மாலை அவளை வீட்டில் விடும் சாக்கில் அவளோடு வந்து விட்டாள் பிரியதர்ஷினி. அவளின் அம்மா வீடு அதே தெருவில்தானே இருக்கிறது. பிரபஞ்சன் மாமனார் வீட்டில் இருக்க, தோழிகள் இருவரும் பார்கவி வீட்டுக்கு வந்தார்கள்.
அப்போதுதான் வீடு வந்திருந்த காவேரி, “வாம்மா பிரியா, எப்படி இருக்க? உங்க மாமியாரு மிஸ் எப்படி இருக்காங்க?” என்று அன்புடன் அவளை நலம் விசாரித்தார்.
“நான் பேசிக்கறேன், நீ உள்ள போ” என்று பார்கவிக்குக் கண் காட்டினாள் பிரியதர்ஷினி.
ஆனால் பார்கவி அங்கேயே நின்று அம்மாவை பார்த்தாள்.
“அப்பா எங்கம்மா?”
“இன்னைக்குக் கேட்டரிங் ஆர்டர்ல ஏதோ சொதப்பல்னு போன் வந்துச்சு, அப்பா அங்க போய் இருக்கார். நாங்க அதான் சீக்கிரம் வந்துட்டோம்” என்றார் காவேரி.
“சரிம்மா. நான் சரளாக்காவ போன் பண்ணி வர சொல்லவா?”
“நானே சொல்லிட்டேன். இப்போ வந்துருவா. நீ போய் அப்பா ஆபீஸ்ல, அப்பா உனக்கு ஏதோ வேலை வச்சிருக்காரு. அதைப் பாரு” என்றார். சரியெனத் தலையசைத்து அங்கேயே நின்றாள்.
பிரியதர்ஷினி அவரிடம் பேச்சுக் கொடுத்து அவரின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பினாள். ஏதேதோ பேசி பின்னர், “பாருவோட பெரியம்மாக்கு தெரிஞ்சவங்கதானேம்மா மாப்ள வீடு?” என்று சந்தேகம் கேட்டாள்.
“ஆமா ஆமா. எங்கக்காதான் அவங்களுக்குத் தங்கமான குடும்பம்னு சர்ட்டிபிகேட் கொடுத்துச்சு. இப்போ பாரு அவங்களுக்குத் தங்கத்து மேலதான் எதிர்பார்ப்பு அதிகமா இருக்கு” என்று அங்கலாய்த்துக் கொண்டார்.
“என்னம்மா சொல்றீங்க? நகை ரொம்ப டிமாண்ட் பண்றாங்களா?”
“டிமாண்ட்லாம் டைரக்ட்டா பண்ண மாட்டாங்களே. அதெப்படி பண்ணுவாங்க? அதெல்லாம் நாசூக்காதான் கேட்பாங்க” என்று சலித்தவர், “எங்க நாத்தனார் பொண்ணுக்கு ரெண்டு மாசம் முன்னாடி கல்யாணம் ஆச்சு. 200 பவுன் நகை போட்டாங்க. அவங்க உங்களை விட வசதி கம்மின்னு சொன்னாங்க” என்றார் பெருமூச்சுடன்.
“200 பவுனா? எங்க அத்தலாம் எங்க கல்யாணத்தப்போ நகை பத்தினே பேச்சே எடுக்கலம்மா. ஆமா, அவங்களுக்கு நீங்க என்ன பதில் சொன்னீங்க?”
“ம்ம், என் பொண்ணுக்கு இனிமேதான் நகை சேர்க்கணும்னு சொல்லியிருக்கேன்” என்றார் நக்கலாக.
அதைக் கேட்டு, “காவேரியா கொக்கா” என்று சொல்லி பார்கவி சிரிக்க, “உங்க பொண்ணு கண்ணுல ஒத்திக்கற மாதிரி அம்புட்டு அழகு. மகாலட்சுமி மாதிரி இருக்கா. எங்களுக்குப் பார்த்ததும் பிடிச்சுப் போச்சு. அப்படி இப்படின்னு ஆரம்பத்துல பேசிட்டு இப்போ பணம், நகைன்னு அவங்க பேச்சே எனக்குப் பிடிக்கல” என்றார்.
மகளிடம் திரும்பி, “நீ போய் அப்பா சொன்ன வேலையை முடி” என்று அவளை விரட்டினார்.
“கல்யாணமானதும் இந்தப் பிரியா பெரிய மனுஷியாகிட்டாளா ம்மா உங்களுக்கு?” என்று புலம்பி கொண்டே அப்பாவின் அலுவல் அறை நோக்கி நடந்தாள்.
பிரியதர்ஷினி, “எங்கண்ணா கல்யாணத்தப்போ அவங்க மாமனார் வீடு, எங்க வீடு, சொத்து எல்லாத்தப் பத்தியும் விசாரிச்சாங்கம்மா. அதுல எங்க அண்ணா பங்கு எவ்ளோ வரும்னு டைரக்ட்டா அப்பாகிட்டயே கேட்டாங்க. அவங்க வசதிக்கு நாங்க இல்லைன்னு அண்ணாக்கு பொண்ணே கொடுக்க மாட்டேன்னு சொன்னார் தெரியுமா?”
“ம்ம், உங்கம்மா சொன்னாங்க. ஆம்பள பையனுக்கே அப்டினா, நாங்க பொன்னு போலப் பொண்ணைப் பெத்து வச்சுருக்கோம். அவங்களும் கேட்காம என்ன செய்வாங்க? எங்களுக்குப் பின்னாடி இல்ல, இப்பவே எல்லாமே அவளுக்குத்தானே? எல்லாத்தையும் வேற யாருக்கு நாங்க தூக்கி கொடுக்கப் போறோம்? அது தெரிஞ்சும் அவங்க பணம், நகைன்னு பேசும் போது கோபமா வருது. எல்லாம் எங்க அக்காவை சொல்லணும் ஒன்னு விடாம எங்க சொத்து விவரம் அவங்ககிட்ட சொல்லி வச்சிருக்கு” என்று புலம்பினார்.
