நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 19 (1)

குறிஞ்சியின் கண்கள் குறும்பு புன்னகையில் பளபளத்தன. தயாவின் சட்டையைப் பற்றி இழுத்தாள். அவன் சுதாரிக்கும் முன் இதழணைத்திருந்தாள். லேசாகத் தடுமாறி அவள் இடையை இறுக அணைத்து அந்த முத்தத்தின் மொத்தத்தையும் அவன் தனதாக்க, மூச்சு வாங்க அவனிடம் இருந்து பிரிந்தாள் குறிஞ்சி.

“ஏய்..” இழுத்து நெற்றி முட்டி நின்றான்.

“என்ன?”

“இப்போ மட்டும் என் மேலருந்து வாசம் வரலையா உனக்கு?”

“அதான் வாசம்னு சொல்லிட்டீங்களே” என்று கண் சிமிட்டி அவன் கன்னத்தை ஈரமாக்கி, அவன் கைகளுக்குள் சிக்காமல் காற்றாய் நழுவி வெளியேறினாள். மெலிதான புன்னகையுடன் மீசையை நீவி கொண்டான் தயாபரன்.

மறுநாள் அவள் வேலை முடித்து வந்ததும், “அத்த நாங்க ரோஜாவ கடைக்குக் கூட்டிட்டு போயிட்டு வர்றோம்” என்று நாச்சம்மையிடம் அறிவித்தாள்.

“சரித்தா” என்றவர், “ரொம்பத் தூரமா?” என்று கேட்டார்.

“இல்லத்தே, பஜார் வரைக்கும் போறோம். சீக்கிரம் வந்திடுவோம்” என்றாள். அலமேலு மகளிடம் கண்ணால் என்னவென்று கேட்க, “சும்மா ஷாப்பிங்ம்மா” என்று விட்டாள். கணவனிடம் கூட எதுவும் சொல்லவில்லை.

“வாங்க, போவோம்” என்று அவன் கைப் பிடித்து இழுத்துப் போனாள்.

மதிய உணவு முடித்து உறங்கத் தயாரான ரோஜா, வண்டியில் போகப் போகிறோம் என்றதும் ஒரே குஷியாகி விட்டாள்.

“குறிஞ்சி, எனக்கு வேற டிரஸ் போட்டு விடு” என்று அத்தையிடம் ஆர்டர் போட்டாள்.

“இதுலயே அழகாதான் இருக்க. வா, ரோசு” என்றாள் குறிஞ்சி. குடுகுடுவென ஓடி மாமன் கைப் பிடித்து வண்டியில் முன்னால் அமர்ந்து கொண்டது வாண்டு.

“பஜார்ல எங்க?” வண்டியை நகர்த்திய தயா கேட்க, “சைக்கிள் கடைக்கு” என்றாள்.

“சைக்கிள் யாருக்கு?”

“எனக்குத்தான்”

“ஓ? ஏன்? என்கூட வண்டியில வர பிடிக்கலையோ குறிஞ்சியாத்தாக்கு?”

“ஆமா, பிடிக்கல. உங்க அகராதி படி எனக்குத்தான் உங்களையே பிடிக்காதே. உங்களுக்கு என்னைப் பிடிச்ச மாதிரி”

“அகராதி பிடிச்சுவளே..”

“அப்போ தயாபரனுக்குப் பிடிச்சவ இல்ல?” அவள் கேட்ட தினுசில் சிரித்து விட்டான்.

மிதிவண்டி கடைக்கு முன் சென்று வண்டியை நிறுத்தினான். அங்கே சாரை சாரையாகப் பல்வேறு வண்ணங்களில், சிறியதும், பெரியதுமான உயரங்களில், அழகான கார்டூன் கதாப்பாத்திர படங்கள் போட்ட சைக்கிள்கள் நிறுத்தப்பட்டிருக்க, “தயா மாமா, சைக்கிள் மாமா” என்று கோலி குண்டு கண்கள் மலர்ந்து மின்ன குதூகளித்தது ரோஜா குட்டி.

“குட்டி சைக்கிள்..” என்று தொட்டு தொட்டு பார்த்தாள்.

“ரோசு குட்டிக்குத்தான் புதுச் சைக்கிள், எது வேணும்னு செலக்ட் பண்ணு. வீட்டுக்கு ஓட்டிட்டு போவோம்”

“எனக்கா? புதுச் சைக்கிளா? பிராமிஸ்?”

“பிராமிஸ், பிராமிஸ், உங்க மாமா மேல பிராமிஸ். உங்க மாமா மாதிரி நீயும் என்னைய நம்பாத மாதிரியே பிராமிஸ் கேட்காத” என்று பக்கத்தில் நின்றிருந்த புருஷனுக்கும் கொட்டு வைத்தாள்.

“கொன்றுவேன்” மிரட்டினான்.

