேளு மொதல்ல. உன் தம்பி எனக்காக வெயிட்டிங், அப்புறம் லேட்டாகுதுன்னு கத்துவாரு”
“லேட்டாகுதுன்னு தெரிஞ்சும்.. அவனை ஏன் வெளில விட்டுட்டு நீ மட்டும் உள்ள போய்ச் சேலை மாத்தின?”
“ச்சீய் துர்கா, என்ன கேள்வி இது கிழவி மாதிரி..”
“பதில் சொல்லு குறிஞ்சி”
“என்ன பதில் எதிர்பார்க்கற? அவங்க இருந்தா கூச்சமா இருக்காதா?. அதான் வெளில இருக்கச் சொன்னேன்”
“அடிப்பாவி, அம்புட்டு நல்லவளா நீயி? புருஷன் பொண்டாட்டிக்கு இடையில என்ன கூச்சம் வேண்டி கெடக்கு?”
“இப்படி நீ பேசுறத கேட்கவே எனக்குக் கூச்சமா இருக்கு துர்கா” என்று சிரிப்புடன் சொல்லி உள்ளே செல்லப் போனாள்.
சட்டென்று அவள் கைப் பிடித்து நிறுத்தி, “என்ன நடக்குது இங்க?” என்று கூர்மையாக அவளைப் பார்த்து கேட்டாள்.
“ஒன்னும் நடக்கல”
“என்ன?”
“ஒ…ன்னும் ந…டக்கலன்னு சொன்னேன் மக்கு. அதான் கூச்சம்” என்று கண் சிமிட்டினாள்.
“என்னடி சொல்ற? புரியற மாதிரி சொல்லு”
“விவஸ்தை இல்லாம பேசாத துர்கா”
“என்னால தானா குறிஞ்சி?. என்னை யோசிச்சுதான் இப்படி இருக்கீங்களா ரெண்டு பேரும்? நான் கூட என்னமோ நினைச்சேன்..”
“என்ன நினைச்ச?” என்று அதிர்வுடன் கேட்டு அவள் முகம் பார்த்து, “அடிப்பாவி அதுக்குள்ளயா? ஆனாலும் உன் கற்பனைக்கு இம்புட்டு வேகம் ஆகாது துர்கா” என்றாள் கேலி சிரிப்புடன்.
“எப்படிப் பேசுற பாரு. இந்த ஹாஸ்பிட்டல் போனதுல இருந்து உன் பேச்சே சரியில்ல. சேர்க்கை சரியில்ல உனக்கு”
“ஹாஹா சேர்க்கைதான் சரியில்ல. ஆனா, அந்தச் சேர்க்கை உன் தம்பி தயாபரன்” என்று சிரிப்புடன் சொன்னவள், “சேர்க்கையினால இல்ல. சேராததுனாலதான் பிரச்சனையே” என்றாள் நக்கலாக நாக்கை துருத்தி. சுள்ளென்று அவள் தோளில் அடித்தாள் துர்கா.
“பழங்காலத்து பாட்டி மாதிரி இப்பவே பஞ்சாங்கம் பார்க்க உக்காந்துடாத துர்கா. எங்க லைஃப், நாங்க பார்த்துக்கறோம். உன் தம்பிக்கு என்னமோ தயக்கம், நான் அவரைப் பிடிக்காம இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்னு நினைக்கறார். நானும் உனக்காகத்தானே ஓகே சொன்னேன். அதுனால அவரோட கவலை நியாயமானதுதான்னு அவர் போக்குல போறேன்.”
“அவனைக் கடுவன் பூனைன்னு கருவிட்டு, நீதான் பூனை மாதிரி கண்ணை மூடிட்டு திரிஞ்ச, அவன் உன்னைப் பார்க்கறான்னு உன்கிட்ட சொல்ல கூட எனக்கு அப்போ அவ்ளோ பயமா இருந்தது. ஏன்னா..”
“ஏன்னா, எங்கம்மாவையே இங்கிருந்து நான் கூட்டிட்டு ஓடி போய்டணும்னு நினைச்சேன். ஊப்ப், அக்காவும் தம்பியும் திரும்பத் திரும்ப இதையே சொல்லி சொல்லி என்னைக் குற்றவாளி ஆக்காதீங்க. நான் ஆல்ரெடி ரொம்ப மோசமாதேன் ஃபீல் பண்றேன். அந்தப் பீலிங் நல்லவிதமா உன் தம்பி மேல திரும்பிட்டு இருக்கு. தடுத்துறாதீங்க தாயே” என்று கேலியாகக் கெஞ்சினாள்.
அப்பொழுது, “குறிஞ்சி” என்று தயாவின் அழைப்பு அவளை எட்ட, “உனக்காக இல்ல, இனிமே தயாக்காக, எனக்காகத் தயாவ பார்க்கறேன். ஓகே? அவரைப் பார்க்க பார்க்க கொஞ்சமா பிடிக்கத்தான் செய்யுது. சோ பார்த்துக்கலாம், பயப்படாத. உன் தம்பியை கை விட்டுட மாட்டேன்” என்றாள்.
“நீ நினைச்சாலும் அவன் உன்னை விட மாட்டேன்”
“அதான் தெரியுமே. என்னைத் தேடி புது மாப்பிள்ளை கணக்கா, பட்டு வேட்டி சட்டையில அருவா தூக்காத ஐயனார் போல வந்து நின்ன ஆளுதானே உன் தம்பி”
“அவன் சொல்ற மாதிரி உனக்கு வாய் கூடி போச்சு”
“எல்லாம் தாங்கள் ஊட்டி வளர்த்த வாய்தான்” என்று வாயாடி கொண்டிருந்தாள். அவளைத் தேடி பின் பக்கமே வந்து விட்டான் தயா.
“வாங்க போலாம், டைமாச்சுல்ல?” என்று அவனை உரசிக் கொண்டு நடந்தாள் குறிஞ்சி. அக்காவை பார்த்து தலையசைத்து மனைவியைப் பின் தொடர்ந்தான். துர்காவுக்கு ஏமாற்றமெல்லாம் இல்லை. இருவரும் கல்யாணம் செய்து கொண்ட கட்டாயத்துக்காக இல்லாமல் நேசம் நிறைந்து புரிதலுடன், பிரியத்துடன் இணைந்திட வேண்டும் என்றே விரும்பினாள். நேசிக்கும் நெஞ்சங்களுக்காக நெஞ்சம் துடிக்க நிறைய வேண்டுதல் வைத்தாள்.
தயா சொன்னது போலவே அவளை ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் சேர்த்து விட்டிருந்தான். தினமும் மாலை வேளைகளில் இரண்டு மணி நேரம் காரோட்ட கற்கிறாள்.
“நீயே வண்டியில போயிட்டு வந்துடு துர்கா” என்று நாச்சம்மையே சொல்லிட, அந்த நம்பிக்கை அவளுக்கு நிரம்ப நிம்மதியை அளித்தது.