“நம்ம கல்யாண மண்டபம், அடையார் ஃப்ளாட், இந்த வீடு எல்லாமே யார் பேர்ல இருக்குன்னு என்கிட்டயே கேட்டாங்க. பார்கவி அப்பாகிட்ட மண்டபத்தைப் பத்தி விசாரிச்சாங்க போல. இன்னும் மூனு வாரத்துல கல்யாணத்த வச்சுட்டு நாங்க எந்த வேலையைப் பார்க்கறதாம்? இவருக்குப் போன முறை நெஞ்சு வலி வந்தப்பவே எல்லாம் முறையா எழுதி வச்சுட்டாருன்னு சொன்னதுக்கு அப்புறம் அவங்க அத பத்தி பேசுறது இல்ல. ஊர் உலகத்துல இதெல்லாம் நடக்காததான்னு நானும் மனச சமாதானம் பண்ணிட்டு இருக்கேன். எங்க பொண்ணு நல்லா இருந்தா போதும் எங்களுக்கு” என்றார் கண்கள் கலங்க.
சில நிமிடங்கள் அவர் போக்கில் பேச விட்டு கேட்டு கொண்டிருந்தவள், ஆறுதலும் சொன்னாள்.
“பையனை பத்திலாம் விசாரிச்சீங்களாம்மா?” என்று தயக்கத்துடன் கேட்டாள்.
அவளைக் குழப்பத்துடன் பார்த்து, “ஏன்ம்மா பிரியா, ஏன் கேட்கற? பையனை பத்தி யாரும் எதுவும் தப்பா சொன்னாங்களா?” என்று கேட்டார். அந்தக் குரலில் நிச்சயமாக நடுக்கம் இருந்தது.
“இல்ல நான் சும்மா கேட்டேன். அவர் யூஎஸ்ல இருந்தாரே எப்படி விசாரிச்சீங்கன்னு தெரிஞ்சுக்கக் கேட்டேன். பிரபா, எங்கப்பாவோட ஸ்டூடண்ட் இல்லம்மா? அதுனால பெருசா அவரைப் பாக்கிரவுண்ட் செக்லாம் செய்யல எங்கப்பா. அதான் நீங்க என்ன செஞ்சீங்கன்னு தெரிஞ்சுக்கக் கேட்டேன்ம்மா. வேற ஒன்னுமில்ல” என்று சமாளித்தாள்.
“எங்கக்கா வீடு கொண்டு வந்த பையன்தானே. இங்க விசாரிச்ச வரைக்கும் எல்லாம் நல்ல மாதிரியாதான் சொன்னாங்க. பார்கவி அப்பா அப்படியும் விடாம அவருக்குத் தெரிஞ்சவங்கள பிடிச்சு யூஎஸ்ல விசாரிக்கச் சொன்னாரு, அங்கேயும் யாரும் ஒத்த குறை சொல்லலடா. மாப்ள, அவர் உண்டு அவர் வேலை உண்டுன்னு இருப்பாராம். லவ், கிவ்னு எதுவும் இல்லன்னு சொல்லவும் எங்களுக்கு முழுத் திருப்திடா” என்றார் புன்னகைத்து. அந்தப் புன்னகையைக் கலைக்க அவளுக்கு மனம் வரவில்லை. ஆனால் அவள் மனத்தில் மெல்லிய திடுக்கிடல்.
பார்கவி அப்பாவின் அலுவலக மேஜையில் இருந்த கோப்பை எடுத்து அதைக் கணினியில் பதிந்து வைத்தாள். அந்த மேஜையில் நிறைந்திருந்த கோப்புகளின் அடியில் ஒரு புத்தம் புதிய கோப்புக் கண்ணில் படவும் ஆர்வத்தில் அதை எடுத்து பிரித்தாள்.
அதில் கல்யாண செலவுகளைக் குறித்து வைத்திருந்தார் ரங்கராஜன்.
முதல் பக்கமே அவளை மருட்டியது.
மேஜையை இழுத்து எதையோ தேட அப்பாவின் மருத்துவ அறிக்கை இருந்தது.
சரியாக ஒரு வாரத்திற்கு முன்பு எடுத்திருந்த இதய நோய் தொடர்பான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் முடிவுகள். ஆக, அவள் கணித்தது சரியே.
சட்டென அவளுக்கு மனம் கலங்கிட கண்களும் தளும்பின. அந்த மருத்துவ அறிக்கைகளைப் படித்தாள். அப்பா நலமாக இருக்கிறார் என்றது பரிசோதனை முடிவுகள். ஆனாலும் மருத்துவமனை செல்லும் நிலை வந்திருக்கிறதே என்று யோசிக்க அவள் நெஞ்சில் சுருக்கென்று வலி பரவியது.
அப்போது, “பாரும்மா” என்ற அழைப்பு கேட்க, “வந்துட்டேன் சரளாக்கா” என்று எழுந்துச் சென்றாள்.
ஆனால், அங்கே அவள் வீட்டு வாசலில் கதவில் சாய்ந்து நின்றிருந்தது பாரிவேந்தன்.
அவள் அவனை எதிர்பார்க்கவுமில்லை. எப்படி எதிர்வினையாற்றுவது என்றும் அவளுக்குத் தெரியவில்லை.