“தின்றுவேன்னு வேணா சொல்லுங்க. திங்குற மாதிரி பார்த்திட்டு கொன்றுவேன்னு சொன்னா மேட்சே ஆகல”

“வாய் வாய், வந்த வேலையைப் பாருடி”

“நாங்க அதைத்தான் பார்க்கறோம். நீங்கதான் என்னைய வாய் பார்த்திட்டு இருக்கீங்க” என்று வம்பு வளர்த்தாள். கடையின் விற்பனை பெண் புன்னகையுடன் அவர்களைக் கவனிப்பதை கண்டதும்தான், “இந்தச் செல்லக் குட்டிக்குதான் சைக்கிள். சப்போர்ட் வீல் வச்சது தாங்கக்கா” என்றாள்.

“இல்ல நார்மல் சைக்கிள் குடுங்க. அவ சீக்கிரம் கத்துப்பா” என்றான் மாமன்.

ரோஜா குட்டி பம்பரமாய்க் கடையைச் சுற்றி வந்து கொண்டிருந்தது. ஃப்ரோசன் (Frozen) படத்தில் வரும் எல்சாவின் உருவம் பதித்திருந்த சைக்கிளை ஆசையாகப் பிடித்து அப்படியே நின்று விட்டாள். அவள் உயரத்திற்குத் தோதாக இருந்தது சைக்கிள். குறிஞ்சி பணம் செலுத்த, அதையே வாங்கினார்கள்.

“நான் இப்பயே சைக்கிள் ஓட்டிட்டு வர்றேன். நீ, என் பின்னால உக்காந்துக்கோ குறிஞ்சி” என்று பரபரத்தது பட்டு ரோஜா.

“சைக்கிள் ஆட்டோல வரும், நீ மாமா கூட வா செல்லம்” என்று அவளைத் தூக்கிக் கொண்டான் தயா.

வீடு வந்ததும் நாச்சம்மை, அலமேலுவிடம், “ஆயா எனக்குப் புதுச் சைக்கிள், அப்பத்தா எனக்குச் சைக்கிள் வாங்கி இருக்கே” என்று கொண்டாட்டத்துடன் அதையே சொல்லிக் கொண்டு சுற்றினாள். சற்று நேரத்தில் சைக்கிள் வீட்டிற்க்கே வந்து விட்டது. அவ்வளவுதான், அவளைக் கையில் பிடிக்க முடியவில்லை.

“நீ சைக்கிள் ஓட்டு ரோசு. யூ ஹவ் விங்க்ஸ் நவ், பறவை போலச் சிறகடிச்சு பறந்து போகலாம் நீ” என்று சொல்லியே அவளிடம் சைக்கிளை நீட்டினாள் குறிஞ்சி. துர்கா வீடு வந்ததும் அவளிடமும் பாட்டு படித்தாள் ரோஜா.

முதலில் தயா, பின்னர்க் குறிஞ்சி அவளுக்குச் சைக்கிள் ஓட்ட பயிற்சி அளித்தார்கள். குழந்தை அல்லவா? கற்கும் ஆர்வம் இருந்தாலும் நிரம்பத் தடுமாறினாள். ஒரே வாரத்தில் நாச்சம்மை, அலமேலு இருவரும் அவளின் பயிற்சியாளர் ஆனார்கள். பயிற்சியாளர் என்றால், அவள் பின்னால் ஓடுவதுதான் அவர்களின் வேலை. அவ்வப்போது பழனியப்பனும் பேத்தியின் பின்னால் சைக்கிள் பிடித்துச் சுற்றினார். சிறிது தூரம் ஓட்டுவதும் பிறகு காலை கீழே வைத்துப் பின்னால் ஆள் வருகிறார்களா எனப் பார்ப்பதுமாக அவளின் பயிற்சி நேரம் அனைவருக்கும் சுவாரசியமாகக் கழிந்தது.

அன்றிரவு, “அப்பா, ஒரு கார் வாங்கிடலாமா? நாம எல்லாரும் வெளில போக, வர வசதியா இருக்கும்ல?” என்று தயாபரன் கேட்க, “வாங்கலாம்ங்கறியா தம்பி?” என்று பதில் கேள்வி கேட்டார் தந்தை.

“அம்புட்டு காசு நம்மகிட்ட இருக்கா?” நாச்சம்மை கேட்க, “அதெல்லாம் இருக்குமா” ஒன்று போலப் பதில் சொன்னார்கள் ஆண்கள்.

“நான் மாடியில ஒரு ரூம் போட்டுடலாம்னு பார்க்கறேன்ப்பா. காரா, ரூமான்னு யோசிச்சா ரூம் முக்கியம்னு படுது”

“அப்புறம் எதுக்குப்பா மொத கார் வாங்கணும்னு சொன்ன?” என்று சடைத்தவர், “துர்காவ கல்யாணம் செஞ்சு அனுப்பினா மேல ரூம் அவசியம் போடணும். நாளைக்கு அவ போக வர இருக்கயில சௌகரியமா இருக்கும்ல” என்றார் நாச்சம்மை. ஆண்கள் பார்வை அதையே ஆமோதித்தது.

“இப்படிப் பேச்சை ஆரம்பிச்சு விட்டுட்டு இந்த ஶ்ரீகாந்த் தம்பி, கெணத்துல போட்ட கல்லாட்டம் ஒரு செய்தியும் சொல்லாம இருக்காரே.” என்று அவர் புலம்ப, “கல்யாண விஷயம் நாச்சியா, பையன் வீடு பொறுமையாதேன் வருவாங்க” என்றார் பழனியப்பன்.

“இல்ல, அவங்க என்னா நினைக்கறாங்கன்னு தெரிஞ்சிட்டா.. நாம அடுத்தென்னான்னு பாப்போம்ல? இப்போ பாருங்க, நாம வெளில கூட வரனுக்குச் சொல்லி வைக்க முடியாதுல்ல”

“ப்ச், வெளில பாக்கற பேச்சுக்கே எடம் இல்ல. வெயிட் பண்ணுவோம். இம்புட்டு நாள் பொறுத்திருந்து நம்ம புள்ளைக்குப் பொறுப்பான பையன் வர்றயில நாம பறக்க ஆசைப்படக் கூடாது. நாம அவருக்கு வாக்கு குடுத்துட்டு வெளில வரன் பார்த்தா அவங்க என்னா நினைப்பாங்க?” என்று கேட்டார். தயாவின் பார்வை அம்மாவை குற்றம் சாட்ட, “இல்ல. அவங்க ஒன்னுமே சொல்லாம இருக்கவும்தேன்..” என்று தயங்கி நிறுத்தினார்.

“ஶ்ரீகாந்த் வீட்ல துர்கா பத்தி விசாரிக்கறாங்கம்மா. நாலு நாள் முன்னாடி எங்கிட்ட ஶ்ரீகாந்த் கேட்டாப்ல, நான் டீட்டெயில் கொடுத்திருக்கேன்”

“யாரு அந்தப் பாவி பயல பத்தியா? அவனைப் பத்தி அவங்ககிட்ட சொல்லிட்டியா? என்னாத்துக்கு” என்று பதறினார்.

“நாச்சியா, அவங்களும் விசாரிப்பாங்கதானே? அப்படியே கண்ணை மூடிட்டு ஏத்துப்பாங்கன்னு நீ எதிர்பார்க்க கூடாது”

“அப்போ உங்களுக்கும் இந்த விஷயம் தெரியுமா?”

“தெரியும்மா. அவங்க விசாரிக்கறாங்களே, அதுவே நல்ல விஷயம்தானே? பொறுத்து பார்ப்போம்” என்றார் பழனியப்பன். கணவர் சொன்ன கோணத்தில் யோசிக்க அவருக்கும் சரியென்றே பட்டது. ஆனாலும் தொண்டைக்குள் பயப்பந்தொன்று அமிழ்வதை அவரால் தடுக்க முடியவில்லை.

“இப்போ என்னாங்க பண்றது?”

“தயா சொல்றாப்ல மேல மாடியில ரூம் எடுத்துருவோமா? இல்ல கார் வாங்குவோமா?”

“என்னங்க நீங்க, நாளைக்குத் துர்கா கல்யாண செலவு இருக்குல்ல. இப்பத்தானே தயாக்குக் கல்யாணம் பண்ணோம். திரும்பச் செலவு வரும் போலருக்கு. இதுல ரூம், கார்லாம் எங்குட்டுருந்து வாங்குறது? அம்புட்டு காசுக்கு எங்க போக?”

“கையில காசு இருக்கும்மா. வீட்டு நிலவரம் தெரிஞ்ச நீங்களும் இப்படிப் பேசினா எப்படி?” என்றான் தயா. வீட்டின் வரவு, செலவு, சேமிப்பு என அனைத்தையும் அவரிடம் காண்பித்தான்.

“அக்காக்கு ஏற்கனவே நகை சேர்த்து வச்சிருக்கீங்கம்மா. கல்யாண செலவுக்குத் தேவையான பணம் கையில இருக்கு. இது மேல ரூம் போடவே தனியா ஒரு அமௌன்ட் ஒதுக்கி வச்சிருந்தேன். அதை எடுத்துதான் செய்யப் போறேன்” என்று விளக்கினான். சரியென்று விட்டார்கள் பெற்றோர்.

மாடியில் பெரியதாகச் சகல வசதிகளுடன் கூடிய ஒற்றைப் படுக்கையறை கட்டுவது என முடிவானது. முன்னரே மனைவியிடம் அபிப்பிராயம் கேட்டிருந்தான். குறிஞ்சி சொன்னதைக் குறிப்பெடுத்துக் கொண்டான்.

error: Content is protected !!
Scroll to Top